World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

சிரியா மீது கைவைக்காதே: சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி) தேர்தல் கூட்டத்தில் பீட்டர் சுவார்ட்சின் உரை

By Peter Schwarz
14 September 2013

Back to screen version

பின்வரும் அறிக்கையை ஜேர்மனி சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டரசாங்கத் தேர்தல் பிரச்சாரத்தின் பகுதியாக செப்டம்பர் 1 அன்று ஃபிராங்க்பேர்டில் பீட்டர் சுவார்ட்ஸ் வழங்கினார்.

இன்றைய கூட்டம் ஒரு வரலாற்று முக்கியமான தேதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1939, செப்டம்பர் 1 அன்று, அதாவது 74 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில், ஜேர்மன் இராணுவம் அதனை விட மிக பலம்குறைந்த அண்டை நாடான போலந்துக்குள் இராணுவரீதியாக ஊடுருவியதன் மூலம், வரலாற்றின் மிக அழிவுகரமான போருக்கு கட்டியம் கூறியது. அடுத்த ஐந்தரை ஆண்டுகளின் பாதையில், இரண்டாம் உலகப் போரின் போர்க்களங்களில், ஒட்டுமொத்த நகரங்களையும் குண்டுவீசி அழித்ததில், மற்றும் நாஜி வதை முகாம்களின் வாயு அறைகளில் என மொத்தம் 80 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஐரோப்பா ஒரு குப்பைக்கூளமாக ஆக்கப்பட்டது.

இப்போது பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்கா இதேபோன்றதொரு குற்றத்தை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. வெகுவிரைவில், கப்பலில் இருந்தான ஏவுகணைகளும் வெடிகுண்டுகளும் டமாஸ்கஸ் மற்றும் பிற சிரிய நகரங்கள் மீது மழையெனப் பொழியக் கூடும். ஏறக்குறைய தற்காத்துக் கொள்ள இயலாத சிரியர்கள் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையுமே ஒரு நரகமாக்க அச்சுறுத்துகிறது. இது ரஷ்யா மற்றும் சீனாவுடனான இராணுவ மோதலாக எளிதில் அபிவிருத்தியுற்று ஒரு மூன்றாம் உலகப் போரையும் தூண்டக் கூடும்.

போலந்து மீதான தாக்குதலை ஹிட்லர் ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறி நியாயப்படுத்தினார். போலந்தின் எல்லையின் அருகே இருக்கும் கிளைவிட்ஸ் வானொலி நிலையத்தின் மீது போலந்து தாக்குதல் நடத்தியதாக நாஜி கமாண்டோ குழு நாடகமாடியது. இது ஊடுருவலுக்கான காரணமாக சேவை செய்தது. இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக ஹிட்லர் தனது ஜெனரல்களிடம் சொன்னார்: பொருத்தமான பிரச்சாரத்தின் மூலம் மோதலுக்கான தூண்டல் மேற்கொள்ளப்படும். அதன் நம்பகத்தன்மை அவசியமில்லாதது. வெற்றி தான் யார் சரியென்பதை நிரூபணம் செய்கிறது.

சிரியா மீதான தாக்குதலுக்கு கூறப்படுகின்ற காரணமும் இதற்குக் கொஞ்சமும் சளைக்காத அளவில் கொலைபாதகமானதாகவும் நேர்மையற்றதாகவும் இருக்கிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரி ஆகஸ்ட் 30 அன்று அளித்த அறிவிப்பு பொய்களும் திரிபுகளும் கொண்ட ஒரு கலவையாக இருக்கிறது.

நான் சொல்வதைத் தான் நீங்கள் கேட்டாக வேண்டும் என்று நான் கூறவில்லை கெர்ரி கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சொல்கிறார். ஆயிரக்கணக்கான மூலங்களில் இருந்து வரும் ஆதாரத்தை நீங்களே படியுங்கள். ஆனால் அவரால் அளிக்க முடிந்ததெல்லாம் நிரூபணமற்ற குற்றச்சாட்டுகளே. சரிபார்த்துக் கொள்ளக் கூடிய எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்காமல் அவர் அளித்த அந்த குறுகிய உரையில் எமக்குத் தெரியும் என்ற வார்த்தைகளை 24 முறை உச்சரித்தார்.

2003 ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்த கோலின் பவெல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதேபோன்றதொரு உரையையே ஆற்றினார். ஈராக் ஜனாதிபதியான சதாம் உசைன் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருந்ததை நிரூபணம் செய்வதற்கு என்று சொல்லி இரண்டு மணி நேரத்திற்கு புகைப்படங்கள், காட்சிகள் மற்றும் ஒலிப் பதிவுகளை அவர் வழங்கினார். அவரது ஆதாரங்கள் அத்தனையுமே பொய்களும் புனைவுகளும் என்று பின்னர் தெரியவந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்து தயாரிக்கப்பட்டு விட்ட ஒரு போருக்கு காரணத்தை கட்டமைக்க வேண்டியதே அவற்றின் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்தது.

பவெல் போல் ஆவணங்களை வழங்கும் சிரமத்தைக் கூட கெர்ரி எடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவரும் அமெரிக்க உளவுத் துறை முகமைகளும் சொல்லும் அனைத்தையும் அப்படியே மக்கள் நம்ப வேண்டும் என்பது தான் அவரது தாழ்மையான வேண்டுகோள். உதாரணமாக, எந்த வித முகாந்திரத்தையும் கூறாமல் அவர் அறிவித்தார்: எதிர்த்தரப்பினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.

உண்மையில் பார்த்தால், எதிர்த்தரப்பினர் இரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. சென்ற மே மாதத்தில், சிரியாவுக்கான ஐநா ஆணையத்தின் ஒரு உறுப்பினரான கர்லா டெல் போண்டெ, கிளர்ச்சிக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான வலுவான ஆதாரம் உள்ளதென அறிவித்தார். சிரிய எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இரசாயன ஆயுதங்களைக் கொண்டிருந்த நிலையில் துருக்கியில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஏகாதிபத்திய சக்திகளாலும் பிற்போக்குத்தனமான முடியாட்சிகளாலும் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற, ஆயுதமளிக்கப்படுகின்ற மற்றும் பயிற்சியளிக்கப்படுகின்ற இந்த எதிர்த்தரப்பு போரளிகள், மிருகத்தனமாய் நடந்து கொள்வதன் காரணத்தால் சிரிய மக்களால் வெறுக்கப்படுகின்றனர். சமீப மாதங்களில் அவர்கள் ஏராளமான இராணுவத் தோல்விகளை சந்தித்திருக்கின்றனர். ஏகாதிபத்திய தலையீட்டைக் கோருவதற்கு நச்சுவாயுவை அவர்கள் பயன்படுத்தியிருப்பதற்கு முகாந்திரம் உள்ளதே தவிர, இப்போது தான் ஐநா ஆய்வாளர்களை நாட்டிற்குள் அனுமதித்திருக்கும் சிரிய அரசாங்கம் அவ்வாறு செய்வதற்கு முகாந்திரமில்லை.

