Seventy-five years of the Fourth International
நான்காம் அகிலத்தின் 75 ஆண்டுகள்
By David North
4 September 2013
75 ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 3, 1938 இல் நான்காம் அகிலம் பாரிசின் புறநகர் பகுதியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் நிறுவப்பட்டது. ஆபத்தான பாதுகாப்பு நிலைமையின் காரணத்தினால் மாநாட்டின் பணி ஒரு நாளைக்குள் முடிக்கப்பட வேண்டியிருந்தது. மாநாட்டிற்கு 12 மாதங்கள் முன்பிருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கம் இடையறா தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. அவர் மெக்சிகோவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தாலும், லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச ஆட்சியால் அதன் மிக ஆபத்தான அரசியல் விரோதியாக கருதப்பட்டார். 1927ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்தும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து 1929ல் நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்த சகாப்தத்தில் ட்ரொட்ஸ்கி தோற்றுவித்திருந்த சர்வதேச இயக்கத்தை அழிக்க ஸ்ராலின் உறுதிகொண்டிருந்தார்.
லியோன ட்ரொட்ஸ்கி
செப்டம்பர் 1937ல் ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலர் எர்வின் வொல்ஃப் சோவியத் ஒன்றியத்தின் இரகசிய பொலிசான GPU இன் முகவர்களால் ஸ்பெயினில் கொல்லப்பட்டார். இதே மாதத்தில் GPU வில் இருந்து விலகி ட்ரொட்ஸ்கியினால் நிறுவப்பட்ட புதிய சர்வதேச அமைப்பிற்கு தன் விசுவாசத்தை அறிவித்த இக்னாஸ் ரைஸும் ஸ்விட்சர்லாந்தில் லவுசானில் கொல்லப்பட்டார். பெப்ரவரி 1938ல் ட்ரொட்ஸ்கியின் மூத்த மகனும் ஐரோப்பாவில் மிக முக்கியமான அரசியல் பிரதிநிதியுமான லியோன் செடோவ் பாரிசில் GPU ஆல் கொல்லப்பட்டார். ஜூன் 1938ல், நிறுவன மாநாட்டிற்கு 6 வாரங்களுக்கு முன்பு இயக்கத்தின் சர்வதேச செயலகத்தின் தலைவரான ருடோல்ப் கிளெமென்ட் பாரிஸில் அவருடைய வீட்டில் இருந்து கடத்தப்பட்டு கொலையுண்டார்.
செடோவ், வொல்ஃப் மற்றும் கிளெமென்ட் ஆகியோர் மாநாட்டின் கௌரவத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். வந்திருந்த பிரதிநிதிகளிடம் பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிசவாதியான பியர் நவில், “கிளெமென்டின் சோகமான மரணத்தினால், ஒரு முறையான அறிக்கை வழங்கப்படமாட்டாது. கிளெமென்ட் ஒரு விரிவான எழுத்துமூல அறிக்கையை சுற்றிற்கு விடத் தயாராக வைத்திருந்தார். ஆனால் அவருடைய மற்ற ஆவணங்களுடன் அதுவும் மறைந்துவிட்டது. தற்போதைய அறிக்கை ஒரு சுருக்கமானதாகவே இருக்கும்.” என அறிவித்தார்.
மாநாடு நடைபெற்ற நரகம் போன்ற சூழல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட அரசியல் சூழ்நிலைமையைத்தான் பிரதிபலித்தது. ஜேர்மனியிலும் இத்தாலியிலும் பாசிச ஆட்சிகள் அதிகாரத்தில் இருந்தன. ஐரோப்பா போரின் விளிம்பிற்கு சென்றுகொண்டிருந்தது. பிராக்கில் இருந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பிரித்தானியாவும் பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் செக்கோஸ்லோவாக்கியாவை ஹிட்லருக்கு சரணடையச்செய்துவிட்ட மூனிச் மாநாடு சில வாரங்களுள் நடைபெற இருந்தது. ஸ்பானிய புரட்சி, அதன் ஸ்ராலிச, அராஜகவாத தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, காட்டிக் கொடுக்கப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டுப் போருக்குப்பின் தோல்வியை விரைவாக அணுகிக் கொண்டிருந்தது. பிரான்சில் 1936-37 மக்கள் முன்னணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக சீர்குலைய செய்வதற்கு தனது சக்திக்கு முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தில், 1936ல் ஸ்ராலின் கட்டவிழ்த்துவிட்டிருந்த பயங்கரம் பழைய போல்ஷிவிக் தலைமுறை முழுவதையும் கிட்டத்தட்ட அழித்துவிட்டது. ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினரின் காட்டிக் கொடுப்புக்கள், இரண்டாம் ஏகாதிபத்திய உலகப் போர் தடுக்கப்படக்கூடிய ஒரே வழிவகையான தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் புரட்சி வருவதை அழித்துவிட்டன.
நிறுவன மாநாட்டில் பங்கு பெற வந்திருந்த பிரதிநிதிகளின் முக்கிய பணி, லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியிருந்த ஆவணத்தை ஏற்பதுதான். அதன் தலைப்பு “முதலாளித்துவத்தின் மரணஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்” என்பதாகும். இதன் ஆரம்ப சொற்றொடரும் அரசியல் இலக்கியத்திலேயே மிகவும் குறிப்பிடத்தக்கதும், ஆழ்ந்த தன்மை கொண்டதும், பின்வருமாறு குறிப்பிட்டது: “இன்றைய முழு உலக அரசியல் நிலைமையும் முக்கியமாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் ஒரு வரலாற்று நெருக்கடியினால் பண்புமயப்படுத்தப்படுகின்றது.”
