World Socialist Web Site www.wsws.org |
This week in history: September 23-29 வரலாற்றில் இந்த வாரம் 23-2923 September 2013 வரலாற்றில் இந்தவாரம் பகுதி, இந்த வாரம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் முக்கிய வரலாற்று சம்பவங்கள் பற்றிய ஒரு சிறிய குறைப்பை வழங்குகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்கா, சன்டினிஸ்டா ஆட்சியின் மீது அரசியல் மற்றும் இரகசிய தாக்குதல்களை தொடர்ந்தது 1988 செப்டெம்பர் 27 அன்று, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், ஐ.நா பொச் சபையில் ஆற்றிய ஒரு உரையில், நிக்கரகுவா சன்டினிஸ்டா அரசாங்கத்தை ஒரு “சர்வாதிகார அரசு” என குற்றம் சாட்டினார். “நிக்கரகுவாவில் மனித உரிமைகள் தொடர்ந்தும் சீரழிவது” சர்வதேச பதட்ட நிலைமைகளை குறைப்பதில் முன்னேற்றமானது என தான் கூறியதற்கு “ஒரு விதிவிலக்கு” எனப் பிரகடனம் செய்யவும் அவர் முன்சென்றார். மத்திய அமெரிக்காவிலான மோதல்கள், சோவியத்-அமெரிக்க உறவுக்கு ஒரு ஆபத்து என மேலும் கூறிய ரீகன், “சன்டினிஸ்டா ஆட்சிக்கு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களும் தளவாடங்களும் கிடைப்பதை நிறுத்துவதன் மூலம், மத்திய அமெரிக்காவில் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு” சோவியத் ஒன்றியத்துக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு முந்தைய வாரம், சபையின் அமெரிக்கப் பேச்சாளர் ஜிம் ரைட், “நிக்கரகுவாவில் அரசாங்கத்தின் பக்கத்தில் இருந்து அதிக எதிர்ச் செயலை தூண்டுவதற்காக வேண்டுமென்றே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை பற்றி சிஐஏ முகவர்களிடமிருந்து தெளிவான சாட்சியங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன” என பகிரங்கமாக தெரிவித்தார். நிக்கரகுவாவில் அத்தகைய சிஐஏ நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக ஏற்றுக்கொண்டதை குறித்தது. அதை சிஐஏ காங்கிரசுக்கு அறிவித்துள்ளது என்பதை ரைட் வெளிப்படையாக உறுதிப்படுத்தினார். 1986 நவம்பரில், ஈரான்-கொந்ரா (Iran-Contra) விவகாரம் முதல் தடவையாக வெளிச்சத்துக்கு வந்தமை, சன்டினிஸ்டாக்களுக்கு எதிராக ஒரு சட்ட விரோத யுத்தத்தை முன்னெடுப்பதில் அமெரிக்க அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகளின் பிரதான பாத்திரத்தை அம்பலப்படுத்தியது. பணையக் கைதிகளை விடுவிப்பதற்காக ஆயுதங்கள் என்ற ஈரானுடனான இரகசிய உடன்படிக்கையின் ஊடாக சேகரிக்கப்பட்ட நிதியுடன், கொந்ராஸ் என அழைக்கப்படும் எதிர்ப் புரட்சி இராணுவத்துக்கு ஆதரவளிப்பதை தடைசெய்ய வேண்டிய சூழ்நிலையும் காங்கிரசுக்கு ஏற்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னர்: சிஐஏ ஆதரவு சதிப் புரட்சியில் டொமினிகன் ஜனாதிபதி கவிழ்க்கப்பட்டார் 1963 செப்டெம்பர் 25 அன்று, டொமினிகன் குடியரசின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜுவான் பொஷ், ஒரு இராணுவச் சதியில் பதவியிறக்கப்பட்டதோடு, அவருக்கு பதிலாக, இராணுவ பலசாலி கேனல் எலியாஸ் வெசின்னுக்கான