தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை The pseudo-left USP and its bogus fight against the “Rajapakse dictatorship” போலி இடது யூஎஸ்பீயும் “இராஜபக்ஷ சர்வாதிகாரத்துக்கு” எதிரான அதன் போலிப் போராட்டமும்
By Vilani
Peiris and K. Ratnayake Use this version to print| Send feedback போலி-இடது ஐக்கிய சோசலிச கட்சி (யூஎஸ்பீ) செப்டெம்பர் 21 நடக்கவுள்ள மாகாண சபை தேர்தலுக்காக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை, வலதுசாரி முதலாளித்துவக் கட்சியும் எதிர் கட்சியுமான ஐக்கிய தேசிய கட்சிக்கு (யூஎன்பீ) அரசியல் ரீதியில் ஆதரவளிக்கும் அதேவேளை, சோசலிஸ்டுகளாக தம்மை காட்டிக்கொள்ளும் அதன் வஞ்சகமான பாத்திரத்தை கோடிட்டுக் காட்டுகிறது. வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் யூஎஸ்பீ வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. “எமது உடனடி இலக்கு, இந்த இனவாத நவ-தாராளவாத இராஜபக்ஷ சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதாக இருந்தாலும், முதலாளித்துவ ஆட்சியை நசுக்கி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்பதை யூஎஸ்பீ வலியுறுத்துகின்றது,” என யூஎஸ்பீ பிரகடனம் செய்துள்ளது. உண்மையில், சோசலிசத்துக்கான போராட்டம் எதிர்காலத்தில் தொலைதூரத்தில் உள்ளது என்ற கருத்தே, இங்கு “உடனடி இலக்கு” –இராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக முதலாளித்துவ யூஎன்பீ உடனான அதன் கூட்டு- என இங்கு சாதரணமாக பகட்டுத்தனமாகக் கூறப்பட்டுள்து. யூஎஸ்பீ, இன்னொரு போலி இடது கட்சியான நவ சமசமாஜக் கட்சியுடன் சேர்தந்து, அண்மையில் “ஐக்கியத்துக்கான சக்தி” என்ற பெயரில் புதிதாக யூஎன்பீ அமைத்த ஒரு முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சர்வாதிகார எதிர்ப்பு” ஆர்ப்பாட்டமொன்றில் பங்கெடுத்துக்கொண்டது. வெலிவேரியவில் கடந்த மாதம் துப்புரவான குடிநீர் கேட்டு போராடிய கிராமத்தவர்கள் மீதான கொடூரமான இராணுவத் தாக்குதலுக்கு எதிராகவே யூஎன்பீ இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. படையினரால் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். யூஎன்பீ ஆர்ப்பாட்டத்தில் பேசிய யூஎஸ்பீ தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்ததாவது: “நாங்கள் –அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், பெரிய பௌத்த பிக்குகள்- அனைவரும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கட்டளை அனுப்புவதற்கே இங்கு வந்துள்ளோம். நாம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களுக்கும் சம உரிமையை இட்டு நிரப்பக்கூடிய ஒரு ஜனநாயக ஆட்சியை, மக்களின் ஆட்சியை கொண்டுவருவதற்கு முன்செல்ல வேண்டும்.” இந்த அறிவித்தல், யுஎஸ்பீயின் “இராஜபக்ஷ சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம்” பற்றி ஆயிரக்கணக்கான வார்த்தைகளை பேசுகின்றது. ஜயசூரிய, “மக்கள் அரசாங்கத்துக்கும்” மற்றும் “ஜனநாயக ஆட்சிக்கும்” அழைப்பு விடுத்தது, யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தோளோடு தோள் உரசிக்கொண்டே ஆகும். இது, யூஎன்பீ தலைமையிலான அரசாங்கத்தை தேர்வு செய்வதற்காக உழைக்கும் மக்களின் போராட்டங்களை அடிபணியச் செய்வதற்கான ஒரு வாக்குறுதியை தவிர வேறொன்றும் அல்ல. அதிகரித்துவரும் சமூகப் பதட்டங்களை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், தனது சிக்கன நடவடிக்கைகள் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நாட்டின் நீண்ட இனவாத யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை நாடுகின்றது. யூஎன்பீ அரசாங்கமும் நிச்சமாக அதையே செய்யும். 1970களின் கடைப் பகுதியில் சந்தை-சார்பு மறுசீரமைப்பைத் தொடங்கிய, 1983ல் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடங்கி அதை அடுத்த தசாப்தம் பூராவும் ஈவிரக்கமற்று முன்ன்னெடுத்த யூஎன்பீயின் பதிவுகளை யுஎஸ்பீ வெட்கமின்றி மூடி மறைக்கின்றது. 