எதிர்த்தரப்பு படைகளில் மிகவும் செல்வாக்கு பெற்றது அல் நுஸ்ரா படைவரிசை ஆகும். இது அல் கெய்தாவுடன் தொடர்புபட்டது என்பதோடு சிரியாவில் அப்பாவி மக்களை ஏராளமாய் படுகொலை செய்ததில் சம்பந்தப்பட்டதாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

போருக்கான காரணங்கள்

எப்படியாயினும், இந்த விஷ வாயுத் தாக்குதல் குற்றச்சாட்டு சிரியாவுக்கு எதிரான போருக்கான ஒரு போலிச் சாக்கே தவிர உண்மையான காரணமல்ல. அந்நாட்டின் மீது குண்டு வீசினால் அது மேலதிக அழிவுகளில் இருந்து அப்பாவி மக்களை எப்படிப் பாதுகாக்கும் என்பதை யாரும் இதுவரை விளக்கவில்லை. மாறாக, ஒரு போரானது எண்ணிலடங்கா அப்பாவி மக்களின் வாழ்க்கைகளை காவு கொள்ளும், உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்தும், அத்துடன் அண்டை நாடுகளையும் மோதலுக்குள் இழுக்கும்.

ஒரு போரின் காரணங்களை ஆராய்கையில், ஒருவர், சொல்லப்படும் காரணங்களுக்கும் உண்மையான காரணங்களுக்கும் இடையில் வித்தியாசப்படுத்திப் பார்க்க அறிந்திருக்க வேண்டும். உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு, வரலாற்று, பொருளாதார மற்றும் சமூக அர்த்தத்தை ஆய்வு செய்வது அவசியமாகும். போர்கள் எப்போதுமே விபத்துகள் அல்லது தீய தனிநபர்களின் மனப்போக்குகளது விளைவாக இருப்பதில்லை. தீர்க்க முடியாத சமூக முரண்பாடுகளும் திட்டவட்டமான சமூக நலன்களை பின்பற்றுவதில் இருந்துமே அவை உருவாகின்றன.

இவ்வாறாக, முதலாம் உலகப் போரில் கைய்சர் வில்ஹேம் பின்தொடர்ந்த அதே இலக்குகளைத் தான் பெருமளவுக்கு இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும் பின்தொடர்ந்து சென்றார். ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் உலக அரங்கில் தாமதமாகத்தான் நுளைந்து கொண்டது. உலகம், ஏற்கனவே போட்டி நாடுகளால் பங்குபோடப்பட்டு விட்டிருந்தது. ஜேர்மனிக்கோ சந்தைகளும், கச்சாப் பொருட்களும் கூடுதல் வாழ்விடமும் (Lebensraum) அவசியமாக இருந்தது. லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை சூத்திரப்படுத்தியதைப் போல, ஜேர்மன் முதலாளித்துவம் தான் ஐரோப்பிய முட்டுக்கட்டை நிலைமைகளில் மிக முன்னேறிய முதலாளித்துவ அமைப்புமுறை யாக இருந்தது.

நாட்டின் ஆதார வளங்கள் அத்தனையையும் மேலாதிக்கத்திற்கான ஒரு போருக்கு தயாரிப்பு செய்வதற்கு கீழ்ப்படியச் செய்ய முடிந்த ஒரு சர்வாதிகாரத்தை ஹிட்லர் ஸ்தாபித்தார். போருக்கு குறுக்கே நின்ற ஒழுங்கமைந்த தொழிலாளர் இயக்கத்தை அழிப்பதற்குப் பயன்பட்ட ஒரு பாசிச இயக்கத்திற்கும் அவர் தலைமை நடத்தினார். இந்தக் காரணங்களால் அவருக்கு ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகளின் - பெருவணிகம், இராணுவம் மற்றும் அரச அதிகாரத்துவம் - ஆதரவும் கிட்டியது. இப்பிரிவுகள் தான் 1933 இல் அரசாங்கத் தலைமையில் அவரை அமர்த்தியிருந்தன.

சிரியாவை பொறுத்தவரை, ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் ஒருவகையான மறதி அல்லது திட்டமிட்ட ஞாபகமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நச்சு வாயு யாரால் எப்போது பயன்படுத்தப்பட்டது என்பது மட்டுமே ஒரே பிரச்சினை என்பது போல் அவை நாடகமாடிக் கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவிற்கு அடுத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குள்ளாக மத்திய கிழக்கில் நடக்கும் நான்காவது போர் இது என்ற உண்மையை அவர்கள் உதாசீனம் செய்கின்றனர்.

இந்தப் போர்கள் ஒவ்வொன்றுமே, பணயமாக இருப்பது என்னவென்றால் ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரியை தூக்கியெறிவதும், மனித உரிமைகளும் மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பும் ஆகும் என்ற ஒரேமாதிரியான பொய்களாலும், பிரச்சாரங்களாலும் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் போர் பயங்கரவாத அல்கெய்தா வலைப்பின்னலை அழிப்பதற்காக தொடக்கப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் சிரியாவில் இந்தப் பயங்கரவாத அமைப்பு ஏகாதிபத்தியவாதிகளின் பக்கம் நின்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது என்பதோடு கிளர்ச்சிக்காரர்களுக்குள் தலைமை சக்தியாகவும் இருக்கிறது.

இந்த எல்லாப் போர்களிலுமே, நூறாயிரக்கணக்கிலானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர், அத்துடன் மில்லியன்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டோட தள்ளப்பட்டனர். ஆக்கிரமிப்புத் துருப்புகள் மக்களை அச்சுறுத்துவதற்கு சித்திரவதை மற்றும் பயங்கரவாத தந்திரங்களை பயன்படுத்தியிருக்கின்றன. அபு கரீப், ஃபலுஜா, குண்டுஸ் ஆகிய வார்த்தைகள் எல்லாம் சொல்லமுடியாத போர்க் குற்றங்களுக்கான சமான வார்த்தைகளாகி இருக்கின்றன. இந்தப் போர்களின் விளைவாய், பாதிக்கப்பட்ட நாடுகளிலான வாழ்வு நரகமாகி விட்டிருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதல்களும் நிரந்தரமான உள்நாட்டுப் போரும் தான் நிதர்சனங்களாய் இருக்கின்றன.

