தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The significance of the rally to defend the Detroit Institute of Arts டெட்ராயிட் கலை நிறுவனத்தைப் பாதுகாக்க நடந்த பேரணியின் முக்கியத்துவம்
Joseph Kishore and David North Use this version to print| Send feedback டெட்ராயிட் கலை நிறுவனத்தில் அருங்காட்சிப் படைப்புகளை விற்பனை செய்வதை எதிர்த்து வெள்ளியன்று நடைபெற்ற போராட்டம் தேசிய மற்றும் சர்வதேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்தியில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். ட்ரொட்ஸ்கிச சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு ஆகியவற்றின் பதாகையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டு நடந்த இந்தப் பேரணியானது, டெட்ராயிட்டின் திவால் நிலைக்கும் டெட்ராயிட்டின் அவசரநிலை மேலாளரான கெவின் ஓரின் கொள்கைகளுக்கும் எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் அரசியல் வெளிப்பாடாக அமைந்தது. மாணவர்கள், மாநகரத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஓவியர்கள், மற்றும் பலவந்தமாக வெளியேற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் வாடகைதாரர்கள் என டெட்ராயிட் தொழிலாள வர்க்கத்தின் பல முக்கியமான தரப்புகளில் இருந்துமான சுமார் 500 தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலாச்சாரம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அத்தனை உரிமைகளின் மீதான தாக்குதலையும் கண்டிக்கும் பொருட்டு ஒன்றுதிரண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உற்சாகமும் நம்பிக்கையும் மிகுந்திருந்தது. பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பின் அத்தனை வடிவங்களையும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்கள் ஒடுக்கியும், காட்டிக் கொடுத்தும் வந்திருக்கும் நிலையில், இந்தப் பேரணியானது பங்குபெற்ற பலருக்கும் சமூகப் போராட்டத்தில் பங்குபெறுவதற்கான முதல் வாய்ப்பை வழங்கியது. உரை நிகழ்த்தியவர்கள் குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினரை தாக்கிப் பேசிய போதும், முதலாளித்துவ இலாப அமைப்புமுறையைக் கண்டனம் செய்தபோதும், சோசலிசத்துக்கான தேவையை வலியுறுத்திய போதும், அத்துடன் சர்வதேசத் தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கு அழைப்புவிடுத்தபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரவாரக்குரல் எழுப்பினர். ஆர்ப்பாட்டக் கூட்டம், கணிசமாக இருந்தது என்ற உண்மையை உள்ளூர் ஊடகங்களும் கூட ஒப்புக் கொண்டன. வெள்ளி வரை, டெட்ராயிட் திவால்நிலையும் அவசரநிலை மேலாளரின் நடவடிக்கைகளும் எந்த செயலூக்கமான எதிர்ப்பும் இன்றி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓரை பிரதிநிதியாகக் கொண்டிருக்கும் நிதி முதலைகள், ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பை பிய்த்தெறிவதிலும் மாநகரச் சொத்துகளை கரைப்பதிலும் சுதந்திரமாகச் செயல்பட முடிந்திருந்தது. நகராட்சியின் கடனுரிமைதாரர்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் பொருட்டு, DIA கலைக்கூடப் படைப்புகளின் பெரும்பகுதியை விற்பனை செய்வதற்கென “குறித்து மற்றும் பிரித்து” வைத்திருப்பதாகவும், அதற்கு விலை நிர்ணயம் செய்ய கிறிஸ்டி ஏல நிறுவனம் (Christie’s auction house) பணியமர்த்தப்பட உள்ளது என்றும் சென்ற வாரத்தில் தான் ஓர் தெரிவித்திருந்தார். அவசர நிலை மேலாளரின் திணிப்புகளுக்கு, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவும் உள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிச்சிகன் ஆளுநர் ரிக் சிண்டரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கருவூலப் பொறுப்பாளர் ஆண்டி டில்லியனும் தான் ஓரை நியமனம் செய்து அவருக்கு டெட்ராயிட்டின் எதிர்காலத்தின் மீதான சர்வாதிகாரங்களையும் அளித்தனர். நகரக் கவுன்சில், மேயர் மற்றும் ஒட்டுமொத்த ஊழலடைந்த உள்ளூர் அரசாங்கமுமே உடனடியாக இதை ஓசையின்றி