தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
US, Iran meet in nuclear talks அமெரிக்காவும் ஈரானும் அணுசக்திப் பேச்சுக்களை நடத்துகின்றன
By Bill Van Auken Use this version to print| Send feedback அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியும் ஈரானிய வெளியுறவு மந்திரி ஜவேத் சரிஃபும் வியாழன் அன்று, 1979 ஈரானிய புரட்சிக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே மிக உயர்மட்ட பேச்சுக்களை நடத்தினர். இப்படி நேரடிப் பேச்சு என்பது P5+1 குழு எனப்படும் (ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி) உடைய வெளியுறவு மந்திரிகள் கூட்டுக்கூட்ட வடிவமைப்பிற்குள் நடைபெற்றது; இந்தக் குழு 2008ல் ஈரானுக்கு அதன் அணுத்திட்டம் குறித்து இராஜதந்திர பேச்சுக்களை நடத்த அமைக்கப்பட்டது. இக்கூட்டம் ஐ.நா. பொது மன்றக் கூட்டத் தொடர் நியூ யோர்க் நகரத்தில் நடக்கும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை பிரதிநிதி காத்தரின் ஆஷ்டன் தலைமையில் நடத்தப்பட்டது. கூட்டத்தைப் பொறுத்தவரை, அமெரிக்க, ஈரானியப் பிரதிநிதிகள் ஈரானிய அணுத் திட்டம் குறித்த உடன்பாடு ஒன்றில் முன்னேற்றம் அடையப்படலாம் என்று நம்பிக்கைக்குரல் கொடுத்தனர். “நாங்கள் ஒரு நல்ல கூட்டத்தை நடத்துவோம், எனக்கு அதில் உறுதி” என்று வியாழன் காலை கெர்ரி கூறினார். தன் பங்கிற்கு சரீஃப், தன் டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி இக்கூட்டம் “அணு பிரச்சினையை தீர்க்க ஒரு வரலாற்று சந்தர்ப்பம்” என்று குறிப்பிட்டார், மேலைச் சக்திகள் “புதிய ஈரானிய அணுகுமுறை” என்றும் சேர்த்துக் கொண்டன. “இன்றைய P5+1 கூட்டத்தில் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்பட முடியும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், முன்னேற்த்திற்கு ஒரு பாதையைத் தொடர முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார். கூட்டத்திற்கு முன்னதாக, பல தசாப்தங்களாக ஈரானுக்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் தொடர்ச்சியான ஆத்திமூட்டுதல்களின் விளைவான அழுத்தங்கள் இருந்தன—ஈரானிய விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டது உட்பட; அது நாட்டை அணுவாயுதம் கட்டமைக்காமல் தடுக்கும் என்ற போலிக்காரணத்திற்காக செய்யப்பட்டது. ஈரான் தொடர்ச்சியாக தான் அணுசக்தியை சமாதான நோக்கங்களைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை என மறுத்துத்தான் வந்துள்ளது; மேலும் அதன் செயல்கள் அணுபரவா உடன்பாட்டிற்கு முற்றிலும் இயைந்தவை எனவும் வலியுறுத்திள்ளது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகள் நாட்டில் அணுவாயுதத் திட்டம் ஏதும் இல்லை என்ற முடிவிற்குத்தான் வந்துள்ளன. ஈரானின் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹசான் ருஹானி அணிசாரா இயக்கத்தின் தலைவர் என்னும் முறையில் அணு ஆயுதக் களைப்புக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், அமெரிக்கா மற்றும் மேற்கின் பாசாங்குத்தனம் குறித்து கவனத்தை ஈர்த்தார்; அவை ஈரானை இல்லா அணுவாயுதத் திட்டத்திற்கு குற்றம் சாட்டுகின்றன, ஆனால் நூற்றுக்கணக்கான அணுவாயுதங்களைக் கொண்ட இஸ்ரேலை ஆதரிக்கின்றன; இஸ்ரேலோ அணுபரவா உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்து அதன் அணு வசதிகளை எந்த அமைப்பும் ஆய்வு செய்யவும் அனுமதிக்கவில்லை. “கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக ஒரு அணுவாயுதம் இல்லாப் பகுதியை மத்திய கிழக்கில் நிறுவும் சர்வதேச முயற்சிகள் வருந்தக்கூடிய அளவிற்கு தோற்றுவிட்டது” என்றார் ருஹானி. இஸ்ரேல் உடனடியாக NPT யில் சேர வேண்டும் என்றும், அதன் அணுவாயுதக் கிடங்குகளை களைய வேண்டும் என்றும் சேர்த்துக் கொண்டார். அணுத்திட்டத்தைப் பொறுத்தவரை, ஈரான் குறித்த உடன்பாடு மூன்றே மாதங்களில் அடையப்படலாம் எனத் தான் நம்புவதாகவும் ருஹானி கூறினார். வியாழன் அன்று, ஈரான் ஒரு 20 பக்க “விளக்கக் குறிப்பை” ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் வலைத் தளத்தில் பிரசுரம் செய்தது; ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்கிறது என்னும் குற்றச்சாட்டுக்கள் “ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்” என்று அது கண்டிக்கிறது; இது “தொழில்நேர்த்தியற்ற தன்மை, நியாயமற்றது, சட்டவிரோதமானது, அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் விவரித்தது. இந்த அறிக்கை, சர்வதேச அணுசக்தி அமைப்பு IAEA காலாண்டு அறிக்கைகளில் ஈரானிய அணுத் திட்டம் குறித்த இராணுவப் பயன்பாடுகள் அக்கறையை வெளிப்படுத்தியதற்கு விடையிறுப்பு ஆகும். இந்த அறிக்கைகள், “போலியாக தயாரிக்கப்பட்ட, மேலை உளவுத்துறைப் பிரிவுகள் கொடுத்த தவறான தகவல்களை தளம் கொண்டவை, அதுவும் ஈரானுக்கு விரோதப் போக்குடையவை என அறியப்பட்ட ஆதாரங்கள் கொடுத்தவை.” ஈரானிய பிரதிநிதிகள் IAEA பிரதிநிதிகளை வெள்ளியன்று வியன்னாவில் சந்திக்க உள்ளனர்; இது ஜனாதிபதி பதவியை எடுத்தபின் அத்தகைய முதல் சந்திப்பு ஆகும். இதற்கிடையில் வாஷிங்டனில் ஜனாதிபதி பாரக் ஒபாமா, அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு நாடு அளிப்பதற்கு ஈடாக, ஈரான் மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனை தரும் பொருளாதார முற்றுகைகளை தளர்த்த ஏதேனும் உடன்பாடு காணும் திறன் கொண்டுள்ளாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. மிக முக்கிய பொருளாதாரத் தடைகள் காங்கிரஸ் சட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளன, காங்கிரஸ்தான் அவற்றை நீக்க முடியும்; ஆனால் இஸ்ரேல் செல்வாக்குக்குழு ஈரானுடன் உடன்பாடு காணமுடியாத அளவிற்கு விரோதப் போக்கைக் கொண்டு முக்கிய செல்வாக்கையும் பயன்படுத்தும். 10 குடியரசு செனட்டர்கள் அடங்கிய குழு ஒபாமாவிற்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், “ஈரான் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்”, “இராஜதந்திர அரைகுறை நடவடிக்கைகள் தொடரப்படக்கூடாது” என்று கோரியுள்ளனர். இக்கடிதம், அமெரிக்க ஜனாதிபதி, சிரியா மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் ஆதரவைப் பெற முடியவில்லை என்பதை வலியுறுத்தி, “ஈரானிய அணுவாயுதத்தை தடுக்கும் எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்..” என்று கூறுகிறது. ஈரான் அதன் யுரேனிய “அடர்த்தித் திறன் அல்லது மறுசுற்றுத் திறன்களை” செய்வதற்கு மாறாக எந்த உடன்பாடும் ஏற்கப்பட முடியாது என்றும், அதற்கு அடிப்டையில் ஆட்சி மாற்றம் தேவை என்றும் கூறுகிறது. ஒபாமா