World Socialist Web Site www.wsws.org |
The witch-hunt of Britain’s Guardian newspaper பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாள் மீதான வேட்டையாடல்Julie
Hyland தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) முன்னாள் ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டென் தொகுத்தவற்றை வெளியிட்டதற்காக கார்டியன் செய்தித்தாளுக்கு எதிராக அவதூறு கூறுதல், அச்சுறுத்தல் போன்ற பிரச்சாரங்கள் ஒரு ஜனநாயக நாடு என்று கூறப்படுவதில் முன்னொருபோதும் நடத்தப்பட்டிருக்வில்லை. செய்தித்தாளின் அலுவலகங்களை சோதனையிடல், கணிணி வன்பொருட்களை கட்டாயமாக அழித்தல் மற்றும் செய்தியாளர்களைக் கைது செய்வதாக மிரட்டல் ஆகிய நடவடிக்கைகள் பொதுவாக மேலும் இராணுவ சர்வாதிகாரங்களுடன் தொடர்புடையவையாகும். ஆனால் இவைதான் இங்கு கார்டியனுக்கு எதிராக நடக்கின்றன. இன்னும் மோசமான அச்சுறுத்தல்கள் வரவுள்ளன. செவ்வாயன்று ஒரு பாராளுமன்ற விவாதம் திட்டமிடப்பட்டுள்ளது. இது பழைமைவாத பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஜூலியன் ஸ்மித் இனால் முன்னெடுக்கப்படும் விவாதம், இந்த செய்தித்தாள் NSA மற்றும் பிரித்தானிய அரசாங்க தொடர்புகள் தலைமையகம் நடத்தும் சட்டவிரோதக் கண்காணிப்பு திட்டத்தைப்பற்றி தகவல் கொடுத்ததை அடுத்து அது நாட்டுத் துரோகக் குற்றத்தை செய்துள்ளதா என்பது பற்றி விவாதிக்கும். ஸ்மித் ஏற்கனவே மெட்ரோபோலிடன் பொலிசுக்கு கார்டியன் பத்திரிகை, உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின்படியும், பயங்கரவாதச் சட்டம் 2000இன் படியும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும் என எழுதியுள்ளார். முன்னதாக ஸ்னோவ்டெனிடம் இருந்து வந்த ஆவணங்களின் கணினி கோப்புக்களை அழிக்கும்படி ஜீலை மாதம் உத்தரவிட்ட பிரதம மந்திரி டேவிட் காமரோன் செய்தித்தாள்மீது பாராளுமன்ற விசாரணை வேண்டும் என்றார். இதற்கு துணைப் பிரதம மந்திரி மற்றும் லிபரல் டெமக்ராட் தலைவர் நிக் கிளெக்கின் ஆதரவு உள்ளது. உடனடியாக தொழிற் கட்சியின் கீத் வாஸ், தான் தலைமை தாங்கும் உள்துறை விவகாரங்கள் குழு அத்தகைய விசாரணையை நடத்தும் என்று உடன்பட்டார். கார்டியன் வெளியிட்டவை பாராளுமன்ற உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவின் (ISC) ஆதிக்கத்தின் கீழும் வரும். செய்தித்தாளின் தகவல்கள் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற கூற்றுக்களை அது வலுப்படுத்தும். ISC யில் தொழிற் கட்சியின் பிரதிநிதியாக இருக்கும் ஹாசெல் பிளையர்ஸ் அது ஒரு பொதுவான முடிவிற்கு வருமா, கார்டியன் “தேசியப் பாதுகாப்பை ஆபத்திற்கு உட்படுத்தியதா” என்பது பற்றி உறுதியாகக் கூறமுடியாது என்றாலும் “ISC சாட்சியம், நம்மை இட்டுச் செல்லும் இடத்திற்கு செல்லும்” என்றார். இந்த நடவடிக்கைகள் செய்தித்தாளுக்கு எதிரான சூனிய வேட்டையில் அதிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது ஆகஸ்ட் மாதம் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஸ்னோவ்டெனின் பங்காளி மற்றும் ஒத்துழைப்பாளரும் பின் கார்டியனின் செய்தியாளருமான கிளென் க்ரீன்வால்ட் இன் உதவியாளரான