தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் France to intensify military intervention in Central African Republic மத்திய ஆபிரிக்க குடியரசில் பிரான்ஸ் இராணுவத் தலையீட்டை தீவிரப்படுத்துகிறது
By Kumaran Ira Use this version to print| Send feedback அக்டோபர் 13 அன்று மத்திய ஆபிரிக்கக் குடியரசின் (Central African Republic CAR) தலைநகர் போங்குயீ க்கு பயணித்தபோது, பிரான்சின் வெளியுறவு மந்திரி லோரோன்ட் ஃபாபியுஸ் பிரான்ஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதல் துருப்புக்களை அங்கு நிலைகொள்ளச் செய்யும் என அறிவித்தார். பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜனாதிபதி பிரான்சுவா போசிசேயை அகற்றுவதற்கு மார்ச் மாதம் செலேகா எழுச்சி சக்திகளுக்கு ஆதரவை கொடுத்தது ஒரு பேரழிவிற்கு வழிவகுத்துள்ளது. இந்த வறிய நாட்டில் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே குறுங்குழுவாத போரில் எழுச்சி ஏற்பட்டுவிட்டது; இதன் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ், 1960ல் முறையாக மத்திய ஆபிரிக்கக் குடியரசுக்கு சுதந்திரம் கொடுத்தபின் பல ஊழல் ஆட்சிகளை பதவியில் இருத்த ஆணையிட்டுள்ளது. அண்டை நாடான சாட் மற்றும் சூடானைச் சேர்ந்த பல செலேகா துப்பாக்கிதாரர்கள், பலமுறை திருச்சபைகளை மாசுபடுத்துதல், கிறிஸ்துவ சிறுபான்மையினரை அச்சுறுத்தல் ஆகியவை குறித்து குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ளனர். அக்டோபர் 8 வரை, “கிட்டத்தட்ட 60 பேர் மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ளூர் போராளிகளுக்கும் முன்னாள் எழுச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற குறுங்குழுவாத மோதல்களில் இறந்து விட்டனர்” என்று ராய்ட்டர்ஸிடம் உள்ளூர் அதிகாரிகள் கூறினர். 440,000 க்கும் அதிகமாக மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிவிட்டனர். 4.6 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் 7 அறுவை சிகிச்சை டாக்டர்கள்தான் தோட்டா மற்றும் அகலக் கத்திக் காயங்களுக்கு சிகிச்சையளிக்க உள்ளனர். “பலாகா எதிர்ப்பு” அல்லது அகலக்கத்தி எதிர்ப்பாளர்கள் என அறியப்படும் உள்ளூர் தற்காப்பு போராளிகள், அக்டோபர் 7ம் திகதி போங்குயீ க்கு வடமேற்காக உள்ள காக என்னும் சுரங்கத் தொழில் கிராமத்தில் முஸ்லிம் குடிமக்களைத் தாக்குமுன் ஒரு செலேகா நிலையை தாக்கி நான்கு முன்னாள் எழுச்சியாளர்களை தாக்கிக் கொன்றனர். செலேகா போராளிகள் கிராமத்தில் இருந்த கிறிஸ்துவக் குடிமக்களுக்கு பதிலடியாகத் தாக்கினர் என்று சாட்சிகள் கூறுகின்றன. அக்டோபர் 18ம் திகதி ICRC (சர்வதேச செஞ்சிலுவைக் குழு) தெரிவித்த தகவல்: “புதுப்பிக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையேயான அழுத்தம் நாட்டின் முக்கிய சிறுநகரங்களில், குறிப்பாக கவலை அளிக்கும்படி உள்ளது... பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் புதர்களுக்குப்பின் மறைந்துள்ளர். அவர்களுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அவர்கள் உணவு, குடிநீர், மருத்துவப் பாதுகாப்பு இல்லாமல் பெரும் அச்சத்தில் வாழ்கின்றனர்.” இதற்குப் பாரிசின் விடையிறுப்பு அந்நாட்டில் இராணுவத் தலையீட்டை அதிகரித்து செலேகா ஆதிக்கம் மிகுந்த இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்ததுதான். அக்டோபர் 10 அன்று ஏற்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக்குழு தீர்மானத்தை அது வழிநடத்தியது; அதில் ஒரு புதிய சர்வதேச ஆபிரிக்க ஒன்றிய படைக்கு ஆதரவு வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இரண்டாம் தீர்மானம் ஒன்று, இப்படைக்குக்கும் பிரான்சிற்கும் பரந்த அளவில் தலையிட அதிகாரம் கொடுக்கிறது. ஐ.