ஏற்றுக் கொண்டனர். தங்களது சொந்த சலுகைகளும் வசதிகளும் காப்பாற்றப்படும் வரை, தமது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க எதிர்ப்பில்லாமல் உடன்பட்டனர். டெட்ராயிட்டில் நடந்து கொண்டிருப்பதை நாடெங்கிலும் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கான முன்மாதிரியாக்க நினைக்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவும் ஓருக்குக் கிட்டியிருக்கிறது. ஓரின் நடவடிக்கைகளுக்கு தமது ஆசிகளை வழங்கும் பொருட்டு நிர்வாகத்தின் அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்னராகத்தான் நகருக்கு வந்து சென்றிருந்தனர். நகருக்கென கிடைக்கச் செய்யப்பட்டிருக்கும் அடையாள நிதிகளின் பெரும்பகுதி, கட்டிடங்களை அழிப்பதிலும் கூடுதல் போலிசாரை பணியமர்த்துவதிலும் டெட்ராயிட்டின் ஆளும் வர்க்கத்திற்கு உதவும் பொருட்டு ரொக்கமாய் வழங்கப்பட்டதாய் இருக்கிறது. இந்த பிற்போக்குத்தனமான நிகழ்முறையில் தொழிற்சங்கங்கள் செயலூக்கத்துடன் ஆதரவளித்துக் கொண்டும் பங்குபெற்றுக் கொண்டும் இருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதின் மூலமாக இலாபமடைகின்ற பணத்தைக் குறிக்கோளாக கொண்டு செயல்படும் அமைப்புகள் போல செயல்படும் இந்த தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், பெருநிறுவன அமெரிக்காவின் தோற்றத்தையும் நலன்களையுமே பகிர்ந்து கொள்கின்றனர். தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் இந்த அமைப்புகள் தொழிலாளர்களை நோக்கி வெளிப்படுத்தும் அலட்சியத்தை அரசாங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் தலைவர் ஒருவர் தன் கருத்தின் மூலம் சுருங்க வெளிப்படுத்தினார். “நீங்கள் கலையைச் சாப்பிட முடியாது” என்று கூறி DIA கலைக்கூடப் பொருட்கள் விற்பனையை அந்தத் தலைவர் நியாயப்படுத்தினார். DIA இன் மகத்தான காட்சிப்படைப்புகள் விற்பனை செய்ப்படுவதில் வரும் பணம் தமக்கும் கொஞ்சம் கிடைக்க வேண்டுமே என்பதுதான் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரே கவலையாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் பல வண்ணமான ஆர்ப்பாட்ட அமைப்புகளில் இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் எதிரிகள், எமது அமைப்பினை “குறுங்குழுவாதிகள்” எனக் கூறி கண்டிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்கங்களும் ஜனநாயகக் கட்சியும் செய்வதற்கு மாறாக தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுவதை அவர்கள் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். இந்த அவதூறுக்கான அருமையான மறுப்பாக வெள்ளியன்றான பேரணி அமைந்திருந்தது. தொழிலாள வர்க்கத்தை அதன் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கும் திறன் படைத்த ஒரே அமைப்பாக சோசலிச சமத்துவக் கட்சி தன்னை நிரூபித்துக் கொண்டது என்பது மட்டுமல்ல. ஆரம்ப வடிவத்தில் என்றாலும், தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இயக்கமும் மார்க்சிச கோட்பாடுகளுக்கான போராட்டமும் மற்றும் சோசலிச நனவுக்கான போராட்டமும் ஒரு புள்ளியில் சந்திப்பதையும் இந்தப் பேரணி வெளிப்படுத்திக் காட்டியது. டெட்ராயிட் கலை நிறுவனத்தை பாதுகாப்பதில் சோசலிச சமத்துவக் கட்சி ஆற்றிய பாத்திரம் குறித்து இன்னுமொரு புள்ளியையும் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு “உயரடுக்கு” ஸ்தாபனத்தின் தலைவிதி குறித்து சோசலிச சமத்துவக் கட்சி அலட்டிக் கொள்ள காரணம் என்ன? பொதுவாக ஓவியம் மற்றும் கலையின் எதிர்காலத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் பிரதான நலன்களாகச் சொல்லக் கூடிய “ரொட்டி மற்றும் வெண்ணெய்” பிரச்சினைகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று சிலர் நம்மைக் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகள் எல்லாம் எத்தனை நேர்மையானதானதாகவும் நல்நோக்கத்துடனானதாகவும் இருந்தபோதும், சமகால முதலாளித்துவ சமூகத்தில் அத்தியாவசியமான புரட்சிகர-முற்போக்கு சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் பாத்திரத்தைக் குறைமதிப்பீடு