World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP announces workers’ inquiry into Weliweriya water pollution

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, வெலிவேரிய தண்ணீர் மாசுபடுதல் குறித்து தொழிலாளர் விசாரணையை அறிவிக்கின்றது

By the Socialist Equality Party
19 November 2013

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), இலங்கையின் மேல் மாகாணத்தில் வெனிக்ரோஸ் டிப்ட் புரடக்ஸ் நிறுவனத்தினால் உள்ளூர் தண்ணீர் விநியோகம் மாசுபடுத்தப்படுவது சம்பந்தமாக தொழிலாளர் விசாரணை ஒன்றை முன்னெடுக்கின்றது.

ஆகஸ்ட் 1 அன்று, தண்ணீர் மாசுபடுதல் சம்பந்தமாக வெலிவேரிய கிராமத்தவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை நசுக்குவதற்கு இராணுவத்துக்கும் பொலிசுக்கும் அரசாங்கம் கட்டளையிட்டது. இந்த தாக்குதலில் இரு மாணவர்களும் ஒரு இளம் தொழிலாளியும் கொல்லப்பட்டதோடு பெருந்தொகையானவர்கள் காயமடைந்தனர்.

இந்தப் படுகொலைகள் பரந்தளவு வெகுஜன எதிர்ப்பை கிளறிவிட்டு, உள்ளூர் நிலத்தடி தண்ணீரில் அமிலத்தன்மை பற்றி விசாரணை நடத்த வாக்குறுதியளிக்கவும் கொலைகள் சம்பந்தமாக விசாரிக்க இராணுவ நீதிமன்றம் அமைக்க அரசாங்கம் நெருக்கப்பட்டது. இவை வெனிக்ரோஸ் நிறுவனத்துக்கு (Venigros Company) காலம் எடுத்துக்கொள்ளவும் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கையை மூடி மறைக்கவும், வெகுஜனங்களின் எதிர்ப்பை திசை திருப்பவும் மேற்கொள்ளப்பட்ட வெட்கங்கெட்ட நடவடிக்கையே அன்றி வேறொன்றும் அல்ல.

உள்ளூர் நீர் விநியோகத்தை அரசாங்க ஆய்வாளர்கள் பரீட்சிப்பர் என உள்ளூர் கிராமத்தவர்களுக்கு ஆகஸ்ட்டில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தெரிவித்தார். தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐடீஐ) உட்பட அரசாங்க நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்கள் குழு ஒன்று தண்ணீர் மாதிரிகளை பரிசோதிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராபக்ஷ வாக்குறுதியளித்தார்.

தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியில் தண்ணீரில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக ஐடீஐ அறிவித்த போதிலும், தோற்றுவாயை கண்டுபிடிக்கவில்லை. ஒரு அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இராணுவ நீதிமன்ற விசாரணையை பொறுத்தளவில் முடிவு ஏற்கனவே தெளிவானது. ஆகஸ்ட் 1 வன்முறைக்கு கட்டளையிட்டதில், அரசாங்கத்தின் பாத்திரத்தை மூடி மறைப்பதன் பேரில், தனிப்பட்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் பலிகடாக்களாக்கப்படுவர் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

இந்த மூடிமறைப்புகளுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த விசாரணையில் பின்வரும் விடயங்கள் ஆராயப்படும்:

* வெனிக்ரஸ் நிறுவனம் உள்ளூர் தண்ணீர் விநியோகத்தை மாசுபடுத்தியமை மற்றும் கிராமத்தவர்களதும் தொழிலாளர்களதும் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமை.

* நிறுவனத்தின் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் நிலைமைகள்.

* ஆகஸ்ட் 1 கொலைகளுக்கு பொறுப்பாளிகள் யார்

* தொழிலாளர்களதும் உள்ளூர்வாசிகளதும் உடல்நலத்துக்கு ஆபத்து ஏற்படுத்திய தொழிற்துறை மாசுபடுத்தலின் மூலத்துக்கான தீர்வு.

சோசலிச சமத்துவக் கட்சி வாய்மூல மற்றும் எழுத்து மூல ஆதராங்களை சேகரிக்க ஒரு விசாரணை குழுவை ஸ்தாபித்துள்ளதோடு அதன் சொந்த விசாரணைகளை முன்னெடுக்கும். இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக முன்னிலைக்கு வருமாறு தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தவர்கள், அதேபோல் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் இந்த விவகாரம் சம்பந்தமான அறிவு கொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.

வெனிக்ரஸ் தொழிலாளர்கள் மற்றும் வெலிவேரிய வாசிகளுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளையும் நிராகரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி விசேடமாக அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது.

ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் வெனிக்ரஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களான ரோயல் என்டபிரைசஸ் மற்றும் ஒல்கா என்டபிரைசஸ்சும் தமது தொழிற்சாலைகளை மூடிவிட்டன. ஆகஸ்ட்டில் இருந்து சுமார் 600 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்காததோடு சுமார் 60 நிரந்தரத் தொழிலாளர்கள் தமது அடிப்படை சம்பளத்தை மட்டுமே பெற்றனர்.

