World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி Italian government survives confidence vote இத்தாலிய அரசாங்கம் நம்பிக்கை வாக்கில் தப்பியது
By Peter
Schwarz இத்தாலிய பிரதமர் என்ரிகோ லெட்டா புதனன்று நம்பிக்கை வாக்கு ஒன்றில் தப்பினார். மொத்தப் பெரும்பான்மையை லெட்டாவின் ஜனநாயகக் கட்சி (PD) கொண்டிராத செனட் மன்றத்தில், 235 செனட்டர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் 70 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பிரதிநிதிகள் மற்றத்தில் PD பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. செய்தி ஊடகப் பிரபுவும் முன்னாள் பிரதம மந்திரியுமான சில்வியோ பெர்லுஸ்கோனி, அரசாங்கத்தின் மீதான நெருக்கடியை கட்டவிழ்த்து விட்டிருந்தபோதிலும்கூட, பெர்லுஸ்கோனி தலைமையிலுள்ள மக்கள் சுதந்திரக் கட்சியும் (PdL) அரசாங்கத்திற்கு ஆதவாக வாக்களித்தது. கடந்த சனிக்கிழமையன்று பெர்லுஸ்கோனி தன்னுடைய கட்சியை சேர்ந்த ஐந்து மந்திரிகளை அரசாங்கத்தை விட்டு விலகுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த திரும்பப்பெறுதலை அவர் மதிப்புக்கூட்டு வரி (VAT) 21ல் இருந்து 22 சதவிகிதமாக அதிகமாக்கப்பட்டதை காரணம் கொண்டு நியாயப்படுத்தினார்; ஆனால் இந்த அதிகரிப்பிற்கு பொருளாதார விவகார மந்திரியான பேப்ரிஜோ சாக்கோமன்னியும் ஐரோப்பிய ஒன்றியமும் உடன்பட்டிருந்தன. ஆனால் நெருக்கடிக்கு உண்மையான காரணம், பெர்லுஸ்கோனி செனட்டர் பதவியிலிருந்து விலகுதல் என்பதை திரும்பப் பெற முடியாத நிலைதான்; ஒரு வரி ஏய்ப்பு தண்டனையில் அவர் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். வாரத் தொடக்கத்தில் PdL பிரதிநிதிகள் தாங்கள் பாராளுமன்றத்திலிருந்து அக்டோபர் 4ம் திகதி “மொத்தமாக வெளியேறுவோம்” செனட்டின் பொதுமன்னிப்புக் குழு பெர்லுஸ்கோனிக்கு எதிராக தீர்மானித்தால் என்று அறிவித்திருந்தனர். தன்னுடைய கட்சி மந்திரிகள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பிரிவு எதையும் கலந்து ஆலோசிக்காமல், பெர்லுஸ்கோனி அரசாங்கத்தை கவிழ்ப்பது என்னும் முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் அவர்கள் எப்பொழுதும் விசுவாசமாக இருந்தனர், ஆனால் இம்முறை இவர் தன் செல்வாக்கைக் கூடுலாகப் பயன்படுத்த முயன்றார். PdL மந்திரிகள் தொடர்ந்து தங்கள் இராஜிநாமாவை அளிக்கையில், நடவடிக்கைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர். பிரதம மந்திரி லெட்டாவும் ஜனாதிபதி ஜியோர்ஜியோ நாபோலிடனோவும் இராஜிநாமாவை ஏற்க மறுத்தனர்; இதன் பொருள் மந்திரிகள் பதவியில் தொடர்ந்தனர் என்பதாகும். பின் திங்கள் இரவு பெர்லுஸ்கோனி 40 நிமிட உரையை PdL பாராளுமன்றப் பிரிவிற்கு அளித்தார்; அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு புதிய தேர்தல்கள் தேவை என்று அழைப்பு விடுத்தார். PdL உறுப்பினர்கள் வெளிப்படையாக எதிர்க்கும் வகையில் இதை எதிர்கொண்டனர். PdL தலைவரும் உள்துறை மந்திரியான ஏஞ்சலினோ ஆல்பனோ தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அது லெட்டாவிற்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்கும் என அறிவித்தது. 42 வயதான ஆல்பனோ நீண்டகாலமாக பெர்லுஸ்கோனியின் நெருக்கமான நம்பிக்கைக்கு உரியவர், அடுத்த தலைவர் எனக் கருதப்படுபவர். பெர்லுஸ்கோனியின் அமைச்சரவையில் 2008 முதல் 2011 வரை நீதித்துறை மந்திரியாக இருந்த ஆல்பனோ அவருடைய ஆசானை வழக்குகளில் இருந்தும் சிறையடைப்பில் இருந்தும் பாதுகாக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட பொறுப்பைக் கொண்டிருந்தார். செவ்வாயன்று பல வதந்திகள் பெர்லுஸ்கோனியிடமிருந்து முறித்துக் கொண்டு லெட்டாவிற்கு வாக்களிக்கத் தயாராக இருந்த பல செனட்டர்கள் குறித்து வெளிவந்தன. கட்சியில் பிளவு என்பது பெருகிய முறையில் ஏற்படும்போல் இருந்தது. PdL அரசியல்வாதியும் லோம்பார்டியின் தலைவருமான ரோபரட்டோ போர்மிஜியோனி ஒரு புதிய “சுயாதீன, கன்சர்வேடிவ் மாற்றீடு” அமைக்கப்படும் என அறிவித்தார். பல பிரதிநிதிகளும் தாங்கள் பெர்லுஸ்கோனியை பின்பற்ற மாட்டோம் என்பதை தெளிவுபடுத்தினர்; பல குழுக்கள் இணைந்துள்ள