இச்சொற்களுடன் ட்ரொட்ஸ்கி 1938ல் இருந்த நிலைமையை சுருக்கி கூறியது மட்டுமல்லாமல், தற்கால வரலாற்றின் முக்கிய அரசியல் பிரச்சினையையும் சுருக்கி கூறினார். முதலாளித்துவத்தை சோசலிசத்தால் பிரதியீடு செய்வதற்கான புறநிலை முன்னிபந்தனைகளான, உற்பத்தி சக்திகளின் சர்வதேச வளர்ச்சி மற்றும் புரட்சிகர வர்க்கத்தின் இருப்பு ஆகியவை இருந்தன. ஆனால் புரட்சி என்பது புறநிலைப் பொருளாதார சூழ்நிலையின் தன்னியல்பான விளைவு அல்ல. அதற்கு வரலாற்று நிகழ்வின் மீதான சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்டு, ஒரு தெளிவாக விரிவாக்கப்பட்டுள்ள ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நனவான தலையீடு தேவை.
தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் அது அகற்ற விரும்பும் முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்புரட்சி அரசியலைவிட சற்றும் குறைந்த நனவைக்கொண்டிருக்கக் கூடாது. இங்குதான் ஒரு புரட்சிகர கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.
ஆனால் புரட்சிகரக் கட்சியின் தீர்க்ககரமான பங்கு, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் போல்ஷவிக் கட்சியின் தலைமையில் முதலாளித்துவ வர்க்கத்தை அகற்றி, வரலாற்றில் முதல் தடவையாக தொழிலாளர்களின் அரசாங்கத்தை ரஷ்ய தொழிலாள வர்க்கம் அமைத்தபோது, அக்டோபர் 1917ல் நேர்மறையாக நிரூபிக்கப்பட்டது. பின்னர் இது 1920 களினதும் 1930களினதும் தோல்விகளின்போது எதிர்மறையாக நிரூபிக்கப்பட்டது. ஒரு தொடர் புரட்சிகர சந்தர்ப்பங்கள் தொழிலாள வர்க்கத்தின் விசுவாசத்தை பெற்றிருந்த பாரிய சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் (ஸ்ராலினிச) கட்சிகளின் தவறான கொள்கைகள் மற்றும் திட்டமிட்டு நடத்திய காட்டிக்கொடுப்புக்களால் இழக்கப்பட்டன.
இரண்டாம் அகிலத்தின் சமூக ஜனநாயகக் கட்சிகளின் அரசியல் திவால்தன்மை மற்றும் பிற்போக்குத்தனப் பங்கு 1914 இலேயே அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது. அப்பொழுது அவை தங்கள் சொந்த சர்வதேச வேலைத்திட்டங்களை நிராகரித்து, தங்கள் தேசிய ஆளும் வர்க்கங்களின் போர்க் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்தன. சமூக ஜனநாயகத்தின் காட்டிகொடுப்பினை எதிர்த்து, அக்டோபர் புரட்சிக்குப்பின் கம்யூனிச (அல்லது மூன்றாம்) அகிலம் உருவாக்கப்பட்டது.
ஆனால் சோவியத் ஒன்றியத்திற்குள் அரச அதிகாரத்துவத்தின் வளர்ச்சியும் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சீரழிவும் கம்யூனிச அகிலத்திற்கு நீண்டகால விளைவுள்ள தாக்கங்களை கொடுத்தன. 1923ம் ஆண்டு இடது எதிர்ப்பு ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவமயமாகியதை எதிர்த்துப் போரிட அமைக்கப்பட்டது. ஆனால் தன் நலன்களுக்கும் சலுகைகளுக்கும் ஒரு விசுவாசமான பிரதிநிதி ஸ்ராலின் என்பதை அறிந்த அதிகாரத்துவம் அதனது மார்க்சிச அடிப்படையிலான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மிருகத்தனமாகப் போரிட்டது. 1924ம் ஆண்டு ஸ்ராலினும் புக்காரினும் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் வேலைத்திட்டத்தை அறிவித்தனர்; இது சோசலிச சர்வதேசியவாதம் என்னும் வேலைத்திட்டத்தை நிராகரித்தது. அதாவது நிரந்தரப்புரட்சியை.அதைத்தான் லெனினும் ட்ரொட்ஸ்கியும் அக்டோபர் 1917 போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை வெல்வதற்கு அடித்தளமாக கொண்டிருந்தனர்.
ஸ்ராலின், புக்காரினது வேலைத்திட்டம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்கள், சோவியத் அதிகாரத்துவத்தின் தேசிய நலன்களுக்கு நடைமுறையில் அடிபணியச் செய்வதற்கு ஒரு மார்க்சிச எதிர்ப்பு தத்துவார்த்த நியாயப்படுத்தலை வழங்கியது.
மார்க்சிச தத்துவத்தின் இந்த அடிப்படை திரித்தல் நடைமுறையில் மூன்றாம் அகிலத்திற்கும் மற்றும் அத்துடன் இணைந்துள்ள கட்சிகளுக்கும் பேரழிவைத்தான் கொடுத்தது. 1920களின் போக்கில், மாஸ்கோவின் ஆணைகளுடன் இயைந்து நடக்கத் தவறிய தேசிய ரீதியான கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் அதிகாரத்துவத்தின் மூலம் அகற்றப்பட்டு, தமக்கு இணங்கக்கூடிய, திறமையற்ற சேவைசெய்வோர் நியமிக்கப்பட்டனர். மூன்றாம் அகிலத்தை உலக சோசலிசப் புரட்சியின் கட்சியாக பார்க்காமல் சோவியத் வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவி என மிகவெளிப்படையாக பார்த்த ஸ்ராலின் இயற்றிய கொள்கைகளால் நிலைநோக்கு தவறிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு பேரழிவில் இருந்து மற்றொரு பேரழிவிற்கு அதிர்ச்சியுடன் நகர்ந்தன. பிரித்தானிய பொது வேலைநிறுத்தம் 1926ல் தோல்வியுற்றதும், அதன் ஓராண்டிற்குப்பின் சீனப் புரட்சியின் தோல்வி ஆகியவை மூன்றாம் அகிலத்தின் சீரழிவின் முக்கிய மைல் கற்கள் ஆகும்.