1989 மற்றும் 1991 இடைப்பட்ட காலத்தில், இராணுவச் சார்பு கொலைப் படைகளால் தீவின் தென் பகுதியில் குறைந்தபட்சம் 60,000 கிராமப்புற இளைஞர்களை படுகொலை செய்தமைக்கு யூஎன்பீ அரசாங்கம் பொறுப்பாளியாகும். வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்துவதற்கான தீர்மானத்தை “நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு ஒரு வெற்றி” என யுஎஸ்பீ அறிக்கை முத்திரை குத்துகிறது. “ஜனநாயக சக்திகள்” என்று குறிப்பிடப்படுவது, வடக்குத் தேர்தலை நடத்துவதற்காக அழுத்தம் கொடுத்த பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற யுஎஸ்பீயின் ஏனைய பங்காளிகளுக்கான ஆதரவை குறிக்கின்றது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அழுத்தத்துக்கு முகங்கொடுத்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஒரு சூழ்ச்சியாக மட்டுமே தயக்கத்துடன் வட மாகாண சபை தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியம் புலிகளுக்கு எதிரான அவரது யுத்தத்தை ஆதரித்த போதிலும், இப்போது அது சீனாவிடம் இருந்து இராஜபக்ஷவை தானாகவே தூரவிலகச் செய்வதற்காக அரசாங்கத்தின் ஜனநாயக உரிமை மீறல்களை சுரண்டிக்கொள்கின்றது. வட மாகாணசபை தேர்தலுக்கான யூஎன்பீ- யுஎஸ்பீ-நவசமசமாஜ கூட்டணியின் கோரிக்கைக்கும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. அது கொழும்பு அரசாங்கத்துக்கும் தமிழ் தட்டுக்களுக்கும் இடையில், ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை உள்ளடக்கியவாறு, யுத்தத்துக்கு ஒரு “அரசியல் தீர்வைக்” காண்பதற்கான அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அழுத்தத்துடன் முழுமையாக இணங்கிப் போகின்றது. “சுய-நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வது” மட்டுமே “தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நிரந்தர வழி” என தெரிவித்து, தமிழ் முதலாளித்துவத்தின் அரசியல் திட்டத்தை யுஎஸ்பீ ஆதரிக்கின்றது. தமிழ் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளை முன்நிறுத்துவதற்கு மாறாக, இந்த “உரிமை”, உழைக்கும் மக்களை சுரண்டுவதை முன்னெடுப்பதற்காக தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குவதோடு சம்பந்தப்பட்டதாகும். புலிகளைப் பொறுத்தளவில், “சுய-நிர்ணய உரிமை” என்பது, பிரதான மற்றும் பிராந்திய சக்திகளின், குறிப்பாக இந்தியாவின் ஆதரவுடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான முதலாளித்துவ அரசை ஸ்தாப்பிப்பதையே அர்த்தப்படுத்துகின்றது. புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, புலிகளின் தோல்வியை அடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அது இப்போது, வடக்கு மாகாண சபைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பகிர்வதோடு சம்பந்தப்பட்ட, கொழும்பு அரசாங்கத்துடனான ஒரு அதிகாரப் பங்கீடு கொடுக்கல் வாங்கலை எதிர்பார்க்கின்றது. “தமிழ் தேசியப் பிரச்சினையை இந்திய முதலாளித்துவத்தின் உதவியுடன் தீர்க்க முடியும்” என்ற தமிழ் கூட்டமைப்பின் நோக்கை யுஎஸ்பீ விமர்சிக்கின்றது. அமெரிக்க மற்றும் இந்திய ஆதரவுடன் தமிழ் கூட்டமைப்பு எந்தவொரு “அரசியல் தீர்வை” அடைந்தாலும் யுஎஸ்பீ உடனடியாக அந்த வழியை ஏற்றுக்கொள்வதோடு, அதை “ஜனநாயக சக்திகளுக்கான” இன்னொரு “வெற்றியாக” பாரட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. 2001ல், மேலும் சந்தை-சார்பு மறுசீரமைப்பை அமுல்படுத்துவதையும் சிங்கள மற்றும் தமிழ் தட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்கான இயலுமையை ஏற்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டு, புலிகளுக்கும் யூஎன்பீ அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையையும் யுஎஸ்பீ ஆதரித்தது. சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் பாகமாக மட்டுமே சிங்களம், தமிழ் அல்லது முஸ்லிம் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க முடியும் என வலியுறுத்தும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) வேலைத் திட்டத்தை யுஎஸ்பீ கடுமையாக எதிர்க்கின்றது. சோசக, தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகிறது. யுஎஸ்பீ தனது தேர்தல் அறிக்கையின் முடிவில், யூஎன்பீ உட்பட “முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக” ஒரு சோசலிச வேலைத் திட்டத்துக்குப் போராடுவதாக பிரகடனம் செய்வதன் மூலம், யூஎன்பீ மற்றும் தமிழ் கூட்டமைப்பு போன்ற முதலாளித்துவ அரசியல் அமைப்புகளுக்கான அதன் அரசியல் ஆரவை மூடி மறைக்க முயற்சிக்கின்றது. யுஎஸ்பீயை பொறுத்தளவில், சோசலிசத்துக்கான போராட்டம் எப்போதும் எதிர்காலத்துக்கு உரியதாகும். உண்மையில், அது “முதலாளித்துவ சக்திகளுடன்” உரைக்குள் கைபோல் செயற்படுகின்றது. யூஎன்பீ தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக பேசுகின்றது என்று நம்பவைத்து அவர்களை ஏமாற்றுவதற்காக பிற்போக்கு பாத்திரம் ஆற்றுகின்றது. “ஒரு மாதத்துக்கு முன்னர் அது வெளியிட்ட அறிக்கை ஒன்றில், யூஎன்பீக்கான தனது அர்ப்பணிப்பை யுஎஸ்பீ பிரகடனம் செய்துள்ளது: “[அரசாங்கத்தின்] சர்வாதிகார வெறியை தோற்கடிப்பதன் பேரில், நாம் ஒரு போராட்ட முன்னரங்கில் மற்றும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் வீதிகளில் [யூஎன்பீ உடன்] ஐக்கியப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறோம்.” மார்க்சிசம் இந்த வர்க்க ஒத்துழைப்பு அரசியலை நியாயப்படுத்துகிறது என யூஎஸ்பீ போலியாக கூறிக்கொள்கின்றது. அதன் அறிக்கை தெரிவிப்பதாவது: “தொழிலாள வர்க்கம் தனது வரலாற்று பாத்திரத்தை ஆற்றத் தவறும் இத்தகைய காலகட்டங்களில், வெகுஜனப் போராட்டங்களை கட்டியெழுப்புவதற்காக தந்திரோபாய மட்டத்தில் முதலாளித்துவ சக்திகளுடன் கூட அணிசேர்ந்து போராட வேண்டும்.” உண்மையான மார்க்சிஸ்டுகள் எப்போதும் முதலாளித்துவத்தின் சகல கன்னைகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை வலியுறுத்தியதோடு சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகள், அதேபோல் அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற பல்வேறு சந்தர்ப்பவாத சக்திகளும் வக்காலத்து வாங்கும் வர்க்க ஒத்துழைப்பை எதிர்த்து வந்துள்ளனர். நவசமசமாஜக் கட்சியும் அதில் இருந்து பிரிந்து சென்ற யூஎஸ்பீயும், 1953ல் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து பிரிந்து சென்ற மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மன்டேல் தலைமையிலான போக்கில் இருந்து தோன்றியவையாகும். 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்து காட்டிக்கொடுத்தமைக்கு இந்த பப்லோவாதிகளே பொறுப்பாளிகளாவர். காட்டிக்கொடுப்பின் பின்னரும், யூஎஸ்பீ தலைவர் ஜயசூரியவும் நவசமசமாஜ தலைவர் விக்கிரம்பாகு கருணாரட்னவும் லங்கா சமசமாஜக் கட்சி 1970 முதல் 1977 வரையான இரண்டாவது கூட்டரசாங்கம் வரையும் தொடர்ந்தும் அதிலேயே இருந்தனர். அதன் இழிந்த காட்டிக்கொடுப்பு சம்பந்தமாக தொழிலாள வர்க்கத்தின் பகைமை ஆழமடைந்த நிலையில் லங்கா சமசமாஜ அதிகாரத்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட பின்னரே அதில் இருந்து பிரிந்து நவசமசமாஜக் கட்சியை ஸ்தாபித்தனர். அதன் பின்னரும் கூட, நவசமசமாஜ மற்றும் யூஎஸ்பீயும் பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (ஸ்ரீலசுக) ஆதரித்த அதேவேளை, யூஎன்பீயை வலதுசாரி என்றும் “சர்வாதிகாரம்” என்றும் கண்டனம் செய்தன. 1994-2005 ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் வாழ்க்கைத் தரத்தின் மீது தொடுத்த தாக்குதலுக்கும் மற்றும் அது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியமைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சீற்றம் அதிகரித்த நிலையிலேயே, யூஎஸ்பீயும் நவசமசமாஜக் கட்சியும் யூஎன்பீயின் வழியில் சேர்ந்தன. யூஎன்பீக்கு ஆதரவளிப்பதன் மூலம், யூஎஸ்பீயும் நவ சமசமாஜ கட்சியும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பெரும் தாக்குதலுக்கு வழி அமைக்கின்றன. இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளில் அணிசேர்வதன் மூலம், அவர்கள் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் மற்றும் சீனாவுடனான மோதலுக்காக இந்திய-பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் அதன் இராணுவத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கும் தமது ஆதரவை விளைபயனுள்ள வகையில் உறுதிப்படுத்துகின்றன. ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் சார்வாதிகார வடிவிலான ஆட்சிக்கான உந்துதலுக்கும் எதிராக மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. நாம், யுத்தத்தினதும் தொழிலாள வர்க்க ஒடுக்குமுறையினதும் தோற்றுவாயான முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுவதற்கான அனைத்துலகப் போராட்டத்தின் பாகமாக, ஆளும் வர்க்கத்திலிருந்தும் அதன் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தும் சமரசமற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். |
|
|