World Socialist Web Site www.wsws.org |
Political lessons of the Leonarda affair லியோனார்டா விவகாரத்தின் அரசியல் படிப்பினைகள்
Peter Schwarz ”லியோனார்டா விவகாரம்” பிரான்சின் சமூக மற்றும் அரசியல் நிலைமைகளின் யதார்த்தத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. 15 வயது ரோமா மாணவியான லியோனார்டா டிப்ரனி, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கத்தால் தடுக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டமையும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மாணவர் ஆர்ப்பாட்டங்களும், அனைத்து ஸ்தாபித அரசியல் கட்சிகளுக்கும் பரந்த மக்களில் பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கும் இடையிலான பிளவை அம்பலப்படுத்தியிருக்கிறது. அனைத்து ரோமாக்களும் பிரான்சை விட்டு வெளியேறி கிழக்கு ஐரோப்பாவுக்கு செல்ல வேண்டும் என்றே தான் நம்புவதாகக் கூறியிருக்கும் உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கைகளை பரந்த மக்கள் எதிர்க்கின்றனர். லியோனார்டா விரும்பினால் அவரது குடும்பத்தை விட்டு விட்டு அவர் மட்டும் பிரான்சிற்கு திரும்பி படிப்பைத் தொடரலாம் என்று சென்ற வார இறுதியில் ஹாலண்ட் செய்த தலையீடானது அவரது ஒட்டுமொத்த அரசாங்கமும் இனவாதக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பதைத் தெளிவாக்கி உள்ளது. ஹாலண்டுக்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த வலது-சாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியைப் போலவே பிரெஞ்சு முதலாளித்துவத்தின், ஆட்சிக்கான பிரதான “இடது” கட்சியான ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியும் (PS), நவபாசிச தேசிய முன்னணியின் (FN) வாக்காளர்களை வென்றெடுக்கும் நோக்குடனான கொள்கைகளைத் தழுவிக் கொண்டிருக்கிறது என்ற வெகுஜன உணர்வு பெருகி வருகிறது. ஹாலண்ட் தேர்தலில் வெற்றி பெறுவதை ஆதரித்த இடது முன்னணி (FdG) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற போலி-இடது சக்திகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஆட்சிக்கு அடிபணியச் செய்வதில் ஆற்றிய பிற்போக்குத்தனமான பாத்திரத்தை இந்த நிகழ்வுகள் மீண்டுமொருமுறை எடுத்துக் காட்டுகின்றன. ஒரு புதிய அரசியல் நோக்குநிலை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்புவது குறித்த பிரச்சினையை இவை தீவிரமாக முன்னுக்குக் கொண்டுவருகின்றன. நவபாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய வழி குறித்த பிரச்சினை இதற்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னுக்கு வந்தது. அச்சமயத்தில், கோலிச ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கீழ் ஐந்து வருடங்கள் பிரதமராக சேவை செய்திருந்த சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த லியோனல் ஜோஸ்பன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டதை எதிர்த்ததால் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று - மோசடியாக - கூறிக் கொண்ட மூன்று வேட்பாளர்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. ஆர்லெட் லாகியே, ஒலிவியே பெசென்செனோ மற்றும் டானியல் குளுக்ஸ்ரைன் ஆகிய மூவரும் சேர்ந்து மொத்தமாக 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஜோஸ்பன், தேசிய முன்னணி (FN) வேட்பாளரான ஜோன்-மரி லு பென்னுக்கு அடுத்த மூன்றாவது இடத்தையே பிடித்து வெளியேற்றப்பட்டார். “ட்ரொட்ஸ்கிஸ்டுகள்” என்று கூறியவர்கள் இறுதிக் கட்ட தேர்தலில் லு பென்னுக்கு எதிராக சிராக்கை ஆதரித்து பதிலிறுப்பு செய்தனர். தொழிலாள வர்க்கம் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் எழுப்பிய குரலை அவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். ஒரு பரவலான புறக்கணிப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டிருந்தால் “நடப்பு சமூக மற்றும் அரசியல் ஒழுங்கை