World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Heightened tensions over China’s air defence zone

சீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் மீது பதட்டங்கள் உக்கிரமடைகின்றன

John Chan
26 November 2013

Back to screen version

ஒபாமா நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால் எரியூட்டப்பட்டுள்ள அபாயங்களின் மற்றொரு அறிகுறியாக, சீன கடலில் ஒரு "வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை" (ADIZ) சனியன்று சீனா அறிவித்தது. இந்த புதிய மண்டலம் இதேபோன்ற ஜப்பானிய ADI மண்டலத்திற்கு உள்ளே வருகிறது. மேலும் அப்பிராந்தியத்தின் வெடிப்பு புள்ளிகளில் ஒன்றாக விளங்கும் மற்றும் இருநாடுகளும் தங்களுக்கென்று உரிமைகோரும் சென்காகூ தீவுகளையும் (சீனாவில் இது தியாவூ என்றழைக்கப்படுகிறது) உள்ளடக்கி உள்ளது.

சீனாவின் ADI மண்டலத்தை அமெரிக்காவும் ஜப்பானும் நிராகரிப்பதாக அறிவித்தன. தவறான மதிப்பீடுகளினாலோ அல்லது சீன உத்தரவுகளை அமெரிக்க மற்றும் ஜப்பானிய யுத்த விமானங்கள் மதிக்க மறுப்பதனாலோ, ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடிய, இராணுவ விமானங்களுக்கு இடையிலான அபாயகரமான தாக்குதல்களுக்கு இது களம் அமைக்கிறது. "அப்பிராந்தியத்தில் அமெரிக்கா எவ்விதத்தில் இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகிறதோ, அது எவ்விதத்திலும் சீனாவின் அறிவிப்பால் மாறப் போவதில்லை," என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல் அறிவித்தார். செக்காகூ/தியாவூ தீவுகள் மீது சீனாவுடன் ஏற்படக்கூடிய ஒரு யுத்த சம்பவத்தில் அமெரிக்கா தானாகவே முன்வந்து ஜப்பானை ஆதரிக்கும் என்ற ஒபாமா நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

பெரும்பாலான சர்வதேச ஊடக வடிகால்கள் "நடைமுறை நிலைமையை மாற்ற" விழைந்ததற்காக மற்றும் பிராந்திய ஸ்திரப்பாட்டு அச்சுறுத்தலுக்காக "ஒரு தாக்குதல் தொடங்கும் சீனாவை" குற்றஞ்சாட்டுகின்றன. எதார்த்தத்தில், ஜப்பானை இராணுவரீதியில் புதுப்பிக்க மற்றும் அதன் பிராந்திய அபிலாஷைகளை உறுதிப்படுத்த ஜப்பானுக்கு வாஷிங்டன் வழங்கும் ஊக்குவிப்பால் உருவான பல ஆத்திரமூட்டல்களுக்கு சீனா விடையிறுப்பு காட்டிக் கொண்டிருக்கிறது.

முன்பில்லாத அளவிற்கு 2010க்குப் பின்னர், அந்த சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகிலுள்ள கடலில் ஜப்பானிய கடற்படை ஒரு சீன மீன்பிடி கப்பல் கேப்டனைக் கைது செய்த போது, அதையொரு முக்கிய இராஜாங்க அமளியாக தூண்டி, ஒபாமா நிர்வாகம் நீண்ட காலமாக இருந்துவரும் இந்த கடல்வழி சர்ச்சையில் டோக்கியோவிற்கு ஆதரவளித்துள்ளது. திருப்புமுனை செப்டம்பர் 2012இல் வந்தது, ஜப்பானின் முந்தைய ஜனநாயக கட்சி அரசாங்கம் ஒருதலைபட்சமாக சென்காகூஸை "தேசியமயமாக்கிய" போது, சீனாவுடன் எப்போதுக்குமான ஒரு முரண்பாட்டிற்கு இட்டுச் சென்றது. அதற்கு விடையிறுப்பாக, ஜப்பானிய கட்டுப்பாட்டிற்கு சவாலாக, பெய்ஜிங் கடலோர உளவு கப்பல்கள், விமானங்கள் மற்றும் டிரோன்களை அப்பகுதிக்கு அனுப்பி ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுத்தது.

