World Socialist Web Site www.wsws.org |
New reports warn of mass poverty and social decline in Europe ஐரோப்பாவில் வெகுஜன வறுமை மற்றும் சமூகநிலையில் வீழ்ச்சி குறித்து புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன
By Stefan
Steinberg ஐரோப்பாவில் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் தொடரும் சிக்கன கொள்கைகள் பல மில்லியன் மக்களை வறுமையில் தள்ளி, சமூக சமத்துவமின்மை மட்டத்தை போருக்குப்பிந்தைய காலத்தில் அறிந்திராத அளவிற்கு எரியூட்டியுள்ளது என்பதை பல அறிக்கைகள் உறுதி செய்கின்றன. செப்டம்பர் மாதம் ஒக்ஸ்பாம் உதவி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஐரோப்பாவில் வறுமைப் பொறி, ஏற்கனவே 120 மில்லியன் மக்களைச் சூழ்ந்துள்ளதுடன், மிக அண்மைக் காலத்தில் மேலும் 25 மில்லியன்களால் அதிகரிக்கலாம் எனவும் இதனால் பேரழிவு தரும் சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளது. ஒக்ஸ்பாம் கண்டறிந்துள்ளவை இப்பொழுது செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை ஒன்றின் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது. இது இந்த ஆண்டு முதல் பகுதியில் 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் மற்றும் பால்கன்கள், கிழக்கு ஐரோப்பா மத்திய ஆசியாவில் 14 நாடுகளிலும் ஒரு சமூக மதிப்பீட்டை நடத்தியது. 68 பக்க அறிக்கைக்கு முன்னுரையில் ஐரோப்பிய செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் பின்வருமாறு எழுதுகிறார்: “பொருளாதார நெருக்கடி, அதன் வேர்கள் வரை தாக்கப்பட்டிருக்கையில், மில்லியன் கணக்கான ஐரோப்பியர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர்.” அறிக்கை தொடர்கிறது: “....அமைதியான அவநம்பிக்கையின்மை ஐரோப்பியர்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது, இதனால் மனஉளைச்சல், வழியின்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலை, நம்பிக்கை இழப்பு ஆகியவை விளைந்துள்ளன. 2009 உடன் ஒப்பிடும்போது, இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் உணவிற்கு வரிசையில் நிற்பதுடன், மருந்து வாங்க முடியாமலும் சுகாதாரப் பாதுகாப்புப்பெற முடியாத நிலையிலும் உள்ளனர். மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்றி உள்ளனர். வேலையில் இருக்கும் பலர், குறைவான ஊதியங்கள், பெருமளவு உயரும் விலைகளால் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் திண்டாடுகின்றனர். “மத்தியதர வகுப்பில் இருந்து பலர் வறுமைக்கு சரிந்துவிட்டனர். செஞ்சிலுவை சங்கம் வழங்கும் உணவு விநியோகத்தை நம்பியிருப்பவர்கள், மதிப்பீடு நடந்த 22 நாடுகளில் 2009க்கும் 2012க்கும் இடையே 75% அதிகரித்துவிட்டது. இன்னும் பலர் வறியவர்களாகி கொண்டிருக்கினர், வறியவர்கள் இன்னும் கூடுதல் வறியவர்களாகி கொண்டிருக்கின்றனர்.” 2008 நிதிய நெருக்கடிக்கு ஓராண்டிற்குப்பின் 2009இல் ஐரோப்பிய சமூக வளர்ச்சி குறித்து ஒரு ஆரம்ப மதிப்பீட்டை செஞ்சிலுவை சங்கம் நடத்தியது. அந்த ஆண்டில்தான் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் கண்டத்தின் வங்கி முறையை மறுபடி இயக்க பல ஐரோப்பிய நாடுகளில் ஒரு தொகை சிக்கனக் கொள்கைகளைத் ஆரம்பித்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பின் புதிய சமூக மதிப்பீடு தகவல்களை சேகரிக்கும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் தாங்கள் கண்டறிந்தவற்றை ஒட்டி “வியப்பும்” “அதிர்ச்சியும்” அடைந்துள்ளனர். ஐரோப்பாவில், ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கும் உணவு உதவியை, 18 