நிர்வாகம் ஈரானுடன் பேச்சுக்கள் நடத்துவது என்னும் மாற்றம், சிரியா மீது அது இராணுவத் தாக்குதலை நடத்தத் தயாராக இருந்த ஒரு மாதத்திற்குள் வந்துள்ளது; அத்தாக்குதல் பெரும் மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து பின்வாங்கப்பட்டது. இது முதலில் பிரித்தானிய மக்கள் மன்றத்தில் ஆகஸ்ட் இறுதியில் போருக்கு ஆதரவு என்னும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்டதன் மூலம் முதலில் வெளிப்பட்டது; பின்னர் அமெரிக்காவில் உரத்த குரலில் பரந்த மக்கள் எதிர்ப்பு மத்திய கிழக்கில் மற்றொரு இராணுவத் தலையீட்டிற்கு வெளிப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் தன் இராணுவச் சக்திப்பயன்பாட்டிற்கு ஒப்புதல் என்னும் கோரிக்கை நிராகரிக்கலாம் என்னும் நிலையை ஒபாமா முகங்கொடுத்தார். இச்சூழலில்தான் அமெரிக்க நிர்வாகம் ரஷ்ய திட்டமான சிரியாவில் இரசாயன ஆயுத களைவை பற்றி எடுத்துக் கொண்டது. இப்பொழுது ஈரானிய பேச்சுக்கள் சிரியாவைச் சுற்றியுள்ள இராஜதந்திர தந்திரங்களை மழுங்கடித்துள்ளன. இவை இரண்டுமே, அமெரிக்க நிர்வாகம் இன்னும் கால அவகாசத்திற்கு கொள்ளும் முயற்சி என நிரூபணம் ஆகலாம்; “இராஜதந்திர பாதை” என்னும் வாதம் முயற்சிக்கப்பட்டது, தோற்றுவிட்டது என்று கூறி மீண்டும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு தயாரிக்கலாம். ஆனால் ஈரானுடன் சமரசத்தை அடைய, அமெரிக்க முயற்சிகளில் ஒரு உறுதியான தர்க்கம் உள்ளது; இது 1979 புரட்சிக்கு முன் முக்கிய அமெரிக்க வாடிக்கை நாடாகவும் பிற்போக்குத்தனத்தின் தூணாகவும் பிராந்தியத்தில் இருந்தது. ஈரானிய அரசாங்கம், அதிகரித்து வரும் பணவீக்கம், பெருகும் வேலையின்மை குறிப்பாக இளம் தொழிலாளர்களிடையே சமூகப் போராட்டங்களை கட்டவிழ்த்துவிட முடியும், அவை இஸ்லாமியவாத ஆட்சியையும் அதன் முக்கிய தளமான ஈரானின் முதலாளித்துவத்தினர், வணிகங்களில் இருப்பவற்றை சவால் விடலாம் என்ற அச்சத்தில், பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவதை பெறுவது பற்றி ஆர்வத்துடன் உள்ளது. அமெரிக்க தந்திரோபய பரிசீலனைக்காக, “ஈரானுடன் பேச்சுக்கள் நடத்துதல்: நடைமுறை நிலைக்கும் உண்மை முன்னேற்றத்திற்கும் மூலோபாயக் கருத்து” என்னும் தலைப்பில் CSIS எனப்படும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் மத்திய கிழக்கு மற்றும் தேசியப் பாதுகாப்புப் பகுப்பாய்வாளர் ஆன்டனி கோர்ட்ஸ்மனால் எழுதப்பட்டுள்ளது. [http://csis.org/publication/negotiating-iran-strategic-case-pragmatism-and-real-progress] கோர்ட்ஸ்மன், அமெரிக்க அரசாங்கம் “ஈரானுடனான பேச்சுக்களில் அசாதாரண கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று ஆலோசனை கூறுவதுடன், பேச்சுக்கள் நாட்டின் அணுவாயுதங்கள் என்பவை தொடரப்பட வசதியளிக்கும் “தாமதப்படுத்தும் உத்தியாகவும்” இருக்காம் என்று எச்சரித்துள்ளார்; நாட்டிற்கு எதிராக விரும்பத்தகாத இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளின் திறன் பற்றியும் கவலையளிக்கும் மதிப்பீட்டைக் கொடுக்கிறார். “ஈரான் தடுப்புத் தாக்குதல்களின் தொடர்ச்சியை முகங்கொடுக்கலாம்—அவை இஸ்ரேலினால் தூண்டப்படலாம், அல்லது அமெரிக்காவால் திட்டமிடப்படலாம்— ஆனால் அதன் அணுசக்தி வசதிகளை விட அதிகம் அழித்துவிடும். ஆனால் இது உண்மையில் ஈரானிய