World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Sino-Japanese tensions flare over disputed islands

மோதலுக்குட்பட்ட தீவுகள் பற்றிய சீன-ஜப்பானிய அழுத்தங்கள் வெடிக்கின்றன

By John Chan
16 September 2013

Back to screen version

கடந்த ஆண்டு ஜப்பானிய அரசாங்கம் மோதலுக்குட்பட்ட சென்காகு தீவுகளை (சீனாவில் டயோயு என அறியப்படுபவை) அவற்றின் தனிப்பட்ட ஜப்பானிய உரிமையாளரிடம் இருந்து வாங்கிய ஓராண்டு முடிவு தினமான கடந்த புதன் அன்று ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே அழுத்தங்கள் வெடித்தன.

2020 ஒலிம்பிக் விளையாட்டுக்களை டோக்கியோவில் நடாத்துவதற்கான  ஆதரவை தேடி ஆர்ஜென்டினாவிற்கு சென்ற பிரதம மந்திரி ஷின்ஜோ ஏபே இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜப்பான் சென்காகுஸ் மீது “திறமையான கட்டுப்பாட்டை” தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். சில மணி நேரத்தில் இரண்டு சீன H-6 குண்டுவீசும் விமானங்கள் முதல் தடவையாக ஒகினாவா தீவுகள் கூட்டத்திற்கும் மியாகோ தீவுகளுக்கும் இடையில் சென்காகுஸ் தீவுகளுக்கு அருகே சர்வதேச வான்பகுதியில் பறந்தன. இதற்கு விடையிறுக்கும் வகையில் போர் விமானங்களை ஜப்பான் அனுப்பியது.

சீனச் செய்தி ஊடகம் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை தாங்கிய இந்த YJ-12  குண்டு வீசும் விமானங்களின் தாக்குதல் சக்தி 500 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியவை என்றும் மற்றும் ஜப்பானிய, அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை அல்லது மேற்கு பசிபிக்கில் இருக்கும் தரை இலக்குகளைத் தாக்கும் திறன் உடையவை என்றும் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் இரண்டு சீன 054A பிரிகேட்டுக்கள் இதே பகுதியில் பசிபிக்கில் ஒரு பயிற்சி முடிந்த பின் கடந்து செல்வதும் அவதானிக்கப்பட்டன.

ஜப்பான் மற்றும் சீனா இரண்டுமே ஆண்டு நிறைவுக்கு முன் இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கடந்த திங்கள் அன்று ஜப்பான் F15 போர் விமானங்களை அனுப்பி சென்காகுஸ் தீவுகளுக்கு அருகே உயரே பறந்த சீன கண்காணிப்பு டிரோனை இடைமறித்தது. மறுநாள் எட்டு சீன கடலோரக் காவல் கப்பல்கள் மோதலுக்குரிய தீவுகளுக்கு அருகே உள்ள நீர்நிலையைக் கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டன, இது ஜப்பானிடம் இருந்து ஒரு வெளிப்படையான  எதிர்ப்பைத் தூண்டியது.

தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில், ஜப்பானுக்கு அருகே உள்ள சர்வதேச நீர்ப்பரப்பின் மீது “பறக்கும் சுதந்திரம்” அதற்கு உண்டு என்பதை சீனா வலியுறுத்தியது. இது அமெரிக்கா சீனாவிற்கு அருகே அதன் கடற்படை பிரசன்னத்திற்குக் கொடுத்த காரணத்தை எதிரொலிக்கிறது. சீனப்பாதுகாப்பு அமைச்சரகம் “சீன இராணுவம் வருங்காலத்திலும் இதேபோன்ற செயல்களைத் தொடரும்.” என அறிவித்தது. ஜப்பானிய கண்காணிப்பு விமானங்கள் ஆண்டு ஒன்றிற்கு சீனக் கடலோரத்தில் 500 முறைகள் பறக்கின்றன, இவற்றில் பல 12 கடல் மைல் எல்லைக்கு அருகே உள்ளன என்றும் கூறியுள்ளது.

