World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French Interior Minister Manuel Valls proposes mass deportation of Roma பெருவாரியாக ரோமாக்களை வெளியேற்றும் திட்டத்தை பிரெஞ்சு உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் முன்வைக்கிறார்
By Anthony
Torres பிரான்சின் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் மீண்டும் ரோமாக்களுக்கு எதிராகத் திரும்பி, கிழக்கு ஐரோப்பாவிற்கு அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். ரோமா இனம் முழுவதையும் தாக்கும் அவருடைய கருத்துக்கள் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிற்போக்குத்தன்மையைத்தான் காட்டுகின்றன; அதனுடைய சிக்கனம் மற்றும் போர்க் கொள்கைகள் தொடர்பான மக்கள் எதிர்ப்பிற்கு விடையிறுக்கையில் இனவெறியை தூண்டி நவ-பாசிச தேசிய முன்னணி (FN) இன் நிலைப்பாட்டிற்கு செல்கிறார். செப்டம்பர் 24 அன்று மானுவல் வால்ஸ் கூறினார்: “ரோமாக்கள், ருமேனியாவிற்கு அல்லது பல்கேரியாவிற்குத் திரும்பிச் சென்று அங்கேயே இருக்க வேண்டும்.” மறுநாள் அவர் தன்னுடைய சொற்களை உறுதிப்படுத்தும் வகையில் கூறினார்: “நான் எந்தத் திருத்தமும் செய்யவேண்டியதில்லை, என்னுடைய சொற்கள் பிரச்சினை பற்றி அறியாதவர்களுக்கு மட்டுமே அதிர்ச்சியாக இருக்கின்றன.” ஒரு முழு இனக் குழுவையும் கட்டாயமாக வெளியேற்றத் தான் ஆதரவு கொடுப்பதாகக் கூறும் வால்ஸின் கருத்துக்கள் எந்த அளவிற்கு பிரான்சில் ஜனநாயகம் சரிந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. PS இன் பிரிவுகள் இன வெறியில் மூழ்கியவை, கருத்துக் கணிப்புக்களில் FN உடைய ஏற்றத்தில் திகைப்புடையவை, ரோமாவை பல பிரெஞ்சு சிறு நகரங்களிலிருந்து, குறிப்பாக மார்சேயிலிருந்து நாடு கடத்த ஏற்பாடு செய்துள்ளன. ஐரோப்பிய நீதிப் பிரிவு ஆணையர் விவியன் ரெடிங், வால்ஸின் அறிக்கைகளுக்கு ரேடியோ பிரான்ஸ்-இன்போவில் விடையிறுத்தார்: “நாம் ஐரோப்பிய விதிகளைக் கொண்டுள்ளோம், பிரான்ஸும் இதில் கையெழுத்திட்டுள்ளது. இந்த விதிகள் தடையற்று மூன்று மாதங்களுக்கு பயணிக்கும் உரிமைகளைக் கொடுத்துள்ளது. இம்மக்கள் ரோமாக்கள் அல்ல, தனிநபர்கள். ஒரு நீதிபதிதான், தொடர்புடைய அரசாங்கத்தின் சட்டங்களை அவர்கள் மீறினால் நாடுகடத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பு அளிக்க முடியும்.” பிரெஞ்சு அரசாங்கமானது மார்ச் 2014 நகரசபைத் தேர்தல்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தை நடத்துகிறதோ என்று தான் சந்தேகப்படுவதாக ரெடிங் கூறினார்; செல்வாக்கற்ற கொள்கைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப இப்பிரச்சினையை எழுப்புவதாகவும் குற்றம்சாட்டினார். “நான் தவறாகக் கூறவில்லை என்றால், பிரான்சில் தேர்தல்கள் வரவுள்ளன. வரவு-செலவுத் திட்டம், கடன்கள் போன்ற முக்கியமானவற்றை மக்கள் பேசுவதை விரும்பவில்லை என்றால், அவர்கள் மீண்டும் ரோமா