World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Behind the US government shutdown

அமெரிக்க அரசாங்க மூடலுக்குப் பின்னணியில்

Andre Damon
14 October 2013

Back to screen version

அமெரிக்க அரசாங்க மூடல் அதன் மூன்றாம் வாரத்தில் நுழைகையில், அது தற்போதைய நெருக்கடி மற்றும் கூட்டாட்சி செலுத்துமதியின்மை அச்சுறுத்தல் என்பவற்றை, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் அரசியல் வடிவமைப்பை தோற்றுவிக்க பயன்படுத்துகிறது என்பது பெருகிய முறையில் தெளிவாக உள்ளது.

இந்த வாடிக்கை பல முறை கையாளப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் தீவிர வலது கன்னை விவாதங்களுக்கான வடிவமைப்பை நிர்ணயிக்கும், ஜனநாயக கட்சியினர் வாய்ப்பைப் பயன்படுத்தி பெரும்பாலான அல்லது அனைத்துக் கோரிக்கைகளுக்கும் உடன்படுவர், எப்படியும் அவற்றுடன் பரந்த முறையில் அவர்கள் உடன்பாடு கொண்டவர்கள்தான். நெருக்கடியின் பயன், அரசியல் நடைமுறை இன்னும் வலதிற்கு நகர்வதும் சமூகநலச் செலவுகளில் பெரும் வெட்டுக்களை இன்னும் சுமத்துவதும்தான்.

கடந்த வாரம் குறிப்பாக அரசாங்கத்தை திரும்ப நடத்துவதற்காகவும், கடன் வரம்பை விரிவாக்குவதற்காகவும் நடந்த பேச்சுக்கள் மருத்துவப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றை குறைப்பதற்கு திரும்பின; வெள்ளை மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர்கள் தாங்கள் தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி, மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து காக்கும் முக்கிய சமூகநலத் திட்டங்களை அகற்ற முயன்று வருகின்றனர் என்பதை தெளிவாக்கியுள்ளனர்.

தற்போதைய வரவு-செலவுத் திட்ட விவாதம் குறித்த செய்தித் தகவல்களில் இருந்து ஒருவர் இச்செயற்பட்டியலுக்கு பரந்த பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது என்ற உணர்வை பெறுவர். ஆனால் உண்மையில் இருந்து இதைவிட முற்றிலும் வெகுதொலைவில் இருப்பது வேறெதுவுமில்லை. ஆனால் உண்மையான பொதுமக்கள் எதிர்ப்பு இரு கட்சிகளில் எதிலும் அரசியல் வெளிப்பாட்டை முற்றிலும் காண்பதில்லை.

தற்போதைய அரசாங்க மூடலின் பேரழிவு தரும் சமூக விளைவுகள் இதேபோல் உத்தியோகபூர்வ விவாதங்களால் பின்புலத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. மில்லியன் கணக்கான பெண்கள், மழலையர் மற்றும் குழந்தைகள் உடைய (WIC) உணவு உதவித் திட்டங்கள் பசியை அளிக்கும் என்ற அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள நிலையிலும், செய்தி ஊடகம் அதன் கவனத்தை முற்றிலும் நிதியச் சந்தைகளில் ஒருவேளை கடனைத் திருப்பிக் கொடுத்தலில் தாமதம் ஏற்படக்கூடியதின் பாதிப்பில்தான் குவிப்புக் காட்டுகிறது; அதே நேரத்தில் நூறாயிரக்கணக்கான அரசாங்கத் தொழிலாளர்கள் ஊதியமின்றியும் வேலையின்றியும் உள்ளனர்.

தற்போதைய விவாதங்கள், மன்றத்தில் இருந்தும் செனட்டில் இருந்தும் போட்டித் தன்மை உடைய திட்டங்களுக்கு அரசாங்கம் தற்காலிக நிதி அளித்தலிலும்; கடன் உச்சவரம்பை உயர்த்துவதிலும் மையம் கொண்டுள்ளன, இவற்றை ஒட்டி சமூகநலச் செலவு வெட்டுக்கள் மீதான விவாதங்கள் தொடரப்படும். செனட்டில் குடியரசுக் கட்சி சூசன் கோலின்ஸ் இயற்றிய திட்டம் ஒன்று, ஆறு மாதகால நிதி அளிக்கும் தீர்மானத்தை இயற்றும், அது வரவு செலவு திட்ட வெட்டுக்களை நிரந்தரமாகச் செய்துவிடும், கூடுதலாக மருத்துவக் கருவிகள் உற்பத்தியாளர்கள் மீதுள்ள வரியை அகற்றும். குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மன்றம் கடன் வரம்பு விரிவாக்குவதற்கு குறுகிய கால அளவை முன்வைக்கிறது.

