இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி யாழ்ப்பாணத்தில் முதலாவது தேர்தல் கூட்டத்தை நடத்தியது
By our correspondents
28 August 2013
யாழ்ப்பாண நகரில் சுமார் 20 கிலோமீட்டர் மேற்கே உள்ள காரைநகர் தீவில், ஊரி கிராமத்தில், கடந்த சனிக்கிழமை சோசலிச சமத்துவ கட்சியும் (சோ.ச.க) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் ஏற்பாடு செய்த வெற்றிகரமான பொதுக் கூட்டத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் குடும்பப் பெண்களுமாக சுமார் 70 பேர் கலந்து கொண்டனர். இது செப்டம்பர் 21 நடக்கவுள்ள வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டமாகும். சோசலிச சமத்துவக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் 19 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
கூட்டத்திற்கு முந்தைய நாட்களில் ஊரி, வளந்தலை, கலபூமி மற்றும் பிட்டியோலை போன்ற கிராமங்களில் சோ.ச.க. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்ததோடு கட்சியின் தேர்தல் அறிக்கையின் பிரதிகளை ஆயிரக்கணக்கானக்கில் விநியோகம் செய்தனர். இதற்குப் பிரதிபலித்த அரசாங்கம், குடியிறுப்பாளர்களை மிரட்டும் வகையில் இந்த பகுதிகளில் இராணுவத்தையும் பொலிசையும் நிலைநிறுத்தியதோடு கமாண்டோக்கள் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து சென்றனர். சோ.ச.க. கூட்டத்துக்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சில கிழிக்கப்பட்டிருந்தன.
வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் திடீரென சில மட்டுப்படுத்தப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் அண்மையில் மின்சாரம் வழங்கியதும் தற்போதைய இலவச தண்ணீர் விநியோகமும் அடங்கும். குடியிருப்பாளர்கள் வழமையாக தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு ரூபாய் செலுத்த வேண்டும்.
காரைநகர், ஒரு குறுகிய சிறுபான்மை பணக்கார வர்த்தகர்கள் மற்றும் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே ஆழமாக துருவப்படுத்தப்பட்டுள்ளது. முழு பிரதேசமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால யுத்தத்தின் போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறி இருந்தாலும், சில குடும்பங்களே திரும்பியுள்ளன. காரைநகரை சுற்றி பாழான வீடுகளை காண முடியும்.
ஊரி, முக்கியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டும் சுமார் 400 குடும்பங்களைக் கொண்டது. அவர்கள் கடினமான சமூக நிலைமைகளின் கீழ் வாழ்கின்றனர். குடியிருப்பாளர்கள் பொது போக்குவரத்தைப் பெற குறைந்தது ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டும். உள்ளூர் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. அதற்கு மேல் கல்விபயிலும் மாணவர்கள் மற்றொரு பாடசாலைக்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
கூட்டத்திற்கு தலைமை வகித்த சோ.ச.க. வேட்பாளர் வி. கமலதாசன், சீனாவிற்கு எதிரான போர் ஆபத்துக்கும், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஆழமான தாக்குதலுக்கும் எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே என்று சுட்டிக்காட்டினார். ஏனைய அனைத்து கட்சிகளும் -தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ), இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ)- முதலாளித்துவ மற்றும் இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் விளக்கினார்.
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் வரலாற்றை மீளாய்வு செய்ததோடு 1977 பொதுத் தேர்தலில் அதே பகுதியில் போட்டியிட்ட சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்தை விளக்கினார்.
"புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது கொழும்பு முதலாளித்துவக் கும்பலின் சிங்கள பேரினவாத கொள்கைகளுக்கு எதிராக மட்டுமன்றி, இனவாத தமிழ் முதலாளித்துவ கட்சிகளுக்கு, குறிப்பாக ‘தனி அரசு’ சுலோகத்தை மேம்படுத்திய தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிராகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தப் போராடியது" என தேவராஜா விளக்கினார்.
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தமிழ் முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டக்காக பு.க.க. மற்றும் சோ.ச.க. முன்னெடுத்த போராட்டம், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.
சோ.ச.க. வேட்பாளர் குழுவுக்கு தலைமை வகிக்கும் பரமு திருஞானசம்பந்தர் உரையாற்றுகையில், தேர்தலுக்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை, மாறாக, கொழும்பு அரசாங்கத்தை சீனாவிடம் இருந்து தூர விலகுமாறு கோரும் அமெரிக்காவும் இந்தியாவும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதனாலேயே இந்த தேர்தல் நடைபெறுகிறது, எனத் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம், எதிர்வரும் காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக சமூக சிக்கன நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, என திருஞானசம்பந்தர் தொடர்ந்தார். அது தனது கொள்கைகளுக்கு எதிரான தவிர்க்க முடியாத மக்கள் எதிர்ப்பை ஒடுக்க பொலிஸ்-அரச நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதை "நியாயப்படுத்துவதற்காக" அதன் தேர்தலில் வெற்றியை பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.
திருஞானசம்பந்தர், கொழும்பு நடத்திய போரின் கொடூர அனுபவங்களையும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜனநாயக விரோத நிர்வாகத்தையும் பற்றி மீளாய்வு செய்தார். அவர் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தின் அரசியல் வங்குரோத்து மற்றும் பிற்போக்கு தன்மையை விளக்கினார்.
