World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Why Merkel won the German elections

ஜேர்மன் தேர்தல்களில் ஏன் மேர்க்கெல் வெற்றி பெற்றார்

Ulrich Rippert
24 September 2013

Back to screen version

கடந்த ஞாயிறு நடைபெற்ற ஜேர்மனிய தேர்தல்களில் பல சிறப்புக் கூறுபாடுகள் இருந்தன. 1949இல் இருந்து மற்ற எந்தக் கட்சியையும் விட நீண்டகாலம் ஒவ்வொரு அரசாங்கத்திலும் பங்குபெற்றதும், நிதி மூலதனத்தின் நலன்களை மிக அப்பட்டமாக பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக இருந்த அமைப்பான தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) பாராளுமன்றத்தில் நுழைவதற்கு தேவையான 5% தடையைத் தாண்ட முடியாமல் போய்விட்டது.

ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் நிறுவப்பட்ட புதிய யூரோ-எதிர்ப்புக் கட்சி ஜேர்மனிக்கு மாற்றீடு (AFD) கிட்டத்தட்ட FDP பெற்ற வாக்குகளைப் போல் பெற்று குறுகிய அளவில் பாராளுமன்றத்தில் நுளைவதை இழந்துவிட்டது.

ஆனால் மிகவும் ஆச்சரியப்படவைப்பது சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் அவருடைய கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) வெற்றி பெற்றதுதான். இக் கட்சியின் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகள், பல ஐரோப்பிய நாடுகளிலும் வன்முறை எதிர்ப்புக்களையும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளது; ஆனால் அதன் பவேரிய சகோதரக் கட்சியான கிறிஸ்துவ சமூக ஒன்றியத்துடன் (CSU) கிட்டத்தட்ட 48% வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதற்கு மாறாக, இடதுசாரி எதிர்த்தரப்பு என்று கூறிச் செயல்பட்ட கட்சிகள் வாக்காளர்களின் கடுமையான தண்டனைக்கு உட்பட்டன. பசுமைவாதிகளும் இடது கட்சியும் கணிசமாக வாக்குளை இழந்தனர். சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 25.7% வாக்குகளைப் பெற்றது. தனது வாக்குக்களை குறைந்தபட்சம் அதிகரித்திருந்தாலும் போருக்குப் பிந்தைய காலத்தில் இரண்டாம் மோசமான முடிவு ஆகும். இதற்கு காரணத்தை அறிவது கடினம் அல்ல. ஏனெனில் SPD, பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சி ஆகியவை இடதுசாரிகளோ அல்லது எதிர்க்கட்சிகளோ அல்ல.

SPD அரசாங்க அமைப்பினதும் மற்றம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினதும் கட்சியாகும். இது மக்களுடன் அனைத்துத் தொடர்பையும் இழந்துவிட்டது; மக்களை திமிருடனும் இறுமாப்புடனும் நோக்குகின்றது. இப்படித்தான் இது தேர்தல் பிரச்சாரத்தின்போது கருதப்பட்டது. இது  கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் மீது சுமத்திய வெட்டுக்ளைப் போல் ஜேர்மனிய மக்கள் மீது சுமத்தத் தைரியம் அற்றவர் என்று மேர்க்கெலை குற்றம் சாட்டியது. இது ஒரு வலதுசாரி அமைச்சரவை அதிகாரியான பீர் ஸ்ரைன்புரூக்கை தன் சான்ஸ்லர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது.. அவர் அரசாங்க அமைப்பினது இரக்கமற்ற தன்மையினதும் ஆக்கிரோஷத்தன்மையினதும் உருவகம் ஆவார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது SPD இன் முன்னாள் உள்துறை மந்திரி ஒட்டோ ஷில்லி, உளவுப்பிரிவுகளின் கண்காணிப்புகள் பற்றிய விமர்சனத்தை வெறித்தன்மையானது என்று தாக்கி, சட்டமும் ஒழுங்கும் எப்பொழுதும் சமூக ஜனநாயகக் கட்சியின் மதிப்பாகத்தான் இருந்தது என்று சேர்த்துக் கொண்டபோது, அவர் SPD வேலைத்திட்டத்தின் சாராம்சத்தைத்தான் வெளிப்படுத்தினார்.

SPD இன் தவிர்க்க முடியாத தோல்வி வெளிப்படையானதும், ஸ்ரைன்புரூக் தன் கட்சியையே தாக்கினார். SPD- பசுமைக்கட்சி கூட்டரசாங்ககால சகாப்தத்தின் பெரும் சாதனைகளை SPD இன்னும் நம்பிக்கையுடனும் உறுதியாகவும் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பாக அதன் தொழிலாள வர்க்க விரோத சமூகநல மற்றம் தொழிலாளர் துறை சீர்திருத்தங்களை பற்றி என்றார்.