செய்வதையும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் முக்கியத்துவம் மீதான பற்றாக்குறையான புரிதலையுமே அவை பிரதிபலிக்கின்றன. கலை மற்றும் கலாச்சாரத்தின் இன்றியமையாத முக்கியத்துவம் குறித்து நனவுடன் இருக்கக் கூடிய ஒரு தொழிலாள வர்க்கம் ஊதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கான ஒரு தீர்மானகரமான போராட்டத்தை நடத்துவதில் சற்றும் சளைக்காத திறம்படைத்ததாக நிரூபணமாகும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்க முடியுமா? கலாச்சாரம் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான ஒன்று என்பதையும் சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமும் கலாச்சாரத்திற்கு அவசியமான ஒன்று என்பதையும் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் வெகுநாட்களாகவே வலியுறுத்தி வந்திருக்கின்றன. கலை தானாகவே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. நவீன கால பிரபுத்துவம் நடத்தும் கொள்ளைச் சூறையாடலுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் தலையீடு செய்வதில் தான், மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரியம் உள்ளிட்ட ஒட்டுமொத்த முற்போக்கு பாரம்பரியத்தின் எதிர்காலமும் தங்கியிருக்கிறது. ஒரு நகரத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தினால் அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் சிக்கலான மொத்த அரசியல் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதை சோசலிச சமத்துவக் கட்சி நன்கு அறிந்து வைத்திருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் தான் பங்கேற்றனர், ஆயிரக்கணக்கில் அல்ல தான். ஆனாலும் அமெரிக்காவின் அரசியல் சூழலுக்கு [முதலாளித்துவ இருகட்சி அமைப்புமுறையில் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கை ஏகபோகத் தன்மைக்குட்படுத்தப்பட்டிருக்கும் நிலை, ஊடகங்களின் தாட்சண்யமற்ற கம்யூனிசவிரோதம் மற்றும் எதிர் கருத்துகளை அவை ஒடுக்கும் நிலை, கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத மட்டத்தில் இராணுவவாதத்தின் மீதும் அத்துடன் அரசியல் மற்றும் கலாச்சாரப் பிற்போக்குத்தனத்தின் ஒவ்வொரு வடிவத்தின் மீதும் இடைவிடாத துதிபாடல், முட்டாள்தனமான மற்றும் பயனற்ற நடுத்தர-வர்க்க அடையாள அரசியல் மற்றும் வாழ்க்கைப் பாணி அரசியலை ஊக்குவித்தல், மற்றும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் என்ற ஒன்று இருப்பதையே திட்டமிட்டு மறுத்தல்] பரிச்சயமான எவரும், DIA ஐ பாதுகாத்து அக்டோபர் 4 அன்று நடைபெற்ற பேரணி மிக முக்கியமானது என்பதையும் அது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதையும் ஏற்றுக் கொள்வார்கள். அமெரிக்க மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு வரலாற்று மையமாக இருந்து வந்திருக்கக் கூடிய டெட்ராயிட்டில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக சோசலிசப் பதாகைகளையும் அட்டைகளையும் தாங்கி பேரணியாக வலம் வந்துள்ளனர். தொழிலாள வர்க்கத்தை அரசியல் வாழ்வில் இருந்தும் சமூகப் போராட்டங்களில் இருந்தும் பல தசாப்தங்களாக ஒதுக்கி வைத்து வந்தநிலை நொருங்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக தீவிரமயப்படுவதன் முக்கியமானதொரு முன்கணிப்பாகும். இந்த தீவிரமயப்படல் அபிவிருத்தியடைந்து பெருகிய அளவில் தனித்துவமான முதலாளித்துவ விரோத மற்றும் சோசலிசத் தன்மையைப் பெறும்போது, இது அமெரிக்காவில் அரசியல் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்பது மட்டுமல்ல. ஒரு புரட்சிகர சக்தியாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் எழுவதென்பது ஒட்டுமொத்த உலகமெங்கும் அதிர்வலைகளை தோற்றுவிக்கும். சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்துடன் உடன்பட்டு சோசலிசத்துக்கான போராட்டத்தில் செயலூக்கத்துடன் பங்குபெற விரும்பும் அனைவரும் இந்த இயக்கத்தில் இணையும் முடிவை மேற்கொள்ள வேண்டும். |
|
|