சிரியா மீது குண்டுவீசுவது, அப்பாவி மக்களைப் பாதுகாக்க அல்லது மனிதாபிமான இலக்குகளை சாதிக்க என்று இத்தகைய அனுபவங்களுக்குப் பின் உண்மையான அக்கறையுடன் பேசும் எவரும் நிச்சயமாகக் கூறமுடியாது.

இந்த உரையைத் தயாரிக்கும்போது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் போர் குறித்து உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட சில கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை நான் வாசித்தேன். சிரியப் போரை மத்திய கிழக்கிலான முந்தைய போர்களின் அர்த்தத்தில் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை அவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அந்த சமயத்தில், அமெரிக்க இலக்குகளில் ஒன்றாக சிரியா இருக்கும் என்று நாங்கள் கணித்திருந்தோம்.

2003 ஜனவரி 7 அன்று, அதாவது ஈராக் போர் தொடங்குவதற்கு இரண்டரை மாதங்கள் முன்பாக நாங்கள் எச்சரித்தோம்: ஈராக்கினை ஆயுதங்களைக் கீழேபோடச் செய்வதோ அல்லது சதாம் உசைனை அகற்றுவதோ கூட அமெரிக்காவின் நோக்கமல்ல, அந்நாட்டை ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதே அதன் நோக்கமாகும். ஈராக்குக்கு எதிரான போரின் கீழமைந்த அதே காரண நியாயங்கள் தவிர்க்கவியலாமல் ஈரான், சிரியா மற்றும் பிராந்தியத்தின் மற்ற நாடுகளுக்கு எதிராகவும் போருக்கு இட்டுச் செல்லும். உலகின் எண்ணெய் விநியோகத்தை மேலாதிக்கம் செய்வதற்கு அமெரிக்கா செய்கின்ற முனைப்பானது இன்னும் சக்திவாய்ந்த நாடுகளுடன் கடுமையான மோதல்களுக்கு இட்டுச் செல்லும்... ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடக்கி வைக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சிப் போக்கின் இறுதி விளைவாக ஒரு மூன்றாம் உலகப் போர் இருக்கும்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி

உலகின் எண்ணெய் விநியோகத்தில் அமெரிக்கா ஏன் மேலாதிக்கம் செய்ய முனைகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் 1991 சோவியத் ஒன்றிய உடைவுக்குத் திரும்ப வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் வலிமையான உலக சக்தியாக அமெரிக்கா எழுந்தது. என்றபோதிலும், சோவியத் ஒன்றியத்தின் இருப்பு, சீனப் புரட்சி மற்றும் காலனித்துவ நாடுகளில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவை அதன் செயல்பாட்டு சுதந்திர வெளியை குறிப்பிட்ட மட்டத்திற்கு வரம்புபடுத்தியது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது இந்தத் தளையை அகற்றி விட்டது.

உலக சோசலிச வலைத் தளம் கூறியது: சோவியத் ஒன்றியத்தின் உடைவானது அமெரிக்க ஆளும் உயரடுக்கினால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும் அத்துடன் ஏறக்குறைய பனிப்போரின் அரை நூற்றாண்டு சமயத்திலும் சாத்தியமற்றதாய் இருந்த ஒரு முழுவீச்சிலான ஏகாதிபத்திய திட்ட நிரலை அமல்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக பார்க்கப்பட்டது. ஒற்றை துருவத் தருணம் (unipolar moment) வந்து விட்டதை பிரகடனம் செய்த அமெரிக்கா, ஒரு பிரதான மூலோபாய இலக்காக, தனது மேலாதிக்க சர்வதேச நிலையைச் சவால் செய்யக் கூடிய இன்னொரு சக்தி - அது புதிதாக ஐக்கியப்பட்ட ஐரோப்பாவாகவோ, ஜப்பானாகவோ, அல்லது சீனாவாகவோ இருக்கலாம் - உருவாவதைத் தடுப்பதற்கு களமிறங்கியது.

அந்த சமயத்தில் அமெரிக்காதான் மிகப்பெரும் பொருளாதார சக்தியாக இருந்தது என்றபோதிலும், அதன் தொழிற்துறை சரிவு கண்டு கொண்டிருந்தது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் வலுவான போட்டியாளர்கள் உருவாகி விட்டிருந்தார்கள். ஒருகாலத்தில் உலகின் தொழிற்துறை மையமாக இருந்த அமெரிக்கா இப்போது ஒரு நெடிய வர்த்தக பற்றாக்குறையில் ஓடிக் கொண்டிருந்தது.

இது தவிர, அமெரிக்காவுக்குள் இருந்த சமூகப் பதட்டங்கள் கூர்மையாக வளர்ந்து சென்றன. 1970களின் மத்தி வரை அமெரிக்க அரசாங்கங்கள் பன்முனைவாதத்தை (multi-lateralism) அடிப்படையாகக் கொண்ட ஓரளவுக்கு தாராளமய வெளியுறவுக் கொள்கையுடன் உள்ளூர் கொள்கையிலும் சமூக சீர்திருத்தங்களை சேர்த்துக் கொண்டன. இதனால் ஊதியங்கள் அதிகரித்ததோடு குறிப்பிட்ட மட்டத்திற்கு சமூகப் பதட்டங்களும் கட்டுப்பாட்டில் இருந்தன. 1980களின் தொடக்கத்தில் ரோனால்ட் ரீகன் ஜனாதிபதியாக இருந்தபோது இது மாறியது.