வலதுசாரி தாராளவாத ஜனநாயக கட்சி அரசாங்க பிரதம மந்திரி ஷின்ஜோ அபே கடந்த டிசம்பரில் அதிகாரத்திற்கு வந்த பின்னர் பதட்டங்கள் படிப்படியாக தீவிரப்பட்டன. ஒரு "வலுவான இராணுவத்துடன்" ஒரு "வலுவான தேசத்தை" உருவாக்க உறுதிபூண்டு, ஜப்பானிய மீள்-இராணுவமயமாக்கலின் ஓர் அடித்தளத்தின் மீது அபே நின்றிருந்தார். பதவிக்கு வந்ததில் இருந்தே, அபே அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்களையும் மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவ ஆயத்தங்களுக்குள் ஜப்பானை ஒருங்கிணைப்பதையும் அதிகரித்துள்ளது.

இத்தகைய தயாரிப்புகள் டோக்கியோவில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு இடையே நடந்த வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் அளவிலான கூட்டங்களின் போது அக்டோபரில் காட்சிக்கு வந்தன. “முன்னெடுப்புக்கு" அமெரிக்கா ஏற்ற பொறுப்பைக் குறித்து ஆசிய அரசாங்கங்களுக்கு மத்தியில் நிலவும் கவலைகளுக்கு இடையே, நீண்டகால குளோபல் ஹாவ்க் (Global Hawke) உளவு டிரோன்கள் மற்றும் செங்குத்தாக பறக்கத் தொடங்கும் F-35B ஸ்டீல்த் யுத்த விமானங்கள், அத்தோடு நவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புமுறைகள் ஆகியவை உட்பட ஜப்பானில் ஒரு பாரிய அமெரிக்க இராணுவ கட்டமைப்பை அறிவிக்க வாஷிங்டன் அந்த கூட்டத்தில் சமர்பித்த கூட்டறிக்கையை பயன்படுத்தியது.

அனைத்திற்கும் மேலாக, யுத்த சம்பவத்தில் மற்றும் "முன்னெச்சரிக்கை தாக்குதல்கள்" தொடங்குகையில்அதாவது, ஜப்பான் அதன் சொந்த ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்துகையில்அமெரிக்க எதிர்பலங்களோடு ஜப்பானிய இராணுவம் நெருங்கி செயல்பட அனுமதிக்கும் வகையில் ஜப்பானிய அரசியலமைப்பின் ஒரு மறுதிருத்தத்திற்கு வாஷிங்டன் வெளிப்படையாகவே அழுத்தம் அளித்து வருகிறது. “தென்மேற்கு அவசரநிலைமைகளின்" போது, அதாவது சீனாவுடனான மோதலில், விரைவாக துருப்புகளை நிறுத்த, ஒரு கடற்படையை ஸ்தாபகம் செய்வது உட்பட, ஒரு பரந்த இராணுவ விஸ்தரிப்புக்கு அபே தாமே அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஒகினாவா பிராந்தியத்தில் முடிவுற்ற பெரியளவிலான இரண்டு வார ஜப்பானிய இராணுவ ஒத்திகையின் போது சீனாவிற்கான உட்குறிப்புகள் வெளிப்படையாக இருந்தன. 34,000 துருப்புகள் மற்றும் 350 யுத்த விமானங்கள் பங்கெடுத்த அந்த ஒத்திகை, அப்பிராந்தியத்தில் சீனாவின் ஒரு தாக்குதலை உருவகப்படுத்தி ஏவுகணை தடுப்பு கப்பல்களைப் பயன்படுத்துவதன் மீதும் மற்றும் அத்தோடு பிரதான தீவுகளைக் கைப்பற்ற நிலத்திலும் நீரிலும் தரையிறங்குவதின் மீதும் குவிந்திருந்தது. இத்தகைய உத்திகள் அனைத்தும் பெண்டகனின் வான்நீர் யுத்த மூலோபாயத்தின் (AirSea Battle strategy) பாகங்களாகும். அதில் கடலில் முற்றுகையிடுவதோடு சேர்ந்து, சீனாவின் மீது ஒரு நாசகரமான விமான மற்றும் ஏவுகணை தாக்குதலும் உள்ளடங்கி இருந்தது.