ஒரு முன் அமைப்பாக, மூன்று பேர் அடங்கிய ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. பொஷ், புயேர்டோ ரிகோவுக்கு தப்பிச் சென்றார். அவர் வெறும் ஏழு மாதங்களே ஆட்சியில் இருந்தார். இந்த சதிப்புரட்சிக்கு சிஐஏ ஆதரவு இருந்ததோடு கென்னடி நிர்வாகம் அதை முன்செல்ல அனுமதித்தது. லத்தின் அமெரிக்காவில் ஒரு “மூன்றாவது சக்தியாக” ஜோன் எஃப் கென்னடியினால் ஆரம்பத்தில் விரும்பப்பட்ட, ஒரு எழுத்தாளரும் முதலாளித்துவ அரசியல்வாதியுமான பொஷ், சீர்திருத்தவாத டொமினிகன் புரட்சிகர கட்சியின் தலைவர் என்ற வகையில் 1962 டிசம்பரில் வெற்றி பெற்றார். 1961ல் றூஜிலோ கொலை செய்யப்பட்டதன் மூலம் இந்த தேர்தல் சாத்தியமாக்கப்பட்டது –இந்தக் கொலையில், சிஐஏ குறிப்பின் படி, “திட்டமிட்டவர்களுடன் முகவரமைப்பின் குறிப்பிட்டளவு விரிவான தலையீடு” இருந்துள்ளது. றூஜிலோ நீண்டகாலம் அமெரிக்காவின் கையாளாக இருந்தவர். இவரது சர்வாதிகார ஆட்சி, ஒரு புரட்சியைத் தூண்டும் என கென்னடி அச்சம்கொண்டார். பொஷ், கியூபாவில் காஸ்ட்ரோ அரசாங்கத்தையிட்டு ஆர்வம் காட்டியதோடு, டொமினிகன் குடியரசின் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் வறிய மக்களின் கோரிக்கைகளை தணிப்பதன் பேரில், ஒரு தாராளவாத அரசியலமைப்பை அமுல்படுத்தியதுடன் குறிப்பிட்ட சில, ஆரவாரமற்ற சமூக சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிட்டதை அடுத்து, வாஷிங்டனின் ஆதரவை இழந்தார். இந்த நடவடிக்கைகள் தொழிற்துறையாளர்களுக்கும் செல்வந்த கிராமப்புற பெரும்பண்ணை உரிமையாளர்களுக்கும், கத்தோலிக்க தேவாலயத்தின் உயர் மட்டத்தினருக்கும், மற்றும் ஏனைய றூஜிலோவின் முன்னாள் ஆதரவாளர்களுக்கும் ஆத்திரமூட்டின. றூஜிலோ கொல்லப்பட்ட பின்னர், கென்னடி ஹைட்டியில் மூன்று சாத்தியங்களை திட்டமிட்டார்: “ஒரு வரம்புமீறாத ஜனநயாக ஆட்சி, றூஜிலோ ஆட்சியை தொடருதல், அல்லது ஒரு காஸ்றோ அரசு,” என அவர் ஆலோசகர்களுக்கு கூறினார். “நாம் முதலாவதை குறிக்கோளாகக் கொள்ள கடமைப்பட்டிருந்தாலும், மூன்றாவதை நாம் தவிர்க்கின்றோம் என்பதையிட்டு நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளும் வரை எங்களால் இரண்டாவதை கைவிட முடியாது” என்றார். இந்த சூத்திரம் ஜூவான பொஷ்ஷின் குறுகிய கால ஆட்சிக்கு விளக்கமளித்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர்: செக்கோஸ்லோவாகியாவில் மியூனிஸ் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது 1938 செப்டெம்பர் 26 அன்று மாலை, பிரிட்டிஷ் பிரதமர் நெவில்லே சம்பர்லைன்னின் நெருங்கிய ஆலோசகர், சேர் ஹொரஸ் வில்சன், ஜேர்மன் அரச அலுவலகத்தில் வைத்து அடொல்ப் ஹிட்லரை சந்தித்தார். செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து ஜேர்மனிக்கு ஒரு மேற்பார்வையுடன் சுடெடென்லான்ட்டை பிராந்திய மாற்றம் செய்வதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் சிபாரிசு செய்கின்றது என ஜேர்மன் சர்வாதிகாரிக்கு வில்சன் தெரிவித்தார். இராணுவ நடவடிக்கை எடுப்பதாக பிரிட்டனையும் பிரான்சையும் அச்சுறுத்திய ஹிட்லர், அக்டோபர் 1ம் திகதி ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கான விதிகளை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளுமாறு செப்டெம்பர் 28 அன்று பி.