கிராமத்தவர்களுக்கு எதிரான பகைமையை கிளறிவிட முயற்சிக்கும் அரசாங்கமும் கம்பனியும் அவர்கள் தொழிலாளர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றன. ஆனால், அரசாங்கத்தின் உடந்தையும் உதவியும் கொண்ட வெனிக்ரஸ் நிறுவனமே தண்ணீர் மாசுபடுவதை நிறுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றது.

உள்ளூர் வாசிகளையும் தொழிலாளர்களையும் கம்பனி அலட்சியத்துடன் நடத்துகின்றது. அதன் தொழிற்சாலை, மருத்துவம் சாராத இரப்பர் கையுறைகளை உற்பத்தி செய்கின்றது. அன்றாடம் சுமார் 15,000 லிட்டர் கழிவு நீரை வெளியிடுகின்றது. ஆலைக்குள், பெரும்பாலான தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு ஒப்ந்த தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். மார்ச் மாதம், ஊதியம் மற்றும் நிலைமைகளை மேம்படுத்தும் முயற்சியில் தொழிற்சங்கம் ஒன்றை அமைத்தமைக்காக வெனிக்ரஸ் சுமார் 120 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது.

எனினும் நிறுவனம் பிரமாண்டமான இலாபத்தை பெற்றுள்ளது. 2012 மார்ச் வரையான நிதியாண்டில் வரி செலுத்துவதற்கு முந்தைய இலாபம் 2.38 பில்லியன் ரூபாய்களாகும். முந்தைய ஆண்டை விட இது மூன்று மடங்கு அதிகரிப்பாகும். இந்தப் போக்கு 2012-13 ஆண்டிலும் காணப்படுவதோடு, வரி செலுத்துவதற்கு முந்தைய இலாபம் 2.1 பில்லியன் ரூபாய்களாகும்.

இராஜபக்ஷ அரசாங்கம் வெனிக்ரஸ் கம்பனியை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியின் இலங்கை மீதான தாக்கம் மோசமடைந்து வரும் நிலையில், தமது நலன்களைப் பாதுகாக்க எதனையும் செய்யத் தயாராக உள்ள பெரும் வர்த்தகர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அரசாங்கம் ஒரு சமிக்ஞையை அனுப்ப விரும்புகின்றது. ஆகஸ்ட் 1 இராணுவப் பாய்ச்சலானது, 26 ஆண்டுகால யுத்தத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட ஒடுக்குமுறை வழிமுறைகள் உழைக்கும் மக்களின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கப் பயன்படுத்தப்படும் என்ற எச்சரிக்கையை விடுக்கின்றது.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ), அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாகாண சபை தேர்தல்களில் தனது வாய்ப்புகளை பெருப்பித்துக்கொள்வதற்காக வெலிவேரிய ஆர்ப்பாட்டங்களை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்த வலதுசாரி முதலாளித்துவ யூஎன்பீயை ஜனநயாகத்தினதும் சாதாரண உழைக்கும் மக்களதும் பாதுகாவலனாக முன்னிலைப்படுத்தும் போலி இடது பங்காளிகளான நவ சம சமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் அதற்கு உதவி செய்கின்றன.

வெலிவேரிய பிரதேசத்தில், யூஎன்பீ, நவ சம சமாஜ மற்றும் உள்ளூர் யூஎன்பி உறுப்பினர் தலைமையிலான சியனே நீர் பாதுகாப்பு இயக்கமும், ஆகவும் குறுகிய கோரிக்கைக்குள் அடங்கிய கூட்டங்களை ஒழுங்கு செய்கின்றனதொழிற்சாலையை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு அவை கோருகின்றன. அப்போது அங்குள்ள மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அது கேடு விளைவிக்கும்.

வெலிவேரிய தண்ணீர் மாசுபடுதல், பனிப்பாறையின் நுனி மட்டுமே. அக்டோபர் 9 அன்று, அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் குளோரின் தாங்கியில் இருந்து வரும் குழாய் வெடித்ததில், அவிஸ்ஸாவலையில் நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அக்டோபர் 21 அன்று, கஸ்பேவயில் உள்ள எஸ் அன்ட் டி தொழிற்சாலையில் அமோனியா கசிவின் காரணமாக கிட்டத்தட்ட 350 கிராமத்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொழிற்துறை மாசுபடுத்தலால் உலகம் பூராவும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தகைய சம்பவங்கள் அடிக்கடி உலக நிறுவனங்களுக்கு பிரதான மலிவு உழைப்புக் களமாக உள்ள சீனா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷிலும் இடம்பெறுகின்றன. இது இலாபத்துக்கான இடைவிடாத உந்துதலுக்காக உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை அடிபணியச் செய்யும் சமூக ஒழுங்கின் விளைவே ஆகும்.

இராஜபக்ஷ அராசங்கத்துடன் சேர்த்து வெனிக்ரஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்காக தொழிலாளர் விசாரணையை நடத்துவதானது, தொழிற்துறை மாசுபடுத்தலை நிறுத்தி அனைவருக்கும் ஒழுக்கமான தொழில் மற்றும் வாழ்க்கைத் தரங்களை உத்தரவாதம் செய்யும் போராட்டத்துக்கான ஒரு முக்கியமான முதற் படியாக இருக்கும். இந்த விசாரணையை அபிவிருத்தி செய்யும் பிரச்சாரத்தில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், கிராமத்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்நிபுணர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.