World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Lancet report supports accusation that Yasser Arafat was poisoned

யாசிர் அரபாத்திற்கு விஷம் கொடுக்கப்பட்டது என்னும் குற்றச்சாட்டிற்கு லான்செட் அறிக்கை ஆதரவு

By Jean Shaoul 
21 October 2013

Back to screen version

உலகின் முன்னணி மருத்துவ இதழ்களில் ஒன்றான Lancet ஆனது பொலோனியம்-210 என்ற நஞ்சு கொடுக்கப்பட்டே யாசர் அரபாத் இறந்தார் என்னும் ஆய்வறிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனிய அதிகாரத்தின் ஜனாதிபதி 2004 ஆண்டு நவம்பர் மாதம் அவருடைய ரமல்லா தலைமையகத்தில் நோய்வாய்ப்பட்டபின், பிரெஞ்சு இராணுவ மருத்துவமனை ஒன்றில் இறந்து போனார்.

இந்த ஆய்வு அரபாத் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது பொலோனியத்துடன் எப்படித் தொடர்பு வந்தது என்னும் பிரச்சினை பற்றி எதுவும் கூறவில்லை; ஆனால் கதிரியக்க ஐசோடோப்புக்கள் இருந்தமையானது அரபாத் கொலையுண்டார் என்பதை மறுக்க முடியாமல் சுட்டிக்காட்டுகிறது. அணு சக்திகளை கொண்டிருப்பவர்களைத் தவிர வேறு எவரும் ஐசோடோப்பை கொண்டிருப்பதிலுள்ள கடினம், மற்றும் யாருக்கு இலாபம்? என்பதை சிந்திக்கையில், இக் கொலையானது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவால் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டாலும் என்பது தெரியவருகிறது.

இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தனியாகுவின் அலுவலகம், அரபாத் இறப்பு குறித்து “புதிதாகச் சொல்வதற்கு அவரிடம் ஒன்றுமில்லை” என்று அறிக்கையை உதறித்தள்ளியது.

பொலோனிய நஞ்சூட்டலுக்கான மேம்படுத்தல் தடவியல் புலன்விசாரணை (Improving Forensic Investigation for Polonium Poisioning) என்னும் நிறுவனம் தனது ஆய்வை அக்டோபர் 12ல் வெளியிட்டது. இது சுவிஸ் விஞ்ஞானிகள் அரபாத்திற்குச் சொந்தமான 38 பொருட்களை, அதாவது அவருடைய உள்ளாடை, பல் துலக்கும் பிரஷ் உட்பட ஆய்ந்ததை விளக்குகிறது; அத்துடன் அவருடைய இறப்பிற்கு சில காலம் முன் அங்கு இருந்த 37 ஒரு தொகுப்பு பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டது. நஞ்சு வல்லுனர்கள்,பொலோனியம்-210 நஞ்சினால் அரபாத் கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்பதற்கான ஆதாரப் பொருளின் அறிகுறிகளைக் கண்டுள்ளனர்.

விஞ்ஞானிகள் மேலும் கூறினர்: “மைலோசப்ரஷனின் இன்மை [எலும்பு மச்சைக் குறைபாடு] மற்றும் முடி இழப்பு தீவிர கதிரியக்க நோய்குறியீட்டிற்கு ஆதரவாக இருக்கவில்லை; குமட்டுதல், வாந்தி எடுத்தல், களைப்பு, பசியின்மை இவற்றுடன் ஈரல், சிறுநீரகச் செயலிழப்புத் தன்மை கதிரியக்க நச்சு இருந்திருக்கலாம் என்பதைத் தெரிவிக்கின்றன.”

அரபாத் இறந்தபின் வைக்கப்பட்டிருந்த காலத்தின் அளவு ஒப்புமையில் விரைவில் சிதைந்துபோகும் பொலோனியத்தைக் கண்டுபிடிப்பதை இன்னும் கடினமாக்கியுள்ளது. ஆயினும்கூட, “... மருத்துவத் தடய விசாரணையின் அடிப்படையில், 2012ல் அவருடைய சடலத்தை மீண்டும் ஆராய்வதற்கு பரிந்துரை செய்யப் போதுமான சந்தேகம் இருந்தது.”

லௌசான்னிலிருக்கும் பெளதீக கதிரியக்கத்திற்கான கல்வியகம் (Institute for Radiation Physics) மற்றும் ஜெனீவாவிலுள்ள சட்ட மருத்துவ மையப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளால் இந்த அறிக்கை எழுதப்பட்டது; அவர்களில் சிலர் கடந்த ஆண்டு அல்-ஜசீரா தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட சோதனைகளை நடத்தியிருந்தனர்.

