World Socialist Web Site www.wsws.org |
Hundreds rally to oppose sale of art at the Detroit Institute of Arts டெட்ராயிட் கலை நிறுவனக் கலைப் பொருட்களை விற்பதை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் பேரணி
By Shannon Jones டெட்ராயிட்டின் வசதிபடைத்த கடன்பத்திர உரிமைதாரர்களின் கடன்களை திருப்பிச் செலுத்தும் பொருட்டு நகரின் உட்புறத்தில் அமைந்திருக்கும் டெட்ராயிட் கலை நிறுவனத்தின் (DIA) கலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான திட்டங்களைக் கண்டிக்கும் விதமாக நூற்றுக்கணக்கிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் வெள்ளியன்று இக்கலைநிறுவனத்தின் முன்னே திரண்டனர். வங்கிகளின் ஏலத்தை மேற்கொள்வதற்கென நியமனம் செய்யப்பட்டிருக்கும் ஒரு நிதி சர்வாதிகாரியான, அவசரநிலை மேலாளர் கெவின் ஓரின் திட்டங்களை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தொழிலாளர்களின்’ ஓய்வூதியங்களையும் சுகாதாரப் பராமரிப்புச் செலவினங்களையும் வெட்டுவதற்கும் நகரின் மற்ற சொத்துகளை விற்பதற்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் கெவின் ஓர், அதேநேரத்தில் கலை “வருவாய் ஈட்டித்தருவதாக” இருக்க வேண்டும் என்று கோருகிறார். வேய்ன் மாநில பல்கலைக்கழகம் மற்றும் பகுதியின் பிற பள்ளிகளில் இருந்தான மாணவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், ஓவியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட மக்கள் தொகையின் பரவலான பிரிவுகள் கலந்து கொண்டனர். கிரிஸ்வோல்ட் வாடகைதாரர் கூட்டமைப்பில் இருந்தான பிரதிநிதிகள் குழு ஒன்றும் கலந்து கொண்டது. ஓரின், மேற்பார்வையில் நடக்கும் “மறுகட்டமைப்பு” திட்டத்தின் பகுதியாக டெட்ராயிட்டின் உட்பகுதிகளில் இருந்து வாடகைதாரர்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்துடன் கலாச்சார பாதுகாப்புப் போராட்டம் பிணைக்கப்பட வேண்டும் என அக்குழு வலியுறுத்தியது. டெட்ராயிட் கலை நிறுவனத்தின் கலைப் பொருட்கள் அனைத்தும் “விற்பனைக்காய் வைக்கப்பட வேண்டும்” என்று இந்த வாரத்தில் மீண்டும் வலியுறுத்திய ஓர், அருங்காட்சியகத்தின் 35,000 காட்சிப் பொருட்கள் விற்பனைக்கான சாத்தியமானவை என்று “குறிக்கப்பட்டு பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன” என்று அறிவித்தார். மகத்தான கலைப்படைப்புகளை விலை நிர்ணயம் செய்ய கிறிஸ்டி ஏல இல்லத்தை (Christie’s Auction House)அவர் பணியமர்த்தியிருக்கிறார். ஆர்ப்பாட்டக்காரர்கள் “கடனை இரத்துசெய், பணக்காரர்களுக்கு வரி விதி” மற்றும் “கலை மக்களுக்கானது, பணக்காரர்களுக்கானது அல்ல” என்பது போன்ற முழக்கங்கள் கொண்ட பதாகைகளை தாங்கியிருந்தனர். “பெருநிறுவன வல்லூறுகளே, எங்கள் கலையின் மேல் கை வைக்காதே!” மற்றும் “கலை அருங்காட்சிப் பொருட்கள் விற்பனைக்கல்ல, DIA மீது கைவைக்காதே” போன்ற முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன. ”DIA இல் இருந்து வெளியேறு”, “பணத்தைக் காட்டாதே, மொனேயை காட்டு” போன்ற கையால் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட அட்டைகளை தொழிலாளர்களும் இளைஞர்களும் கையோடு கொண்டு வந்திருந்தனர். டெட்ராயிட்டில் பிரபலமான ட்ரம் இசைக்கலைஞர் எஃபெ மற்றும் மோட்டார் சிட்டி கோல்டன் பாய்ஸ் உள்ளிட்ட உள்ளூர் இசைக்கலைஞர்கள் இசையமைத்தனர். சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தினரிடையே உரை நிகழ்த்தினர். 