மில்லியன் மக்கள் பெறுகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது; அதே நேரத்தில் 43 மில்லியன் மக்கள் ஒவ்வொரு நாளும் போதுமான அளவு உணவு கிடைக்காமல் உள்ளனர். இதைத்தவிர மற்றொரு 120 மில்லியன் மக்கள் வறுமை இடரில் உள்ளனர். அறிக்கை, பெருகும் வறுமையின் நீண்டகால சமூக விளைவுகளை வலியுறுத்துகிறது. ஐரோப்பா முழுவதும் ஏற்பட்டுள்ள வேலையின்மை அதிகரிப்பு “வெடிக்கக் காத்திருக்கும் ஒரு குண்டுபோல் உள்ளது. இது சமூக அமைதியின்மையையும் எழுச்சி பற்றிய ஆபத்தையும் அதிகரித்துள்ளது. சிக்கன நடவடிக்கைகளின் சுமத்தலை முழுமையாக அனுபவித்துள்ள கிழக்கு ஐரோப்பா மற்றும் தெற்கு-ஐரோப்பிய நாடுகளில் பேரழிவான விளைவுகளை பற்றி விவரித்தபின், அறிக்கை சமூக நெருக்கடி பெருகிய முறையில் வடக்கு ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்கான்டிநேவியாவின் பகுதிகளிலும் உணரப்படுகிறது என்று குறிப்பிடுகிறது. பிரான்சில் 2008 க்கும் 2011க்கும் இடையே குறைந்தப்பட்சம் 350,000 பேர் வறுமைக் கோட்டிற்குள் தள்ளப்பட்டுவிட்டனர். ஜேர்மனியை பற்றிய அதன் கண்டறிதல்களில் அறிக்கை ஜேர்மனியில் குறைவூதியப் பிரிவு பாரியளவில் பெருகியுள்ளது குறித்துக் கூறியுள்ளது. இதனால் 600,000 தொழிலாளர்கள் முழு நேர வேலைகளைப் பெற்று போதுமான வாழ்க்கையை நடத்த இயலாத நிலையில் உள்ளனர். நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதல் முறையாக பிரித்தானியாவில் ஏழைகளுக்கு உணவளிக்கும் சமையலறைகளை செஞ்சிலுவை சங்கம் நிறுவ முயல்கிறது. பொதுநல அமைப்புக்கள் ஏற்கனவே மே மாதம் அரை மில்லியன் பிரித்தானியர்கள் இப்பொழுது உணவு வழங்கலை நம்பியுள்ளனர் என்று தெரிவிப்பதுடன், இந்த எண்ணிக்கை குளிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளன. ஸ்பெயின் நிலைமையை பற்றி, தன் அறிக்கையில் கவனம் காட்டும் ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையாளரான Nils Muiznieks மற்றொரு மதிப்பீட்டில் ஐரோப்பாவில் குழந்தைகள் மீது சிக்கனக் கொள்கையின் அதிக பாதிப்பை எடுத்துக்காட்டியுள்ளார். ஸ்பெயினில் வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கையின் சதவிகிதம் 2011ல் 30.6% என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் இது கணிசமாக நிச்சயம் உயர்ந்திருக்க வேண்டும். ஆணையாளரின் அறிக்கை ஸ்பெயினில் கல்வி வரவு-செலவுத் திட்டம் 14.4 முதல் 21.4 சதவிகிதம் வரை கடந்த 3 ஆண்டுகளில் குறைக்கப்பட்டுள்ளன என்றும் இது கல்விகற்பதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாது ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறது. ஸ்பெனியினில் குழந்தைகள் பரிதாபநிலைமை தீவிரமாகிவிட்டது அறிக்கையின்படி, இதற்குக் காரணம் கட்டாயமாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுதான். 2007ல் சொத்துக்கள் சந்தைச் சரிவில் இருந்து, கிட்டத்தட்ட 400,000 கட்டாய வெளியேற்றங்கள் நடந்துள்ளன. இளைஞர் வேலையின்மை 60 வீதத்தை எட்டுகையில், வறிய குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில், குறிப்பாக குடிபெயர்ந்து வந்தவர்களின் குடும்பங்களில், சுகாதாரப் பாதுகாப்பு வெட்டப்பட்டுள்ள நிலையில், அறிக்கை ஸ்பெயின் அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் பற்றிய உடன்பாட்டை மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த இரு அறிக்கைகளும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் குற்றம் சார்ந்த கொள்கைகளை பேரழிவிற்கு உட்படுத்தும் குற்றச்சாட்டாகும். அதே நேரத்தில் இரு அறிக்கைகளும் இந்தப் பேரழிவிற்கு பொறுப்பான அதே அரசியல் சக்திகளிடம் மாற்றம்செய்ய