தலைப்பைக் கண்டுபிடித்துவிடுவர்” என்றார் அவர். வால்ஸின் பிற்போக்குத்தனக் கருத்துக்கள் பற்றி அவர் கவனத்தை ஈர்த்தாலும், ரெடிங் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது. EU முறையாக பல உறுப்பு நாடுகளில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் வெட்டுக்களை சுமத்துகிறது. இவ்வகையில் அது முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு பங்களிப்பு கொடுப்பதுடன் இனவெறி, நவ- பாசிச உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுக்கும் ஐரோப்பிய அரசாங்கங்களின் முடிவுகளின் தளத்திலுள்ள சமூக அடக்குமுறைக்கும் பங்களிப்பு கொடுக்கிறது. குறிப்பாக ரெடிங் ஏற்கனவே ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கீழ் 2010 தொடங்கி முந்தைய பிரெஞ்சு அரசாங்கம் ரோமாக்களை வெளியேற்றியது குறித்து விமர்சித்துள்ளார். ஐரோப்பியச் செய்தி ஊடகம் இவ்விமர்சனத்தை வெளிப்படையாக நிராகரித்தபின், ஐரோப்பிய ஒன்றியம் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ரோமாக்களைத் தாக்க முழு அதிகாரத்தைக் கொடுத்தது. PS அரசாங்கத்தின் ஆதரவை வால்ஸ் கொண்டுள்ளார். அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் நஜட் வாலௌட்-பெல்காசெம் “மானுவல் வால்ஸ் உறுதியாகவும் மனிதாபிமானத்துடனும் கூறும் கொள்கையை” ஆதரித்து, “தாயகத்திற்கு அனுப்புதல் பல தீர்வுகளில் ஒன்று” என்றார். வாலௌட் பெல்காசெம் உடைய அறிக்கை, அரசாங்கம் குறித்த இழிந்த நோக்கத்தைத்தான் பிரதிபலிக்கிறது; அது “மனிதத் தன்மை” என்னும் சொல்லை ரோமாக்களை வெளியேற்றும், அவர்களுடைய முகாம்களை அழித்தல், செய்தி ஊடகத்தில் இடைவிடாது அவர்களைக் கண்டித்தல் என்னும் இனவெறிக் கொள்கையை விளக்கப் பயன்படுத்துகிறது. மனித உரிமை அமைப்பான சர்வதேச மனித உரிமை அமைப்பானது, வாலௌட் பெல்காசெம்மின் அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய உறுதிப்பாடுகளை எதிர்த்துள்ளது. இந்த அமைப்பின்படி, ரோமாக்கள் “ஆகஸ்ட் 2013 மந்திரிகளுக்கு இடையேயான சுற்றறிக்கைக்குப் பின் கூட தொடர்ந்து கட்டாய வெளியேற்றத்தினால் பாதிக்கப்படுகின்றனர்; இந்த வெளியேற்றங்கள் அதிகரிக்கின்றன... நிலைமை இழிந்து விட்டது, மிக மோசமாக உள்ளது என்று கூட 2012ல் நாம் கண்டதைப் போல் ஆகிவிட்டது எனலாம்.” ரோமாக்களை துன்புறுத்துதல் என்பது உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பாவில் அரசியல் அழுத்தங்களின் அதிகரிப்பிலும் ஆழமான புறநிலை வேர்களை கொண்டுள்ளது. PS அரசாங்கம் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர்களினால் தொழிலாளர்கள் சீற்றம் அடைந்துள்ளனர். ஓராண்டு அதிகாரத்திலிருந்த பின், பிரான்சுவா ஹாலண்ட் 1958ல் பிரான்சின் ஐந்தாவது குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து மிகவும் செல்வாக்கற்ற ஜனாதிபதி ஆவார். அரசாங்கம் தொடர்ந்து நிதியப் பிரபுத்துவம் கோரும் சீர்திருத்தங்களை சுமத்துகிறது, அவற்றை விரைவுபடுத்தவும் முயல்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய முதலாளித்துவ நெருக்கடி, உத்தியோகபூர்வ “இடது” கட்சிகளான, இடது முன்னணி அல்லது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவற்றிற்கு ஏற்றம் கொடுக்கவில்லை என்பது இக்கட்சிகளின் திவால்தன்மையைத்தான் காட்டுகிறது. இவைகள் அரசியலளவில் PS ஐ நம்பியுள்ளன. 2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாவது சுற்றின்போது ஹாலண்டிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தன; அதே நேரம் அவர் சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்துவார் என்பதையும் ஒப்புக்கொண்டன. அப்பொழுது முதல் இவைகள், தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான இயக்கமும் PS க்குஎதிராக வெளிப்படாது என்பதை உறுதிபடுத்துகின்றன. இவைகள் அரசியல் அளவில் ஒரு குற்றம்சார்ந்த மௌனத்தை அரசாங்கத்தின் நவ-பாசிசப் போக்கு பற்றி காட்டுகின்றன; இவைகள்தான் இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட உதவின. இது அதி-வலதுசாரிக் கட்சியை PS உடைய பிற்போக்குத்தனச் செயற்பட்டியலுக்கு ஒரே எதிர்ப்பு எனக் காட்டிக்கொள்ள உதவுகிறது. FN க்கு முக்கியமாக நலன்களைக் கொடுக்கும் சமூகச் சீற்றத்திற்கு முகங்கொடுக்கையில், PS தொழிலாளர்களை பிரிக்கவும், திறமையுடன் நவ-பாசிசத் திட்டத்தின் பகுதியை எடுத்துக் கொள்ளவும் இனவெறியைத் தூண்டுகிறது. இது FN உடைய செல்வாக்கு வளர்வதற்கு ஆதரவு கொடுக்கிறது; அதை நெறிப்படுத்த முற்படுகிறது. வால்ஸிற்கு செய்தி ஊடகம் கொடுக்கும் கவனம், ஓராண்டிற்கும் மேலாக பிரான்சின் அரசியல் முழு முதலாளித்துவத்தின் வலதுபுற சாய்வைத்தான் பிரதிபலிக்கிறது. இச்சூழலில் சட்டம் மற்றும் ஒழுங்கு, தீவிர வலதுசாரித் தேசிய சக்திகளுடைய செல்வாக்கு பெருகியுள்ளது. குறிப்பாக உள்துறை மந்திரியின் பங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜாக் சிராக்கின் ஜனாதிபதிக் காலத்தில் இருந்ததைவிட அதிகமாகிவிட்டது. பிரான்சின் “உயர்மட்ட பொலிஸ் அதிகாரி” என்னும் சார்க்கோசியின் நிலைப்பாடு அவர் 2007ல் ஜனாதிபதி பதவியை அடையப் பெரிதும் உதவியது. சார்க்கோசியின் ஜனாதிபதிக் காலத்தில் இந்த அமைச்சரகம் அவருடன் நெருக்கமாக ஒத்துழைப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. உள் உளவுத்துறைத் தலைவர் பேர்னார்ட் ஸ்க்வார்சினி போன்றவர்கள், கோர்சிகா மாபியா வட்டங்களில் கொண்டுள்ள உறவுகளில் எந்த இரகசியமும் காட்டாதவர்கள், சார்க்கோசி நிர்வாகத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். ஹாலன்டன் கீழ் உள்துறை அமைச்சரகம் வால்ஸிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது; அவர் PS இன் இன்னும் வெளிப்படையான சட்டம் ஒழுங்கு சார்புடைய நபர்களில் ஒருவராவார். ஹாலன்ட் மக்களிடையே செல்வாக்கு இழந்திருப்பது வால்ஸுக்கு நலனைக் கொடுத்துள்ளது; அவரை முதலாளித்துவச் செய்தி ஊடகம் இப்பொழுது ஒரு வருங்கால ஜனாதிபதிப் போட்டியாளர் எனக் கூறுகிறது. |
|