கிழக்கு சீனக் கடலில் உள்ள சென்காகு/டயோயு தீவுகள் ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுக்கும்” நிலைப்பாட்டிற்குப் பின்னர் ஒரு ஆபத்தான பிராந்தியமாக உள்ளன. அந்த நிலைப்பாடு அப்போது இருந்த ஜப்பானிய ஜனநாயகக் கட்சியின் (DPJ) தலைமையிலான ஜப்பானிய அரசாங்கத்தை இன்னும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் ஊக்கத்தை அளித்தது. 2010இல் ஜப்பானிய அதிகாரிகள் சீனக் கப்பல் ஒன்றின் தலைவனை கைது செய்த பின் அழுத்தங்கள் வெடித்தன. மீண்டும் கடந்த ஆண்டு தீவுகளை ஜப்பான் “தேசியமயமாக்கியபின்” அதிகமாயின. ஏபேயும் அவருடைய வலதுசாரி  தாராளவாத ஜனநாயகக் கட்சியும் (LDP) கடந்த டிசம்பர் தேசியத் தேர்தலில் வெற்றிபெற்ற பின் இன்னும் கடுமையான நிலைப்பாட்டை ஜப்பான் மீண்டும் இராணுவமயமாக்கப்படலின் ஒரு பகுதியாக எடுத்துள்ளனர்.

தலைமை அமைச்சரவை செயலர் யோஷிஹிடே சுகே கடந்த செவ்வாயன்று ஜப்பான் “இறைமையைப் பொறுத்தவரை விட்டுக்கொடுப்புகளை வழங்காது” என்று அறிவித்தார். டோக்கியோ ஆட்களற்ற தீவுகளில் அரசாங்க அதிகாரிகளை ஈடுபடுத்தும் வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டதற்கு “அது விருப்பத் தேர்வுகளில் ஒன்று” என்றார் அவர். சீன வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லீ இதற்கு பதிலளித்து: “ஜப்பானியர்கள் பொறுப்பற்ற முறையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எடுத்தால், அதன் விளைவை அவர்கள் ஏற்க வேண்டும்.” என்றார்.

சமீபத்திய செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பலமுறையும் ஏபேயுடன் ஒரு முறையான கூட்டம் ஏற்பாடு செய்வதற்கான வேண்டுகோளை நிராகரித்தார். கூட்டத்திற்கு வெளியே அவர்கள் சந்தித்த போது, ஏபேயை “வரலாற்றை நேரே சந்திக்க வேண்டும்” என்று கூறிய லீ, டயாதவோ தீவுகள் பிரச்சினையையும் நேர்மையுடன் அணுக வேண்டும் என்றார்.
டோக்கியோ மற்றும் பெய்ஜிங் இரண்டுமே உள்நாட்டில் உயரும் சமூக அழுத்தங்களில் இருந்து மக்களைத் திசை திருப்ப தேசியவாதத்தை தூண்டி விடுகின்றன. ஏபேயின் அரசாங்கம் நாட்டின் மிக ஆதரவற்ற நுகர்வு வரியை அடுத்த ஏப்ரலில் உயர்த்த தயாராகிறது. இந்நடவடிக்கை ஜப்பானிய பொருளாதாரத்தை தாக்கி, அதிகளவு வேலையின்மை மற்றும் வறுமைக்கு வழி வகுக்கலாம்.

சீன அரசாங்கமும் குறைவான பொருளாதார வளர்ச்சியையும் பெருகும் நிதிய உறுதியற்ற நிலைப்பாட்டையும் முகங்கொடுக்கிறது. அது சந்தைச் சார்பு புதிய சுற்று மறுகட்டமைப்பை சுமத்த முற்படுகிறது. அது ஏற்கனவே ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே உள்ள பிளவை அதிகரிக்கும். சமீபத்திய நடவடிக்கையாக அரசுக்கு சொந்தமான இராணுவ தளவாடத் தொழில்களை பங்குச் சந்தைகளில் பதிவு செய்தல் உள்ளது. சீன விமானந்தாங்கி கப்பல் கட்டும் ஒரு ஷாங்காய் அமைப்பு இதை பாராட்டி, சீனாவை ஒரு கடற்படைச் சக்தி உடையதாக வளர்க்க “தனியார் மூலதனம்” முக்கிய பங்குவகிக்கும் என்றது.