இத்தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் ஒன்பது மாத கால ஆய்வு அரபாத் மரணம் குறித்த அவருடைய மருத்துவச் சான்றுகளையும் அவருடைய விதவை சுஹா அரபாத் கொடுத்த அவருடைய பொருட்கள், பல் பிரஷ், உடைகள், தலையில் அணியும் காபியே உட்பட, சுவிஸ் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவையானது பொலோனிய தடயளங்களைக் கொண்டிருந்தன.

சுஹா அரபாத், அரபாத்தின் நோய்க்கான காரணம் குறித்து தன்னுடைய சந்தேகங்களை பிரான்சில் அவர் 2004ல் மருத்துவமனையில் இருக்கும்போதே எழுப்பினார். அரபாத் கடுமையான குமட்டல் மற்றும் வயிற்று வலியால் ஒரு கூட்டத்தில் வாந்தியெடுத்ததையடுத்து துன்புற்றதனால் பிரெஞ்சு இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் நோய்க்குறிகள் மோசமாயின, அவருடைய ஈரலும் சிறுநீரகங்களும் செயற்படவில்லை. கோமாவில் விழுந்த அவர் சில வாரங்களுக்குப் பின் இறந்து போனார்.

அரபாத் உடல் ரமல்லாவில் முகட்டா அருங்காட்சியகம் ஒன்றில், துருப்புக்களால் பாதுகாப்பிற்கு உட்பட்டுள்ளன.

குறிப்பாக மருத்துவர்கள் அவருடைய இறப்பை ஏற்படுத்திய மூளை இரத்தப் போக்கிற்கு வழிவகுத்தவற்றை அடையாளம் காண முடியாத நிலையில், அரபாத்திற்கு விஷம் கொடுக்கப்பட்டது என்னும் வதந்திகள் பெருகின.

கடந்த ஆண்டு அல்-ஜசீரா ஒளிபரப்பிற்குப்பின், சுஹா அரபாத் பாலஸ்தீனிய அதிகாரத்தை அவருடைய சடலத்தை வெளியே எடுத்து இறப்பிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்.

அவருடைய வேண்டுகோள் பாலஸ்தீனிய அதிகாரத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸைச் சங்கடத்திற்கு உட்படுத்தியது; அரபாத் இறந்தபின் நடந்த தேர்தல்களில் அவருக்குப்பின் வாஷிங்டன் இவரை அப்பதவியில் இருத்த விரும்பியது. பாலஸ்தீனிய அதிகாரம் அரபாத் மரணம் குறித்து தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை. மேற்குக்கரையின் உயர்மட்ட முஸ்லிம் மதகுருவான முப்தி மகம்மத் ஹுசைன் பிரேத பரிசோதனைக்கு  தான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று கூறியபின் அப்பாஸ் சுஹாவின் வேண்டுகோள் அழுத்தத்திற்கு இணங்க வேண்டியதாயிற்று.

அராபத்தின் சடலத்திலிருந்து மாதிரிகள் சுவிட்சலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலுள்ள மருத்துவத் தடயவியல் குழுக்களுக்கு நவம்பர் 2012ல் அனுப்பப்பட்டன -- லண்டனில் 2006ல் முன்னாள் ரஷ்ய KGB  முகவராக இருந்து கிரெம்ளினைக் குறைகூறுபவராக மாறிய அலெக்சாந்தர் லிட்விநென்கோ மரணத்தை ஏற்படுத்திய அதே பொருளான பொலோனியம்-210 மூலம் அவர் கொலையுண்டாரா என கண்டுபிடிப்பதற்காகும். மூன்று நச்சு வல்லுனர் குழுக்கள் அரபாத்தின் எஞ்சிய சடல மாதிரிகளையும் உடலுடனிருந்த மதப் பொருட்கள் மற்றும் புவி மாதிரிகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. சட்ட வழிவகைகளினால் இவற்றின் முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும் என்று தெரியவில்லை.

நீண்ட காலமாக அரபாத்தின் இறப்பிற்குப் பொறுப்பு இஸ்ரேலின் மோசாட் இரகசியப் பிரிவுதான் என்று கூறப்பட்டது; அதற்குத்தான் பாலஸ்தீனிய தலைவர்களை கடத்துதல், படுகொலைகள் செய்தல், இன்னும் சமீபத்தில் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகளை கொன்றமை போன்ற சான்றுகள் உள்ளன. 1997ல் இது ஹமாஸ் தலைவர் கலெட் மேஷாலை அம்மானில் அவருடைய காதில் விஷத்தை ஊற்றிக் கொலை செய்ய தோல்வியடைந்த முயற்சியில் ஈடுபட்டது. இரு முகவர்கள் கிட்டத்தட்ட உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஜோர்டானின் அதிகாரிகள் பெரும் சீற்றம் அடைந்த்தோடு, மேஷாலின் உயிரைக் காப்பாற்ற இஸ்ரேல் மாற்று மருந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