நா. பாதுகாப்புக்குழு முடிவுகள்படி, பிரான்ஸ் கூடுதல் துருப்புக்களை அனுப்பும், இன்னும் தீவிர பங்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் கொள்ளும் என்று ஃபாபியுஸ் கூறினார். மத்திய ஆபிரிக்கக் குடியரசுக்கு அருகில் உள்ள நாடுகள் கிட்டத்தட்ட 2,100 துருப்புக்களை அந்நாட்டில் நிலை கொள்ள வைத்துள்ளன; ஃபாபியுஸ் இது 3,500 ஆக அதிகரிக்கப்படும் என்றார். அவர், இந்த பிராந்தியப் படை “செயல்படும் திறனைக் கொண்டிருக்க வேண்டும், பிரான்ஸ் அதற்கு உதவும்” என்றார். தற்பொழுது பிரான்ஸ் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் 410 துருப்புக்களை நிறுத்தியிருப்பதாகவும், அப்படைகள் “முக்கியமாக விமான நிலையத்தை காத்தல், போங்குயீல் ரோந்து வருதல் ஆகியவற்றை செய்யும்” என்றும் அவர் கூறினார். வரவிருக்கும் ஐ.நா. தீர்மானங்கள்படி “இந்த வெவ்வேறு படைகள் இன்னும் விரைவாகவும் திறமயுடனும் தலையிட முடியும்” என்றார். எத்தனை பிரெஞ்சுத் துருப்புக்கள் நிலைப்பாடு கொள்ளும் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை, ஆனால் செய்தி ஊடக ஆதாரங்கள் பாரிஸ் அதன் துருப்புக்களை 750 முதல் 1,200 வரை அதிகரிக்கத் திட்டம் கொண்டுள்ளது என்று கூறுகின்றன. செலேகாவிற்கு தன் ஆதரவை ஆழப்படுத்தும் பிரான்சின் திட்டம்—வாடிக்கையான முற்றிலும் “மனிதாபிமான” உந்துதல்கள் என்ற போலித்தனத்தில் அளிக்கப்படுவது— தன் முன்னாள் காலனியை மீண்டும் மறு-காலனியாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. உலகின் மிக வறிய நாடுகளுள் ஒன்றான இந்நாட்டின் சுரண்டப்படாத இயற்கை ஆதாரங்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று கருதுகிறது. இயற்கை ஆதாரங்களில் வைரங்கள், தங்கம், யுரேனியம், சிறந்த மரங்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை உள்ளன. இது, பிரெஞ்சு இராணுவத் தலையீடு ஆபிரிக்கா முழுவதும் வெடித்திருப்பதின் ஒரு பகுதியாகும்; இதன் நோக்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் புவி மூலோபாய நலன்களைப் பாதுகாப்பது, சீனாவின் எழுச்சி பெறும் செல்வாக்கைக் கண்டத்தில் கட்டுப்படுத்துவது என்று உள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் பிரான்ஸ் ஆபிரிக்காவில் மூன்று போர்களில் ஈடுபட்டுள்ளது; இவற்றில் லிபியா, ஐவரி கோஸ்ட் மற்றும் தற்பொழுது மாலியில் நடக்கும் போர் ஆகியவை அடங்கும். ஆகஸ்ட் மாதம், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்ஸுவா ஹாலண்ட் மத்திய ஆபிரிக்க குடியரசு நெருக்கடியை தீர்க்க ஐ.நா. தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார்; அதன் மூலம் பாரிஸ் ஒரு மேலாதிக்கப் பங்கை பெற முயல்கிறது. “மத்திய ஆபிரிக்க குடியரசில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் நன்கு கடந்துவிட்டது. நாடு சோமாலிபோல் ஆகும் விளிம்பில் உள்ளது” என்று பாரிசில் தூதர்களின் ஆண்டுக் கூட்டத்தில் ஹாலண்ட் கூறினார். டிசம்பர் 2012ல் செலேகா (சாங்கோ தேசிய மொழியில் “கூட்டு”) எழுச்சிப்படைகள் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த பிரான்சுவா போசிசேக்கு எதிராகச் செயல்பட்டன, நாடு முழுவதும் வடக்கேயும் கிழக்கேயும் சிறு நகரங்களைப் பற்றி எடுத்துக் கொண்டது. அரசாங்கம், 2007-08 