அணு முயற்சியை நிறுத்தலாம் அல்லது நிறுத்தாமலும் போகலாம்.” என்று அவர் எழுதியுள்ளார். சிரியாவில் நிரூபிக்கப்பட்டதுபோல், “அமெரிக்கா உண்மையிலேயே அதன் நட்பு நாடுகளிடம் இருந்து எந்த அளவிற்கு ஆதரவு பெறமுடியும் என்று எவரும் கணிக்கமுடியாது”, அமெரிக்க மக்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் லெபனானில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்கலாம், பேர்சிய வளைகுடாவில் இருந்து எண்ணெய் ஏற்றுமதிகள் பாய்வை அச்சுறுத்தலாம் என்று கோர்ட்ஸ்மன் எழுதுகிறார். மறுபறும், அமெரிக்காவும் ஈரானும் “பொது மூலோபாய நலன்களை” பரந்த பிரச்சினைகளில் அடையலாம், ஆப்கானிஸ்தானில் உறுதிப்பாட்டில் இருந்து பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பெட்ரோலிய வளர்ச்சி வரை அதில் இருக்கும். ஈரானிய செய்தி ஊடகம் உண்மையான “மூலோபாய நலன்களை”, அமெரிக்க ஈரானிய பேச்சக்களில் அடித்தளத்தில் இருப்பதை மதிப்பீடு செய்வதில் அமெரிக்கர்களைவிட வெளிப்படையாக உள்ளது. தெஹ்ரான் நாளேடு Arman எழுதுகிறது: “சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கும் மேற்குக்கும் இடையே உறவுகள் ஒருபோதும் முன்னேற்றம் அடைவது குறித்து மகிழ்ச்சி அடையாது. ... பிராந்தியத்தில் இருக்கும் அரபு நாடுகளும் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பிரச்சினைகள் குறைவதற்கு ஒப்புதல் கொடுக்காது. ... நாம் இந்த முக்கிய பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்; நாடுகள் நமக்கு ஆதரவு தராது, நாம் நம் தேசிய நலன்களால் வழிகாட்டப்பட வேண்டும்.” மற்றொரு தினசரியான Hamshahri, ஈரானுடனான பேச்சுக்கள் என்னும் திருப்பத்தை, சிரியாவில் உடன்பாட்டைக் கொண்டுவர, அந்நாட்டின்மீது அமெரிக்க போர் தற்பொழுது இல்லை என்னும் ரஷ்யா கொண்டிருந்த முக்கிய பங்குடன் வெளிப்படையாக ஒப்பிடுகிறது. செய்தித்தாள், “ஒருவேளை இந்த சூழ்நிலையில் ரஷ்யாவை ஒதுக்கியிருந்தால், அமெரிக்கா நேரடி இடைத்தொடர்பு பேச்சுக்களை ஈரானுடன் கொண்டிருக்கலாம் என்பதைக் குறிக்கலாம்” என்று கூறுகிறது. “இது, மத்திய கிழக்கில் ரஷ்யாவின் இருப்பு கூறப்படுவது போல் வலுவானதும் சக்தி வாய்ந்ததும் அல்ல என்பதைக் காட்ட உதவும்....” நாளேடு மேலும் வலியுறுத்துகிறது,“ஈரானுக்கு பிராந்திய, கீழைத்தேச மத்தியஸ்தர்கள் [அதாவது ரஷ்ய, சீன] தேவையில்லாதது மட்டுமல்ல; தற்போதைய மோதல்களில் அதுவே பிராந்திய மத்தியஸ்தராக இருக்கவும் முடியும்.” இந்த ஆய்வுகள் தெளிவாக்குவது, வாஷிங்டனுடைய சிரிய, ஈரானிய பேச்சுக்களில் நுழைவது சமாதானம் அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் மூலோபாய முறை கைவிடப்படுகிறது அல்ல என்பதாகும். மாறாக இது அமெரிக்க மேலாதிக்கத்தை பேர்சிய வளைகுடா, மத்திய ஆசிய மூலோபாயப் பிராந்தியங்கள்மீது அதிகப்படுத்துவதை நோக்கம் கொண்ட தந்திரோபாய திருப்பம் ஆகும்; அதையொட்டி ரஷ்யா, சீனாவுடன் இன்னும் ஆபத்தான மோதலுக்குத் தயாரிக்கலாம். இந்த “இராஜதந்திரப் பாதை” அமெரிக்கா ஆளும் நடைமுறை விரும்பும் விளைவுகளை தோற்றுவிக்கிறதா அல்லது சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான போருக்கு புதிய போலிக்காரணத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுமா என்பது பொறுத்திருந்துதான் காண வேண்டும். |
|
|