ரீகன் வசதியானவர்களுக்கு வரி வெட்டுகளுடன் சேர்த்து சமூக சேவைகளை அழிப்பதையும் தொழிலாளர்கள் மீதான பாரிய தாக்குதல்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டார். சமூகரீதியாக உலகின் மிகுந்த ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா என்று கூறுமளவுக்கு அது இன்று வரை தொடர்ந்திருக்கிறது. மக்கள்தொகையின் பெரும்பணம் படைத்த 1 சதவீதம் பேர் மொத்த சொத்துகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள், வசதிபடைத்த 10 சதவீதம் பேர் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு செல்வத்தைக் கைவசம் கொண்டிருக்கிறார்கள், மக்கள்தொகையின் கீழேயிருக்கும் அரைவாசிப் பேர் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே கட்டுப்படுத்துகின்றனர்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுத்திருக்கக் கூடிய எண்ணற்ற போர்கள் இரண்டு நோக்கங்களுக்கே சேவை செய்திருக்கின்றன. முதலாவதாக, அமெரிக்கா தனது பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்டுவதற்கும் உலக மேலாதிக்கத்தை சாதிக்கும் நோக்குடனான தனது நலன்களுக்கு ஏற்ற வகையில் உலகை மறுஒழுங்கு செய்வதற்கும் தனது இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்துவதற்கு முனைந்திருக்கிறது. இரண்டாவதாக, உள்நாட்டில் பெருகும் சமூகப் பதட்டங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கும், பாரிய போலிஸ் அரச எந்திரத்தைக் கட்டமைப்பதற்கு ஒரு போலியான காரணத்தை விநியோகிப்பதற்கும் இராணுவவாதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாவது புள்ளியில், 2003 இல் நாம் எழுதினோம்: 1914 மற்றும் 1939 இல் ஜேர்மனி போரில் இறங்கியபோது, கச்சாப் பொருட்களின் புதிய ஆதார வளங்கள், புதிய சந்தைகள் மற்றும் கூடுதலான வாழ்விடம் ஆகியவற்றைக் கைப்பற்றவே அவ்வாறு செய்தது. அதன் உள்நாட்டு நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழிவகையாகவும் போர் இருந்தது. 1939 இல் ஹிட்லருக்கு போரைத் தவிர்த்து வேறெந்த வழியும் இருக்கவில்லை. ஜேர்மன் நாணயமதிப்பும் பொருளாதாரமும் உருக்குலையும் நிலையில் இருந்தது; அவரது ஆட்சி தப்பிப் பிழைப்பது கடினம் என்பதான ஒரு நிலை தோன்றியிருந்தது. இன்று அமெரிக்கா அதேபோன்றதொரு நிலையில் தான் இருக்கிறது. புஷ்ஷின் பின்னால் அணிவகுப்பதில், முன்னணி ஜனநாயகக் கட்சியினர் உட்பட ஆளும் உயரடுக்கினர் காட்டும் ஒற்றுமை அவர்களது அரசியல் விரக்தி நிலையின் வெளிப்பாடே. அவர்களுக்கு போர் தேவை, ஏனென்றால் அமெரிக்க சமூகத்தை கிழித்துப் போட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை.

மத்திய கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம்

உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில் மையமான முக்கியத்துவத்தை மத்திய கிழக்கு பெறுவதற்கான காரணம், இயற்கை எண்ணெய் வளஆதாரத்தில் 50 சதவீதத்தை அது கொண்டிருக்கிறது, இதைத் தான் சீனாவும் அமெரிக்காவின் பிற ஆசிய போட்டி நாடுகளும் சார்ந்திருக்கின்றன. ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பெரும் மூலோபாய முக்கியத்துவம் கொண்டதான மத்திய ஆசியாவின் கட்டுப்பாட்டுக்கும் இந்தப் பிராந்தியம் புவிமூலோபாயரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏகாதிபத்திய புவிமூலோபாய நிபுணர் சர் ஹல்ஃபோர்ட் மெக்கைண்டரின் தத்துவங்கள் எப்படி இருந்தது என்பதை சமீபத்தில் உலக சோசலிச வலைத் தள முன்னோக்கு ஒன்றில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். ஐரோப்பிய-ஆசிய நிலப் பகுதியை கட்டுப்படுத்துவது தான் உலக மேலாதிக்கத்திற்கான முக்கிய அம்சம் என்று அவர் கண்டார். இந்த சித்தாந்தந்தங்கள் இன்றும் செல்வாக்கு கொண்டிருக்கின்றன. மெக்கைண்டரைக் குறிப்பிட்டு வரலாற்றாசிரியர் ஹேன்ஸ் கிறிஸ்டோஃப் கிராஸ் சென்ற கோடையில் எழுதிய ஒரு கட்டுரையை Frankfurter Allgemeine Zeitung வெளியிட்டது.

இது ஒரு சர்வாதிகாரி சம்பந்தப்பட்டது என்றா நினைக்கிறீர்கள்? என்று தலைப்பிட்ட அந்த கட்டுரையில் கிராஸ் எழுதினார், துர்பாக்கியமான சிரிய மக்களுக்கு உதவுவது அல்ல அமெரிக்கர்கள் மற்றும் மேற்கு முகாமின் நோக்கம், அல்லது பிரதான நோக்கம்; மாறாக கடந்த காலத்தில் அவர்கள் நன்கு ஒத்துழைத்து வேலை செய்து வந்திருக்கக் கூடிய நடப்பு ஆட்சி வீழப் போவதை அவர்கள் எதிர்பார்க்கின்ற நேரத்தில் அந்நாட்டின் மறுஒழுங்கமைப்பில் செல்வாக்கு செலுத்துவது தான் அவர்களின் நோக்கம். நெடுங்காலம் திட்டமிடப்பட்டு வந்திருக்கின்ற மற்றும் மேற்குக்கு முக்கியமான எண்ணெய் மற்றும் வாயுக் குழாய் இணைப்புகள் பணயத்தில் இருக்கின்றன. கிழக்கு மத்திய தரைக்கடல் வழியாக அவர்கள் சவுதி அரேபியா மற்றும் கட்டார் உடன் இணைத்துக் கொள்ள வேண்டும், பகுதியாக சிரியப் பிராந்தியத்தின் வழியாக செல்ல வேண்டியிருக்கும்....

ரஷ்யாவும் சீனாவும் எதிரான முன்னோக்கை தழுவிக் கொண்டிருக்கின்றன. சிரியத் துறைமுகமான டார்டஸில் அமைந்திருக்கும் ரஷ்ய மத்திய தரைக்கடல் கடற்படைத் தளத்துக்கு இது சிக்கலாகிறது, அதேபோலத் தான் மத்திய கிழக்கு மற்றும் அருகாமையில் ரஷ்யா மற்றும் சீனாவின் பொதுவான புவியரசியல் நிலைப்பாடும். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு மோதலுக்கான சாத்தியம் கண்ணில் தட்டுப்படுவதானது இந்த இரண்டு ஆசிய பெரும் சக்திகளுக்கும் அங்கேயான இருப்பை முக்கியமாக்குகிறது.

