World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Tamil political activist arrested and deported

இலங்கையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டார்

S. Jayanth
29 November 2013

Back to screen version

தமிழ் அரசியல் செயற்பாட்டாளரும் கவிஞருமான ... ஜெயபாலன் கடந்த 22ம் திகதி இலங்கையின் வடக்கில் மாங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஜெயபாலன் விசா விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்தக் கைது, அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிரிகளை வாய்மூடச் செய்யும் மற்றும் பொதுவில் அரசாங்கத்தின் மீது அதிருப்திகொண்டுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தும் இலக்கினை கொண்ட ஒரு தொடர் அரச தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, ஜெயபாலனின் தமிழ் பிரிவினைவாத அரசியலினை முழுமையாக நிராகரிக்கும் அதே சமயம், அது அவரின் ஜனநாயக உரிமைகள் மீது அரசின் தாக்குதல்களை கண்டனம் செய்கின்றது.

ஜெயபாலன் 1980 களில் தமிழ் தேசிய தீவிரவாத அமைப்புக்கள் இந்தியாவில் இந்திய அரசின் இராணுவ பயிற்சிகள் பெற்ற நாட்களில் இருந்தே, இந்திய அரசின் அரசியல் நலன்களின் பிரதிநிதியாக இந்த இயக்கங்களுக்குள் செயற்பட்டு வந்திருந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மொழிவாரி மாநிலத்தை உருவாக்குவதே இவரது அரசியல் நிலைப்பாடு ஆகும்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) இந்திய அரசுடன் கழகத்தின் சார்பான இணைப்பாளராகவும், கொள்கை வகுப்பாளராகவும், இவர் 1985 திம்பு பேச்சுவார்த்தை வரை ஒரு பிரதான பாத்திரத்தினை வகித்திருந்தார். 2001ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நோர்வே தலைமையில் இடம்பெற்ற சமாதான நடவடிக்கைகளில் அணுசரனையாளராகவும் இருந்தார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இனவாத யுத்தத்தின் காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்களில் 67 வயதான ... ஜெயபாலனும் ஒருவர்.

2009ல் புலிகளின் தோல்வியுடன் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததோடு, வடக்கில் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பெருமை பேசிக்கொள்கின்ற ஒரு சூழ்நிலையிலேயே ஜெயபாலன் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஒரு ஊடகவியாளர்கள் சந்திப்பை நடத்திய அவர், இந்தியா போன்ற ஒரு மொழிவாரி மாநில பாணியிலான அமைப்பை இலங்கையில் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் 2006 நடுப்பகுதியில் யுத்தத்தை புதுப்பித்திருந்த நிலையில் அந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரது தாயாரின் மரணத்துக்கு ஜெயபாலனால் சமூகமளிக்க முடியவில்லை. இதனால் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து மாங்குளத்தில் தாயாரின் சமாதியைப் பார்க்க சென்ற  போது பயங்கரவாத புலனாய்வாளர்கள் அவரை கைது செய்தனர். அதையடுத்து அவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்ட பின்னர் புதன் கிழமை நோர்வேக்கு நாடுகடத்தப்பட்டார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பீ. அஜித் ரோஹன, சுற்றுலா விசாவில் வந்த ஜெயபாலன் கூட்டங்கள் நடத்தியதோடு யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்தியதாக குறிப்பிட்டார். அவர்இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் கருத்துக்களைதெரிவித்ததாக அஜித் ரோஹன கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மக்களின் எதிர்ப்பைத் திசை திருப்புவதன் பேரில், ஜெயபாலன் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படும் விதத்தில் செயற்பட்டிருக்க மாட்டார் என உறுதியளித்ததோடு அவரை விரைவில் விடுவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அரசாங்கத்தின் இன்னொரு பங்காளியும், இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் மற்றும் அதன் சகல ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் உடந்தையாக இருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (.பீ.டி.பீ.), ஜெயபாலனின் கைதையும் தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இராணுவ அடக்குமுறையையும் நியாயப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் இறுதி வாரமானது புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை ஒட்டியதாக இருப்பதால், தேவையற்ற அசம்பாவிதங்களுக்கு இடமளித்துவிடக் கூடாது என்பதில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பது வழமையாகும், எனத் தெரிவிக்கும் அந்த அறிக்கை, “இக்காலகட்டத்தில் ஜெயபாலனின் வருகையும், அவர் காட்டிய பரபரப்பும் இந்தஅசம்பாவிதங்களுக்குகாரணமாக அமைந்திருக்கலாம்எனத் தெரிவிக்கின்றது.