ஆனால் இத்தகைய கடினப் போக்குக் காட்டுவதற்கு பின்னணியில் சீன ஆட்சி பேச்சுவார்த்தைக்கு இன்னும் கதவு திறந்துதான் உள்ளது என்று அடையாளம் காட்டியுள்ளது.

உத்தியோகபூர்வ ஜின்ஹுவா செய்தி நிறுவனத்தில் ஒரு சிறப்புக் கட்டுரை, ஜப்பானின் மோதலுக்குட்பட்ட சிறு தீவுக் கூட்டம் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு நிறைவை ஒட்டி வெளிவந்துள்ளது. இது டோக்கியோவை 2020 ஒலிம்பிக் நடத்த இருப்பதைப் பயன்படுத்தி, “அதன் போர்க்கால வரலாற்று அணுகுமுறையை திருத்துமாறும், தேக்கநிலையை உடைக்க அண்டை நாட்டவரின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் உருப்படியாக செயல்புரியுமாறும்” கேட்டுக் கொண்டுள்ளது. இரு நாடுகளின் அழுத்தங்களுக்கு ஏபேயின் அரசாங்கத்தை குறைகூறுகையில் ஜின்ஹுவா முடிவுரையாக பின்வருமாறு கூறுகிறது. “இரு நாட்டின் பல தலைமுறைத் தலைவர்களின் முயற்சிகளால் ஈட்டப்பட்ட இருதரப்பு நல்லுறவு கவனமாக காப்பாற்றப்பட வேண்டும். இரு நாடுகளின் நலனை ஒட்டியும், பிராந்தியத்தின் நலனை ஒட்டியும், சீனா சீன-ஜப்பானிய மூலோபாய உறவுகளை பரஸ்பர நலன்களுக்காக முன்னேற்ற தயாராக உள்ளது...”

இக்கருத்து அழுத்தங்கள் பொருளாதார உறவுகளை சேதப்படுத்தியுள்ளது குறித்த பெய்ஜிங்கின் கவலைகளைப் பிரதிபலிக்கிறது. 2013ன் முதல் 7 மாதங்களில், இருதரப்பு வணிகம் 8.8 விகிதம் என அமெரிக்க 174 பில்லியன் டாலர்கள் என வருடாந்தம் சரிந்துள்ளது. சீன அரசாங்கத்தின் சில பிரிவுகள் ஜப்பானில் இருந்து குறையும் முதலீடு சீனாவின் பொருளாதாரம் மெதுவாவதை அதிகரிக்கும் மற்றும் வேலையின்மையை அதிகரிக்கும் என்றும் அச்சப்படுகின்றன

வியாழன் அன்று வோல்ஸ்ட்ரீட்ஜேர்னல் ஜப்பானிய நிறுவனங்கள் தென்கிழக்கு ஆசியாவை சீனாவிற்கு மாற்றீடாகக் காண்கின்றன எனக் கூறியுள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் ஜப்பானிய முதலீடு 2013 முதல் அரையாண்டில் 55% என முந்தைய ஆண்டில் இருந்து $10.29 என்று உயர்ந்துள்ளது.  சீனாவில் இது 31% சரிந்து $4.93 பில்லியனாக உள்ளது. இக்கட்டுரை சீனா “வாய்ப்பை இழக்கிறது”, ஜப்பானின் நிகர வெளிநாட்டு நேரடி முதலீடு 2012ல் $122 பில்லியனாக 12% அதிகரித்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறது.

பல ஜப்பானிய வணிகத் தலைவர்களும் ஓராண்டிற்கு முன் ஜப்பானிய பொருட்களை பகிஸ்கரிக்கும் கோரிக்கைகளும் உள்ளடங்கியிருந்த சீனாவின் வன்முறையான ஜப்பானிய எதிர்ப்புக்களை சுட்டிக்காட்டி,  இதுதான் சீனாவை ஒதுக்குவதற்கு முக்கியக் காரணம் என்றனர். முக்கியமாக, கடந்த புதன் அன்று ஜப்பான் மோதலுக்குட்பட்ட தீவுகளை “தேசியமயமாக்கியபோது” சீனாவில் எத்தகைய வெகுஜன எதிர்ப்புக்களும் நடக்கவில்லை.