1928ம் ஆண்டு மத்திய ஆசியாவில் அல்மா ஆட்டாவிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் ட்ரொட்ஸ்கி கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டம்:அடிப்படைகள் பற்றிய ஒரு விமர்சனம் -The Draft Program of the Communist Interntional: A Criticism of Fundamentals- என்பதை அகிலத்தின் ஆறாம் காங்கிரசிற்கு முன் எழுதினார். இந்த ஆவணம் முந்தைய ஐந்து ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற தோல்விகளுக்கான தத்துவார்த்த, அரசியல் காரணங்களை விரிவாக விளக்கிக்காட்டியது. ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தின் முக்கிய இலக்கு ஸ்ராலின்-புகாரினின் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் தத்துவமாகும். அவர் எழுதினார்:
''எமது சகாப்தமான இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில் உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள நிலையில், எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாகவும், பிரதானமாகவும் தனது சொந்த நாட்டினுள் உள்ள நிலைமைகளின், போக்குகளின் வளர்ச்சிகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம் தனது வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. இது சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளே அரசு அதிகாரத்தை திறமையாகப் பயன்படுத்தும் ஒரு கட்சிக்கும் கூட முற்றிலும் பொருந்தும். 1914 -ஆகஸ்ட் 4ம் திகதி அனைத்துக் காலங்களுக்குமாக, தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டாகி விட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்திற்கு, முதலாளித்துவத்தின் அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின் தன்மையுடன் தொடர்புடையதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் என்பது ஒரு பொழுதும் தேசிய வேலைத் திட்டங்களின் ஒட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொதுத்தோற்றங்களின் கலவையோ அல்ல.
சர்வதேச வேலைத்திட்டம், உலகப் பொருளாதார, உலக அரசியல் அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும் நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்துத் தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர ரீதியாகப் பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே நேரடியாக ஆரம்பிக்க வேண்டும். தற்போதைய சகாப்தத்தில் கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்கவும் முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது.''
ட்ரொட்ஸ்கி முக்கிய வலியுறுத்தல் கொடுத்த ஒரு உலக நிலைநோக்கின் முக்கியத்துவம் பொதுவான தத்துவார்த்த ரீதியான ஆய்வுகளில் இருந்து மட்டும் சாதாரணமாக வெளிப்படவில்லை, ஆனால் ட்ரொட்ஸ்கி 1923-24ல் அபிவிருத்திசெய்த, அமெரிக்கா முக்கிய ஏகாதிபத்திய சக்தியாக உருவாகுவதன் உலகளாவிய தாக்கங்கள் பற்றிய அவருடைய ஆய்வில் இருந்து வெளிப்பட்டது என்பதை நினைவு கூர்தல் முக்கியமாகும்.
கம்யூனிச அகிலத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து ட்ரொட்ஸ்கி தடைசெய்யப்பட்டார். அவருடைய ஆக்கங்கள் ஏற்கனவே அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளும் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒரு அசாதாரண தவறினால் ட்ரொட்ஸ்கியின் Criticism ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆறாம் காங்கிரசில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டிருந்த ஜேம்ஸ். பி. கனனின் கரங்களை அடைந்தது. ட்ரொட்ஸ்கியின் Criticismகொடுத்த ஊக்கத்தில் கனன் இந்த ஆவணத்தை கனேடிய பிரதிநிதியான மொரிஸ் ஸ்பெக்டரின் உதவியுடன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து கடத்திக் கொண்டுவந்தார். Criticism of fundamdntals இல் வழங்கப்பட்டிருந்த ஆய்வின் அடிப்படையில் மக்ஸ் ஷாக்ட்மன், மார்ட்டின் ஆபெர்ன் இன்னும் பல முக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் சேர்ந்து கனன், சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களுக்காக போராட ஆரம்பித்தார். விரைவில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, கனன் மற்றும் ஷாக்ட்மன் அமெரிக்க கம்யூனிஸ்ட் லீக் (Communist League of America) என்பதை அமைத்தனர். இது சர்வதேச இடது எதிர்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கை கொண்டிருந்தது.
1923ல் இடது எதிர்ப்பு அமைக்கப்பட்டபோது, அதன் நோக்கம், கம்யூனிஸ்ட் கட்சியை புரட்சிகர சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் சீர்திருத்துதல், மற்றும் கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்தின் கொள்கைகளுக்கு இணங்க வெளிப்படையான விவாதத்தை மீண்டும் நிறுவுதல் என இருந்தது. உலகம் முழுவதும் விரைவில் ஆதரவாளர்களை வெற்றிகொண்ட சர்வதேச இடது எதிர்ப்பு நிறுவப்பட்டதன் ஊடாக ட்ரொட்ஸ்கி கம்யூனிச அகிலத்தை சீர்திருத்தலாம் என கருதினார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினுள்ளும் மற்றும் மூன்றாம் அகிலத்தினுள்ளும் எதிர்ப்பு வளர்ச்சியுற்றால், ஸ்ராலினுடைய பேரழிவு தரும் கொள்கைகள் திருத்தப்பட்டுவிடுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கும் எனக் கருதிய நிலையில், ட்ரொட்ஸ்கி ஒரு புதிய அகிலத்திற்காக அழைப்பு விடுவதில் இருந்து தன்னை தடுத்துவைத்திருந்தார்.