டேவிட் மிரண்டா காவலில் வைக்கப்பட்டதில் இருந்து ஆரம்பமானது. இந்த மோதலுக்கு உளவுத்துறை நிறுவனங்களே பச்சை விளக்கைக் காட்டியுள்ளன. புதிய M15 தலைவர் சேர் ஆண்ட்ரூ பார்க்கர் இம்மாதத் தொடக்கத்தில் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியுள்ளதைப் பகிரங்கமாக்கியதால் செய்தித்தாள் பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளது என்று குற்றம் சாட்டினார். இந்த தாக்குதல்களின் ஜனநாயக விரோதத் தன்மை நீண்டகால விளைவுகளை கொண்டவை. நீண்டகாலமாக பிரித்தானிய தாராளவாதத்தின் குரலாக கருதப்பட்ட கார்டியன் ஒரு செய்தித்தாள் செய்யவேண்டிய ஒன்றை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது ஒரு தகவலைக் வெளியிட்டதற்காக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இத்தகைய வெளிப்படுத்தல்கள் அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளதாக இருந்துவிட்டால் தேசவிரோத நடவடிக்கைகளாகிவிடுகின்றன. கார்டியனை இலக்கு வைத்திருப்பது ஆளும்கட்சிகள் முதல் தடவையாக 300 ஆண்டுகளில் பிரித்தானியாவில் சட்டபூர்வ செய்தி இதழ்கள் மீதான கட்டுப்பாட்டை சுமத்த முற்படுவதின் பின்னணியில் நடைபெறுகின்றது. அவர்களுடைய நோக்கம் உத்தியோகபூர்வ அரசாங்க தணிக்கை ஆகும். அதுவும் குறிப்பாக இணைய தளம் மீதானதாகும். கார்டியனுக்கு எதிரான நடவடிக்கைகள் தெளிவாக்குவது போல், இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு வழக்கு, சிறை என்னும் அச்சுறுத்தல்கள் தொடரும். இந்நிகழ்வுகளை இன்னும் அசாதாரணம் ஆக்குவது கார்டியன் கிட்டத்தட்ட அரசியல் ஆளும்தட்டினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பது மட்டுமில்லாமல், அதன் மீதான மிகக் கடுமையான விரோதிகள் செய்தி ஊடகத்தில் இருந்தே வருகின்றனர் என்பதுதான். இது கன்சர்வேடிவ் கட்சியுடன் தொடர்புடைய வெளியீடுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தவறான பெயரைக் கொண்டிருக்கும் Independent செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் கிறிஸ் பிளாக்ஹர்ஸ்ட், தற்பொழுது அதன் உள்ளடக்க ஆசிரியர், அண்மையில் தலையங்க எதிர்ப்பக்கக் கட்டுரை ஒன்றில் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியவை “ஆபத்தானதாக இருக்கலாம்” என்று கூறினார். “நான் அவற்றை வெளியிட்டிருக்க மாட்டேன்” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். “M15 இது மக்களின் நலன்களுக்கு உகந்தது அல்ல என எச்சரித்தால், அதை நம்பாமல் இருப்பதற்கு நான் யார்?” என்று செய்தியாளர் மேலும் கூறினார். பிளாக்ஹர்ஸ்ட்டின் இரங்கல் கட்டுரை கார்டியன் தனிமைப்படுத்தப்பட்டதில் உள்ள சமூக பதட்டங்களைக் காட்டுகிறது. தனது இளமைக்காலத்தில் அவர் அரசாங்க துஸ்பிரயோகங்களால் தான் “தாக்கப்பட்டு இருந்ததாகவும்”, ஒரு இளம் செய்தியாளர் என்னும் முறையில் அநீதிகள் குறித்து “கவனமாக” இருந்ததாகவும், இப்பொழுதெல்லாம் தான் “பரபரப்பு” அடைவதில்லை என்றார். இவருடைய கருத்துக்கள் எந்த அளவிற்குச் செய்தி ஊடகம் உணர்மையுடன் அரசாங்கத்தின் ஒரு பிரிவாக