ஆக சிரியாவின் பிரச்சினை என்பது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மற்றும் இறுதியாக, ஐரோப்பிய ஆசியக்கண்டம் முழுமைக்கான மேலாதிக்கம் சம்பந்தப்பட்டது என்பது சென்ற கோடையிலேயே ஏற்கனவே சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகியிருந்தது. சிரியாவுடனான மோதல் என்பது ஈரானுடனும் மற்றும் இறுதியாக ரஷ்யா மற்றும் சீனாவுடனுமான மோதலுக்கு ஒரு முகவுரை மட்டுமே.

1991 பிப்ரவரியிலேயே, அதாவது சோவியத் ஒன்றியம் இறுதியாகக் கலைக்கப்படுவதற்கு முன்னமே, ஜனாதிபதி மூத்த ஜோர்ஜ் புஷ் தலைமையில் ஈராக்குக்கு எதிரான முதல் போரை அமெரிக்கா நடத்தியது. ஆயினும் அந்த சமயத்தில், மூத்த புஷ் பாக்தாத்துக்கு உள்ளே அணிவகுப்பதில் தயங்கினார்.

அதனையடுத்து 2001 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர் பின்தொடர்ந்தது. செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பொறுப்பான ஒசாமா பின் லேடன் மற்றும் அல் கெய்தாவை தலிபான் அரசாங்கம் பாதுகாப்பதாகக் கூறி அப்போருக்கு காரண நியாயம் கற்பிக்கப்பட்டது. உண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர் திட்டங்கள் செப்டம்பர் 11க்கு வெகு முன்பே வகுக்கப்பட்டு விட்டன. நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான தாக்குதல்கள் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பான சாக்குகளாக சேவை செய்தன, அவ்வளவே. குறைந்தபட்சம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அல்கெய்தாவின் திட்டம் தெரிந்திருந்தது, அவர்கள் தெரிந்து தான் அதனை நடக்க விட்டார்கள் என்பதற்கு கணிசமான ஆதாரம் இருக்கிறது.

அப்போது முதலே, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதலை நடத்துவதற்கும் இராணுவவாதத்தை அதிகரிப்பதற்குமான ஒரு நியாயமாக பயங்கரவாதத்தின் மீதான போர் சேவை செய்து வந்திருக்கிறது. சந்தேகத்திற்குரியதான மனிதர்கள் என்று கூறி இஷ்டத்திற்கு கடத்துவது, சித்திரவதை செய்வது மற்றும் சிறை வைப்பதை உலகெங்கும் அமெரிக்க உளவுப் பிரிவினர் செய்து வருகின்றனர். பயங்கரவாதிகளாக சொல்லப்படுபவர்கள், அவர்கள் அமெரிக்க குடிமக்களாகவே இருப்பினும், ஜனாதிபதியின் உத்தரவின் கீழ், எந்த விசாரணை அல்லது குற்றப்பதிவு நடைமுறையும் இன்றி, ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலமாக தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகிறார்கள்.

ஓர்வெல்லின் 1984 எல்லாம் ஒரு குழந்தைக் கதை என்று சொல்லுமளவுக்கு அமெரிக்காவில் ஒரு போலிஸ் அரசுக்கான கட்டமைப்பு தாயகப் பாதுகாப்புத் துறையின் கீழ் எழுந்து கொண்டிருக்கிறது. NSA போன்ற உளவு முகமைகள் உலகெங்குமான பில்லியன் கணக்கான தகவல் தொடர்புகளை வேவு பார்க்கின்றன. அரச எந்திரத்தின் குற்றவியல் பொறிமுறைகளை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டென், பிராட்லி மேனிங் மற்றும் ஜூலியன் அசாஞ்ச் போன்ற விழிப்பூட்டிகள் துரோகிகளைப் போல சித்தரிக்கப்படுகின்றனர்.

உலகப் பொருளாதார நெருக்கடியும் எகிப்திய புரட்சியும்

பத்து ஆண்டுகளுக்கு முந்தையை ஈராக் போருக்குப் பின்னர் எல்லாவற்றுக்கும் மேல் இரண்டு நிகழ்வுகள் உலக சூழ்நிலையை மாற்றி விட்டிருக்கின்றன: 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடி மற்றும் 2011 இன் எகிப்திய புரட்சி.

நிதி நெருக்கடியானது உலக முதலாளித்துவத்தின் சிதைவு நாற்றத்தை பகிரங்கமாக்கியிருக்கிறது. பல ஆண்டுகால குற்றவியல் ஊக நடவடிக்கைகள் ஒரு நிதிக் குமிழியின் உருவாக்கத்திற்கு வழிவகுத்திருந்தது. இக்குமிழி வெடித்தபோது அது உலகப் பொருளாதாரத்தை விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டிருந்தது. ஒட்டுமொத்தமாய் அரசின் நிதிநிலை அனைத்தையும் வங்கிகளுக்கு வாக்குறுதியளித்து அரசாங்கங்கள் பதிலிறுப்பு செய்தன. பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான பிணையெடுப்புத் திட்டங்களால் மிகப் பெரும் செல்வந்தர்களின் செல்வம் அதிகரித்த அதேவேளையில் சமூக சேவைகள் மீதான செலவினம் குறைக்கப்பட்டது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது, பரந்த மக்களின் வாழ்க்கைத் தரங்கள் சரிந்தன. ஐந்து ஆண்டுகளாய், உலகப் பொருளாதாரமானது பெரு மந்த நிலைக்குப் பிந்தைய அதன் மோசமான நெருக்கடியில் இருந்து வருகிறது. எந்தத் தீர்வும் கண்ணில் தென்படுவதாக இல்லை.

இந்த இடத்தில் தான் சிரியாவுக்கு எதிரான போர்த் தயாரிப்புகளுக்கு மிக முக்கியமான காரணங்கள் அமைந்திருக்கின்றன. ஆகஸ்ட் 29 அன்று உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல, 1930களின் பெரு மந்த நிலை இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது, ஏனென்றால் முதலாளித்துவத்தின் துயரங்களுக்கான தீர்வை போரில் தேடுவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் முனைந்தன. 2008 இல் தொடங்கி எந்தத் தணிவு அறிகுறியும் காட்டாத பெரு மந்தநிலையானது மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. உலகளாவிய நிதிமயமாக்க - இதில் பாரிய அளவிலான சுருட்டல்களின் மூலம் சமூகத்தின் ஒரு சிறு அடுக்கு செழிப்படைகிறது - நிகழ்ச்சிப் போக்குகளுடன் தொடர்புபட்ட பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தின் வடிவங்கள் அதன் இயற்கையான துணையளிப்பை குற்றவியல் வன்முறை மூலமாக தனது நோக்கங்களை எட்டக் கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கையில் காண்கின்றன.

