மேர்க்கெல் ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெறுகிறார்
By Stefan Steinberg
23 September 2013
ஜேர்மன் தேர்தலில் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் அது பெற்ற வாக்குகளை எட்டு சதவிகிதம் அதிகரித்து மொத்தம் 41.5%ஐ பெற்றுள்ளது.
ஆனால், பழைமைவாத கட்சிகளின் தற்போதைய கூட்டணிப் பங்காளியான தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) சங்கடத்தை சந்தித்துள்ளது. மேர்க்கெலுக்கு அரசாங்கத்தை அமைக்க போதுமான அறுதிப்பெரும்பான்மை இல்லாததால் ஒரு கூட்டணி அமைக்க சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அல்லது பசுமைவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
SPD மற்றும் பசுமைவாதிகள், இடது கட்சியை சேர்த்து ஒரு கூட்டணி அமைப்பதை உறுதியாக நிராகரித்துவிட்டன. அத்தகைய ஒரு கூட்டணி புதிய பாராளுமன்றத்தில் ஒரு சிறிய பெரும்பான்மையை கொண்டிருக்கும்.
FDP, 2009 உடன் ஒப்பிடும்போது அதன் வாக்குகளில் மூன்றில் இரு பங்கை இழந்து, 4.8% வாக்குகளைத்தான் பெற்றது. இதன் பொருள் ஜேர்மன் தேர்தல் சட்டத்தின்படி தேவையான 5% வாக்குகள் தடையைத் தாண்ட அது இயலாமல் போய்விட்டது என்பதாகும். கடந்த வாரம் முக்கிய பவேரிய மாநிலத் தேர்தல் நடைபெற்றதில் சந்தித்த பேரழிவான விளைவைத் தொடர்ந்து தாராளவாத ஜனநாயகவாதிகள் பிச்சை பாத்திரத்தை ஏந்தி, வாக்குப் பதிவில் CDU வாக்காளர்களிடம் தங்கள் இரண்டாம் வாக்கை FDP க்கு பதியுமாறு கோரினர். இதன் மூலம் தாம் பாராளுமன்றத்தில் நுழையலாம் என எதிர்பார்த்தனர்.
இவ் அழைப்பை தொடர்ந்து மேர்க்கலும் கட்சித் தலைமையும் உடனடியாகக் குறுக்கட்டு தங்கள் ஆதரவாளர்கள் இரண்டாம் வாக்குகளையும் CDU விற்கே இடவேண்டும் என அறிவித்தனர்.
போருக்குப்பிந்தைய பல அரசாங்கங்களின் முக்கிய மந்திரிப் பதவிகளை வகித்து, வங்கிகள் மற்றும் வணிக செல்வாக்கு குழுக்களுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டுள்ளது என அங்கீகரிக்கப்பட்டுள்ள FDP இரண்டாம் உலகப் போருக்குப்பின் இப்பொழுதுதான் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் நுழைய முடியாத நிலையில் உள்ளது.
எதிர் கட்சியான SPD இனால் கடந்த நான்கு ஆண்டுகளில் சமூக சமத்துவமின்மையில் பாரிய விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ள அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான அரசாங்கத்திற்கு எவ்விதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்த முடியவில்லை. SPD 25.7% வாக்குகளைப் பெற்றது. இது 2009ல் அது பெற்ற பேரழிவான அளவை விட 3% அதிகமானதாகும். போருக்குப் பிந்தைய வரலாற்றில் இது SPD யின் இரண்டாம் மோசமான தேர்தல் முடிவு ஆகும்.
போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மன் பொதுநலச் செலவுகளில் ஆழ்ந்த குறைப்புக்களுக்கு (செயற்பட்டியல் 2010, ஹார்ட்ஸ் IV சட்டங்கள்) SPD தான் பொறுப்பு எனக் வாக்காளர்கள் கருதுவது மட்டுமல்லாது, அவர்கள் SPD வேட்பாளர் பீர் ஸ்ரைன்ப்ரூக் கடந்த பெரும் கூட்டணி அரசாங்கத்தில் (2005-2009) நிதி மந்திரியாக இருந்தார் என்பதையும் அறிவர். அவர்தான் 2008ல் உலகளவில் நிதிய நெருக்கடி வெடித்த உடன் ஜேர்மனிய வங்கிகளின் பிணையெடுப்பிற்கு முக்கிய பொறுப்பைக் கொண்டிருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்காலத்தில் SPD, பழைமைவாதிகளை விட அதிக செல்வாக்கை பெற முடியவில்லை என்பது தெளிவானவுடன், கட்சித் தலைமை அதன் சமூக நிலையை உயர்த்த முற்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்குச் சலுகை தேவை என்ற அழைப்புக்களை விடுத்தது. ஞாயிறன்று வாக்களிப்பு வாக்காளர்கள் SPD யின் உறுதிமொழிகளை அக்கறையாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக்கிவிட்டது.
பசுமைவாதிகளும் தேர்தலில் கடுமையான பின்னடைவை கண்டனர். 2009ல் நடைபெற்ற முந்தைய தேர்தலில் அவர்கள் 10%க்கும் மேலான வாக்குகளை பெற்றிருந்தனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில், பசுமைவாதிகளின் தலைவர்கள் கட்சி இரட்டை எண்ணிக்கை விளைவை எதிர்பார்க்கிறது, அது அவர்களை SPD உடன் கூட்டணி அமைக்க உதவும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் அக் கட்சி 8% வாக்குகளைத்தான் பெற்றது.
கடந்த தசாப்தத்தில் ஜேர்மன் பசுமைக் கட்சி வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளை உடைய கட்சியாக வெளிப்பட்டு, ஜேர்மன் இராணுவவாதத்தையும் ஆர்வத்துடன் ஆதரித்தது. நகர்ப்புற மத்தியதர வகுப்பின் வசதிமிக்க தட்டுக்களைப் பிரதிபலிக்கும் இக்கட்சி கடந்த காலத்தில் இக்கட்சிக்கு ஆதரவு கொடுக்கத் தயாராக இருந்த பரந்த இளம் வாக்காளர்கள் பிரிவால் தெளிவாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இடது கட்சியும் அதன் 2009 விளைவுடன் ஒப்பிடும்போது 3%க்கும் அதிகமான இழப்பைக் கண்டது. இதன் வாக்குகள் 11.9%ல் இருந்து 8.6% என குறைந்தன. இது தன் முழுத் தேர்தல் பிரச்சாரத்தையும் SPD, பசுமைவாதிகளுடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான திட்டங்களில் முக்கியத்துவம் காட்டியது. அந்த இரு கட்சிகள் பெற்ற குறைந்த வாக்குகளால் இவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பதவியில் இருந்த நகரங்களிலும் மாநிலங்களிலும், இடது கட்சி தேர்தல் சுவரொட்டிகளில் குறைகூறிய அதே சமூக விரோத கொள்கைகள் அனைத்தையும் விரைவில் சுமத்தியது. அதன் அரசியல் பாசாங்குத்தனத்திற்கான விலையை இப்பொழுது அது செலுத்தியுள்ளது.