ஜேர்மனியில் 1930க்கும் 1933க்கும் இடையே நிலவிய சூழ்நிலை ட்ரொட்ஸ்கியின் கணிப்பீடுகளில் அதிகம் கவனத்தைக் கொண்டிருந்தது. 1929 வோல்ஸ்ட்ரீட் சரிவிற்குப்பின் ஜேர்மனிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபின் ஹிட்லரின் தேசிய சோசலிசக் கட்சி (நாஜிக்கட்சி) ஒரு பரந்துபட்ட கட்சியாக உருவாகியது. ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவது ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் இரு வெகுஜன அமைப்புக்களான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் (KPD) தங்கியிருந்தது. இந்த இருகட்சிகளும் மில்லியன் கணக்கான ஜேர்மன் தொழிலாளர்களின் விசுவாசத்தை பெற்றிருந்ததுடன், நாஜிகளை தோற்கடிக்கும் பலத்தையும் கொண்டிருந்தன.
1929ல் துருக்கிய கடலோரப் பகுதியை ஒட்டிய பிரின்கிபோ தீவிற்கு நாடு கடத்தப்பட்டபின், ட்ரொட்ஸ்கி ஜேர்மன் நெருக்கடியை ஆராய்ந்து ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதை நிறுத்த இரண்டு தொழிலாள வர்க்கக் கட்சிகளும் ஐக்கியப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்து ஏராளமாக எழுதினார். ஆனால் முதலாளித்துவ அரசுக்கு அடிபணிந்திருந்த சமூக ஜனநாயகக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய சுயாதீன அரசியல் நடவடிக்கையையும் எதிர்த்ததுடன், நாஜிக்களுக்கு எதிரான ஒரு தற்பாதுகாப்பு போராட்டத்தைக்கூட நடத்தவில்லை. மாறாக, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் விதி, ஹிட்லரை அதிகாரத்திற்கு கொண்டுவர சதித்திட்டம் தீட்டிய ஊழலும் குற்றமும்மிக்க வைமார் ஆட்சியின் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கைகளில் விடப்பட்டது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, சமூக ஜனநாயகத்தை, நாஜிக்கட்சிக்கு அரசியல் சமமான “சமூக பாசிசம்” என மாஸ்கோவால் கட்டளையிடப்பட்ட வரையறையை குருட்டுத்தனமாகப் பின்பற்றியது. ஸ்ராலினிஸ்டுகள், ஹிட்லருக்கு எதிராக ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சமூக ஜனநாயகக் கட்சியினதும் ஐக்கிய முன்னணி அமைக்கப்பட வேண்டும் என்ற ட்ரொட்ஸ்கியின் அழைப்பை நிராகரித்தனர். வரலாற்றிலேயே மிகப் பேரழிவைக் கொடுத்த தவறான கணக்கீடுகளில் ஒன்று எனக் கருதப்படவேண்டிய அரசியல் முன்கணிப்பினால், தங்கள் சொந்த செயலின்மையை நியாயப்படுத்தி, நாஜிகளின் வெற்றிக்கு பின்னர் விரைவில் ஒரு சோசலிசப் புரட்சி வரும் என்றும், அது கம்யூனிஸ்ட் கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் என்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அறிவித்தனர். “ஹிட்லருக்குப் பின், நாம்தான்” என்பது ஸ்ராலினிச கோஷம் ஆயிற்று.
இப்பெரும் சோக முடிவு ஜனவரி 30, 1933ல் வந்தது. வயதான ஜனாதிபதி வொன் ஹின்டென்பேர்க்கினால் சான்ஸ்லராக நியமிக்கப்பட்ட ஹிட்லர் ஒரு குண்டு கூட தீர்க்கப்படாது சட்டரீதியாக பதவிக்கு வந்தார். தமக்கிடையே மில்லியன் கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் நாஜியின் வெற்றியை எதிர்க்க ஏதும் செய்யவில்லை. சில நாட்களுக்குள் நாஜிக்கள், அரச எந்திரத்தின்மீது கட்டுப்பாட்டைக் கொண்ட நிலையில் பயங்கரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். சில மாதங்களுக்குள் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் பிற பரந்துபட்ட தொழிலாளர் அமைப்புக்களும் நசுக்கப்பட்டன. பெரும்பாலான ஐரோப்பிய யூதர்கள் உள்ளடங்கிய மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கவிருந்த 12 ஆண்டுகால பேரழிவு ஆரம்பித்தது.
ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின், ஜேர்மனிய பேரழிவு, எஞ்சியிருக்கும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினுள் அல்லது மூன்றாம் அகிலத்தினுள் எதிர்ப்புக்களை தூண்டுமா என்பதைக் காண்பதற்கு ட்ரொட்ஸ்கி சில மாதங்கள் காத்திருந்தார். ஆனால் முற்றிலும் எதிரானதுதான் நடந்தது. ஜேர்மனிக்குள்ளும், அகிலத்தினுள்ளும் இருந்த ஸ்ராலினிச அமைப்புக்கள் சோவியத் அதிகாரத்துவம் ஆணையிட்ட அரசியல் போக்கின் பிழையான தன்மையைத்தான் மீண்டும் உறுதிப்படுத்தின.
