சந்தைக் கொந்தளிப்பு ஒரு புதிய உலக நிதிய நெருக்கடி உருவாகிக்கொண்டிருப்பதை அறிவிக்கிறது
By Nick Beams
3 September 2013
அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு (US Federal Reserve) அமெரிக்க கருவூலப் பத்திரங்களை அதனுடைய “தாராளமாக பணத்தை அச்சடித்துவிடும் (QE)” திட்டத்தின் கீழ் வாங்குவதை நிறுத்துமானால், கூடுமானவரை கட்டுப்படுத்தமுடியாத ஒரு பெரிய நெருக்கடிக்கான சூழ்நிலை உருவாக்கப்படுமென சர்வதேச நிதிய வட்டங்களில் கவலைகள் பெருகியுள்ளன.
கடந்த மே மாதம் மத்திய வங்கிக்கூட்டமைப்பு முதலில் தான் “எழுச்சி பெற்றுவரும் சந்தைகளை” “குறைக்கும்” வழிவகைகளை தொடங்கும் என்றவுடன் அவைகளின் நாணயங்கள், பங்குச் சந்தைகள் பெருகும் கொந்தளிப்பிற்கு உட்பட்டுள்ளன, இதற்குக் காரணம் தாராளமாக பணத்தை அச்சடித்துவிடுதல் திரும்பப் பெறத்தொடங்கியதன் விளைவாக ஊக மூலதனம் அங்கிருந்து நகரத் தொடங்கிவிட்டது.
தாராளமாக பணத்தை அச்சடித்துவிடும் திட்டத்தின்படி, கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு 1 டிரில்லியன் டாலர்கள் அமெரிக்க மத்திய வங்கியின் கருவூலப் பத்திரங்களையும் அடைமான ஆதரவுடைய பத்திரங்ளையும் (mortgage-backed securities) வாங்கத் தொடங்கியதில் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மிகக்குறைந்த மட்டத்திற்கு குறைக்கப்பட்டன. இந்த நெருக்கடிக்கு பொறுப்பானவர்களின் சொத்துக்களையே உயர்த்துவதற்கு நோக்கம் கொண்ட தாராளமாக பணத்தை அச்சடித்துவிடும் இத்திட்டத்தினால், 1930களுக்குப் பின் மிக மோசமான சமூக நெருக்கடி அமெரிக்காவில் இருப்பதற்கு நடுவே மற்றொரு நிதியக் குமிழிக்கான சூழல் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைவாக குறைக்கப்பட்டது, ஒரு “carry trade” எனப்படுவதை ஏற்படுத்தியது. இதன் மூலம் நிதிய ஊகம் செய்வோர் மிகவும் குறைந்த வட்டி விகிதங்களில் கடன் வாங்கி அவற்றை அமெரிக்காவில் கிடைப்பதை விட அதிக இலாபத்திற்கு எழுச்சி பெற்றுவரும் சந்தைகளில் முதலீடு செய்தனர். பைனான்சியல் டைம்ஸ் கருத்துப்படி, 2010ல் இருந்து மூலதனப் பாய்வுகள் எழுச்சி பெற்றுவரும் சந்தைகளில் 1 டிரில்லியன் டொலர்களாக ஓராண்டிற்கு “வழக்கத்திற்கு மாறான நிதியக் கொள்கைகள்” முன்னேறிய பொருளாதாரங்களில் ஏற்கப்பட்டதின் விளைவாக நிகழ்ந்தன.
இப்பொழுது ஊக மூலதனம் “குறைப்பை” எதிர்பார்த்து எதிர்த்திசையில் செல்லத்தொடங்கியதுடன், அமெரிக்க வட்டி விகிதங்களில் அதிகரிப்பை எதிர்பார்த்தும் நகரத் தொடங்கிவிட்டது. எழுச்சி பெற்றுவரும் சந்தை நாடுகளின் நாணயங்கள் சரியத் தொடங்கியவுடன் வெளிப்பாய்வு விரைவாயின. இதனால் ஊக வணிகர்கள் தங்கள் பணத்தை இன்னும் அதிக இழப்புக்கள் ஏற்படுமுன் எடுக்கத் தொடங்கினர்.