2011 எகிப்து மற்றும் துனிசிய எழுச்சிகள் மூலமாக, தொழிலாள வர்க்கம் தன்னை மீண்டுமொரு முறை வரலாற்றின் மிக வலிமையான சக்தியாக எடுத்துக்காட்டியிருக்கிறது. துனிசிய ஜனாதிபதியான பென் அலியையும் எகிப்திய ஜனாதிபதியான ஹோஸ்னி முபாரக்கையும் தூக்கி வீசிய மக்கள் எழுச்சிகள் உலகெங்குமான ஆளும் உயரடுக்கினரை ஆழமான அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன.

சலுகை படைத்த நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது பிரதிநிதிகளின் உதவி மூலமாகவே அவர்களால் இந்த எழுச்சிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் புரட்சிக்கு தங்களது அனுதாபத்தை வெளிப்படுத்தின என்கிறபோதும், தொழிலாள வர்க்கம் அதன் சமூகக் கோரிக்கைகளில் தீவிரமாக இருக்கிறது என்பதையும் தமது சொந்த சலுகைகள் ஆபத்தில் இருக்கிறது என்பதையும் அறிந்த உடனேயே அவர்கள் இராணுவத்தின் பின்னால் தம்மை நிறுத்திக் கொண்டனர். இது எகிப்தில், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு இட்டுச் சென்றது. இது முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு எதிராக ஏவப்பட்டது மிக குறைந்த அளவுதான், அதனை விட புரட்சியின் ஒரு புதுப்பித்த எழுச்சிக்கு எதிராகத் தான் அதிகமாய் ஏவப்பட்டது.

எப்படியிருந்தபோதிலும், இராணுவத்தின் இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறை எந்தவகையிலும் புரட்சியின் முடிவைக் குறிக்கவில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட உலகமெங்கும் எழவிருக்கும் இதேபோன்ற சமூக வெடிப்புகளுக்கு முகவுரையாக மட்டுமே எகிப்து இருக்கிறது.

ஒபாமாவின் பின்வாங்கல்

சொந்த நாடுகளிலான வெடிப்புடனான சமூகப் பதட்டங்களும், போருக்கு தோன்றியிருக்கும் பரந்த எதிர்ப்பும், மத்திய கிழக்கிலான வெடிப்பு மிகுந்த நிலையும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்துள் ஒரு நெருக்கடியை உண்டுபண்ணியிருக்கின்றன. விருப்பக் கூட்டணி சிரியா மீது உடனடியாகப் போர் தொடக்குவது நிச்சயம் என்பது போல சில நாட்களுக்கு முன் தோற்றமளித்தது. ஆனால் பாரிய மக்கள் எதிர்ப்புக்கு முகம் கொடுத்த நிலையில், பிரிட்டிஷ் பாராளுமன்றம் பிரதமர் டேவிட் கேமரூனை தடுத்து நிறுத்தி விட்டது.

ஒபாமாவும் ஆச்சரியமான வகையில் இராணுவத் தலையீட்டை முடிவு செய்ய காங்கிரசை அனுமதிப்பதாக அறிவித்தார். அங்கு போருக்கு பெரும்பான்மை கிட்டச் செய்யப்படும் என்பது நிச்சயம். தோல்வியடைந்தால், பிரிட்டன் போலவே அமெரிக்க அரசாங்கத்திலும் ஒரு ஆழமான நெருக்கடி உருவாகும்.

முழுமையாக கட்டுப்பாடு இழந்து செல்லக் கூடிய ஒரு மோதலுக்குள் இழுக்கப்பட்டு விடுவோமா என்ற பயத்தினால் ஆளும் உயரடுக்கினர் கூர்மையாகப் பிளவுபட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் முதலில் தமது சொந்த நாட்டில் வலிமையானதொரு எதிர்வினை தோன்றி விடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். பிரிட்டனில் 6 முதல் 11 சதவீதத்திற்கு இடைப்பட்ட சதவீத மக்கள் மட்டுமே சிரியா மீதான இராணுவத் தாக்குதலுக்கு ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. தொழிற் கட்சி பிரதமரான டோனி பிளேயர் பொய்களை அடிப்படையாகக் கொண்டு ஈராக்குக்கு எதிரான போருக்கு பிரிட்டனை அழைத்துச் சென்றதன் பின்னர், இப்போது ஒவ்வொரு அரசாங்கத்தின் போர்த் திட்டங்கள் மீதும் ஒரு ஆழமான அவநம்பிக்கை இருக்கிறது. இன்னொரு போர் என்பது அமெரிக்காவில் ஆழமான வெறுப்பை சம்பாதிக்கிறது.

எப்படியிருந்தபோதிலும், இதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உயிர்நாடி என்று நிரூபணமாவதால், இனி ஏகாதிபத்திய சக்திகள் தமது போர்த் திட்டங்களில் இருந்து பின்வாங்கிக் கொள்ளும் என்று நம்புவோமாயின் அது மிகப் பெரும் தவறாக முடியும். உண்மையில் அதற்கு நேரெதிரான விடயமே நிதர்சனம். அவர்கள் பின்வாங்குகிறார்கள் என்றால் அது தமது படைகளை பலப்படுத்திக் கொண்டு ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுடனான வருங்கால மோதல்களுக்கு இன்னும் மேம்பட்ட வகையில் தயாரிப்பு செய்து கொள்வதற்காகத் தான்.