“விடுதலை புலிகள் உட்பட தமிழ் முதலாளித்துவ தலைவர்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததே கிடையாது. மாறாக, அவர்கள் எப்போதும் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தியாவிடம் உதவி கேட்டு அழைப்பு விடுத்தனர். கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் மூலம் தமது சிறப்புரிமைகளை காத்துக்கொள்வதே தமிழ் கூட்டமைப்பின் நோக்கம் ஆகும்."
வடக்கு பகுதியில் மோசமடைந்துவரும் சமூக நிலைமைகளையும் திருஞானசம்பந்தர் ஆராய்ந்தார். "இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பெரும்பாலும் பின்தங்கிய பொருளாதார நிலைமைகள் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 154 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன" என்று அவர் தெரிவித்தார். "அங்கு இளைஞர்களுக்கு தொழில் இல்லை; வீடுகள் மற்றும் சுத்தமான தண்ணீர் பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்சனையாகும்; மற்றும் தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பினால் மக்களுக்கு சமூக வாழ்க்கை இல்லை."
இறுதி உரையாற்றிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பாணினி விஜேசிறிவர்தன, இராஜபக்ஷ அரசாங்கம் மோசமாகி வரும் சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு ஏற்ப அதன் சமூக சிக்கன நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது என்று விளக்கினார். தங்கள் பகுதியில் நீர் மாசடைவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வெலிவேரிய கிராமவாசிகள் மீது அண்மையில் நடத்தப்பட்ட கொலைகார இராணுவத் தாக்குதலானது, கொழும்பு அரசாங்கம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்திய கொடூர வழிமுறைகளை சாதாரண சிங்களம் மக்கள் முன் எடுத்துக்காட்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
விஜேசிறிவர்தன சோ.ச.க.யின் சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்டினார். சோ.ச.க. பிரிவினை இனவாத அரசியலின் அனைத்து வடிவங்களையும் வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பையும் எதிர்க்கின்றது, என்றும் அவர் விளக்கினார்.
தற்போது ஜனநாயகத்தின் ஒரு சாம்பியன் என தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் யூ.என்.பீ., 1983ல் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்க உள்நாட்டு போரைத் தொடங்கியது, என்று விஜேசிறிவர்தன அம்பலப்படுத்தினார். நவசமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடது அமைப்புக்கள், "ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கம் எழுச்சிபெறுவதை தடுக்க யூ.என்.பீ.யை முன்னிலைப்படுத்துகின்றன" என்றும் அவர் விளக்கினார்.
பேச்சாளர் மேலும் கூறியதாவது: "தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர்களை நடத்தி, இப்போது சிரியாவை தாக்க தயாராகும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கே அழைப்பு விடுக்கும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையை மக்களின் பாதுகாவலராக காட்ட முயற்சிக்கின்றது."
முடிவில், தெற்கு ஆசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை நிறுவ அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டுவதற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு விஜேசிறிவர்தன அழைப்பு விடுத்தார். அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும் கட்சியில் சேருமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அவர் வலியுறுத்தினார்.
சோ.ச.க. வேட்பாளர்களுடன் பேசுவதற்காக பலர் கூட்டம் முடிந்த பின்னரும் நின்றிருந்தனர்.
கிருபன் கூறியதாவது: "என்னால் மீன்படி மூலம் பிழைக்க முடியவில்லை. அதனால் நான் ஒரு தொழிலாளியாக சவுதி அரேபியா சென்றேன். நான் அங்கு மூன்று ஆண்டுகளை கழித்தேன், ஆனால் சம்பளம் மிகவும் குறைவு மற்றும் பணிச்சுமை தாங்க முடியாததாக இருந்தது. உலக நெருக்கடியின் விளைவாக, நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டதுடன் மற்றும் என்னால் ஒரு நல்ல வேலையை தேட முடியவில்லை. இறுதியாக, நான் வீட்டிற்கு திரும்பி மீண்டும் மீன்பிடியை தொடங்க முடிவு செய்தேன். கூட்டத்தில் இன்று நீங்கள் சொன்னவை சரி என்று நான் நினைக்கிறேன்."
ஒரு தச்சு தொழிலாளியான யசோதரன் தனது அனுபவங்களை விளக்கினார்: “யுத்தம் முடிவடைந்த நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நாம் முகங்கொடுத்த பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை, நாம் இந்த அரசாங்கத்திடம் இருந்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. வடக்கில் சில உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் நடந்தாலும், அவற்றில் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எங்களுக்கு குடிநீர் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை, ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். சராசரி 6,000 ரூபாய் [45 அமெரிக்க டொலர்] மாத வருமானத்தில் ஏனைய அடிப்படை தேவைகளுக்கும் செலவிட வேண்டும்.
"இந்த கூட்ட மண்டபத்தை சூழ உள்ள வீடுகளைப் பாருங்கள். அவை கோழிகளுக்கே பொருந்தும், மனிதர்களுக்கு அல்ல. நாங்கள் மழை மற்றும் சூரிய வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றோம். உண்மையில், எங்களது அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சோ.ச.க. கூறுவதைப் போல், சோசலிசம் இல்லாமல் நாம் நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது,” என்றார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் அடுத்த பொதுக் கூட்டம், ஊர்காவற்துறையில் பருத்தியடைப்பு கிராமத்தில் செப்டெம்பர் 13 அன்று பி.ப. 2 மணிக்கு நடைபெறும். இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் .
|