பைனான்சியல் டைம்ஸில் எழுதிய முன்னாள் மெக்சிக்கன் நிதித்துறை செயலர் கைலெமோ ஓரிட்ஸ் ஏப்ரல் மாதம் தொடங்கி இந்தோனேசியா அதன் வெளிநாட்டு நாணய பரிமாற்ற இருப்புக்களில் கிட்டத்தட்ட 14% இழந்துவிட்டது, இந்தியா கிட்டதட்ட 5.5% இழந்து விட்டது என்று கூறியுள்ளார். இந்த அழுத்தம் தொடர்ந்தால், பின் ஒரு முழு அளவு செலுத்துமதி நிலுவை நெருக்கடி வளரலாம். இதே நிலைதான் துருக்கி, உக்ரைன், தென்னாபிரிக்கா இன்னும் பிற நாடுகளுக்கும் வரும்.
2002க்கும் 2011க்கும் இடையே சராசரி 7.7% என இருந்த நிலையில் இருந்து, பொருளாதார வளர்ச்சி 4.4% எனக் குறைந்துவிட்டதால், இந்திய ரூபாய் 2013ல் 20% மதிப்பில் சரிந்துவிட்டது. பணவீக்கம் உயர்ந்துகொண்டிருக்கிறது, வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைகள் அதிகமாகியுள்ளன.
துருக்கியின் லிரா ஆண்டு இந்த ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 14% சரிந்துவிட்டது, மேலும் பங்குச் சந்தை 25 சதவிகிதத்தால் குறைந்துவிட்டது. துருக்கிய பொருளாதாரத்தின் அதிக விரிவாக்கம் கடந்த தசாப்தங்களில் நிதிய, கடன் குமிழியின் விளைவாகும். அவை இப்பொழுது விரைவாக பெரிதும் கீழ்நோக்கி வருகின்றன. லிரா தொடர்ந்து சரிந்தால், பின் வெளிநாட்டு நாணயக் கடன்களைக்கூட திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.
சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் செய்த ஒரு மதிப்பீட்டின்படி, “இதற்கு மிக அதிக வெளிநாட்டு நிதியத் தேவைகள் காரணமாக, துருக்கி பின்னோக்கிய மூலதனப் பாய்வு என்ற ஆபத்திற்கு உட்படும். இது ஏற்பட்டால் அது கடினமான நிலையை ஏற்படுத்தும்.”
துருக்கியின் பிரச்சினைகள் பலவகை எழுச்சி பெற்றுவரும் சந்தைகள் முழுவதும் அப்படியே நேருகின்றன. இது இன்னும் பெரிய அளவில், ஆசிய நிதிய நெருக்கடி 1997-98ன் திரும்பிவருதல் ஆபத்தை ஏற்படுத்தும். இத்தகைய நாடுகள் முன்னேறிய நாடுகளில் இருந்து “விலகியுள்ளன” என்னும் கூற்றும் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுக்கலாம் என்னும் கூற்றும் அதுவும் 2008 சரிவிற்குப் பின் அப்படியே சிதைந்துவிட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் எழுச்சி பெற்றுவரும் சந்தைகளின் நெருக்கடியிலிருந்து உலகப் பொருளாதாரத்தை பாதுகாக்கும் “இன்னும் அதிகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை” கோரியுள்ளார். ஆனால் எத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை, எப்படியும் தேவைப்படும் நிதி அத்தகைய வெளியேறும் விரைவு தொடங்கினால், சர்வதேச நாணய நிதியத்தினாலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கும்.
அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு கிட்டத்தட்ட சர்வதேச நிலைமைக்கு எந்தப் பொறுப்பில் இருந்தும் தன் கைகளைக் கழுவிவிட்டது. அதிகாரிகள் தங்கள் கொள்கைகளின் உள்நாட்டுப் பாதிப்பு குறித்துத்தான் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிவிட்டனர். இது 1973ல் டாலர் மதிப்பு குறைந்தபோது ஐரோப்பா கவலைகளை எதிர்கொண்டபோது ஜோன் கானலியின் “இது எங்கள் நாணயம், ஆனால் உங்கள் பிரச்சினை” என்னும் மதிப்பிழந்த சொற்றொடரைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது. இப்பொழுது 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆக்கிரோஷமான பொருளாதாரக் கொள்கை புதிய மட்டங்களுக்கு எழுப்பப்பட்டுள்ளன. அத்துடன் இது அதிகரிக்கும் இராணுவவாதத்துடன் உலகம் முழுவதும் அமெரிக்க நலன்கள் தொடரப்படுவதுடன் இணைந்துள்ளன.
எந்த சர்வதேச தீர்வும் விவாதிக்கப்படவும் இல்லை, அல்லது கண்ணிற்கெட்டிய தூரம் தெரியவும் இல்லை. தென்னாபிரிக்க நிதி மந்திரியான பிரவீண் கோர்தன் “நாணயங்களில் ஏற்ற இறக்கங்களை நாம் குறைக்க உறுதியாக இருக்க வேண்டும் என்னும் உலகம் முழுவதுமுள்ள விருப்பத்திற்கு ஒத்திசைவான, ஒன்றுபட்ட விடையிறுப்புக்கள் காண்பது கடினம்” என்றார். கடந்த மாதம் மத்திய வங்கியாளர்களின் கூட்டத்தில், வையோமிங் ஜாக்சன் ஹோலில் பேசிய மெக்சிக்கோவின் மத்திய வங்கிக் ஆளுனரான அகஸ்டின் கார்ஸ்டென்ஸ் “பாய்வின் ஏற்ற இறக்கங்கள் (மூலதனம்) மிக அழிவுண்டாக்கக்கூடிய முறையில் உள்ளது” என்றார்.
இவ் ஏற்ற இறக்கங்களின் அடித்தளத்திலுள்ள காரணங்கள் முகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான பெயின் அன்ட் கோ. வின் சமீபத்திய அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. நிதியப் பொருளாதாரத்திற்கும் அடிப்படையான உண்மைப் பொருளாதாரத்திற்கும் இடையேயுள்ள உறவு “ஒரு முக்கிய திருப்புமுனையை” அடைந்துள்ளது என்று அது சுட்டிக்காட்டுகிறது. உண்மையான உற்பத்தி மெதுவாகையில், நிதியச் சொத்துக்களின் தொகை விரைவான வேகத்தில் அதிகமாகியுள்ளது. இது இப்பொழுது பொருட்கள் மற்றும் சேவைகளின் உலக உற்பத்தியின் மதிப்பைப் போல் பத்து மடங்காக இருக்கிறது.
வேறுவிதமாகக் கூறினால், உலகப் பொருளாதாரம் பெருகிய முறையில் தலைகீழாக இருக்கும் பிரமிட்டை ஒத்துள்ளது. இதில் நிதியச் சொத்துக்களின் விரிவடையும் தொகையானது உச்சத்திலிருக்கையில், இந்த அதிகரிப்பானது மத்திய வங்கிக் கூட்டமைப்பினதும் ஏனைய மத்திய வங்கிகளின் கொள்கைகளால் எரியூட்டப்படுகிறது. பிரமிட்டின் அடித்தளம் ஒப்புமை அளவில் சிறிதாகிக்கொண்டு செல்கின்றது.
