World Socialist Web Site www.wsws.org |
US shutdown: A bipartisan war against the working class அமெரிக்க அரசாங்கம் மூடப்படல்: தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக இரு கட்சிகளினதும் போர்
Barry Grey அமெரிக்க அரசாங்கம் மூடப்பட்டு ஒரு நாளைக்குப் பின், ஒபாமா நிர்வாகமோ அல்லது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதிநிதிகள் மன்றமோ நிதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தேக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த அவசரத்தையும் காட்டவில்லை. பகிரங்கமாக எந்த பேச்சுவார்த்தைகள் பற்றியும் அறிவிக்கவில்லை. மற்றும் சட்டமன்றக் குடியரசுக் கட்சியினர், மத்திய அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்கான ஒரு தொடர்ந்த தீர்மானத்திற்கு ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்பு முழுமையாக மாற்றப்பட வேண்டும் அல்லது வெள்ளை மாளிகை இப்பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தவதை நிராகரிப்பது பற்றியும் உள்ளடங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்தும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. முன்பு செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட அரசாங்க நெருக்கடிகளை போலவே, இரு பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே ஒரு போலிப் போர் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிரான ஒரு இடையறாத ஆனால், மிக உண்மையான போராக மாற்றப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு அதிகரித்துவரும் அடையாளங்கள் காணப்படுகின்றன. செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட், 17 ஆண்டுகளில் முதலாவது அரசாங்க மூடலை உதறித்தள்ளிவிட்டு, மூன்று முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகளும் தினத்தில் கணிசமான இலாபங்களுடன் முடிவுற்றது. இது பெருநிறுவன-நிதிய உயரடுக்கு அமெரிக்காவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு இந்த மூடலின் தண்டனையளிக்கும் பாதிப்பு பற்றிய அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட 800,000 மத்திய அரசுத் தொழிலாளர்கள், 400,000 பொது பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் உட்பட ஊதியம் இன்றி உள்ள நிலையுடன், இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் ஊதியக் காசோலை கிடைக்கும் என்ற உத்தரவாதமின்றி வேலைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். 2 மில்லியன் மத்திய அரசுத் தொழிலாளரகள் ஏற்கனவே ஜனாதிபதி ஒபாமாவால் சுமத்தப்பட்ட மூன்று ஆண்டுக்கால ஊதிய முடக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த “அரச செலவுகள்”- “SEQUESTER”- வெட்டுக்களை அடுத்து பல வாரங்கள் ஊதியங்களும் கொடுக்கப்படவில்லை,. WIC திட்டம், 8.9 மில்லியன் குறைவூதிய தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவளிக்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மூத்த இராணுவத்தினரின் இயலாமை கோரிக்கைகளை விசாரிக்கும் நிர்வாக வழிமுறைக்கான பணம்வழங்குதலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இம்மூடல் சீருடையில் தற்பொழுதுள்ள இராணுவத்தினரையோ அல்லது உள்நாட்டு உளவு, அடக்குமுறைக் கருவிகளான NSA, CIA, FBI மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையையோ தீவிரமாகப் பாதிக்காதிருக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது: “தனிப்பட்ட முறையில், மூத்த குடியரசுக் கட்சியினர் மூடல் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கேனும் நீடிக்கும் என்று கணித்துள்ளனர்.” செய்தித்தாள் தொடர்கிறது: “ஜனநாயகக் கட்சியினர், மூடல் வார இறுதிவரை சென்றால், அரசாங்க நிதிய முரண்பாடு இன்னும் தீவிர மோதலாக கூட்டாட்சிக் கடன் வரம்பான 16.7 டிரில்லியன் டாலருக்கும் மேலாக வளர்ந்துவிடும். ... ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது கடன் வரம்புப் பேச்சுவார்த்தைகளுடன் இணைக்கப்படும் என முன்கூறுகின்றனர்.” இங்கு அரசியல் ஆளும்வர்க்கத்தில் பைத்தியக்காரத்தனம் தோன்றுவது போலிருப்பதை ஒருவர் காணலாம். அக்டோபர் 1 புதிய நிதியாண்டு ஆரம்பத்தை குறிக்கிறது, எந்த புதிய சட்டமும் இல்லாமல் அரசாங்க நிதியத்திற்கு அனுமதி வழங்கல் முடிவடைகிறது. இம்மாதம் பிற்பகுதியில் அமெரிக்கா அதன் தற்போதைய கடன் வரம்பை எட்டும். இதற்கிடையில் கடன் வரம்பு காங்கிரசால் ஒப்புக் கொள்ளப்பட்டால் ஒழிய இது நாடு செலுத்துமதியின்மையை அடையும் நிலையை தோற்றுவிக்கலாம். இந்த மூடல் இந்த காலக்கேட்டை பயன்படுத்தி இரு கட்சிகளின் முன்னோடியில்லான சிக்க நடவடிக்கைகளை சுமத்தும் உடன்பாட்டிற்கு ஒரு மூடுதிரையாக இருக்கும் அவர்களுக்கு சாதகமான ஒரு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அத்தாக்குதலில் முக்கிய அடிப்படை உணவுமுத்திரை திட்டங்கள், மருத்துவப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை உள்ளடங்கும். இந்த வழிவகை முழு அரசியல் ஆளும்வர்க்கத்தை இன்னும் வலதிற்கு மாற்றுவதற்கும் மற்றும் முன்பு அரசியலில் இயலாது எனக் கருதப்பட்டிருந்த வெட்டுக்களை சுமத்துவது இப்பொழுதோ நல்ல முறையில் ஒத்திகை பார்க்கப்பட்டு செயல்படுத்தப்படும். 2010, 2011 மற்றும் 2012ல் இதே போன்ற நெருக்கடிகள் முதலில் புஷ்ஷின் செல்வந்தர்களுக்கு வரிக்குறைப்புக்களை இரண்டு ஆண்டுகளுக்கு விரிவாக்க முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1 டிரில்லியன் டாலருக்கும் மேலான விரும்பும்வகையிலான வெட்டுக்களுக்கு என்றும் இறுதியில் “அரச செலவுகளை வெட்டும் வழிமுறையை” நடைமுறைப்படுத்த மத்தி அரச செலவை, 85 பில்லியன் டாலர்கள் இந்த ஆண்டும், அடுத்த எட்டு ஆண்டுகளில் 1.2 டிரில்லியன் டாலர்களை குறைக்கவும் பயன்படுத்தப்படும். 2011 கடன் வரம்பு நெருக்கடியில் ஒபாமா குடியரசுக் கட்சியினருக்கு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை வெட்டை“பெரும் பேரம்” என முன்வைத்தார். அதில் சமூகப் பாதுகாப்பு பெறுவோருக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ற உதவி அதிகரிப்பை குறைப்பதும் அடங்கியிருந்தது. மேலும் ஓய்வூதியம் பெறுவோருக்குக்கான மத்திய அரசின் உடல்நல உதவித்திட்டமான MEDICARE பெறுவதற்கான சோதனை வழிவகை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதனை பெறுவதற்கான வயதெல்லையும் உயர்த்தப்பட்டது. இந்த நெருக்கடிகளில், தற்போதையதைப் போல் மிக மூர்க்கமான பங்கு வலதுசாரிக் குடியரசுக் கட்சியினரால் கொள்ளப்பட்டது. அவர்கள் ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் முன்மொழிந்ததைவிட இன்னும் தீவிர, விரைவான சமூகநல வெட்டுக்களை விரும்பினர். நெருக்கடி நிலைமையை தீர்த்தல் என்னும் பெயரில் அவர்கள்தான் முக்கிய குரலை எழுப்பினர். ஜனநாயகக் கட்சியினர் தங்கள் கொள்கைகளை குடியரசுக் கட்சியினரின் வலதுசாரி திட்டத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டனர். இம்முறையும் அதிக வேறுபாடு இருக்கப் போவதில்லை. ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சிப்போக்கை ஆரம்பித்துவிட்டனர். திங்களன்று மன்றத்தின் ஜனநாயகக் கட்சியினர் 42 பில்லியன் டாலரை தங்கள் செலவுத்திட்டத்தில் வெட்ட ஒப்புக் கொண்டு, குடியரசுக் கட்சியினரின் குறைந்த மட்டத்தை ஏற்றுக்கொண்டனர். செவ்வாயன்று ரோசாத்தோட்ட உரையில் ஒபாமா இருகட்சி உடன்பாடு தயாரிக்க, “இதனால் நிதிய இருப்பை நீண்டகாலத்திற்குச் சரி செய்ய” அடையாளம் காட்டினார். இது MEDICARE மற்றும் சமூகப் பாதுகாப்பு மீது வரலாற்றுத் தாக்குதல்களுக்கு மறைமுகமான குறிப்பாகும். காப்புறுதி இல்லாத