ப. 2 மணிவரை செக்குகளுக்கு காலநேரம் கொடுத்து பதிலளித்தார். பீதி பற்றிக்கொண்ட அரச குடும்ப அதிகாரி, தீர்வு ஒன்றை வடிவமைக்க இத்தாலிய சர்வாதிகாரி பெனிடோ முசோலினியின் பக்கம் திரும்பி, தலையீடு செய்யுமாறு இத்தாலிய வெளியுறவு அமைச்சர் கலேஸோ சியானோவிடம் பரிந்து கேட்பதற்காக, இத்தாலிக்கான பிரிட்டிஷ் தூதுவர் பேர்த் பிரபுவை அனுப்பியது. ஜேர்மனிக்கான இத்தாலிய தூதுவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட முசோலினி பின்வரும் அறிவுறுத்தல்களைத் தெரிவித்தார்: “மேலும் ஒருமுறை சென்று, என்ன நடந்தாலும் நான் அவர் பக்கம் இருப்பேன் என்றும், ஆனால் பகைமைகள் தொடங்குவதற்கு முன்னதாக 24 மணி நேர தாமதத்தை நான் கேட்டுக்கொண்டதாகவும் சொல்.” அகமகிழ்வுற்ற ஹிட்லர், முசோலினியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இப்போது அரச குடும்ப அதிகாரி, செக்கோஸ்லோவாகியாவின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு செப்டெம்பர் பி.ப. 2 மணிக்கு முன்னர் மியூனிச்சில் தொடங்கவிருந்த மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் இத்தாலியையும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். நாசிகளின் யுத்தத்துக்கான மோகத்தை ஜேர்மன் வெகுஜனங்கள் விரும்பவில்லை. செப்டெம்பர் 27, ஜேர்மன் இராணுவத்தின் போக்குவரத்துப் பிரிவு, வில்ஹெலம் வீதியூடாக அணிவகுத்துச் சென்று அரசாங்க கட்டிடங்களையும் கடந்து சென்றது. நகரில் கூடியிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்களை இந்த அணிவகுப்பு அச்சுறுத்தும் என்ற எண்ணத்துடன் ஹிட்லர் மூன்று மணித்தியாலங்களாக இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார். எனினும், இந்த இராணுவ அணிவகுப்பில் இருந்து பிரஜைகள் தூரவிலகியே இருந்தனர் என அமெரிக்க ஊடகவியலாளர் வில்லியம் ஷெய்ரெர் குறிப்பிட்டிருந்தார். பேர்லினர்கள் அணிவகுப்பு நடந்த பகுதியில் கதவடியில் தலைகுணிந்த படியே நின்றதோடு, “நான் கண்டதிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க யுத்த விரோத வெளிப்பாடாக” அவர்கள் பாசிச யுத்த இயந்திரங்களைக் கண்டு கண்களைத் திருப்பிக்கொண்டனர் என அவர் விவரித்திருந்தார். சில மணித்தியாலங்களுக்கு முன்னர்தான், ஸ்போர்ட் பிளாஸ்ட்டில் கூடிய ஆயிரக்கணக்கான பாசிச வெறியர்களிடமிருந்து அவரது போரூக்கமுள்ள அச்சுறுத்தல்கள் பெற்றுக்கொண்ட மிகையுணர்ச்சி பிரதிபலிப்புக்கு நேர் மாறாக, பேர்லினர்களின் எதிர்ச்செயலால் ஹிட்லர் மிகவும் அவமதிப்புக்குள்ளானதோடு ஆத்திரமடைந்தார். ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியர், இரு பார்வையாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை சுட்டிக்காட்டினார். “ஸ்போர்ட் பிளாஸ்ட்டில் இருந்த பொறுக்கி எடுக்கப்பட்ட கூட்டத்தினரின் பிரதிபலிப்புகளுடனான முரண்பாடுகள் தெளிவாக இருந்தன. அது நாடு பூராவும் நிலவிய மனநிலையின் ஒரு அடையாளமாகும். சுடடென் ஜேர்மனியர்களின் உணர்வுகள் என்னவாக இருந்தாலும், மேற்கத்தைய சக்திகளுக்கு எதிராக ஒரு யுத்தம் பெறுமதியானது என வெறிகொண்ட சிறுபான்மை மட்டுமே நினைத்தது.” 100 ஆண்டுகளுக்கு முன்னர்: கிளர்ச்சியின் பின்னர் சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில் பதட்டங்கள் 1913ல் இந்த வாரம், பீகிங்கில் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியின் முடிவுக் கட்டத்தின் போது, நன்கிங்கில் மூன்று ஜப்பான் பிரஜைகள் மரணித்தது சம்பந்தமாக, சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான பதட்டங்கள், ஒரு பிரதான இராஜதந்திர குழப்பமாக விரிவடைந்தது. ஜனாதிபதி யுவன் ஷிகை, ஏறத்தாழ சர்வாதிகார அதிகாரங்களை கையில் எடுத்தமைக்கு பிரதிபலிப்பாக, கோமின்டாங்கின் தலைமையில் ஜூலையில் கிளர்ச்சி தொடங்கியது. அது வன்முறையில் நசுக்கப்பட்டு செப்டெம்பரில் முடிவுக்கு வந்தது. செப்டெம்பர் 27 அன்று, மூன்று நாள் இறுதி நிபந்தனையுடன், நன்கிங்கில் உள்ள சீன அதிகாரிகளிடம் இருந்து ஒரு உத்தியோகபூர்வ மன்னிப்பைக் கோருவதாக ஜப்பானிய அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்தது. மேலதிகமாக 100 ஜப்பான் கடற்படையினரைக் கொண்ட பிரிவுடன் மீள்பலப்படுத்தப்பட்ட, கனமாக வலுப்படுத்தப்பட்டிருந்த துணைத் தூதரகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுமாறு நன்கிங்கில் இருந்த ஜப்பானிய பிரஜைகளுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டது. இறுதி நிபந்தனைக்கு சீனப் பிரதிபலிப்பை எதிர்பார்த்து, யங்டெஸ் ஆற்றுக்கு ஜப்பான் யுத்தக் கப்பல்கள் அனுப்பப்பட்டன. இது “யுத்த அச்சுறுத்தல்” என நியூ யோர்க் டைம்ஸ் வருணித்த ஒரு நடவடிக்கையாகும். ஜப்பானின் கோரிக்கை விடுத்து சில நாட்களுக்குள், நன்கிங்கில் சீன துருப்புக்களின் கட்டளைத் தளபதி ஜெனல சங் சுங், சுமார் 800 சீனப் படையினர் பாதுகாத்து வந்த ஜப்பான் துணைத் தூரகத்திடம், தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோரினார். இந்த மன்னிப்புக் கோரல் உடனடி எல்லை மோதல் அச்சுறுத்தலை தவிர்த்தது. டோக்கியோவின் இந்த ஆக்கிரோஷமான பதிலிறுப்பு, பல மாநகரங்களிலும் கூட்டங்களில் வெளிப்பாட்டைக் கண்ட ஜப்பான் தேசியவாத உணர்வுகளின் பிரதிபலிப்பாகும். பல்வேறு பெரும் வல்லரசுகள் சீனாவின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயற்சித்த நிலைமைகளின் கீழேயே இது இடம்பெற்றது. சீனாப் பிராந்தியத்தின் சில பகுதிகள் ஏகாதிபத்திய துருப்புக்களின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, இந்த அரசியல் எழுச்சிகளின் உள்ளர்த்தங்கள் தமது நலன்களுக்கு ஏற்படுத்தவுள்ள பாதிப்பையிட்டு பெரும் வல்லரசுகள் கவலை கொண்டிருந்தன. ஏப்பிரலில், ஜப்பானிய அரசாங்கமானது பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் ஜப்பானிடமும் இருந்து 25 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றிருந்தது. |
|