தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Lampedusa migrant deaths: The real face of the European Union லம்பேடுசா புலம் பெயர்ந்தோர் இறப்புக்கள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிஜ தோற்றம்
Peter Schwarz Use this version to print| Send feedback மத்தியதரைக்கடல் தீவான லம்பேடுசாவின் கடலோரப் பகுதியில் மூழ்கிப்போன நூற்றுக்கணக்கான அகதிகளின் கொடூரத் தோற்றங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றன. மாஸ்ட்ரிச்ட் உடன்டிக்கை கையெழுத்திட்டு 21 ஆண்டுகளுக்கு பின்னர், முதலாளித்துவத்தின் கீழ், ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கான திட்டம் என்பது அனைத்து வகையிலும் ஒரு தீய கனாவாக மாறிவிட்டது. வெளியில் இருந்து பார்க்கையில், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கோட்டையை ஒத்துள்ளது, இதன் சுவர்களுக்கு முன் ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். உள்ளே பார்க்கையில், இது ஒரு சிறையை ஒத்துள்ளது; வறுமை, சுரண்டல் மற்றும் அடக்குமுறை ஆகியவை விரைவில் பெருகுகின்றன, “ஒருங்கிணைப்பின்” நலன்கள் பிரத்தியேகமாக செல்வந்தர்கள், சக்திவாய்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. லம்பேடுசாவில் இறந்தவர்கள், இரு விதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவின் ஆதரவைக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் நடந்த ஏகாதிபத்திய போர்கள், சிரியாவில் உள்நாட்டுப்போருக்கு தூண்டுதல், மூலப் பொருட்களைக் கொள்ளையடித்தல் மற்றும் நவ-காலனித்துவ முறையில் மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளை சூறையாடல் பலருக்கும் தப்பிப் பிழைத்தல் ஒன்றுதான் வழி என்னும் சூழலை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான அகதிகளில் ஒரு சிறிய பிரிவினர்தான் தங்கள் வழியை ஐரோப்பாவிற்குள் காண்கின்றனர். அவர்களுடைய வழியைத் தடுப்பதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் FRONTEX எல்லை நிறுவனம் என்பதை ஸ்தாபித்தது; இதற்கு அதன் சொந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் ஆகியவை உள்ளன; இது டிரோன்களையும் பயன்படுத்துகிறது, நவீன கண்காணிப்புத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது, பல உறுப்பு நாடுகளிடம் இருந்து எந்த நேரத்திலும் எல்லைப் படைகளையும் பயன்படுத்த முடியும். FRONTEX ஐரோப்பாவின் நிலப்பகுதி எல்லைகளை பெரும் வேலிகளால் மூடிவிட்டது; இதையொட்டி அகதிகளுக்கு திறந்த ஒரே வழி, உயிரை அச்சுறுத்தும் மத்தியதரைக்கடல் பாதை ஒன்றுதான். இதன் நேரடி விளைவு, லம்பேடுசாவை ஒட்டி நிகழ்ந்த பேரழிவில் இதுவரை 364 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன மற்றும் சில நாட்களுக்குப்பின் வேறு ஒரு படகு கவிழ்ந்து 50 முதல் 200 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன ஆகியவையாகும். அகதிகள் அமைப்புக்களுடைய மதிப்பீடுகளின்படி, 1990ல் இருந்து மத்தியதரைக்கடல் மூலம் ஐரோப்பாவிற்குள் வர முயற்சிக்கும்போது 25,000 மக்கள் மூழ்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளை இரக்கமற்ற முறையில் நடத்தும் தன்மை, முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீது அது நடத்தும் தாக்குதல்களின் மிகத் தெளிவான வெளிப்பாடாகும். கடந்த சில ஆண்டுகள், மில்லியன் கணக்கானோரின் வாழ்வாதாரங்களை அழித்த இடைவிடா சிக்கன நடவடிக்கை ஆணைகளைத்தான் கண்டுள்ளது. ஜனநாயக உரிமைகள் முறையாக அழிக்கப்பட்டு, வெற்றுத்தனமானதாக ஆக்கப்பட்டுவிட்டன. இதற்கிடையில் 27 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளில் வேலையின்மையில் உள்ளனர். 120 மில்லியன் மக்கள் வறுமையில் உள்ளனர், 43 மில்லியன் பேருக்கு உண்பதற்கு போதுமான உணவு கிடைப்பதில்லை, 18 மில்லியன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் உணவு உதவியை நம்பியுள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின், கிரேக்கம் மற்றும் குரோஷியாவில் 25 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் வேலை இல்லாதுள்ளனர். இந்த வேலையில்லாதவர்கள் தொகுப்பு, மேலும் ஊதியங்களையும், பணி நிலைமைகளையும் குறைக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது. ஜேர்மனி போன்ற “செல்வந்த” நாடுகளில் கூட, ஊழியர்களில் கால்வாசிப்பேர் ஆபத்தான பணி நிலைகளைத்தான் எதிர்கொள்கின்றனர். கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், மணிநேர ஊதிய விகிதங்களான 2-3 யூரோக்களில் சுரண்டப்படுகிறனர். ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் CRIM அறிக்கைப்படி, ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 880,000 மக்கள், குற்றவாளிக் கும்பல்களால் விபச்சாரம் இன்னும் பல தீய செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு அடிமைகளாக உள்ளனர். சமூகத்தின் எதிர்முனையில் செல்வம் மகத்தான அளவில் வளர்கிறது. மந்தநிலை இருந்தபோதிலும், பங்குச் சந்தைகளின் பதிவு உயர்ந்த நிலையை எய்தியுள்ளன, மில்லியனர்களின் எண்ணிக்கை, அவர்களுடைய செல்வம், வருமானம் ஆகியவை பெருகுகின்றன. இப்போக்கிற்கு பொறுப்பானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்து அதன் கொள்கைகளை நிர்ணயிக்கும் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகும்—இது கன்சர்வேட்டிவ்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளில் இருந்து ஜேர்மனியின் இடது கட்சி மற்றும் பிற போலி இடது அமைப்புக்கள் வரை நீண்டுள்ளது. அவர்களில் சிலர் இப்பொழுது லம்பேடுசா பாதிப்பாளர்கள் குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்; ஆனால் அவர்கள்தான் இந்தப் பேரழிவுகளுக்கு பொறுப்பானவர்கள் ஆவர். இவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எதிர்ப்பை தீவிர வலதுசாரி கட்சிகளான பிரெஞ்சு தேசிய முன்னணி (FN) போன்றவற்றிற்கு விட்டு விடுகின்றனர்; அவை தேசியவாதம், தீவிர இனவெறி ஆகியவற்றை பரப்புகின்றன, தொழிலாள வர்க்கத்தை மிரட்ட பின்தங்கிய கூறுபாடுகளை தூண்டிவிடுகின்றன. 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இப்பொழுது கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்களுக்கு தாயகமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஒரு சில ஆயிரம் அகதிகளை இணைத்துக் கொள்ள முடியாது காற்றுப்புகாவகையில் மூடப்பட்டருப்பது என்பது அதன் வரலாற்றுத் திவால்தன்மையின் வெளிப்பாடாகும். இது இரண்டாம் உலகப்போர் வெடிப்பதற்கு முன்னர் உலகம் இருந்த நிலையைத்தான் மனத்திற்குக் கொண்டு வருகிறது. அந்த நேரத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி கூறினார்: “சிதைத்து கொண்டிருக்கும் முதலாளித்துவ உலகில் நெரிசல் உள்ளது. ஒரு நூறு மேலதிக அகதிகளை உள்ளே சேர்க்கும் பிரச்சினை அமெரிக்கா போன்ற உலக சக்திக்கு ஒரு பெரிய பிரச்சினை ஆகிறது. வான்வழிப்பயணம், தந்தி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி என்னும் சகாப்தத்தில், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் என்பது பாஸ்போர்ட்டுக்கள், விசாக்களால் தேக்கம் அடைகிறது. வெளிநாட்டு வர்த்தகத்தில் அழிவு மற்றும் உள்நாட்டு வணிகத்தில் வீழ்ச்சி, அதே நேரத்தில் பேரினவாதம் அரக்கத்தனமாக தீவிரமாவது மற்றும் குறிப்பாக யூத எதிர்ப்பு போக்கு தீவிரமாவதின் காலமாக உள்ளது”. பல தசாப்தங்களாக வலதுசாரி பிரச்சாரகர்கள் பேர்லின் சுவரின் பாதிப்பாளர்களைச் சுரண்டி, தோற்றுவிட்டதாகக் கூறப்படும் சோசலிசத்தின் தன்மைக்கு அவர்கள் சாட்சியம் என்றனர். உண்மையில் முன்னாள் ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசில் (GDR East Germany) இருந்தது சோசலிசம் அல்ல, ஸ்ராலினிச சர்வாதிகாரம்தான். அதே அளவுகோலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரயேகித்தால், தவிர்க்க முடியாத முடிவு இதுவும் ஆயிரம் மடங்கு அதிகமாக தோல்வி அடைந்துவிட்டது என்பதுதான். 28 ஆண்டுகள் பேர்லின் சுவர் இருந்தபோது இறந்தவர்களைவிட இன்னும் பல மடங்கு அதிகமான மக்கள், லம்பேடுசாவில் ஒரே நாளில் இறந்துள்ளனர். Centre for Historical Research இன் கருத்துப்படி, 98 கிழக்கு ஜேர்மனிய அகதிகள் பேர்லின் சுவரை மேலிருந்து அல்லது கீழிருந்து கடக்கும் முயற்சியில் இருந்து போயினர். மற்றும் ஒரு 30 பேர் கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியில் இருந்து தற்செயலாக கொல்லப்பட்டனர் அல்லது தப்பியோடும்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்; எட்டு எல்லைப்புற படையினர் கடமை நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். தொழிலாள வர்க்கம் மட்டுமே எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கத்துடன் மோதலுக்கு வருகிறது, இது ஒன்றுதான் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தேக்கநிலையில் இருந்து வெளியேற வழியைகாட்ட முடியும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதன் பிற்போக்குத்தன நிறுவனங்களுக்கும் எதிராக ஒரு சமரசத்திற்கு இடமில்லாத போராட்டத்தை முன்னெடுக்க ஐரோப்பா முழுவதையும் ஐக்கியப்படுத்த வேண்டும், தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவ போராட வேண்டும், அந்த அரசாங்கங்களால்தான் சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் மறுசீரமைக்க முடியும். அதன் இலக்கு, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவுதல் என இருக்க வேண்டும் மற்றும் அகதிகளுடைய பாதுகாப்பு, அவர்களுடைய உரிமைகளின் பாதுகாப்பு என்பது இந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்க முடியும். |
|
|