பசுமைவாதிகள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் சந்தர்ப்பவாதத்தின்   உருவமாகத் திகழ்ந்தனர். முந்தைய சமாதானவாதிகள் இப்பொழுது மனிதாபிமான போர்களுக்கு மிக ஆர்வ ஆதரவைக் கொடுப்பதோடு, கடமையான வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாட்டையும் விரும்புகின்றனர். கட்சியின் தொண்டர்கள் பெரும்பாலும் உயர்கல்வியாளர்களும், மூத்த அரசாங்க அதிகாரிகளும் ஆவர். இவர்கள் புத்திஜீவிகளின் உயரடுக்கிற்குக் கூடுதல் அரசியல் செல்வாக்கு வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

உயர்மட்ட கட்சி அதிகாரிகள், வாக்குகள் இழப்பினை இன்னும் வலதிற்கு நகர்வதன் மூலம் பிரதிபலித்து, செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தங்கள் திட்டத்தை பெரும் தவறு என்றனர். அவர்களுடைய முக்கிய வேட்பாளர் ஜுர்கன் ரிட்டீன் மற்றும் கட்சித் தலைவர் செம் ஒஸ்டிமியர் சான்ஸ்லர் மேர்க்கெலுக்கு புகழாரம் சூட்டி, CDU-CSU உடன் கூட்டணி அரசாங்கம் அமைக்க தாங்கள் தயார் என்பதை வலியுறுத்தினர்.

தேர்தல் பிரச்சாரத்தில் மிக இழிந்த பங்குவகித்தது  இடது கட்சியாகும். இது SPD மற்றும் பசுமைவாதிகளுக்கு தன் ஒத்தழைப்பும் ஆதரவும் உண்டு என்பதை சலிப்பின்றிக் கூறியது. கட்சித் தலைவர் கிரிகோர் கீசி, SPD மற்றும் பசுமைவாதிகள் தங்கள் கொள்கைகளை இடது கட்சியுடன் கூட்டின் மூலம் சிறப்பாக அடையமுடியும் என்றார். இது இடது கட்சியின் சமூக நிலைமைகளை முன்னேற்றுவிக்கும் பாசாங்குத்தனமான பேச்சு என்பதைத்தான் அம்பலப்படுத்தியது.

ஸ்ரைன்புரூக் மற்றும் ரிட்டின் இருவரும் செய்தி ஊடகம் மற்றும் முதலாளிகளின் சங்கங்களின் இன்னும் தைரியமாக மக்கள் ஆதரவற்ற நடவடிக்கைகள் எடுக்கத்தேவை என்னும் கோரிக்கைக்கு தலை வணங்கினர்; இதற்கு இடது கட்சியின் ஆதரவும் இருந்தது. இச்சூழ்நிலையில் அங்கேலா மேர்க்கெல் தலைவணங்காத அரசியல்வாதியாக காட்டிக்கொண்டு, தேர்தல் இரவன்று அவர் கூறியதுபோல் பொறுப்புடன் நாட்டை உறுதியான கரங்களுடன் இயக்கமுடியும். என்றார்.

வேறுவிதமாகக் கூறினால், மேர்க்கெலின் தேர்தல் வெற்றி முக்கியமாக SPD, இடது கட்சி மற்றும் பசுமைவாதிகளின் முழுத் திவால்தன்மையின் விளைவாகும்.

SPD பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சியின் வலதுசாரிக் கொள்கைகள் குறிப்பிடத் தக்க வகையில் வெளியுறவு விவகாரங்களில் வெளிப்பட்டன. வரலாற்றில் ஜேர்மனிய அரசியலில் வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில் ஒரு தீவிர வலதுக்கான திருப்பம் ஆரம்பித்தது இப்பொழுதான் முதல் தடவை அல்ல.

சில காலமாகவே அமெரிக்க அரசாங்கம், மத்திய கிழக்கு போர்களில் இன்னும் கூடுதலான ஜேர்மனியின் பங்கு தேவை என அழைப்பு விடுத்துள்ளது. சான்ஸ்லர் மேர்க்கெல் ஜேர்மனிய மக்களிடையே உள்ள போர் எதிர்ப்பு உணர்விற்கு அதிக கவனம் கொடுக்கிறார் என்றும் குறைகூறியது. இக்கோரிக்கை SPD, பசுமைவாதிகள் சார்பான செய்தி ஊடகங்களான Zeit, taz போன்றவற்றில் அதிக ஆதரவை பெற்றது. ஜனாதிபதி ஒபாமா சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தியபோது, இவர்கள் பல பத்திரிகை பக்கங்களில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு போர்ப் பிரச்சாரம் நடத்தினர்.

மேர்க்கெல் அரசாங்கத்தின் தயக்கம் மற்றும் விருப்பமின்மையை இவர்கள் கேலி செய்தனர். Zeit உடைய ஆசிரியர் ஜோசெவ் ஜொவ்வ ஒபாமாவின் சிறிய போரை கண்டித்து, நேர- கால வரம்பின்றி பெரிய போர் தேவை என அழைப்பு விடுத்தார்.