PdL கொள்கை மாற்றத்தையும் Forza Italia எனத் துவக்க அமைப்பாக மாற்றுவதையும் அவர் அறிவித்தார். லெட்டா நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவார் என்பது தெளிவானபின், பெர்லுஸ்கோனி பின்வாங்கினார். புதனன்று அவர் பிரதம மந்திரிக்கு ஆதரவு கொடுக்குமாறு அழைப்பு விடுத்து, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இதையொட்டி, தீர்வு என்பதற்குப்பதில் அரசியல் நெருக்கடி ஒத்திவைக்கப்பட்டது. செய்தி ஊடகத்தில் பெர்லுஸ்கோனிக்கும் லெட்டாவிற்கும் இடையேயுள்ள மோதல் தவிர்க்க முடியாமல் தன்னுடைய நலன்களைத் தொடரும் தன்முனைப்பு உடையவருக்கும் நாட்டு நலன்களை முதலில் கவனிக்கும் தன்னலமற்ற பிரதமருக்கும் இடையேயான மோதல் என்றுதான் சித்திரிக்கப்பட்டது. உண்மையில் இவற்றிற்குப் பின்னணியில் இதுவரை கற்பனை செய்யமுடியாத இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூகத் தாக்குதல்களை செயல்படுத்தக்கூடிய உறுதியுடைய அரசாங்கத்தை நிறுவும் முயற்சிதான் உள்ளது. லெட்டா ஒரு கிறிஸ்துவ ஜனநாயகவாதி; தன்னுடைய அரசியல் ஏற்றத்திற்கு இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பின்தோன்றல் அமைப்பின் ஆதரவைக் கொண்டவர். தற்பொழுது இவர் ஐரோப்பிய மற்றும் இத்தாலிய முதலாளித்துவத்தால் புதிய சிக்கன நடவடிக்கைகளை சுமத்தச் சிறந்தவர் என்று கருதப்படுகிறார். எனவேதான் அவர் அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவைக் கொண்டுள்ளார்; எனவேதான் பெர்லுஸ்கோனியின் PdL உடைய ஒரு பகுதி அதனுடைய ஆசானுக்கு எதிராகத் திரும்பி லெட்டாவிற்கு ஆதரவைக் கொடுக்கிறது. பெர்லுஸ்கோனி அரசாங்கத்திற்கு ஆதரவை விலக்கிக் கொண்டபோது, இத்தாலிய பங்கு விலைகள் சரிந்தன, அரசாங்க பத்திரங்கள் மீதான வட்டிவிகிதம் உயர்ந்தது. செவ்வாயன்று லெட்டா பெரும்பான்மை பெறுவார் என்பது பெருகிய முறையில் உறுதியானபோது, பங்குச் சந்தைகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இத்தாலிய அரசாங்கத்தின் பத்திரங்களின் கடன் விகிதங்கள் தீவிரமாகக் குறைந்தன, மிலான் பங்குச் சந்தை 3.1% ஏற்றம் பெற்றது. விந்தையாக பெர்லுஸ்கோனியின் செய்தி ஊடகக் குழுவின் மதிப்பும் 6% உயர்ந்தது. புதனன்று செனட்டிற்கு ஆற்றிய உரையில் லெட்டா வரிகளைக் குறைப்பதாகவும், பொதுநலச் செலுவுகளை வெட்டுவதாகவும், அரசியல் நிறுவனங்களைச் சீர்திருத்த நல்ல உறுதியான ஆட்சிக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறி ஆதரவைப் பெற முயன்றார். தன்னுடைய பங்கிற்கு பெர்லுஸ்கோனி லெட்டா வரிகளைக் குறைத்தல், நீதித்துறைச் சீர்திருத்தம் தொடக்கப்படும் மற்றும் தொழிலாளர்துறை செலவுகள்குறைக்கப்படும் என்று கொடுத்துள்ள உத்தரவாதத்தை மேற்கோளிட்டு தன்னுடைய ஆதரவை நியாயப்படுத்தினார். லெட்டா முன்வைக்கும் சேமிப்புக்கள் மற்றும் தொழிலாளர்துறைச் சீர்திருத்தங்கள் மிகப் பெரியவை, தொழிலாள வர்க்கத்தை கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த வாழ்க்கைத் தரங்களுக்குத் தள்ளிவிடும்—கடுமையான வறுமை அக்காலக்கட்டத்தில் இருந்ததை, பல குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்புக்கள் பதிவு செய்துள்ளன. தற்பொழுது இத்தாலி ஆழமான மந்தநிலையிலுள்ளது. தொழில்துறை உற்பத்தி 2007ல் இருந்து கால்பகுதி குறைந்துவிட்டது, மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 2% குறையும். உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 12% என உள்ளது; இது இளைஞர்களிடையே மிகப் பெரிய அளவில் 40% என்று உள்ளது. தேசியக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 135% என்று இருப்பதுடன் அதிகமாவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்போக்கை மாற்ற, லெட்டா சமூகநலச் செலவுகளில் பில்லியன்களை குறைக்க திட்டமிட்டுள்ளார். “இத்தாலிய ஜனநாயகத்திற்கு ஒரு வரலாற்றுத் தினம்” என லெட்டா செனட்டில் தன்னுடைய உரையில் கூறியதற்கு மாறாக, புதன்கிழமையின் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளும் வர்க்கத்திற்குள் மோதல்களை மூடி மறைத்து தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய தாக்குதலை நடத்தத் தயாராகிறது. |
|