2002 மற்றும் 2004ல் பிரதம மந்திரி ஏரியல் ஷரோன், 2003ல் துணைப் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் இருவரும் அராபத்தை படுகொலை செய்வதாக அச்சுறுத்தியதற்கு சான்றுகள் உள்ளன; அவருடைய உயிரைப் பறிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரபாத்தின் இறுதி நோய்வாய்ப்படலுக்கு சில வாரங்கள் முன்னதாக ஷரோன் அச்சுறுத்தலை மீண்டும் கூறி, Ma’ariv செய்தித்தாளிடம் ஹமாஸ் தலைவர்கள் ஷேக் அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல் ரன்டிசி இருவருக்கும் எதிராகச் செயற்பட்டது போல் இஸ்ரேல் “அன்றே” அரபாத்திற்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்—அவர்கள் இருவரும் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டனர். பலமுறையும் ஷரோன் 1982ல் பெய்ரூட் முற்றுகையின்போது பாலஸ்தீனிய தலைவரை கொல்லாததற்காக வருந்தினார்.

முன்னாள் இஸ்ரேலிய சட்டமன்ற உறுப்பினரும் சமாதானவாதியுமான யூரி அவ்நெரி, ஷரோனுடைய நெருங்கிய நண்பர் யூரி டான் இறப்பதற்கு முன் அவர் பிரான்சில் ஒரு நூலை வெளியிட்டது குறித்துக் கூறினார். அந்நூலில் ஷரோன், டானிடம் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் உடன் நடத்திய உரையாடல் குறித்துக் கூறுகிறது. அரபாத்தை கொல்வதற்கு ஷரோன் புஷ்ஷின் அனுமதியைக் கேட்டதாகவும், புஷ் அது பிறரால் கண்டுபிடிக்க முடியாதபடி செய்ய அனுமதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. டான், ஷரோனை அது செயற்படுத்தப்பட்டதா என்று கேட்டதற்கு, ஷரோன் “அது பற்றி பேசாமல் இருத்தல் நலம்” என்று பதில் கூறினார்.

இஸ்ரேல் அராபத்தின் மீது காட்டும் வெறுப்பு அவருடைய பாலஸ்தீனிய அரசிற்கான இடைவிடாத ஆதரவு கொடுப்பதில் இருந்தும், இஸ்ரேலுக்கு போராளித்தன எதிர்ப்பைக் காட்டும் அல் அக்சா தியாகிகள் பிரிவு, இஸ்லாமிய ஜிஹத் மற்றும் ஹமாஸை அடக்க மறுத்ததிலிருந்தும் விளைந்ததாகும்; ஏனெனில் இது அவரை தன்னுடைய மக்களுக்கு எதிராகவே உள்நாட்டுப்போரில் ஈடுபட வைத்திருக்கும். அவருக்குப்பின் வந்த மஹுமூத் அப்பாஸ் அத்தகைய உளைச்சல்களைக் கொண்டிருக்கவில்லை; பாலஸ்தீனிய அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மகம்மத் டாஹ்லன் போன்றோரைப் பயன்படுத்தியது; டாஹ்லன் CIA உடன் மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளுடன்  தொடர்பு கொண்டவர் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆணைகளை செயல்படுத்துவதற்காகும்.

Vanity Fair என்னும் இதழின் கருத்துப்படி, அமெரிக்கா டாஹ்லானுக்கு ஆயுதங்களையும் ரொக்கத்தையும் கொடுத்தது; அவருடைய பிரிவினருக்குப் பயிற்சி அளித்து அவரை பாலஸ்தீனிய தேர்தல்களில் ஜனவரி 2006ல் காசாப் பகுதியில் வெற்றி பெற்ற ஹமாஸுக்கு எதிரான இராணுவ சதி நடத்த உத்தரவிட்டது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசாங்கம் முன்கூட்டி எச்சரிக்கப்பட்டு, அவருடைய படைகளை சிதறடிக்க ஒரு தவிர்க்க முடியாத எதிர் இராணுவ தாக்குதலை மேற்கொண்டது.

பாலஸ்தீனிய அதிகாரம் பின்னர் டாஹ்லனுடன் பிரிந்ததோடு, அவரை பத்தா அமைப்பிலிருந்து அகற்றி, மேற்குக்கரையில் அப்பாஸுக்கு பதிலாக தனியார் போராளிப் பிரிவைக் கட்டமைக்க உள்ளார் என்று குற்றமும் சாட்டியது. 2011 ல் பாலஸ்தீனிய அதிகாரம் தயாரித்த அறிக்கை ஒன்றில் அவரை அரபாத்தின் மரணத்தில் தொடர்பு கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியது. டாஹ்லன், நோய்வாய்ப்பட்டிருக்கும் அப்பாஸுக்குப் பின் பாலஸ்தீன அதிகாரத்திற்கு தலைவராக வேண்டும் என இஸ்ரேல் விரும்புகிறது.