முறையீடுகள் என்னும் திவாலான முன்னோக்கை பகிர்ந்து கொள்கின்றன. செஞ்சிலுவை சங்க அறிக்கை ஐரோப்பிய அரசியல் உயரடுக்கு “வேறுவிதமாகச் சிந்திக்க வேண்டும்” என்று இயலாமையுடன் கோருகின்றது. சில தவிர்க்க முடியாத பொருளாதாரப் பேரழிவின் துரதிருஷ்ட விளைவு என்பதற்கு முற்றிலும் மாறாக, கண்டத்தின் நிதிய மற்றும் அரசியல் உயரடுக்கு செல்வத்தை சமூகத்தின் கீழ் பகுதியில் இருந்து மேல்மட்டத்திற்கு மாற்றுவதற்கு ஐரோப்பாவின் சமூக நெருக்கடியை நனவுடன் சுரண்டிக்கொள்ளப்படுகின்றது. இந்தப் போக்கு மிகத் தெளிவாக ஒரு மூன்றாம் அறிக்கையால் சித்திரிக்கப்படுகிறது; இது ஸ்பெயினில் சமூக துருவப்படுத்தல் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப் பெரிய அளவு அதிகரித்துள்ளது என்று வெளிப்படுத்துகிறது. Caritas அறக்கட்டளை வழங்கிய அறிக்கை ஸ்பெயின் இப்பொழுது ஐரோப்பாவிலேயே மிக அதிக சமத்துவமின்மை இல்லாத சமூகம் என்று அறிவிக்கிறது. கருத்துப்படி “தீவிர வறுமையில்” வசிக்கும் ஸ்பெயின் மக்களின் எண்ணிக்கை (மூன்று மில்லியன்) 2008க்கும் 2012க்கும் இடையே இரு மடங்காகிவிட்டது. இதே காலத்தில் ஸ்பெயினில் மில்லியனர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. Credit Suisse Bank நடத்திய தனி ஆய்வு ஒன்று ஓராண்டில் 2011ல் மட்டும், ஸ்பெயினில் மில்லியனர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் 13% என உயர்ந்து இப்பொழுது மொத்தம் 402,000 பேர் உள்ளனர் என்பதைத் தெரிவிக்கிறது. பல மில்லியன் மக்களை ஐரோப்பாவில் வறுமையில் தள்ளியபின், நிதியப் பிரபுத்துவமும் எல்லா கட்சிகளிலும் உள்ள அதன் எடுபிடிகளும் இப்பொழுது வெளிப்படையாக ஐரோப்பாவில் இருந்து எப்படி சமூகநல அரசை அகற்றுவது என்பதை விவாதிக்கின்றனர். சமீபத்தில் புதிய பாராளுமன்ற ஆண்டை ஆரம்பிக்கும் தன் பேச்சில் நெதர்லாந்து மன்னர் சமூக ஜனநாயகவாதிகளினதும் தாராளவாதிகளினதும் கூட்டு டச்சு அரசாங்கம் “மரபார்ந்த சமூக நல அரசிற்குப் பதில் ஒரு பங்குபெறுவோர் சமூகத்தை கொண்டுவர” திட்டமிட்டுள்ளது என்று அறிவித்தார். நோயுற்றவர்கள், இயலாதவர்கள், வேலையற்றோர்கள், வறுமையில் வாடுபவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கும் அரசாங்க ஆதரவு என்பது “ஒரு பங்குபெறுவோர் சமூகத்தால்” பிரதியீடு செய்யப்படவேண்டும் என்றும் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் சமூகத்தின் பிற பகுதிகளின் முழுப் பகுதியின் சுமையையும் சுமக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வந்தர்களோ வரிவிதிப்பில் இருந்தும் பிற சமூகப் பொறுப்புகளிலும் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர். ஸ்பெயினின் புதிய பணக்காரர்கள் சார்பில் பேசிய கன்சர்வேடிவ் மாட்ரிட் நாளேடு ABC டச்சு அரசாங்கத்தின் ஆரம்ப முயற்சியை வரவேற்றுள்ளது. துக்கம் கொண்டாடுவோர் மலர்களை ஐரோப்பிய சமூகநல அரசாங்கத்தின் கல்லறையில் வைக்கும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ள ABC உடைய கருத்து கண்டத்தின் சமூகநல அமைப்பு முறையை “Bernie Madoff உடைய பிரமிட் திட்டத்திற்கு ஒப்பானது” என்றும், “இந்த ஏமாற்றை” இனி “பாரமரிப்பு செய்யும் ஒரு அரசாங்கத்தால்” தொடர்ச்சியாக வைத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளது. வறியவர்களுக்கு உணவு வழங்கல், (Soup kitchens) டிக்கன்ஸியன் உடைய பிரித்தானியாவை நினைவிற்கு கொண்டுவருவதும் மற்றும் சீனா மற்றும் நவ-காலனித்துவ நாடுகளுடன் ஒப்பிடத்தக்க தொழிலாளர்கள் சுரண்டப்படும் மட்டமும் ஏற்கனவே ஐரோப்பாவில் பல மில்லியன் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் யதார்த்த நிலையாகிவிட்டது. |
|