ஜேர்மனியில் ஏற்பட்ட விளைவு, கம்யூனிச அகிலத்தினை சீர்திருத்துவதற்கான சாத்தியம் ஏதும் இல்லை என்பதை ட்ரொட்ஸ்கிக்கு உறுதிபடுத்தியது. எனவே ஜூலை 1933ல் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை அமைப்பதற்கான ஒரு பகிரங்க அழைப்பை வெளியிட்டார். மூன்றாம் அகிலத்துடன் தொடர்புபட்ட கொள்கையில் அடிப்படை மாற்றம் என்பது ட்ரொட்ஸ்கியை இன்னுமொரு முடிவிற்கு இட்டுச்சென்றது. அதாவது, கம்யூனிச அகிலத்தை சீர்திருத்துவது சாத்தியம் இல்லை என்பதால், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியை சீர்திருத்தும் முன்னோக்கும் சாத்தியமில்லை என்பதாகும். ஸ்ராலினிச ஆட்சியின் கொள்கைகளை மாற்றுவதற்கு அது தூக்கிவீசப்படுதல் அவசியமாகியது. ஆனால் இந்த தூக்கிவீசுதல் அக்டோபர் 1917ல் நிறுவப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை அகற்றுவதற்கு பதிலாக அதை பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட, ட்ரொட்ஸ்கி முன்வைத்த புரட்சி, ஓர் சமூகத் தன்மையைவிட அரசியல் தன்மையை கொண்டதாக இருந்தது.
1933 க்கும் 1938க்கும் இடைப்பட்ட நிகழ்வுகள் ட்ரொட்ஸ்கியின் புதிய திசையின் சரியான தன்மையை உறுதிப்படுத்தின. ஹிட்லர் அதிகாரத்தை வென்றதைத் தொடர்ந்த ஐந்து ஆண்டுகளில், ஸ்ராலினிசம் சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்குள் மிக ஆபத்தான எதிர்ப்புரட்சி சக்தியாக வெளிப்பட்டது. கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட தோல்விகள், தவறுகளின் விளைவு அல்ல மாறாக நனவான கொள்கைகளின் விளைவுகளாகும். எந்தவொரு நாட்டிலும் சமூகப் புரட்சி வெற்றி பெறுவது, சோவியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆர்வத்தின் ஒரு மறுஎழுச்சியை தூண்டும் என ஸ்ராலினிச ஆட்சி அஞ்சியது.
நான்காம் அகிலத்தை முறையாக நிறுவ ட்ரொட்ஸ்கி திட்டமிட்டவகையில் உழைக்கையில், அவர் இரு முக்கிய எதிர்ப்பு வகைகளை எதிர்கொண்டார்.
முதலாவது வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச அனுபவத்தில் இருந்தும் மற்றும் ஸ்ராலினிசத்தினதும் சமூக ஜனநாயகத்தினதும் காட்டிக்கொடுப்பின் அனுபவத்தில் இருந்தும், ஒரு கொள்கை ரீதியான தன்மை கொண்ட எவ்விதமான முடிவுகளையும் எடுத்துக்கொள்ள மறுக்கும் தனிநபர்கள் மற்றும் போக்குகளுடைய நிலைப்பாடாகும். எப்பொழுதாவது ட்ரொட்ஸ்கியின் ஆய்வின் ஏதேனும் ஒரு விடயத்திற்கு ஆதரவையோ அல்லது உடன்பாட்டையோ வெளிப்படுத்தியபோதும், ஒரு புதிய அகிலத்திற்காக போராட தம்மையும், அவர்களது அமைப்புகளையும் அர்ப்பணிக்க மறுத்துவிட்டனர். இதன் விளைவு, ட்ரொட்ஸ்கி “மத்தியவாதிகள்” என்று வரையறுத்த இப்போக்குகள் ஒரு புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் இடையே ஒரு பாதுகாப்பான நடுவழியை காண முற்பட்டன. அவற்றின் கொள்கையற்ற அரசியல் தந்திர உத்தியின் அடித்தளத்தில் முற்றிலும் சந்தர்ப்பவாத கணிப்பீடுகள்தான் இருந்தன. அவர்கள் தங்கள் தேசிய தந்திரோபாயங்களில் சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகள் குறுக்கிடுவதை தடுப்பதில் உறுதியாக இருந்தனர். இத்தகைய தேசிய சந்தர்ப்பவாத வழிவகையை ஜேர்மன் சோசலிச தொழிலாளர் கட்சி (SAP), ஸ்பெயின் மார்க்சிச ஐக்கிய கட்சி (POUM), பிரித்தானிய சுதந்திர தொழிற் கட்சி (ILP) ஆகியவை காட்டின. பிரித்தானிய சுதந்திர தொழிற் கட்சி, வென்னர் ப்ரோக்வே தலைமையில் (பின்னர் ப்ரோக்வே பிரபு) இருந்தது, லண்டன் பீரோ எனப்பட்டதை அமைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
நான்காம் அகிலம் அமைப்பதற்கு எதிரான இரண்டாவது வாதம், அதன் அறிவிப்பு காலத்திற்கு முந்தி வந்துள்ளது என்பதாகும். ஒரு அகிலம் “பெரும் நிகழ்வுகளில்” இருந்துதான் எழுச்சி பெற முடியும், அதாவது ஒரு வெற்றிகரமான புரட்சியில் இருந்து என்று கூறப்பட்டது. நிறுவன மாநாட்டில், இந்த நிலைப்பாடு, ஒரு போலந்து பிரதிநிதியால் முன்வைக்கப்பட்டது, நிகழ்ச்சிக் குறிப்புகளில் கார்ல் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு புதிய அகிலம் “புரட்சிகர எழுச்சிக்காலத்தில்தான்” தோற்றுவிக்கப்பட முடியும் என்று வாதிட்டார். “தீவிரமான பிற்போக்கு மற்றும் மந்தநிலைக்கான” சூழல்கள் “நான்காம் அகிலம் அறிவிக்கப்படுவதற்கு முற்றிலும் பாதகமாக உள்ளன என்று அவர் வாதிட்டார். இப்பிரதிநிதி “நான்காம் அகிலத்தில் உள்ள சக்திகளை விகிதாசார ரீதியாக பார்த்தால் அதன் கடமைகளோடு ஒப்பிடும்போது மிகவும் சிறியவையே”, எனவே “முன்கூட்டியே காலத்திற்கு முந்தி செயல்படாமல், சாதகமான கணத்திற்கு காத்திருப்பது அவசியமாகும்” என்றார்.
ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணத்தை தயாரிக்கையில் போலந்துப் பிரதிநிதியின் வாதங்களை எதிர்பார்த்திருந்தார்.
ஐயுறவுவாதிகள் கேட்கலாம்: நான்காம் அகிலம் தோற்றுவிக்கப்பட வேண்டிய கணம் இப்பொழுது வந்துவிட்டதா? ஒரு அகிலத்தை “செயற்கைத்தனமாக” தோற்றுவிப்பது இயலாது என்று அவர்கள் கூறலாம். இது பெரும் நிகழ்வுகளிலிருந்துதான் அது தோன்றலாம் என்பது போன்றவற்றைக் கூறலாம். இந்த எதிர்ப்புக்கள் அனைத்தும் ஐயுறவுவாதிகள் ஒரு புதிய அகிலத்தை கட்டமைக்க இலாயக்கற்றவர்கள் என்பதைத்தான் காட்டுகின்றன. அவர்கள் உண்மையில் எதற்கும் இலாயக்கற்றவர்கள்.
நான்காம் அகிலம் ஏற்கனவே பெரும் நிகழ்வுகளில் இருந்து எழுந்துவிட்டது: வரலாற்றிலேயே தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய தோல்விகளிலிருந்து. இத்தோல்விகளுக்கான காரணம் பழைய தலைமையின் சீரழிவு, நயவஞ்சகம் ஆகியவற்றில் உள்ளது. வர்க்கப் போராட்டம், இடையே தடைப்படுவதை பொறுத்துக் கொள்வதில்லை. இரண்டாவதை தொடர்ந்து மூன்றாம் அகிலம் புரட்சியின் தேவையை பொறுத்தவரை இறந்துவிட்டது. நான்காம் அகிலம் நீடூழி வாழ்க!
அக்டோபர் 1938ல் ட்ரொட்ஸ்கி ஒரு உரையை பதிவு செய்தார். இதில் அவர் வெளிப்படையான மனஎழுச்சியுடன் நான்காம் அகிலம் நிறுவப்படுவதை வரவேற்றார்.
அன்புள்ள நண்பர்களே, நாம் ஏனைய கட்சிகளை போன்ற ஒரு கட்சியல்ல. நமது நோக்கம் அதிக உறுப்பினர்களை, அதிக பத்திரிகைகளை, கையிருப்பில் அதிக பணத்தை, அதிக பிரதிநிதிகளை கொண்டிருப்பது அல்ல. ஆனால் அவை அனைத்தும், ஒரு வழிவகை என்னும் முறையிலையே அவசியமானவைதான். நம் நோக்கம் சோசலிசப் புரட்சியூடாக உழைப்பவர்களும் சுரண்டப்படுபவர்களும் முழு பொருள்சார் மற்றும் ஆன்மிக விடுதலையாகும். எவரும் அதைத் தயாரிக்க முடியாது, எம்மைத்தவிர வேறொருவரும் வழிகாட்டமுடியாது. நாம்தான் அவற்றைச் செய்ய வேண்டும். பழைய அகிலங்களான இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆம்ஸ்டர்டாம் உடன் லண்டன் பீரோவையும் சேர்த்துக் கொள்வோம், முழுமுற்றிலும் இற்றுப்போனவையே ஆகும்.
மனிதகுலத்தின் முன் பாய்ந்து வரும் பெரும் நிகழ்வுகள், இந்த காலம் கடந்துவிட்ட அமைப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாக இருக்கவைக்காது. நான்காம் அகிலம் ஒன்றுதான் வருங்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறது. இது சோசலிசப் புரட்சியின் உலக கட்சி ஆகும்! உலகில் இதைவிடப் பெரிய பணி ஏதும் இருந்ததில்லை. நம் ஒவ்வொருவரிடமும் மகத்தான வரலாற்றுப் பொறுப்பு உள்ளது.
முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் முன்வைத்த முன்னோக்கை கொண்டு, ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு வரலாற்றினால் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதை தீர்மானித்துக்கொள்வது சாத்தியம். ட்ரொட்ஸ்கியால் தீர்க்கதரிசனமாக கூறப்பட்ட பழைய அமைப்புக்களான ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் மத்தியவாதத்தின் அரசியல் உடைவுகளில் எஞ்சியிருப்பது என்ன? இரண்டாம் அகிலம், CIA இனாலும் பிற நாடுகளின் உளவுத்துறைகளினாலும் இயக்கப்படும் தொழிலாள வர்க்க விரோத செயற்பாடுகளுக்கும் சதிகளுக்குமான மையமாகத்தான் உள்ளது. மூன்றாம் அகிலம் உத்தியோகபூர்வமாக ஸ்ராலினால் 1943ம் ஆண்டு கலைக்கப்பட்டது.