பேச்சுக்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பு திசைக்கு திரும்புகையில் அமெரிக்க அரசாங்க மூடலின் பெயரளவுக் காரணமும் —“தேனீர் விருந்து” போன்ற குடியரசு எதிர்த்தரப்பு பிரிவுகள், ஒபாமா நிர்வாகத்தின் Affordable Care Act ஐ எதிர்ப்பது— பின்னணியில் மறைந்துவிட்டது. உண்மையில் ஒபாமா பாதுகாப்பு என்பது, இப்பொழுது பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் மேலாதிக்க பிரிவுகளின் ஆதரவைக் கொண்டுள்ளது; அவை சரியாகவே இதை சுகாதாரப் பாதுகாப்பு மக்களுக்கு குறைக்கப்படுவதையும் செலவுச்சுமை வணிகம் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து அகற்றப்படுவதற்கும் ஒரு படியாகக் கருதுகின்றன.

விவாதங்களின் ஒலிக்குறிப்பு ஒபாமாவால் செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் முன்வைக்கபட்டது; அங்கு அவர் குடியரசுக் கட்சியினரிடம் தான் “எதைப்பற்றியும் உரையாடல் நடத்தத் தயார்” என்றார், மேலும், “என்னுடைய வரவு-செலவுத் திட்டத்தில், அமெரிக்க உரிமை திட்டங்களை சீர்திருத்தும் கருத்துக்களை முன்வைத்துள்ளேன், இவை நீண்ட முறையில் நம் வரிவிதிப்பு முறையை சீர்திருத்தும், பெருநிறுவனங்களுக்கு விகிதங்களைக் குறைக்கும்” என்றும் சேர்த்துக் கொண்டார். இக்கருத்துக்கள் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் தலையங்கத்திற்கு எதிர்ப்புறம் புதன் அன்று குடியரசுக் கட்சியின் பார் ரியன், வரவு-செலவுத் திட்ட குழுவின் தலைவரால் வெளியிடப்பட்டது; அவர் மருத்துவப் பாதுகாப்பு மற்றும் கூட்டாட்சி ஓய்வூதியங்களில் வெட்டுக்களுக்கு தன் ஆதரவை அறிவித்தார்.

கூட்டாட்சி சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்களின் அடிப்படை அமெரிக்க அரசியலின் “மூன்றாம் இடத்தில் இருந்து” —பெரும்பாலான மக்களின் மகத்தான ஆதரவினால் இதைத் தொட முடியவில்லை— முழு அரசியல் கருவியின் முக்கிய இலக்காக மாறிவிட்டது. இவற்றை ஒன்றாக அகற்றும் பல முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை. இரு கட்சிகளும் ஓர் உடன்பாட்டிற்கு அருகே நெருக்கமாக 2011 கடன் வரம்பு நெருக்கடியின்போது வந்தன; அப்பொழுது ஒபாமா டிரில்லியன் டாலர் வெட்டுக்களை, அமெரிக்க உரிமைத் திட்டங்கள் மீது 2.8 டிரில்லியன் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் தொகுப்பின் ஒரு பகுதியாக முன்வைத்தார்.

ஆனால் 2011 நெருக்கடி, உரிமம் அற்ற செலவுகளில் அதிகப்படியான வெட்டுத் தொகுப்புக்களை கொண்டுவந்ததின் மூலம் தீர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்றும் ஒரு 1.2 டிரில்லியன் டாலர்கள் நேரடியாக எடுத்துக் கொள்ளும் வெட்டுக்கள், 2013ல் தொடக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கல்வி, வீடுகள் உதவி, ஏழைகளுக்கு நலன் அளிக்கும் திட்டங்களில் இருந்து பல பில்லியன் டாலர்களைக் குறைத்தது. இப்பொழுது சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பின் மீதான தாக்குதல் புதுப்பிக்கப்பட்டுவிட்டது.

தற்பொழுது நடைபெறும் அரசாங்க மூடல் மற்றும் இரு கட்சிகளின் தந்திர உத்திகள், பெரும்பாலான மக்கள் அரசியல் நடைமுறையில் இருந்து அன்னியப்படும் போக்கை அடைவதற்குத்தான் வழிவகுக்கின்றன. குடியரசுக் கட்சி மிகவும் உடனடியாக இடர் உற்றுள்ளது; அதற்கான ஆதரவு 1992க்குப்  பின் இல்லாத அளவு குறைந்த தன்மைக்கு சென்றுள்ளன என Gallup கருத்துக் கணிப்பு நிறுவனம் கூறுகிறது.