தன்னைக் கருதுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பிளாக்ஹார்ஸ்ட்டின் இளமைக்காலத்திற்கும் தற்பொழுதுள்ள நிலைமைக்கும் இடையே என்ன நடந்தது என்பது முற்றிலும் வருடங்களால் மட்டும் கணக்கிட முடியாது. இதில் மிக முக்கியமானது வசதியான உத்தியோகம், சமூக வசதி, மற்றும் அவர் பெற்றுள்ள சலுகைகள் அவரை அரசாங்கத்தின் தவறுகளை மூடிமறைக்கத் தயாராக இருக்கச் செய்துவிட்டன. 1930களின் ஜேர்மனிக்கு இவர் கொண்டுசெல்லப்பட்டாரானால், பிளாக்ஹார்ஸ்ட் கோயெபெல்லின் பிரச்சார அமைச்சரகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ உழைப்பதில் ஏதெனும் அறநெறி அல்லது அரசியல் உளைச்சல்களை எதையும் பெற்றிருக்கமாட்டார் என்பதில் சந்தேகம் உண்டா? குடி உரிமைகள் பற்றிய அக்கறை ஆளும் உயரடுக்கினுள் இல்லாத தன்மை ஒரு நீண்ட காலமாக ஜனநாயக நெறிகளின் சிதைவினால் ஏற்பட்டுள்ள விளைவுதான். இந்த நிகழ்போக்கு 2008 பொருளாதாரச் சரிவிற்குப்பின், அதைத்தொடர்ந்துள்ள சமூகச் சமத்துவமின்மை கூடுதலாக வளர்ச்சியுற்றதற்குப்பின் அதிகரித்துள்ளது. கார்டியனுக்கு எதிரான வேட்டை அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைள் மற்றும் போர்க்கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பின் பெருகிய அடையாளங்களுக்கு இடையே வந்துள்ளது என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. இது சிரியாவிற்கு எதிரான அரசாங்கத்தின் போருக்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் தோற்ற சில வாரங்களுக்குப்பின் வந்துள்ளது. அதேபோல் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் வேலைகள் நீக்கம், பொதுநல, சமூகநலச் செலவுக்குறைப்புக்களுக்கு எதிரான எதிர்ப்புக்களையும் தொடர்ந்து வந்துள்ளது. பிரித்தானியாவில் உளவுத்துறைப் பிரிவு உடைய செயற்பாடுகள் ஸ்னோவ்டென் ஜேர்மனியின் Der Spiegel இதழுக்கு வெளியிட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிட்டது போல் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இவை GCHQ பெல்ஜியத்தின் ஓரளவு அரசாங்கம் நடத்தும் தொலைத் தொடர்புகள் நிறுவனமான Belgacom மீது பாரிய சைபர் தாக்குதலை நடத்துவதாகக் குற்றம் சாட்டின. அதன் வாடிக்கையாளர்களில் ஐரோப்பியப் பாராளுமன்றமும் உள்ளது. இத்தாக்குதலுக்கு குறியீட்டுப்பெயர் “சோசலிச நடவடிக்கை” என்பது இன்னும் அடிப்படையில் GCHQ உடைய செயற்பாடுகளின் அடிப்படை நோக்கத்தை உறுதி செய்கிறது. அதாவது உள்நாட்டு மக்களை கட்டுப்படுத்துதல், அடக்குதல் என்பனவாகும். இறுதியில் பாரிய வறிய நிலைமை ஆளும் உயரடுக்கால் நிர்ணயிக்கப்படுவது என்பது சர்வாதிகார வழிவகைமூலம்தான் செயல்படுத்தப்பட முடியும். சோசலிச சமத்துவக் கட்சி நிபந்தனையின்றி கார்டியனையும் அரசாங்கத் தலையீடு இல்லாமல் வெளியிடும் அதன் சுதந்திர உரிமையையும் பாதுகாக்கிறது. ஆனால் நாம் செய்தியாளர் சுதந்திரங்கள், தடையற்ற பேச்சுரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவிடமும் நம்பிக்கை வைக்கமுடியாது என வலியுறுத்துகிறோம். இது தொழிலாள வர்க்கம் இலாபமுறை மற்றும் அதை அரசியல்ரீதியாக பாதுகாப்பவர்களுக்கு எதிராக நடத்தும் வெகுஜன இயக்கத்தின் மூலம்தான் முன்னெடுக்கப்படமுடியும். |
|