2012 ஆம் ஆண்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜெர்ரி வைட், DIA கட்டிடத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த “கலை குறித்த அறிவு மற்றும் அனுபவத்திற்காக டெட்ராயிட் மக்களால் அர்ப்பணிக்கப்பட்டது” என்னும் வாசகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். வைட் கூறினார், “லிங்கன் கூறியதை கொஞ்சம் மாற்றிச் சொன்னால், கலை டெட்ராயிட் மக்களுக்கானது, வங்கிகள் மற்றும் கலை ஊக வணிகர்களுக்கானது அல்ல என்ற இந்த முன்மொழிவுக்கு நாம் நம்மை மறுஅர்ப்பணம் செய்து கொண்டிருக்கிறோம்.” அவர் மேலும் கூறினார்: “டெட்ராயிட் தொழிலாள வர்க்கம், சமூகப் போராட்டம் மற்றும் சமத்துவத்திற்காக பாடுபடுவதன் செறிந்த பாரம்பரியங்களை கொண்டது. டியகோ ரிவேரா தனது சுவரோவியங்களில் மிகச் சக்திவாய்ந்த வகையில் விளங்கப்படுத்தியது போன்று, மனிதகுலத்தின் கலாச்சார சாதனைகள் அத்தனையையும் பாதுகாப்பதற்கும் உட்கிரகிப்பதற்குமான தொழிலாள வர்க்கத்தின் கூட்டுப் போராட்டத்தில் தான் மொத்த மனிதகுலத்தின் எதிர்காலமும் தங்கியிருக்கிறது.” சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய துணைச் செயலரான லாரி போர்ட்டர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தவர்களுக்கு - வேய்ன் மாநிலப் பல்கலைக் கழகத்திலும் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் ஒழுங்கமைத்த சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு உட்பட - நன்றி கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் கூறினார்: “எல்லாவற்றுக்கும் மேலாக, கெவின் ஓர், ஆளுநர் சிண்டர் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் கொள்கைகளுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இங்கு திரண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விழைகிறேன். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு முக்கியமான அறிக்கையாகும். தொழிலாள வர்க்கம் தனது நலன்களை முன்னெடுக்கிறது. “நடந்த விவாதங்கள் ஒன்றிலுமே அவர்கள் நம்மிடம் வரவில்லை. நடந்து கொண்டிருப்பவை குறித்து உழைக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் கேட்டிருக்கவில்லை. வங்கிகள் மற்றும் பெரு வணிகங்களின் நலன்களில் இருந்தே அவர்கள் முன்னெடுக்கிறார்கள். இங்கிருக்கும் மக்கள், சிக்கன நடவடிக்கைக் கொள்கை மற்றும் சமூக வெட்டுகளுக்கு எதிரான அமெரிக்காவில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களின் மற்றும் உலகெங்கிலுமான நூறு மில்லியன் கணக்கான மக்களின் பிரதிநிதிகள் ஆகும். ”DIA பிரச்சினை என்பது உள்ளூர் பிரச்சினை அல்ல. இது தேசியப் பிரச்சினையையும் விடப் பெரியதாகும். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. இன்னும் சொன்னால், இது ஒரு வரலாற்றுப் பிரச்சினை.” பின்னால் இருந்த DIA ஐ சுட்டிக் காட்டிய அவர் தொடர்ந்து கூறினார்: “இந்தக் கட்டிடம் உழைக்கும் மக்களால் கட்டப்பட்டது. இது ஓருக்கோ அல்லது சிண்டருக்கோ சொந்தமானதல்ல; இது இங்கிருக்கும் உழைக்கும் மக்களுக்கு சொந்தமானது. “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சோசலிஸ்டுகள் ஏன் அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒரேயொரு எளிமையான காரணம் தான். நடப்பு அமைப்புமுறையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாங்கள் மட்டும் தான். நாங்கள் திவால்நிலையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் ஓய்வூதியங்களிலான வெட்டுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. வேலைகளிலான வெட்டுகளை ஏற்கவில்லை. இவை எதையுமே நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.” ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் திரும்பத் திரும்ப “பணமில்லை” என்று சொல்லி வருவதை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிப்பதாக போர்ட்டர் கூறினார். அவர் கூறினார்: “அமெரிக்காவில் இருக்கும் 400 பில்லியனர்களின் நிகர சொத்து மதிப்பு 2 டிரில்லியன் டாலருக்கும் மேல். இந்த அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் டாலர் தொகையை பங்குச் சந்தையில் இறைத்துக் கொண்டிருக்கிறது. ”பணம் எல்லாம் இருக்கிறது. செல்வத்தை யார் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் பிரச்சினை. தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுப்பதில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் கைகோர்த்து செயல்படுகின்றனர். தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கே நாங்கள் இங்கு இருக்கிறோம்.” இனரீதியாக தொழிலாள வர்க்கத்தை பிளக்கும் முயற்சிகளை போர்ட்டர் நிராகரித்தார். “இது வெள்ளை மற்றும் கறுப்பு இனத்தவருக்கு இடையிலான பிரச்சினை அல்ல” என்று அவர் அறிவித்தார். “அல்லது புறநகர்ப் பகுதி மக்களுக்கும் நகரின் உட்புறப் பகுதி மக்களுக்குமானதும் அல்ல. நாங்கள் எல்லோருமே இந்தப் போராட்டத்தில் இருக்கிறோம்.” சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான ஜோசப் கிஷோர் இறுதி உரை நிகழ்த்தினார். “முதன்முறையாக டெட்ராயிட்டின் உழைக்கும் மக்கள் ‘போதும் இத்துடன் நிறுத்துங்கள்’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் கிஷோர். “இதுதான் கோடு. நாங்கள் வெட்டுகளையோ அல்லது கலைப்பொருட்கள் விற்பனையையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஓய்வூதிய மற்றும் சுகாதாரத் துறை வெட்டுகளையோ அல்லது எமது பள்ளிகள் அழிக்கப்படுவதையோ நாங்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. இது எதிர்த்துப் போராடுவதற்கான நேரம்.” DIA மீதான தாக்குதலை, அமெரிக்காவெங்கும் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது நடக்கும் தாக்குதலுடன் கிஷோர் ஒப்பிட்டுப் பேசினார். சமீபத்தில் நியூயோர்க் மாநகர நாடக அரங்கு மூடப்பட்டதையும் மினசோடா ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கலைஞர்களுக்கு ஒருவருடம் கதவடைப்பு செய்யப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ”நீங்கள் எல்லாவற்றையுமே விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்கிறது ஆளும் வர்க்கம். உங்கள் சுகாதாரப் பராமரிப்பை விட்டுக் கொடுக்க வேண்டும். உங்களது ஓய்வூதியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். உங்களது வேலைகளை விட்டுக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையுமே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். ‘அது நடக்காது’ என தொழிலாள வர்க்கம் உறுதிப்பட சொல்ல வேண்டும். “ஓர் மீது அல்லது நகர கவுன்சில் மீது அழுத்தம் கொடுப்பதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. சிண்டர் அல்லது ஒபாமாவுக்கு அழுத்தம் தருவதற்கு நாங்கள் இங்கு வரவில்லை. தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு சுயாதீனமான வெளிப்பாட்டைக் கொடுக்கவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.” DIA ஐப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முடிவல்ல, ஆரம்பமே என்பதை கிஷோர் வலியுறுத்திக் கூறினார். பங்குபெற்றவர்கள் அடுத்த படியாக, DIA ஐ பாதுகாக்க SEP ஒழுங்கமைக்கும் குழுவில் இணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அருகிலிருக்கும் வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் சுமார் 50 தொழிலாளர்களும் இளைஞர்களும் பங்குபெற்றனர். அரசியல் சூழ்நிலைகள், ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கலாச்சாரம் மற்றும் அத்தனை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான வழியில் இந்தப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் ஆகியன குறித்த ஒரு தீவிர விவாதம் நடைபெற்றது. மேலதிக நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கும் இந்தப் போராட்டத்தை டெட்ராயிட் மாநகரப் பகுதி முழுவதுமான தொழிலாள வர்க்கத்திற்குக் கொண்டுசெல்வதற்கும் பங்குபெற்றவர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். மேலதிக தகவல்களுக்கும் பங்குபெறுவதற்கும் defendthedia.org பார்வையிடுங்கள். |
|