World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Mass student protests in France against deportation of Roma schoolgirl

ரோமா பள்ளி மாணவியின் நாடு கடத்தலுக்கு எதிராக பிரான்சில் ஏராளமான மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்

By Antoine Lerougetel 
22 October 2013

Back to screen version

பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 15 வயது ரோமா பள்ளி மாணவியான லியோனார்டா டிப்ரனி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொசோவோவிற்கு வெளியேற்றப்பட்டதற்கு எதிராக அணிதிரண்டமையானது ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தை உறுதிகுலையச் செய்துள்ளது.

லியோனார்டாவை பிடித்ததிலிருந்த மிருகத்தனம் —அவர் பள்ளிச் சுற்றுலா வேளையில், ஒரு பாடசாலை வாகனத்திலிருந்து, அவருடைய ஆசிரியர் எதிர்ப்புத் தெரிவிப்பிற்கு மத்தியிலும் பள்ளி நண்பர்களுக்கு முன்னே இறக்கப்பட்டமைமக்களிடேய பரந்த வெறுப்புணர்வை தூண்டியுள்ளது. பிற்போக்குத்தன சிக்கனக் கொள்கைகளை தொடர்கின்ற அதேவேளை, ஹாலண்டும் அவருடைய உள்நாட்டு அமைச்சர் மானுவல் வால்ஸும் தேசிய முன்னணியுடைய (FN) நிறவெறிக் கொள்கைகளை, சமூக நெருக்கடிக்கான பலிக்காடாவாக மிகவும் வெளிப்படையாக புலம்பெயர்ந்தவர்களை கையிலெடுத்துள்ளனர்.

இத்தகைய சீற்ற அலை ஹாலண்டை சனிக்கிழமையன்று நாட்டு மக்களுக்கு பொதுத் தொலைக்காட்சி மூலம் உரையாற்ற வைத்தது. ஆனால் மாணவர்களின் சீற்றத்தை தணிப்பதற்குப் பதிலாக அவர் நிலைமையை மோசமாக்கினார். வால்ஸின் மூக்கு உடைபடாமல் இருப்பதற்காக, லியோனார்டாவிற்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அவர் ஆதரவு கொடுத்தார். அதன்பின் அவர் ரோமா மாணவிக்கு பெருந்தன்மையான சைகைஅளிக்கும் வகையில் மீண்டும் பிரான்ஸுக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்—ஆனால் அவருடைய குடும்பத்தை விட்டு வரவேண்டும் என்றார்.

அந்த மாணவி கேட்டால், அவருக்கு வரவேற்பு உண்டு, ஆனால் அவருக்கு மட்டும்தான்” என்றார் ஹாலண்ட். கொசோவோவில் மிட்ரோவிகாவிலிருந்து விடையிறுக்கையில் லியோனார்டா இந்த இழிந்த அழைப்பை நிராகரித்தார்: “நான் மட்டும் பிரான்ஸுக்குப் போக மாட்டேன், என் குடும்பத்தை விட்டு விலகமாட்டேன், நான் ஒருத்தி மட்டும் பள்ளிக்குச் செல்லவில்லை. என்னுடைய சகோதர, சகோதரிகளும்தான் படிக்க வேண்டும்” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

செய்தி ஊடகத்தாலும் முழு அரசியல் ஸ்தாபனத்தாலும் இகழ்வுப் பிரச்சாரத்திற்கு அவளுடைய தந்தையார் இலக்காகிவிட்டிருந்தார். இதில் போலி இடதான NPA இன் அலன் கிறிவின் ஞாயிறன்று France Info Radio வில் இழிவாகத் தாக்கியதும் உள்ளடங்கும்அதாவது ஹாலண்ட் அவரது மகளின் அருகில் நின்றுகொண்டு அத்தகைய பிரிவை தன்னுடைய இளம் மகள் மீது சுமத்துவாரா என்று ஹாலண்டிடம் கேட்டார் கிரிவின். லியோனார்டாவினுடைய தந்தையின் மீது கிரிவினுடைய தாக்குதலானது அவளுடைய குடும்பம் பிரான்ஸில் வசிப்பதற்குள்ள உரிமையை நிராகரிக்க விரும்புபவர்களின் கையை பலப்படுத்துவது மட்டுமேயாகும். அத்தோடு ரோமாக்களின் உரிமைகளை பாதுகாக்க கிறிவின் கூற்றுக்களின் பாசாங்குத்தனத்தையும் இது நிரூபிக்கிறது.

செய்தி ஊடகம் பொதுவாக ஹாலண்டின் உரையையும் அதற்கு வந்த எதிர்வினையையும் பேரழிவு என விவரித்தன. Nouvel Observateur இணைய தளம் அரசாங்கம் தன்னைக் காத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டுள்ளது. லியோனார்டா விவகாரம் ஒரு “வெடிப்புத்தன்மை உடைய கலவைஎன்று கூறிய அது எழுதியதாவது: “உள்துறை மந்திரியின் குடியேற்றக் கொள்கைகள் குறித்த அடிப்படை வேறுபாடுகள் மற்றும் இளைஞர்களிடையே பீதி நிறைந்த அச்சம், தகவல்தொடர்பில் வியத்தகு அறியாத்தன்மை ஆகியவை வெளிப்பட்டுள்ளன.