போர் மீதான வாக்கெடுப்புக்கு அனுமதித்த ஒபாமாவின் நோக்கங்கள் குறித்து நியூயோர்க் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது: ஓவல் அலுவலகத்தில் நடந்த இருமணி நேர உணர்ச்சிகரமான மற்றும் கூர்மையான விவாதத்தின் போது, ஒபாமா, தான் சிரியா மீது ஒரு இராணுவத் தாக்குதலுக்கு விடாப்பிடியாக நகர்ந்து செல்வதைப் போல தோன்றிய ஒரு கடினமான வாரத்திற்குப் பின்னர், கொஞ்சம் பின்னிழுத்துக் கொண்டு முதலில் காங்கிரசின் ஒப்புதலைப் பெற விரும்பியதாகக் கூறினார். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட படுபயங்கர பின்னடைவுக்குப் பின் உருவான ஒரு தனிமைப்பட்ட உணர்வு உட்பட பல காரணங்கள் அதன்பின் இருந்ததாக அவர் அவர்களிடம் தெரிவித்தார். தனிமையாகச் செயல்பட நேர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில் மத்திய கிழக்கிலான அடுத்த இராணுவ மோதலுக்கு - அநேகமாக ஈரானுடனானதாக இருக்கலாம் - அவருக்கு காங்கிரஸ் அங்கீகாரம் அவசியப்படும் நேரத்தில் அவரைப் பலவீனப்படுத்தி விடும் என்பதும் அதில் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும். காங்கிரஸ் ஒப்புதல் இன்றி சிரியா மீது போர் தொடுக்கும் முடிவை இப்போது அவர் எடுத்தால், காங்கிரஸ் இன் ஒப்புதல் அவருக்கு உண்மையிலேயே மிக அவசியமானதாய் இருக்கும்போது அது அவருக்குக் கிடைக்குமா?

ஆளும் வர்க்கம் ஆழமான நெருக்கடியில் இருந்தபோதும், அதனால் அதன் மூர்க்கம் குறைந்தபாடில்லை. மாறாக போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான அவர்களது திட்டங்களை இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் முன்னெடுக்க அவர்கள் உந்தப்படுகின்றனர். நிதி நெருக்கடி வெடித்தது முதலாகவே ஆளும் உயரடுக்கின் அத்தனை கன்னைகளுமே கூர்மையாக வலது பக்கம் திரும்பி விட்டிருக்கின்றன. இது ஐரோப்பாவிற்கும் பொருந்தும்.

ஹோலண்ட், மேர்கேல், ஸ்ரைன்ப்ரூக், கோன்-பென்டிட் மற்றும் இடது கட்சி

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜாக் சிராக்கின் பிரெஞ்சு அரசாங்கம் ஈராக் போரை எதிர்த்தது. அமைதியின் மீது கொண்ட காதலால் அவர்கள் அதைச் செய்யவில்லை, மாறாக அமெரிக்காவிடம் இருந்து சுயாதீனப்பட்டு பிரெஞ்சு நலன்களைக் காக்கலாம் என அவர்கள் நம்பினர். இன்று, சோசலிஸ்ட் கட்சித் தலைவரான பிரான்சுவா ஹாலண்ட் அமெரிக்காவின் மிக விசுவாசமான ஆதரவாளர்களில் ஒருவராக உள்ளார். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இராணுவத் தலையீட்டுக்கு எதிராக வாக்களித்த அடுத்த நாளில், ஒரு இராணுவத் தாக்குதலுக்கு தன்னுடைய ஆதரவு தொடர்வதாக Le Monde தினசரியில் அவர் அறிவித்தார்.

ஜேர்மனியை பொறுத்தவரை, இது 2003 இல் ஈராக் போரை எதிர்த்தது, 2011 இல் லிபியப் போர் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை, இப்போது சான்சலர் மேர்கெல் ஒபாமாவுக்கான தன் அரசியல் ஆதரவை அறிவித்திருக்கிறார். ஆனாலும் நடந்து வருகின்ற தேர்தல் பிரச்சாரத்தைப் பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணத்தினால் இராணுவத் தலையீடுகளுக்கான உறுதிப்பாடு எதையும் அளிப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.

சான்சலர் பதவிக்கான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வேட்பாளரான பீர் ஸ்ரைன்ப்ரூக் உடனடியாக மேர்கெலுடன் உடன்பட்டார். Stuttgarter Zeitung இதழிடம் அவர் கூறினார், நச்சு வாயுத் தாக்குதல் போன்ற மனிதகுலத்துக்கு எதிரான ஒரு குற்றமானது பின்விளைவுகளைக் கொண்டதாகும் என்று ஜேர்மன் அரசாங்கம் கூறுகிறது. நான் அதில் உடன்படுகிறேன்.

பசுமைக் கட்சியினரும் கடுமையான விமர்சனங்களையும் உண்மையான விளைவுகளையும் கோரினர், அத்துடன் ஒரு இராணுவத் தாக்குதலையும் அவர்கள் நிராகரிக்கவில்லை. முன்னாளில் 1968 மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்தவரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் பிரதிநிதியாக இருந்தவருமான டானியல் கோன்-பென்டிட் ஒரு இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்பில் ஜேர்மனி பங்கேற்க வேண்டுமென உணர்ச்சிபூர்வமாக அழைப்பு விடுத்தார். ஸ்பீகல் ஆன்லைன் வலைத் தளத்தில் அவர் கூறினார்: ஒரு இராணுவத் தாக்குதலுக்கு அல்லது ஒரு போர் நிறுத்தத்தை அமலாக்கி இரத்தம் பாய்வதைத் தடுப்பதற்கு உரிய அவசிய நிலையாக, மேற்கு தனது இராணுவத்தை அணிதிரட்ட வேண்டும். இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்பில் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து கொண்டு ஜேர்மன் அரசாங்கமும் பங்குபெற வேண்டும்.

இந்த வலது-நோக்கிய நகர்வின் கூர்மையான வெளிப்பாட்டை குட்டி-முதலாளித்துவ போலி இடதின் பொறுப்பிலுள்ளவர்களில் காணலாம். அங்கு தான் ஏகாதிபத்தியம் தனக்கான சீரான ஆதரவைக் காண்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாய் சிரிய எதிர்ப்பை வலுப்படுத்துவதில் இடது கட்சியும், எல்லாவற்றுக்கும் முதலாய் மார்க்ஸ் 21 மற்றும் சோசலிச மாற்று ஆகிய இடது கட்சிக்குள் செயலூக்கத்துடன் இயங்குகின்ற போலி-இடது குழுக்களும் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றன.