உலகெங்கிலும் இருக்கும் ஸ்ராலினிசக் கட்சிகள் 1991இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டபோது அவற்றை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் அடித்துச்செல்லும் வரை கிரெம்ளின் அதிகாரத்துவத்தை பல தசாப்தங்களுக்கு சுற்றிவந்தன.
இல்லை, நாம் ஒன்றும் மிகைப்படுத்த வேண்டியதில்லை. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி அளவில் மிகவும் குறைந்துவிட்டாலும் தொடர்ந்து இருக்கிறது. அது, ரஷ்ய தேசியவாதிகள், பாசிஸ்ட்டுக்களுடன் மாஸ்கோவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. அவற்றில் ஸ்ராலினுடைய படங்களுடனான பதாகைகள் ஸ்வாஸ்திகா சின்னங்கள் பதிக்கப்பட்டு அசைக்கப்படுகின்றன. “கம்யூனிஸ்ட் கட்சி” சீனாவில் அதிகாரத்தில் உள்ளது என்பது உண்மையே. அங்கு அது, இரண்டாம் மிகப் பெரிய உலகின் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு தலைமை தாங்குகிறது. இந்தப் பொலிஸ் அரச ஆட்சி தொழிலாள வர்க்கத்தின் உழைப்பில் இருந்து சுரண்டப்படும் பெரும் இலாபங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகடந்த நிறுவனங்களுக்கு மாற்றப்படுவதற்கு உத்தரவாதம் வழங்குகின்றது.
நான்காம் அகிலம் ஒன்றுதான் இத்தகைய வரலாற்றின் நீண்டகால மேடு பள்ளங்களை வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ள புரட்சிகரமான அமைப்பாகும். இது ஆழமான அரசியல் போராட்டங்களையும் பிளவுகளையும் கடந்துள்ளது என்பது உண்மையே. இந்த உள் முரண்பாடுகள், தொடர்ச்சியாக மாற்றமடையும் சர்வதேச சமூகப் பொருளாதார சூழ்நிலைமைகளின் கீழ் வர்க்கப் போராட்டத்தின் மாற்றங்களையும் மற்றும் இந்த மாற்றங்களின் தாக்கங்களின் கீழ் தொழிலாள வர்க்கத்தினுள் மட்டுமல்லாது மத்தியதர வர்க்கத்தின் வித்தியாசமான தட்டுக்களின் மத்தியிலும் நிகழும் சமூக சக்திகளின் மறு அணிதிரளலையும் பிரதிபலிக்கின்றது.
முன்னாள் மற்றும் போலி இடது உயர்கல்விக்கூடத்தினரின் பொங்கும் விஷக்காற்றின் நொதிப்பில் நிறைந்த எதிலும் குற்றம்காணும் அரசியல்வாதிகள், நான்காம் அகிலத்திற்குள் ஏற்பட்ட பிளவுகளைச் சுட்டிக் காட்டுவதில் மிகவும் விருப்பம் கொண்டுள்ளர். அத்தகையவர்கள், ஆண்டு மாறி ஆண்டு தாங்கள் வாக்குப்போடும் முதலாளித்துவக் கட்சிகளின் குற்றங்களுக்கு மௌனமாகச் சம்மதிப்பதுடன், அரசியலில் வர்க்க இயங்கியலை பற்றி எதையும் விளங்கிக்கொள்ளவில்லை. சொந்த மட்டத்திலும்கூட அவர்கள் ஏன் எவராவது எங்காவது உறுதியான, சமரசத்திற்கு இடமில்லாத கொள்கை சம்பந்தமாக அரசியல் போராட்டத்தை நடத்துகின்றனர் என்பதை விளங்கிக்கொள்ள முடியாது இருக்கின்றனர்.
நான்காம் அகிலம் நிறுவப்பட்டு 15 ஆண்டுகளுக்குப்பின், நவம்பர் 1953ல் எழுந்த ஸ்ராலினிச சார்பான போக்கு ஒன்று அடிப்படைப் பிரச்சனைகளான வர்க்க நிலைநோக்கு, வரலாற்று முன்னோக்கு, அது தொடர்பான அரசியல் மூலோபாயம் பற்றி ஒரு பிளவிற்கு இட்டுச்சென்றது. போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் மறு ஸ்திரப்பாடும் இன்னும் பாரியளவில் இருந்து ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் செல்வாக்கிலான பாரிய அழுத்தமும் மற்றும் வளர்ச்சியடையும் மத்தியதர வர்க்கத்தின் ஒரு பிரிவில் பெருகிய முறையில் அரசியல் சுயஉணர்வு ஏற்பட்டது அனைத்தும் ஒரு புதிய வடிவத்திலான சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியில் வெளிப்பாட்டைக் கண்டன. இப்புதிய சந்தர்ப்பவாதம், பப்லோவாதம் என அறியப்பட்டது (அதை நன்கு வெளிப்படுத்திய மிஷேல் பப்லோ பெயரில் இருந்து வந்தது). இது சோவியத் அதிகாரத்துவத்தையும் ஸ்ராலினிசத்தையும் ட்ரொட்ஸ்கி எதிர்ப்புரட்சிகரமானவை என வகைப்படுத்தியதை நிராகரித்தது. பல நூற்றாண்டு காலப்போக்கில் அதிகாரத்துவத்தின் புரட்சிகளாலும் மற்றும் அத்துடன் பிணைந்துள்ள ஸ்ராலினிசக் கட்சிகளின் தலைமையில் சோசலிசம் அடையப்படும் என்ற கருத்தை கண்டுபிடித்தது. இது நடக்கும். ஒரு அணு சக்திப்போர் கூட சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கான சூழலைத் தோற்றுவிக்க முடியும் என்று அது கூறியது. மேலும் குறிப்பாக காலனித்துவ நாடுகளிலும் “மூன்றாம் உலக நாடுகளில்” இருந்த பல முதலாளித்துவ தேசியவாத மற்றும் குட்டி முதலாளித்துவ இயக்கங்களுக்கு ட்ரொட்ஸ்கி கொடுக்க மறுத்த புரட்சிகரத் தகைமைகளை, அவற்றிற்கு இருப்பதாக கூறியது.