அமெரிக்கர்கள் பின்னணியிலிருப்பது போன்ற ஒரு புகைப்பட காட்சிக்கு முன் அவர் நிற்பதாக காட்டிக்கொண்டது, விரைவில் மூடலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை எவ்விதத்திலும் காட்டாது, மூடலால் தாக்கப்பட்டுள்ள மத்திய அரசுத் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்குமாக ஜனாதிபதி முதலைக் கண்ணீர் வடித்தார். தன்னுடைய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவு திரட்ட பேச்சைப் பயன்படுத்திக் கொண்டார் அதுவோ சுகாதாரப்பாதுகாப்பு காப்புறுதியை குறைக்கும் ஒரு பிற்போக்குத்தன நடவடிக்கையாகும். இது மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு கையில் இருந்து செலவுகளை அதிகரிப்பதுடன் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மையங்களுக்கும் பெரும் இலாபங்களை வழங்கும். அத்துடன் நிறுவனங்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அவற்றின் உடல்நல பராமரிப்பு திட்டங்களை கைவிடுமாறு ஊக்குவித்து AFFORDABLE CARE ACT இனால் நிறுவப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு மையங்களின் காப்புறுதிகளை வாங்குமாறு தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கின்றது. ஏற்கனவே IBM, Walgreens போன்ற நிறுவனங்கள், டெட்ரோயிட் போன்ற நகரங்கள் தங்கள் தொழிலாளர்களை இந்த மையங்களில் தள்ள செயல்படுகின்றன, அவர்களுக்கு தனிப்பட்ட காப்புறுதி பத்திரங்களை வாங்க ரொக்க பத்திரங்களை வழங்குகின்றன. காப்புறுதி பத்திரங்களை வாங்க ரொக்க பத்திரங்களை அறிமுகப்படுத்துதல் என்பது தவிர்க்க முடியாமல் MEDICARE இற்கும் விரிவாக்கப்படும். இது அத்திட்டத்தை இல்லாதொழித்து தனியார்மயமாக்கலுக்கு வகை செய்யும். இந்த இரு கட்சி “முட்டுக்கட்டு நிலைமை” என்பதற்குப்பின் இரு கட்சிகளுக்கும் இடையே சமூகக் கொள்கைகள் குறித்து பெரும் விட்டுக்கொடுக்கும் உணர்வு இருந்ததில்லை. இவை அமெரிக்க, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கு பரந்துபட்ட மக்கள் விலை கொடுக்க வேண்டும் என்பதில் முற்றிலும் உடன்பட்டுள்ளனர். அவர்களுக்கிடையேயான வேறுபாடு எது அவ்வாறு செய்ய சிறந்த வழி என்பதில்தான் உள்ளது. பாரிய வேலையின்மை சூழலில், பெருகும் வறுமை மற்றும் முன்னோடியில்லாத சமூக சமத்துவமின்மை உள்ள நிலைமையில் மத்திய வங்கிக்கூட்டமைப்பு மாதம் 85 பில்லியன் டாலரை நிதியச் சந்தைகளில் உட்செலுத்துகையில் இரு கட்சிகளிலும் எந்தப் பிரிவும் உண்மையான சமூக சீர்திருத்தங்களுக்கு வாதிடவில்லை. மாறாக ஒபாமா நிர்வாகம் மற்றும் முழு அரசியல் ஆளும்வர்க்கத்தின் ஒருமுனைப்பான கவனம் பெரும் செல்வமுடைய உயர்மட்ட 5% த்தினருடைய செல்வத்தை பாதுகாத்து பெருக்குவதுதான். மூடுதல் மற்றும் வாழ்க்கைத் தரங்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் பற்றிய பொதுஜன சீற்றமும் இகழ்வும் உணர்மைமிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கமாக மாற்றப்பட்டு, இரு கட்சிகள் மற்றும் அவை பாதுகாக்கும் முதலாளித்துவ முறைக்கு எதிராக இயக்கப்பட வேண்டும் சோசலிச சமத்துவக் கட்சி வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுகிறது. அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்குரிய அமைப்புக்களாக மாற்றப்படவேண்டும். இதுவும், வோல்ஸ்ட்ரீட் குற்றவாளிகளின் தவறாக ஈட்டிய பணத்தைப் பறித்தல் மற்றும் வரிவிதிப்பு முறையை பாரியமுறையில் மறுகட்டமைத்து, தொழிலாளர்கள் மீது என்பதற்கு பதிலாக செல்வந்தர்கள் மீது சுமையை ஏற்றுதல்தான் அனைவருக்கும் தரமான உடல்நல பாதுகாப்பை வழங்கும், அதே நேரத்தில் சமூக உரிமையான வேலை, கௌரவமான ஊதியங்கள், கல்வி, வீடு, பாதுகாப்பான ஓய்வுக்காலம் மற்றும் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கான உறுதியை வழங்கும். இதுதான் இந்த நெருக்கடிக்கான சோசலிச பதிலாகும். |
|