சென்ற மாதத்தில் சிரியா: சுதந்திரத்திற்கு ஆதரவு வேண்டும் என்ற தலைப்பிலான ஒரு கூட்டு அறிக்கையில் மேர்கெல் அரசாங்கம், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் முன்னணிப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து இடது கட்சியும் கையெழுத்திட்டிருந்தது. இந்த கூட்டறிக்கை சிரியாவில் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தது. இடது கட்சியின் தலைவியான கட்ஜா கிப்பிங், துணைத் தலைவர் ஜான் வான் ஆகென், SPD பொதுச் செயலர் ஆண்ட்ரியா நலெஸ், பசுமைக் கட்சியின் தலைவியான கிளோடியா ரோத் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலைவராக இருக்கும் வலது-சாரி கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தைச் சேர்ந்த ரூப்ரெசெட் போலென்ஸ் ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.

சிரிய எதிர்க்கட்சியினருடன் தங்களுக்கு உள்ள நெருக்கமான தொடர்புகளை பயன்படுத்தி, அவர்களை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு செவிமடுக்கக் கூடியவர்களாய் ஆக்குவதற்கு முனையும் இடது கட்சியானது, ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு நீட்சி போல செயல்புரிகிறது. சமீப மாதங்களில் இடது கட்சியானது தொடர்ச்சியாக கருத்தரங்குகளையும் விவாதங்களையும் நடத்தி வந்திருக்கிறது. அதில் அரசியல் முன்முயற்சி மற்றும் ஒரு அரசியல் தீர்வு என்ற போர்வையின் கீழ் சிரிய எதிர்ப்பாளர்களில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதமளிக்கவும் இராணுவத் தலையீட்டுக்கும் அழைப்பு விடுக்கின்ற கூறுகளுக்கு களம் அளிக்கப்படுகிறது.

சிரிய எதிர்க்கட்சிப் பிரிவுகளில் இடது கட்சி சேர்ந்து வேலை செய்யக் கூடிய பிரிவுகள் தான் சிரிய தேசியக் கூட்டணியின் தலைமையை உருவாக்குகின்றன. இக்கூட்டணியைத் தான் ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் பிராந்தியக் கூட்டாளிகளும் சிரியாவின் அங்கீகாரமான பிரதிநிதி என்று குறிப்பிடுகின்றன. இக்கூட்டணியின் தலைவரான அகமது ஜர்பா, மைக்கேல் கிலோ தலைமையிலான ஒரு குழுவின் அங்கத்தவராவார்.

முன்னாள் ஸ்ராலின்ஸ்டான கிலோ, இடது கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் முறையாக வளர்த்து ஆதரித்து வந்திருக்கும் சிரிய அதிருப்தியாளர் ஆவார். சென்ற ஆண்டில் இடது கட்சியின் மற்றும் அதன் ரோசா லுக்சம்பேர்க் அறக்கட்டளையின் கூட்டங்களில் கிலோ பலமுறை உரையாற்றியிருக்கிறார். Neues Deutschland மற்றும் Junge Welt  ஆகிய கட்சியின் செய்தித்தாள்களில் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இப்போது இடது கட்சி போருக்கு எதிரானவர்கள் என்பதைப் போல நாடகமாடி வருகிறது. தமது தடங்களை மறைப்பதற்கும் ஆளும் உயரடுக்கின் நலன்களை அபாயத்திற்கு உட்படுத்தக் கூடிய ஒரு உண்மையான போர்-எதிர்ப்பு இயக்கம் எழுவதைத் தடுப்பதற்கும் அது முயல்கிறது. சமூகப் பிரச்சினைகளில் இவர்கள் ஆற்றக் கூடிய அதே சிடுமூஞ்சித்தன பாத்திரத்தையே (சமூக நல உதவிகளை வெட்டியிருக்கக் கூடிய ஹார்ட்ஸ் IV நல உதவிச் சீர்திருத்தங்களை தேர்தல் பிரச்சாரங்களில் இவர்கள் எதிர்க்கிறார்கள், ஆனால் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களில் இவர்கள் பங்குபெறும்போது, இதே நடவடிக்கைகளைத் தான் செயல்படுத்துகிறார்கள்) போர் குறித்த பிரச்சினையிலும் ஆற்றுகிறார்கள்.

சிரியப் போருக்கு எதிராக பல்வேறு நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பலவற்றிலும், இடது கட்சியின் உயர்நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர், ஆனால் அக்கட்சியின் சொந்த ஆதரவாளர்களை அது அணிதிரட்டவில்லை. போர் எதிர்ப்பின் மீது ஒரு கட்டுப்பாட்டை பராமரிக்க விரும்பும் அவர்கள் அதேசமயத்தில் போர் எதிர்ப்பு ஒரு பாரிய வடிவத்தை எடுத்து விடாமலும் பார்த்துக் கொள்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பதில்

சிரியாவுக்கு எதிரான ஒரு குற்றவியல் போருக்கு அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளும் தீர்மானகரமாக ஆதரவளிப்பது ஒரு எச்சரிக்கையாகும். கூட்டரசாங்கத்திற்கான தேர்தலுக்குப் பின்னர் உழைக்கும் மக்களின் மீது புதிய தாக்குதலைத் திணிப்பதிலும் (முதலாளித்துவ நெருக்கடியின் சமயத்தில் இது தவிர்க்க முடியாதது என்று அவர்கள் கருதுகின்றனர்) அவை இதே மிருகத்தனத்துடனும் தீர்மானத்துடனும் தான் செயல்படும். கிரேக்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நடந்தேறியுள்ள சமூக அழிவு தான் ஜேர்மனியின் அன்றாட நிகழ்வாக இருக்கும்.

போருக்கு எதிரான போராட்டம் என்பது, போருக்குக் காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். போர் வெறியர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சக்தி, மக்களின் பரந்த பெரும்பான்மையினராக இருக்கும் தொழிலாள வர்க்கம் மட்டுமே. கடந்த காலத்தின் சமூக வெற்றிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதும் போருக்கு எதிரான போராட்டமும் பிரிக்கவியலாமல் தொடர்புபட்டதாகும். உலக சோசலிசப் புரட்சியின் வெற்றிக்காக தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு போராடுவது மட்டுமே முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் முட்டுச் சந்தில் இருந்து வெளிவருவதற்கான ஒரே வழியாகும்.

இந்த முன்னோக்கிற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale GleichheitPSG) போராடுகிறது. இன்னுமொரு குற்றவியல் போரைத் தடுத்து நிறுத்த விரும்பும் அனைவரும் PSG இன் கூட்டரசாங்கத்திற்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கவும், உலக சோசலிச வலைத் தளத்தை அன்றாடம் வாசிக்கவும், அத்துடன் PSG இன் ஆன்லைன் கூட்டங்களைப் பின்பற்றவும் அழைக்கிறோம்