World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French austerity budget raises taxes on workers பிரெஞ்சு சிக்கன வரவு-செலவுத் திட்டம் தொழிலாளர்கள் மீதான வரிகளை அதிகரிக்கிறதுBy
Olivier Laurent ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம் தயாரித்துள்ள பிரெஞ்சு வரவு-செலவுத் திட்டம், தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல் ஆகும். இது வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை 4.1%ல் இருந்து 3.6% ஆக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைக்க திட்டமிட்டுள்ளது; இது அரசாங்க செலவுகளை 15 பில்லியன் யூரோக்களால் குறைத்தல் மற்றும் தொழிலாளர் இல்லங்களுக்கு வரிகளை உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும். இத்திட்டமிடப்பட்ட வெட்டுக்கள் பொதுத்துறை தொழிலாளர்களை பாதிக்கும் (2,000 ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக புதிய நியமனங்கள் கிடையாது, ஊதியங்கள் தொடர்ந்து நான்காம் ஆண்டாக தேக்க நிலையில் வைக்கப்படும்); இதைத்தவிர உள்ளூராட்சிகளுக்கு உதவிநிதி வெட்டுக்களும் பல பொதுச்சேவைகளை பாதிக்கும். 15 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களில், 2.9 பில்லியன் யூரோக்கள் சுகாதார நலன்களில் உட்பட 6 பில்லியன் யூரோக்கள் சமூகப் பாதுகாப்பு பிரிவில் இருக்கும். சுகாதார நலன்களிலான தாக்குதல்கள், மருத்துவமனைகளில் இன்னும் அதிக “உற்பத்தித் திறன் ஆதாயங்களால்” அடையப்படும்; ஏற்கனவே அங்கு தேவையான பொருட்கள் விநியோகம் மற்றும் ஊழியர்கள் போதவில்லை என்ற நிலைதான் உள்ளது. மேலும் ஒரு மூன்று பில்லியன் யூரோக்கள் அரசாங்க வருவாய், வரிகள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன; இவை பெரும்பாலும் குடும்பங்களை தாக்கும், மிகவும் குறைந்த அளவில்தான் பெரிய நிறுவனங்களை பாதிக்கும். விற்பனை வரியில் மதிப்புக்கூட்டுவரி அதிகரிப்பு என்பது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். இதிலிருந்து எதிர்பார்க்கப்படும் 5 பில்லியன் யூரோக்கள் வருவாய் “வேலைப் போட்டித்தன்மைக்கு வரி அனுகூலம்” (CICE) என்ற தலைப்பில் உட்செலுத்தப்படும், இது முதலாளிகளுக்கு ஒரு வரிச் சலுகையாகும்; அது அவர்களை புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வரிகளில் இருந்து விடுவிக்கும். இப்படி பெருநிறுவன கணக்குகளுக்கு செய்த வெகுமதி என்பது 10 பில்லியன் யூரோக்கள் ஆகும், இதுவும் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றிருப்பவர்கள் மீது வரிவிதிப்பை அதிகரிப்பதின் மூலம் நிதியீட்டப்படுகிறது. நிதி மந்திரி பியர் மொஸ்கோவிச்சி இக்கொள்கைளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், 30 ஆண்டுகளாக தடையற்ற சந்தை அரசியலில் கூறப்படும் கைமருந்துகளை மீண்டும் மேற்கோள்காட்டி: “நாம் பெருநிறுவன வரிகளை சீர்திருத்த விரும்புகிறோம், இவை உற்பத்திக் காரணிகளை நெரிக்கின்றன” எனக் கூறியுள்ளார். “வரி இடைநிறுத்தம்” என அழைக்கப்படும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஒரு மோசடி ஆகும், இதன் நேர்மையற்ற தன்மை மறைக்கப்பட முடியவில்லை: மொத்தத்தில் கிட்டத்தட்ட 12 பில்லியன் யூரோக்கள் தொழிலாளர்களிடம் இருந்து வரியாகப் பெறப்படும், கிட்டத்தட்ட அதே அளவு நிறுவனங்களுக்கு வெகுமதியாக வழங்கப்படும், குறிப்பாக பெருநிறுவனங்களுக்கு. 2015க்கு கூறப்பட்டுள்ள நோக்கம், பிரான்சின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%க்குள் என்ற வரம்பிற்குள் கொண்டு வருவதாகும். ஏற்கனவே CISE, மற்றொரு 10 பில்லியன் யூரோக்கள் வரிச்சலுகைகளை அந்த ஆண்டு நிறுவனங்களுக்கு அளிக்கவேண்டும் என்று கணித்துள்ளது. அரசாங்கம் இந்த வரவு-செலவுத் திட்டத்தை, “பொருளாதார வளர்ச்சி” மற்றும் "வேலைவாய்ப்பு மற்றும் வாங்கும் சக்தி" ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது என்று காட்ட முயற்சிக்கிறது. உண்மையில், தொடர்ந்த ஐந்து ஆண்டு சிக்கன நடவடிக்கைகளுக்கு பின், இத்தகைய அளவிலான பெரிய வெட்டுக்கள், தற்போதைய ஓய்வூதிய வெட்டுக்களில் சேர்க்கப்படுவது, மேலும் பெரும்பாலான தொழிலாளர்களின் வாங்குசக்தியை குறைக்க வைப்பதோடு, பொருளாதார நிலைமையையும் மோசமாக்கும். (பார்க்க “Forecasting more recession and unemployment, the EU demands more austerity”) 2014 பிரெஞ்சு வரவு-செலவுத் திட்டம், ஐரோப்பிய ஆணையத்தின் கடந்த குளிர்கால பொருளாதார அறிக்கையில் வந்துள்ள அழைப்புக்களான தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் தாக்குதல் என்பதுடன் இணைந்து நிற்கிறது. அந்த நேரத்தைய விவாதங்கள், பிரான்சின் சிக்கனக் கொள்கைகள் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல், அதாவது கிரேக்கம், ஸ்பெயினை போல், கடுமையாக இல்லை என்பதால் “பிரச்சினை தரும் குழந்தை” என விளக்கின. இந்நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளின் கடுமையான தன்மை பொருளாதார வாழ்வை முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, பொருளாதாரத்தை சரிய வைத்து, பெரும்பாலான இளம் தொழிலாள்களை வேலையின்மையில் தள்ளியுள்ளது. பெப்ருவரி மாதம் ஆஸ்திரிய நிதி அமைச்சரகத்தில் ஒரு உயர்மட்ட ஆட்சித்துறை அதிகாரி விளக்கியிருந்தார்: “பெரும் பொருளாதாரக் காரணங்கள் [குறைந்த சிக்கனத்திற்கு] இருக்கலாம், ஆனால் இது நம் நம்பகத்தன்மைக்கு பெரும் சேதம் விளைவிக்கும். நாம் மீண்டும் மிருதுவானவர்கள் என்று கருதப்படும் இடரைக் கொண்டுள்ளோம்.” அதாவது ஐரோப்பிய நாடுகள், அவற்றின் பொருளாதாரத்தில் பேரழிவு பாதிப்பு ஏற்பட்டாலும், முறையாக சர்வதேச நிதிய மூலதனத்தின் ஆணைகளுக்கு கீழ்ப்படியவேண்டும். நிதியப் பிரபுத்துவத்தின் பார்வையில், ஜனாதிபதி ஹாலண்டின் வரவு-செலவுத் திட்டம் இன்னும் போதுமானதைச் செய்யவில்லை என கருதப்படுகிறது. Le Monde கட்டுரை ஒன்று விளக்கியதுபோல், அரசாங்கம் பொதுநலச் செலவுகளை குறைப்பதை வலியுறுத்தினால், “சிக்கன நடவடிக்கை முயற்சிகளில் 80%க்கும் மேலானவை பொதுநலச் செலவுகளில் விழும்.” வோல் ஸ்ட்ரீட்டின் கருத்துக்களை வெளிப்படுத்திய நியூ யோர்க் டைம்ஸ், உடனடியாக வெட்டுக்களை “சுமாரானவை, நாட்டிற்குத் தேவை என்று பல பொருளாதார வல்லுனர்கள் கூறும் தீவிரமான மாற்றம் அல்ல” என்று விமர்சித்துள்ளது. “இப்போக்கு சரியான திசையில்தான் செல்கிறது... ஆனால் நிலைமை அது தோன்றுவது போல் ஊக்கம் தருவதாக இல்லை” என்று எகானமிஸ்ட் எழுதியது; மேலும் பிரான்ஸ் மிக அதிக பொதுநலச் செலவை ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டுள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95%க்கும் மேல் மொத்தக் கடனைக் கொண்டுள்ளது என்று புகாரையும் கூறியுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தில் வோல் ஸ்ட்ரீட் விரும்பும் அளவுக்கு சமூகநல செலவினத்தில் தாக்குதல் செய்யமுடியாதுள்ளதென்றால், Hollande தனது அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் வெடிப்புக்கு அஞ்சுவதாலாகும். 23 சதவிகிதத்தில் உள்ள ஹாலண்டின் ஒப்புதல் மதிப்பீடு, ஒரு பிரெஞ்சு ஜனாதிபதியின் வரலாற்றிலேயே மோசமானது; இவரோ தன் பதவிக்காலத்தில் ஓராண்டிற்கு சற்று அதிகமாகத்தான் இருக்கிறார். சிரியாவில் இவருடைய போர் உந்துதலுக்கு பரந்த எதிர்ப்பு உள்ளது. மேலும் நேரடியான தாக்குதல்கள் பரந்த மக்கள் இயக்கத்தை அதற்கு எதிராக தூண்டிவிடும். ஹாலண்ட் இன்னும் தந்திர உத்திகள் செய்ய முடிகிறது என்றால், அதற்கு “இடது” கட்சிகள் ஏதும் அவரை விமர்சிப்பதுமில்லை, அவர்கள் ஆதரவளிக்கும் அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும் இல்லை. புதிய முதலாளித்துவ எதிர்புக் கட்சியின் (NPA) உடைய Hebdo Anticapitaliste ஏடு “வரவு-செலவுத் திட்டம் 2014: தொழிலாளர்களிடம் இருந்து எடுத்து நிறுவனங்களுக்கு அளித்தல்” என்ற தன் அக்டோபர் 2 கட்டுரையில், அவருடைய இந்த “வர்க்கக் கொள்கையை” விளக்கி, தன் ஆதரவாளர்களை “தெளிவாக இது எதிர்க்கப்பட வேண்டும், ஒற்றுமையுடன் செயல்பட்டு, மோதலைக்கண்டு அச்சப்படாமல்.” என எழுதியுள்ளது (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது) இக் கட்சிக்கு “ஒற்றுமையுடன்” என்பது, இடது முன்னணியுடன் கூட்டு என்ற பொருள் ஆகும்; இதில் சோசலிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். பிந்தையது, NPA ஐ போலவே ஹாலண்ட் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையற்ற தீர்மானம் எதிலும் வாக்களிக்காது என்றும் உறுதியளித்தது. |
|