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழத் தள்ளப்பட்டுள்ளதோடு, இராணுவம் பத்தாயிரக்கணக்கான ஏக்கர்களை ஆக்கிரமித்து அங்கு நிரந்தரக் கட்டிடங்களையும் குடியிருப்புக்களையும் அமைத்து தனது ஆக்கிரமிப்பை இறுக்கி வருகின்றது.

யுத்தத்தின் கடைசி நாட்களில் பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டமை சம்பந்தமான யுத்தக் குற்றச்சாட்டுக்களை சர்வதேச ரீதியில் எதிர்கொள்கின்ற அரசாங்கம், வடக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் அம்பலத்துக்கு வருவதை தடுப்பதில் விழிப்புடன் உள்ளது. அதே சமயம், வெளிநாடுகளில் புலிகளுக்கு சார்பான குழுக்கள் அரசாங்கத்தின் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருவதன் காரணமாக, அரசாங்கம் புலம்பெயர் தமிழர்கள் சம்பந்தமாக கசப்புணர்ச்சி கொண்டுள்ளது. ஜெயபாலன் கைது செய்யப்பட்டமை, புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் தமிழர்களை புலனாய்வுத்துறை கண்காணித்து வருவதையே காட்டுகின்றது.

அரசாங்கம் அண்மைக்காலமாக தமிழர்கள் மட்டுமன்றி வெளிநாட்டில் இருந்து வரும் ஏனையவர்கள் சம்பந்தமாகவும் கடும் போக்கை கடைபிடித்து வருகின்றது. கடந்த மாத கடைசியில், சுதந்திர ஊடக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட சர்வதேச பத்திரிகையாளர்கள் சமாசத்தின் இரு பத்திரிகையாளர்கள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படனர்.

அதைத் தொடர்ந்து இலங்கையில் இம்மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டுக்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் வருகை தந்திருந்த, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல் 4 தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர்களை வடக்குக்கு செல்லவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டது. செனல் 4ன் ஊடகவியலாளர் ஹெலன் மெக்ரே அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக மூன்று விவரணத் திரைப்படங்களைத் தயாரித்தவராவார். அவரும் அவரது குழுவினரும் வடக்குக்கு ரயிலில் சென்ற போது அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் அனுராதபுரத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்து அவர்களை வடக்கிற்கு செல்லவிடாமல் தடுத்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற குடிவரவு அதிகாரிகள், அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர். செனல் 4 நிருபர்கள் ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைய முயற்சிப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு தக்க ஆதாரங்களை அவர்கள் முன்வைக்கவில்லை. எவ்வாறெனினும், செனல் 4 அலுவலர்கள் தொடர்ச்சியான தொந்தரவுகளின் காரணமாக திரும்பிச் சென்றுவிட்டனர்.

இதே காலப் பகுதியில் வட பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த .எஃப்.பீ. நிருபர்களையும் சுதந்திரமாக செயற்படவிடாமல் இராணுவத்தினர் தடைகள் போட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் நபர் என்ற வகையில், ஜெயபாலன் நாடு கடத்தப்பட்டமை இலங்கை இந்திய ஆளும் தட்டுக்களின் முறுகல் நிலையை சமிக்ஞை செய்கின்றது. எவ்வாறெனினும் மேற் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள், அரசாங்கம் தனது எதிரிகளாக அது கருதுபவர்களை தண்டிப்பதற்கும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்களை மூடி மறைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் தீர்மானித்துள்ளதையே காட்டுகின்றது