சமாதான உடன்பாடுகளை தூக்கி எறிவதாகவும் குற்றம் சாட்டியது; நிதிகள் எழுச்சிக் கெரில்லாக்களுக்கு கொடுக்கப்படுகின்றன, அப்படையினர் தேசிய இராணுவத்தில் இணைக்கப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டியது. ஆனால் சாட் மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECCAS), மத்திய ஆபிரிக்கக் குடியரசில் சமாதான ஒருங்கிணைப்புக்கு தலையிடுவது, போசிசே அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்துவதை நிறுத்த கட்டாயப்படுத்துவதற்கு ஆகும். ஜனவரி 11, 2013ல் ECCAS சுமத்திய லிப்ர்வில் உடன்பாடு, தற்காலிகமாக இராணுவ சதி ஒன்று வருவதைத் தடுத்து, மூன்று ஆண்டுக்காலம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டை தொடக்கியது. ஆனால் இந்த உடன்பாடு குறுகிய காலம் மட்டுமே நீடித்தது; செலேகா எழுச்சிப் படைகள் ஏகாதிபத்திய சக்திகளின் உட்குறிப்பு ஆதரவுடன் போசிசேயின் படைகளுக்கு எதிராக தாக்குதலை தொடங்கின. மார்ச் 24ம் திகதி போசிசே அகற்றப்பட்டு, எழுச்சித் தலைவர் மைக்கேல் ஜோடோடியா தன்னை ஜனாதிபதி என்று அறிவித்துக் கொண்டார். (See “Seleka rebels seize capital of Central African Republic”) அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த Ange-Félix Patassé நாட்டில் இருந்து வெளியே சென்றிருந்தவேளை போசிசேயே அதிகாரத்தை 2003ல் ஒரு இராணுவ சதி மூலம்தான் அடைந்தார். அவருக்கு, ஜோடோடியாவின் தலைமையிலான ஒற்றுமைக்கான ஜனநாயக சக்திகளின் ஒன்றியம் (UFDR) என்பதற்கு எதிராக, மத்திய ஆபிரிக்க குடியரசின் வடமேற்கு பகுதியில் நடத்தப்பட்ட புஷ் போர் (2004-07) என்று அழைக்கப்பட்டது உட்பட பாரிசினதும் ஆதரவு கிடைத்தது. பின்னர், போசிசே தன் கொள்கைகளை சீனாவின் பக்கம் திருப்பியவுடன், பாரிஸ் அவருக்கு எதிராக திரும்பியது. சீனாவுடனான இருதரப்பு உடன்பாடுகள் வணிகம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றில் இருந்தன. இந்த நிபந்தனைகளில்தான் பாரிஸ் செலேகா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தது. வடகிழக்கில் இருக்கும் இராணுவத்தின் பிளவுப் பிரிவுகளை செலேகா கொண்டுள்ளது; இதில் UFDR, CPJP போன்ற முஸ்லிம்கள் அமைப்புக்கள் அதிகமாக உள்ளன. இது அவ்வப்பொழுது பிற இயக்கங்களின் ஆதரவையும் நம்பியுள்ளது – UFR எனப்படும் குடியரசுச் சக்திகளின் ஒன்றியம், A2R மறு அஸ்தீவாரக் கூட்டு போன்றவற்றின். பாரிஸ் கூடுதல் படைகளை நிலைப்பாடு கொள்ளுதல் என்னும் முடிவு செலேகா தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் உடைந்துபோகும் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது எழுச்சி பெறும் உள் அரசியல் மோதல்களால் வலுவிழந்துள்ளது. ஐ.நா. அறிக்கைகளின்படி, அரசாங்க நிர்வாகம் பெரிதும் தலைநகருக்கு வெளியே சரிந்துவிட்டது. ஜூன் மாதம் பெல்ஜியத்தை தளம் கொண்ட சர்வதேச நெருக்கடிக் குழு எழுதியது: “செலேகாவிற்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெளியே வருகின்றன. இந்த இயக்கம் உறுதியற்று இருப்பதுபோல் தோன்றுகிறது. சில தளபதிகள், அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகள் குறித்த, தங்கள் ஆழ்ந்த அதிருப்தியை மறைக்கவில்லை. ... பிராந்தியங்களை மட்டும் பாதித்த முந்தைய நெருக்கடிகள்போல் இல்லாமல், தற்போதைய கொந்தளிப்பு அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றத்தை பிரதிபலித்து, முழு நாட்டையும் பாதிக்கிறது. அரசாங்கத்தின் சரிவில் இது வெளிப்பட்டு, நாட்டை ஆள முடியாமல் செய்கிறது.” |
|
|