கட்சியின் வலதுசாரித் தன்மையின் முக்கியமான அடையாளமாக, வாக்காளர் விருப்பங்களை பதிவுசெய்யும் கருத்துக் கணிப்புக்கள், 300,000க்கும் மேற்பட்ட முன்னாள் இடது கட்சி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வலதுசாரித் தேசியவாத ஐரோப்பிய எதிர்ப்பு ஜேர்மனிக்கு மாற்றீடு (AfD) என்பதற்கு மாற்றிவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன. AfD இடம் தன் முந்தைய வாக்காளர்களில் அதிகம் பேரை இழந்துவிட்ட ஒரே கட்சி FDP தான்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது இடது கட்சித் தலைவர்களான ஸாரா வாகென்கினெக்ட் போன்றவர்கள் AfD இன் வேலைத்திட்டத்தின் பிரிவுகளுக்கு பகிரங்கமாக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
எட்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் நிறுவப்பட்டAfD, முதல் தடவையிலேயே 4.7% வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கு தேவையான 5%விட சற்றுத்தான் குறைவு. 5% இனை பெற்றிருக்குமானால் 1983ல் பாராளுமன்றத்தில் நுழைந்த பசுமைவாதிகளைத் தவிர, முதலில் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு கட்சி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மத்திய குடியரசில் பெற்றதாக இக்கட்சி இருந்திருக்கும். பாராளுமன்றத்தில் இருக்கும் இடது கட்சியும் அதன் முன்னோடி PDS உம் கிழக்கு ஜேர்மனியின் ஆளும் கட்சியில் எஞ்சியுள்ளவையாகும்.
அறுதிப்பெரும்பான்மைக்கு நான்கு இடங்கள் இல்லாத நிலையில், CDU-CSU கட்சிகள் இப்பொழுது புதிய அரசாங்கத்திற்கு அதன் சிக்கன நடவடிக்கை, சமூகநல வெட்டுக்கள், இராணுவவாதம் ஆகியவற்றை செயல்படுத்த போதுமான உரிமை பெறுவதற்கு கூட்டணிப் பங்காளியை தேடும் கட்டாயத்தில் உள்ளன.
தன் பங்கிற்கு SPD அத்தகைய கூட்டணியில் தான் பங்குபற்ற தயார் என்று தெளிவாக்கியுள்ளது. தேர்தல் முடிவிற்குப்பின் பேசிய பீர் ஸ்ரைன்ப்ரூக் ஆதரவாளர்களிடம் “பந்து இப்பொழுது மேர்க்கெல் அம்மையாரிடம் உள்ளது, அவர்தான் பெரும்பான்மை பெற வேண்டும்.” என்றார். பசுமைவாதிகளும் மேர்க்கெல்லின் CDU-CSU உடன் கூட்டணிக்கு தாங்கள் தயார் என்று கொடி காட்டியுள்ளனர்.
திங்களன்று CDU தலைமை கூடி தேர்தல் முடிவுகளை விவாதித்து எப்படி புதிய அரசாங்கத்தை அமைப்பது என்று நிர்ணயிக்கும். மேர்க்கெல் பெரும் கூட்டணியை SPD உடன் கொண்டு அமைக்க முடிவெடுத்தால், அது 2005 முதல் 2009 வரை ஜேர்மனியில் அதிகாரத்திலிருந்த அரசாங்கத்தின் நகலாக இருக்காது.
எமது முன்னோக்கு ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன் நாம் எச்சரித்தது போல்: “ஐரோப்பா மீது ஜேர்மனி சுமத்தியுள்ள இரக்கமற்ற சிக்கன கொள்கைகளை தீவிரப்படுத்தும் என்பதோடு, ஜேர்மனிக்குள் தொழிலாள வர்க்கத்தின் மீதும் போர் தொடுக்கும். இராணுவத் தடை அனைத்தையும் இது கைவிட்டு, ஆக்கிரோஷத்துடன் சர்வதேச அளவில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் தொடரும்.”
தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான மாற்றீட்டை வழங்கிய வேலைத்திட்டத்துடன் தேர்தலில் தலையிட்ட ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சிதான் (Partei fur Soziale Gleichheit, PSG). அடுத்த சில நாட்களில் இன்னும் சில கட்டுரைகள் புதிய ஜேர்மனிய அரசாங்கத்தை ஆராய்ந்து, PSG இன் வாக்களிப்பு மற்றும் பிரச்சாரம் பற்றி விபரிக்கும்.
|