பிரான்சுவா ஹாலண்ட் பற்றிய இருப்புநிலைக் குறிப்பு ஏற்கனவே கருத்துக் கணிப்புக்களில் மிகவும் குறைவான நிலையில் உள்ளன. ஜனாதிபதியின் நம்பகத்தன்மை வினாவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது, அனைத்து ஊடகங்களிலும் இளம் வயதினரால் கேலி செய்யப்படுகிறது. பேரழிவு தரும் விளைவுகள் ஜனாதிபதியின் தோற்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன, அவருடைய அதிகாரம் மீண்டும் சந்தேகத்திற்கு வந்துவிட்டது.”

Sud-Ouest  செய்தித்தாள் எழுதியது: “அனைவரையும் திருப்தி செய்ய விரும்பும் பிரான்சுவா ஹாலண்ட் எவரையும் திருப்தி செய்ய முடியவில்லை... இது கிட்டத்தட்ட அச்சம் தரக்கூடிய வெறித்தன்மையையும், சிதைந்த அரசின் தன்மையையும்தான் நிரூபித்துள்ளது.”

சனிக்கிழமை தொடங்கிய இரண்டு வாரப் பள்ளி விடுமுறை, தற்காலிகமாக கடந்த வாரம் வளர்ச்சியுற்ற மாணவர் அணிதிரள்வை நிறுத்தியுள்ளது, ஆனால் அவர்கள் விடுமுறைக்குப் பின் இது தொடரும் என உறுதியளித்துள்ளனர்.

வெள்ளியன்று WSWS ஆதரவாளர்கள், கிட்டத்தட்ட 10,000 மாணவர்கள் இருந்த பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசினர்; அங்கே லியோனார்டாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் பல நாடுகடத்தப்பட்டுவிட்ட மாணவர்கள் குறித்து ஆழமான கோபத்தை வெளிப்படுத்தினர்.

பலரும் அனைத்து அரசியல் அமைப்புக்கள் குறித்து அவநம்பிக்கை கொண்டுள்ளனர் அல்லது ஏற்கவில்லை மற்றும் இடது முன்னணியின் Jean-Luc Mélenchon உடைய ஸ்டிக்கர்களை ஒட்ட மறுத்தனர்; இந்த இடது முன்னணி எதிர்ப்புக்களை PS மீது அழுத்தம் கொடுப்பதற்கான பிரச்சாரத்திற்குள் கொண்டு செல்ல முயல்கிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிலர் சமத்துவ அடையாளத்தை தங்களுடைய முகங்களில் வரைந்து கொண்டனர்.

WSWS இடம் தியோ கூறினார்: “மக்களை இப்படி வெளியேற்றவது சரியல்ல; அவர்களும் நம்மைப் போல்தான், எங்களைப்போல் கல்விக்கு உரிமை உடையவர்கள். லியோனார்டா எங்கள் பள்ளியில் நான்கு ஆண்டுகளாக உள்ளார், இப்பொழுது திடீரென அவருடைய நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். மானுவல் வால்ஸ் இடது புறம் உள்ளார், ஆனால் கல்விக்கு எதிராக உள்ளார். ஏனென்று எனக்குப் புரியவில்லை; இதில் அர்த்தமில்லை. பள்ளிகளில் பயிலும் எல்லா வதிவிட ஆவணங்கள் அற்றோரும் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும். கல்விக்கு அவர்கள் உரிமையுடையவர்கள். இடது கட்சிகள் புரட்சிகரமானவை என்று கருதப்படுகின்றன. ஆனால் அவை அப்படி இல்லை. சோசலிஸ்ட் கட்சியும் வலதுசாரியும் ஒன்றாகத்தான் உள்ளன. இத்தகைய நாடுகடத்தல் மீண்டும் வரக்கூடாது என்று இங்கு நாங்கள் இது பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த முயல்கிறோம். இது மனிதத்தன்மையற்றது.

வெற்றிபெறுவதற்கு, நாம் போராட வேண்டும், அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும், அதையொட்டி அது சரியான தீர்வுகளை அளிக்க வேண்டும். நாங்கள் எந்த அரசியல் குழுவையும் சேர்ந்தவர்கள் அல்ல. இது ஒரு ஒற்றுமையான இயக்கமாகும்.”

மற்றொரு உயர்நிலைப் பள்ளி மாணவியான அலிசன் கூறினார்: “கல்வி என்பது இன்று மிகத் தேவையானது. இந்த உரிமையை அவர்களுக்கு மறுப்பது எனக்குக் கோபத்தைக் கொடுக்கிறது. அவர்கள் தமது நாடுகளில் அடக்கப்படுகின்றனர், இங்கு அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர்... நாடு கடத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் ஒற்றுமை குறித்த தகவலை அனுப்புகிறோம். ஜனாதிபதி ஹாலண்ட் மக்களிடையே இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும், மானுவல் வால்ஸை நல்ல வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் பிரிவில் இருக்கும் மாணவரான Jean-Claude கூறினார்: “இடது கட்சிகள் (சோசலிஸ்ட் கட்சி, இடது முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி) வலதைத் தடுக்க முதலில் ஒன்றுபடவேண்டும் என்றனர், குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக. நாங்கள் ஹாலண்டின் கொள்கைகள் அதிக கடுமையாக இருக்காது, உரையாடல் எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எமது நினைப்பு தவறு என ஆகிவிட்டது. இவ்வளவு மோசமாக நிலைமை போகும் என்று நாங்கள் நினைக்கவேயில்லை.”