மார்க்சிச தத்துவதையும் மற்றும் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கையும் பப்லோவாதிகள் திரிபுபடுத்தியதன் முக்கிய உள்ளடக்கம் சோசலிச புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் மையப்பங்கை நிராகரித்ததுதான். ஜேம்ஸ். பி. கனன் உடைய முயற்சியால் 1953ல் பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் செல்வாக்கிற்கு எதிராகப் போராட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அமைக்கப்பட்டது. பப்லோவாதத்தின் அரசியல் தர்க்கமும் நடைமுறையும் எதிர்க்கப்படாவிட்டால் ஒரு புரட்சிகரத் தொழிலாள வர்க்கக் கட்சி என்னும் வகையில் நான்காம் அகிலம் கலைக்கப்படுவதற்கு வழிவகுத்துவிடும்.
பப்லோவாதத்தின் செல்வாக்கிற்கு எதிரான அரசியல் போராட்டம் நான்காம் அகிலத்தினுள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இப்போராட்டம் வெற்றிகரமான 1985ல் அனைத்துலகக் குழுவின் மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள் நான்காம் அகிலத்தின் அரசியல் தலைமையை மீட்டபோது முடிவிற்கு வந்தது. இந்த வெற்றிக்கு காரணமான புறநிலை காரணிகள், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி தீவிரமானது, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் ஒரு தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்டிருந்த அனைத்து தொழிலாளர் அமைப்புக்களின் வெளிப்படையான திவால்தன்மையும்தான்.
ஆனால் இந்த புறநிலை நிலைமைகள் மட்டும் போதுமானதாக இருந்திருக்காது. திருத்தல்வாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் அனைத்துலகக் குழுவின் மரபார்ந்த ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளால் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம், அவர்கள் நனவான முறையில் தங்கள் பணிக்கு ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தின் தத்துவார்த்த மரபியத்தை அடித்தளமாக கொண்டதுதான். பலதசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்திசெய்யப்பட்டு, கட்டியமைக்கப்பட்ட இந்த மரபியம் அரசியல் பலத்திற்கான ஒரு மாபெரும் மூலம் ஆகும். இறுதிப்பகுப்பாய்வில், முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் வளர்ச்சி மற்றும் அதைத்தொடர்ந்த வர்க்கப் போராட்டம் ஆகியவை ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலம் அபிவிருத்தி செய்த முன்னோக்குடன் இயைந்திருந்தன.
நூற்றாண்டின் முக்கால் பகுதியான எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஒரு கணிசமான காலம் ஆகும். நான்காம் அகிலத்தின் நிறுவகக் காங்கிரஸ் காலத்தில் இருந்து நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன என்பது வெளிப்படை. ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தின் அடிப்படை கட்டுமானங்களும் முரண்பாடுகளும் இன்னும் தொடர்ந்து நீடிக்கின்றன. அனைத்து தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் அப்பால் தற்கால முதலாளித்துவம் எதிர்கொள்ளும் நிலைமை 1938ல் இருந்ததைவிட மிகவும் நம்பிக்கையிழந்ததாகவே உள்ளது. உண்மையில் இது மோசமாகிவிட்டது. நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணத்தை ட்ரொட்ஸ்கி எழுதியபோது, உலக முதலாளித்துவம் தவிர்க்கமுடியாத பொருளாதார நெருக்கடியால் பீடிக்கப்பட்டு ஜனநாயகத்தை கைவிட்டு போரை நோக்கி விரைந்தது.
இன்று நான்காம் அகில ஸ்தாபிதத்தின் 75 வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகையில், உலக முதலாளித்துவம்.... தவிர்க்கமுடியாத பொருளாதார நெருக்கடியால் பீடிக்கப்பட்டு ஜனநாயகத்தை கைவிட்டு போரை நோக்கி விரைகிறது.
75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் அசாதாரண உடனடித்தன்மையைக் கொண்டுள்ளன:
வரலாற்று நிலைமைகள் “இன்னும் சோசலிசத்திற்காக கனியவில்லை” என்னும் பேச்சு அறியாமையினதும் மற்றும் உணர்மைமிக்க ஏமாற்றுத்தனத்தினதும் விளைவுதான். தொழிலாள வர்க்க புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் “கனிந்துள்ளன” என்பது மட்டுமல்லாது, அவை சற்றே அழுகவும் தொடங்கிவிட்டன. ஒரு சோசலிசப் புரட்சி இல்லாவிடின், அடுத்த வரலாற்றுக்காலகட்டத்தில், ஒரு பேரழிவு என்பது மனிதகுலத்தின் முழு கலாச்சாரத்தையும் அச்சுறுத்தும். இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் தருணம் ஆகும் அதாவது, முக்கியமாக அதன் புரட்சிகர முன்னணியுடையதின் காலமாகும். மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகரத் தலைமை நெருக்கடியாக சுருக்கப்பட்டுள்ளது. |