இதுதான் நிலைமை. அதாவது இலாபத்திற்காக மூலதனத்தின் ஊக உட்பாய்வுகளால் தோற்றுவிக்கப்பட்ட சொத்துக் குமிழிகள் என்பவை, “ஒப்புமையில் தனிமைபடுத்தப்பட்ட நிகழ்வுகள் என்பதிலிருந்து அமைப்புமுறையை அதிர்ச்சிக்கு உட்படுத்தும் நெருக்கடியாக நகர்ந்து, டிரில்லியன் கணக்கான டாலர்கள் நஷ்டத்திற்கு காரணமாகிவிட்டன” என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க நிதிய மூலதனத்தின் காப்பாளர்கள், அவர்கள் ஒருதலைப்பட்சமாக தங்களுடைய நடவடிக்கையால் ஏற்படும் உலக விளைவுகளை பொருட்படுத்தாமல் நடக்கலாம் என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர். ஆனால் இறுதிப் பகுப்பாய்வில், எந்த நாடும் அமெரிக்காவை விட உலக நிதியின் வன்முறை நகர்வுகளால் பாதிப்படையும் தன்மையை கொண்டிருக்கவில்லை.
சீனாவினால் கருவூலப் பத்திரங்களை வாங்குவதை மிகவும் நம்பியிருந்த அமெரிக்க நிதிய அமைப்புமுறை, அந்த நாட்டிலேயே பெரிய கடன் நெருக்கடி வந்துவிட்டது என்பது —சீனக் கடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2008ம் ஆண்டு 130%ல் இருந்து இன்று 200% என வந்துவிட்ட நிலைமையின் ஒன்றின் எச்சரிக்கைகளாக இருக்கின்றன— அமெரிக்க சந்தைகளில் இருந்து நிதிகளைத் திரும்பப் பெற்றால் அது நிதியப் பூகம்ப அதிர்வைத்தான் ஏற்படுத்தும்.
கடந்த வாரம் UBS Wealth Management உடைய உலகளாவிய தலைமை முதலீட்டு அதிகாரியான அலெக்சாந்தர் ப்ரீட்மான், விரைவிலோ, தாமதித்தோ அமெரிக்கா சீன வங்கி முறையை பிணையெடுத்தாக வேண்டும், உள்நாட்டில் நெருக்கடி கையாளப்பட சீனா அமெரிக்கப் பத்திரங்களை பலவந்தமாக தூக்கிவீச நேர்ந்தால், இத்தகைய நடவடிக்கைகள் வட்டி விகிதங்களை உயர்த்தி அமெரிக்காவில் பொருளாதார கொந்தளிப்பை கொண்டுவரும்.
இராணுவவாத வெடிப்பிற்கும், தீவிரமடையும் பொருளாதார நெருக்கடிக்கும் இடையே பெருகிய இடைத்தொடர்பு உள்ளது. அமெரிக்கா ஆரம்பித்த தொடர்ச்சியான போர்கள் அதனுடைய ஒப்புமையில் பொருளாதாரச் சரிவை கடக்க ஆயுத வலிமையை பயன்படுத்தும் முயற்சிகளின் விளைவாகும். ஆனால் சிரியாவிற்கு எதிரான போர், அல்லது ஈரான் போன்ற இலக்குகள் ஒரு நிதிய நெருக்கடியை உருவாக்க முடியும். அவை உடனடியாக அமெரிக்காவிற்கு “மீண்டும் பாய்ந்துவரும்.”
நிதிய நெருக்கடி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் முடிவடையப் போகும் நேரம் வருகையில், எதுவும் தீர்க்கப்படவில்லை என்பது மிகத் தெளிவாக இருப்பதோடு மட்டுமன்றி, ஆனால் அது முதலாளித்துவப் பொருளாதார வரலாற்று நெருக்கடியாகவும் இருந்து நிதிய அமைப்புமுறையை தீவிரமடையச் செய்துவருகிறது. பில்லியன் கணக்கான மக்கள் டமோக்ளிசின் கத்தி (sword of Damocles) தங்களுடைய தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் வாழ்கின்றனர். உலக நிதிய அமைப்புமுறை ஒரு புதிய பேரழிவை நோக்கிச் செல்லுகையில், ஒரே இரவில் வறுமையில் தள்ளப்படும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டுள்ளனர்.
|