FDP அகன்றவுடன் ஒரு புதிய கூட்டணிப் பங்காளியின் தேவையை கொண்ட மேர்க்கெல் SPD உடன் கூட்டணி அரசாங்கத்திற்கு உடன்பட்டால், அது இன்னும் ஆக்கிரோஷ ஜேர்மனிய இராணுவ நிலைப்பாட்டின் தெளிவான அடையாளம் ஆகிவிடும். 15 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைவாதிகளுடன் யூகோஸ்லாவியாவிற்கு எதிராக முதல் சர்வதேசப் போர்ப்பணிக்கு இராணுத்திற்கு அழைப்புவிட்ட SPD இடம் போருக்கு மக்களிடமுள்ள ஆழ்ந்த எதிர்ப்பை மீறத்தேவையான இரக்கமற்ற தன்மை மற்றும் அதிகாரத்துவ திமிர்த்தனமான நிலைப்பாடு உண்டு.

அடுத்த அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முதலில் அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்களினாலும், அதன் பின்னர் மோசமாகும் உலகப் பொருளாதார நெருக்கடியினால் நிர்ணயிக்கப்படும். இப்பொழுது கூட, முதலாளிகளுடைய அமைப்புக்கள் சர்வதேச போட்டித் தன்மை என்ற பெயரில் சமூகநலச் செலவுகளில் பெரும் குறைப்புக்களை கோருகின்றன.

இதுவரை மேர்க்கெல் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை ஒரளவு தெற்கு ஐரோப்பாவிற்கு நகர்த்தியுள்ளது. இப்பொழுது அது உள்நாட்டில் சமூக எதிர்ப்புரட்சியை முன்னெடுக்க முற்படும். ஏற்கனவே ஜேர்மனியின் குறைவூதிய மற்றும் பாதுகாப்பற்ற வேலைகள் ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளால் தாக்குதலுக்கு உட்பட்டுள்ள சுகவீன விடுமுறையின்போது ஊதியம், பணிநீக்கத்திற்கு எதிரான சட்டப்பாதுகாப்பு, மகப்பேறுக்கால விடுப்பு, சட்டபூர்வ சமூகப் பாதுகாப்பு போன்றவை இப்பொழுது அகற்றப்பட்டுவிடும்.

உத்தியோகபூர்வ அரசியலில் ஒரு கட்சி கூட உழைக்கும் மக்களின் நலன்களை வெளிப்படுத்த ஆரம்பிக்கவில்லை. ஒரு எதிரும் புதிருமான வகையில், தேர்தல் முடிவு தீவிர சமூக துருவப்படுத்தலை பிரதிபலிக்கின்றது. இது அரசியல் அமைப்புமுறை, சமூக சமத்துவம் மற்றும் போருக்கு பெருகும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் திறன் அனைத்தையும் இழந்துவிட்டது என்பதை தெளிவாக்குகின்றது.

செய்தி ஊடகம், மேர்க்கெலை ஓர் அரசியல் மேதை என்று கொண்டாடுகிறது; CDU-CSU க்கு கிடைத்த அதிகமான வாக்கை Süddeutsche Zeitung எழுதியது போல் மேர்க்கலிச சகாப்தத்தின் ஆரம்பம்”என்றும் கூறுகிறது. ஆனால் மேலெழுந்தவாரியாக உறுதிப்பாடுபோல் தெரிவது உண்மையில் அரசியல் அமைப்பு முறைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள ஒரு ஆழ்ந்த விரோதப் போக்கின் விளைவாகும். இது அரசியல் உறுதியற்ற தன்மை, வன்முறையான சமூகமோதல்களுக்கு இட்டுச்செல்கின்றது.

தொழிலாள வர்க்கம் பாரிய தாக்குதல்களை எதிர்க்க தன்னை தயாரித்துக்கொள்ள வேண்டும்.

இதுதான் சோசலிச சமத்துவக் கட்சி (PSG, Socialist Equality Party) தேர்தல்களில் பங்கு பெற்றதின் அரசியல் முக்கியத்துவம் ஆகும். PSG ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தை முகங்கொடுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை பற்றிப் பேசிய ஒரே கட்சி ஆகும். எந்த சமூகப் பிரச்சினையும் வங்கிகளின் சர்வாதிகாரத்தை முறிக்காமல் தீர்க்கப்பட முடியாது என்பதை இது வலியுறுத்தியது; இதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கம் தேவைப்படுகிறது; இதன் பொருள் இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களிடம் இருந்து அரசியில் ரீதியாக உடைத்துக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடும் ஒரு புதிய தொழிலாளர் கட்சியாக, கடந்த கால வர்க்கப் போராட்டங்களின் அரசியல் படிப்பினைகளை அடித்தளமாக கொண்டு, நான்காம் அகிலத்தின் ஜேர்மனிய பிரிவான PSG ஐ கட்டியமைப்பது அவசியமாகும்.