ஆனால் இது, முழு அரச எந்திரத்தின் மீதும் உள்ள விரோதப் போக்கின் ஒரு வெளிப்பாடு மட்டுமே. ஒரு அசோசியேட்டட் பிரஸ் - GfK கருத்துக் கணிப்பு காங்கிரசிற்கான ஒப்புதல் 5% விகிதம்தான் உள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது; 83% ஒப்புதல் கொடுக்கவில்லை. எந்த ஜனநாயக முறையிலும் இத்தகைய எண்ணிக்கை ஆட்சியை இயலாத தாக்கிவிடும். ஏனெனில் இது மக்கள் நம்பிக்கை முற்றிலும் இல்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆனால் அமெரிக்க அரசாங்கமோ பெருநிறுவனம் மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின், நிதியப் பிரபுத்துவத்திற்காக, நிதியப் பிரபுத்துவம் நடத்தும் அரசாங்கம் ஆகும்.

பலமுறையும் மருத்துவப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு “பணம் இல்லை” என்னும் கூற்று கூறப்படுகிறது; ஆயினும்கூட கூட்டாட்சி அரசாங்கம் டிரில்லியன் கணக்கான டாலர்களை 2008 சரிவின் போது வங்கிகளுக்கு பிணை எடுக்க அளித்தது. கூட்டாட்சி மத்திய வங்கி மாதம் ஒன்றிற்கு 85 பில்லியன் டாலர்களை சந்தைகளுக்கு அமெரிக்கக் கருவூலப்  பத்திரங்களையும் அடைமான ஆதரவுடைய பாதுகாப்புப் பத்திரங்களையும் வாங்குவதற்கு கொடுக்கிறது.

உண்மையில் புதிய சுற்றுத் தாக்குதல்களுக்கான தயாரிப்புக்கள், ஒபாமா ஜானட் யெல்லனை கூட்டாட்சி மத்திய வங்கியின் தலைவராக நியமித்த அதே வாரத்தில் தொடங்கியது; இவர் லாரன்ஸ் சம்மர்ஸ் என்னும் வங்கிகளின் வெற்றிகரமான, உண்மையான பிரதிநிதிக்கு மாற்றீடு ஆவார்; ஆனால் சம்மர்ஸ் வோல் ஸ் ரீட்டால் ஏற்கப்படவில்லை, ஏனெனில் அவர் அரசாங்கத்தின் பணம் அச்சடிக்கும் செயல்களின் நீண்டக்கால உறுதிப்பாடு குறித்து சில வினாக்களை எழுப்பினார். என்ன விலைகொடுத்தாவது பெரும் செல்வந்தர்களுக்கு கொடுக்கப்படும் நிதிகள் தொடரப்பட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு கௌரவமான சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்கள் அளிக்கப் பணம் இல்லை என்னும் கூற்று முற்றிலும் மோசடித்தனமானது ஆகும். ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அவை சிறிய நிதியத் தன்னலக்காரர்கள் குழுவின் ஏகபோக உரிமையில் உள்ளன; அவர்கள்தான் அமெரிக்காவின் அரசியல் வாழ்வை ஆதிக்கம் செலுத்துபவர்கள்.

சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பை அகற்றும் உந்துதல், மீண்டும் உழைக்கும் மக்களின் சமூக உரிமைகள் முதலாளித்துவ அமைப்புமுறையுடன் இயைந்திருக்க முடியாது என்பதை நிரூபணம் செய்கிறது. முந்தைய காலத்தில் அடையப்பட்ட அனைத்து சமூக சீர்திருத்தங்களும் அகற்றப்படுகின்றன; அதே நேரத்தில் பெரும் செல்வக் கொழிப்புடையவர்கள் இன்னும் அதிர்ச்சி தரும் அளவிற்கு செல்வத்தைக் குவிக்கின்றனர்.

சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற சமூக உரிமைகளைக் காக்கும் ஒரே வழி, சோசலிச வேலைத் திட்டத்தில் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கத்தை கட்டமைப்பதுதான். பெரிய அளவிலான தொழில்களும் நிதியங்களும் உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின்  தேசியமயமாக்கப்பட வேண்டும். முதலாளித்துவ சந்தை முறையின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல், சமூகத் தேவையின் அடிபடையில் சமுதாயம் மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும்.