சவால் செய்யக் கூடிய ஒரு முற்போக்கான சமூக சக்தி இருக்கிறது என்பது பரந்த மக்களிடம் நிரூபிக்கப்பட்டிருக்கும்” என்று அச்சமயத்தில் உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் விளக்கின. அத்தகையதொரு பிரச்சாரம் தேர்தலுக்குப் பின்னர் வரவிருந்த வர்க்கப் போராட்டங்களுக்கு உழைக்கும் மக்களை தயார்படுத்தியிருக்கும். “சிராக்குக்கு ஆதரவாய் வாக்களிப்பதன் காரணம் லு பென் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக” என்ற வாதத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரித்தோம். “சிராக்குக்கும் லு பென்னுக்கும் இடையில் கோட்பாட்டுரீதியான அரசியல் வித்தியாசங்கள் ஏதும் இல்லை” என்று நாங்கள் எழுதினோம். “சிராக்குக்கு பாரிய வாக்குகள் கிடைப்பதென்பது அவரது அரசியல் அதிகாரத்தை பெருமளவில் வலுப்படுத்தி அரை போனபார்டிச ஆளுமையாக ஆக்கி விடும். அவர் அந்த அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராக தாட்சண்யமற்றுப் பயன்படுத்துவார்.” ”தொழிலாள வர்க்கம், பாசிசத்துக்கு எதிரான போராட்டம் என்ற பற்றியெரியும் பிரச்சினை உட்பட ஒவ்வொரு அரசியல் பிரச்சினையிலுமே, ஒரு சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டைப் பற்றுவதும் தனது சுயாதீனமான வலிமையை அபிவிருத்தி செய்வதும் அவசியமாக உள்ளது” என்பது தான் மையமான வரலாற்றுப் பிரச்சினை என்று உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தியது. உலக சோசலிச வலைத் தளம் முன்கணித்ததைப் போலவே நிகழ்வுகள் அபிவிருத்தியுற்றன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சிராக் ஒரு வலது-சாரி தொழிலாள வர்க்க-விரோதப் பாதையை பின்பற்றினார் என்பதோடு தனக்குப் பின்னால் வந்த சார்க்கோசியைப் போலவே FN இன் கொள்கைகளை அதிகமாக ஏற்றுக் கொண்டார். பர்தா அணிந்த முஸ்லீம்களை அவர் தாக்கியதோடு ரோமா மற்றும் பிற புலம்பெயர்ந்த குழுக்களைத் தண்டித்தார். அவரை அடுத்து வந்த சார்க்கோசி ஒரு மூர்க்கமான, ஏகாதிபத்திய இராணுவக் கொள்கையைப் பின்பற்றினார்; பிரான்சை மீண்டும் நேட்டோ உத்தரவுக் கட்டமைப்புகளுக்குள் இழுத்துச் சென்றார்; அத்துடன் லிபியாவுக்கு எதிரான போருக்கு முன்முயற்சி எடுத்தார். போலி-இடது குழுக்கள் இன்னும் கூடுதலாக வலது நோக்கி நகர்வதன் மூலம் பதிலிறுப்பு செய்தன. பெசன்செனோவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக் (Revolutionary Communist League) தன்னை புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியாக உருமாற்றிக் கொண்டு ட்ரொட்ஸ்கிசத்துடனான தொடர்பை பகிரங்கமாக நிராகரித்தது. அப்போதிருந்து அக்கட்சி லிபியா, அதன்பின் சிரியாவுக்கு எதிராக ஏகாதிபத்திய போர் முனைப்பை ஆதரித்து வந்திருக்கிறது. 2012 ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில், மெலோன்சோனின் இடது முன்னணி தொடங்கி NPA வரையான அனைத்து போலி-இடது குழுக்களுமே, சார்க்கோசியுடன் ஒப்பிடுகையில் ஹாலண்ட் குறைந்த தீமை என்று கூறி ஹாலண்டை ஆதரித்தன. ஹாலண்டின் தேர்தல் வெற்றியில் அக்குழுக்களின் ஆதரவு முக்கியமான பாத்திரம் வகித்தது. ஆயினும், எதிர்பார்க்கத்தக்கவாறே, ஹாலண்ட் பிசிறின்றி சார்க்கோசியின் கொள்கைகளைத் தான் பின்பற்றினார். ரோமா மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தினார்; சிரியாவுக்கு எதிரான ஒரு புதிய ஏகாதிபத்தியப் போருக்கு நெருக்கினார், மற்றும் பாரிய சமூகத் தாக்குதல்களையும் வேலை வெட்டுகளையும் செயல்படுத்தினார். ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஹாலண்ட் சார்க்கோசியை விட மோசம் என்ற கருத்து தான் அநேக பிரெஞ்சுத் தொழிலாளர்களிடம் உருவாகியிருக்கிறது. இதில் அதிக இலாபமடைந்திருக்கும் கட்சி என்றால் அது FN தான். அரசாங்கத்தின் இனவாதக் கொள்கைகளால் வலுப்படுத்தப்பட்டிருக்கும் இக்கட்சி அதேசமயத்தில் அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரானதாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த வலது-சாரி நோக்குநிலைக்கு இருக்கக் கூடிய பரந்த எதிர்ப்பை லியோனார்டா விவகாரம் இப்போது வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமது சகமாணவி ஒருவர் மிருகத்தனமாய் நடத்தப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நெருப்பைத் தணிக்க முயலும் பொருட்டு போலி-இடது அமைப்புகள் எல்லாம் தலையீடு செய்கின்றன. இந்த இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதனைத் தடம்புரளச் செய்து, அதனை சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்குதல் அளிப்பதற்கான ஒன்றாகக் குறைத்து விடும் நோக்கத்துடன் தார்மீக சீற்றம்கொண்ட ஆர்ப்பாட்டங்களாக நடத்தி தடம்புரளச் செய்வதில் இந்த அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றன. ஏதோ ஒரு சில அமைச்சர்களை மாற்றி விட்டால் அரசாங்கத்தின் தன்மையோ அல்லது சோசலிஸ்ட் கட்சியின் தன்மையோ மாறிவிடும் என்பது போல, பெசன்செனோவும் மெலோன்சோனும் வால்ஸ் உடனடியாக இராஜினாமா செய்யவேண்டு எனக் கோரினார்கள். சமூகப் பதட்டங்களுக்கு “ஒரு குடியரசுத் தாக்குதலை”க் கொண்டு பதிலிறுக்குமாறு கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஒலிவியே டார்டிகோல் ஜனாதிபதி ஹாலண்டுக்கு விண்ணப்பம் செய்தார். இந்த சந்தர்ப்பத்தை சுரண்டிக் கொள்ள ஹாலண்ட் தவறியமையானது ஒரு “முக்கியமான அரசியல் மற்றும் தார்மீகப் பிழை” என்று டார்டிகோல் அறிவித்தார். உண்மையில், வால்ஸ் மற்றும் ஹாலண்டின் கொள்கை ஒரு “பிழை” அல்ல. மற்ற அனைத்து முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே, ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதும், தொழிலாள வர்க்கத்தை இனரீதியாக மற்றும் வகுப்புரீதியாக பிளவுபடுத்த முனைவதுமாய் இருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் வர்க்க குணாம்சத்தில் இருந்து இது உதயமாகிறது. ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் நாடுகளிலான நிகழ்வுகளில் இது பிரதிபலிப்பைக் காண்கிறது. அதில் மிக முக்கியமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் கரங்களில் சிக்கி கிரீஸ் சமூகப் பெருநாசத்தைச் சந்தித்து வரும் நிலைக்கு இடையில் நவபாசிச கோல்டன் டோன் (பொன் விடியல்) அமைப்பு எழுச்சி கண்டிருப்பதாகும். அதேபோல சோசலிஸ்ட் கட்சியை இடது முன்னணி, NPA, மற்றும் பிற போலி-இடது அமைப்புகள் எல்லாம் பாதுகாப்பதும் கூட “தவறுதலாய்” அல்ல. இந்த அமைப்புகள் எல்லாம் தொழிலாள வர்க்கத்திற்கு அதிக குரோதம் படைத்ததாகி வருகின்ற வசதியான நடுத்தர-வர்க்க அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்பவை ஆகும். இவையெல்லாம் வலது-சாரி முதலாளித்துவக் கட்சிகள் ஆகிவிட்டன, ஏகாதிபத்திய முகாமின் பக்கம் செல்லச் செல்ல - உதாரணமாக லிபியாவுக்கு எதிரான போருக்கு NPA இன் ஆதரவைச் சொல்லலாம் - அவை தமது இடது நடிப்புகளையும் கூட கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளையும் அதன் கடந்த கால சமூக வெற்றிகளையும் பாதுகாப்பது, போர் மற்றும் இராணுவவாதத்தை நிராகரிப்பது, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரது பாதுகாப்பு, தேசிய முன்னணிக்கு எதிரான போராட்டம் - இந்த அத்தனை கடமைகளுமே ஒன்றுதிரண்டு சோசலிஸ்ட் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அவற்றின் போலி-இடது பாதுகாவல் அமைப்புகளில் இருந்து சுயாதீனப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கம் அபிவிருத்தியுறுவது என்ற ஒரு விடயத்தை முன்னவசியமாக்குகின்றன. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தேசிய, மத மற்றும் இன எல்லைகள் அத்தனையையும் தாண்டி ஐக்கியப்படுத்துகின்ற ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் கட்சியைக் கட்டியெழுப்புவது, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவை பிரான்சில் கட்டியெழுப்புவது என்பதே முன்னவசியமாக இருக்கிறது. |
|