அமெரிக்க மற்றும் ஜப்பானிய இராணுவ தயாரிப்புகளை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியில் சீனா அதன் கிழக்கு சீன கடல் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை அறிவித்துள்ளது. முதல் சான்றாக, முக்கிய உளவு செய்திகளைச் சேகரிக்க பல தசாப்தங்களாக சீன கடற்பகுதிகள் மற்றும் திறன்மிக்க இராணுவ தளங்களுக்கு மிக நெருக்கமாக பறந்துள்ள அமெரிக்க இராணுவ விமானங்கள் அப்பகுதியை அணுகுவதைத் தடுக்கும் முயற்சியில் அந்த மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக பரந்தளவில், அமெரிக்க மற்றும் அதன் பங்காளிகளிடமிருந்து அதிகரித்துவரும் இராணுவ அழுத்தத்திலிருந்து பெய்ஜிங்கால் நீண்ட காலத்திற்குப் பின்வாங்க முடியாது என்ற சீன பாதுகாப்பு வட்டாரங்களில் உள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் அது உள்ளது.

அமெரிக்காவுடன், அத்தோடு ஜப்பானுடனும் சீனா யுத்தத்திற்கு இராணுவரீதியில் தயாராக இருக்க வேண்டியுள்ளதாக சீனாவின் தேசியவாத குளோபல் டைம்ஸின் ஒரு தலையங்கம் இன்று அறிவித்தது. அது குறிப்பிட்டது: “ஓர் இராணுவ விபரீதம் உடைத்துக் கொண்டு வரும்போது அந்த மோசமான தருணத்தை மக்கள் விடுதலை இராணுவம் கணக்கில் எடுத்து பார்க்க வேண்டி உள்ளது என்பதில் நாங்கள் உடன்பட்டுள்ளோம். இந்த சீனோ-ஜப்பானிய பிராந்திய விவகாரத்தில் வாஷிங்டன் தலையீடு செய்ய முயன்றால், சீனா அதன் சகவாசத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது,” என்றது.

அதேவேளையில், ஜப்பானில் உள்ள அபே அரசாங்கத்தைப் போன்றே, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) தலைமையும் அங்கே உள்நாட்டில் வளர்ந்துவரும் சமூக பதட்டங்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியில் தேசியவாத உணர்வுகளைத் தூண்டி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த CCP மத்திய கமிட்டி உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட சந்தை-சார்பு மறுகட்டமைப்பிற்கான நீண்டகால திட்டங்களின் ஒரு விளைவாக ஏற்கனவே சீனாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான ஆழமான இடைவெளி ஆழமடைந்து மட்டுமே செல்லும். சமூக அமைதியின்மை மீது பெய்ஜிங் ஆளும் வட்டாரங்களில் நிலவும் அச்சம், 2009க்கு பின்னர் உள்நாட்டு பாதுகாப்பு செலவுகள் இராணுவ செலவுகளை விஞ்சி உள்ளது என்ற உண்மையால் அடிக்கோடிடப்பட்டுள்ளன.

சீனா இராணுவ ஆயத்தங்கள் அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளால் நடத்தப்படும் ஒரு தாக்குதல் அபாயத்தை தடுக்கப் போவதில்லை. ஓர் ஆழ்ந்த நிதியியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த "முன்னெடுப்பு" மற்றும் இராணுவ கட்டுப்படுத்தல்களை ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஒரு முக்கிய சவாலாக உருவாகும் சீனாவை எதிர்கொள்ள ஒரே வழியாக கருதுகிறது. அனைத்திற்கும் மேலாக, சீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் படைகளின் சமநிலையை மாற்றுவதற்கு முன்னர், இந்த நோக்கத்தை எட்ட அமெரிக்க ஆளும் வர்க்கம் சீனாவின் மீது அதன் தற்போதைய பெரும் இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்த அதிகளவில் ஆர்வமாக உள்ளது.

இந்த தீவிரமடைந்துவரும் ஆயுதப் போட்டி சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் ஆபத்துக்களைக் கொண்டுள்ளது. அனைத்து அரசாங்கங்களால் தூபமிடப்பட்டு வரும் தேசியவாதம் ஒரு பொறியாகும், அதை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். சீன தொழிலாளர்களுக்கு ஜப்பானிய அல்லது அமெரிக்க தொழிலாளர்களை கொல்ல எந்த ஆர்வமும் கிடையாது. இரண்டாம் உலக யுத்தத்தின் பயங்கரங்களுக்குப் பின்னர், ஜப்பானிய தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் ஜப்பானிய இராணுவவாதத்தின் மீழெழுச்சிக்கு விரோதமாக உள்ளனர்.

யுத்தம் மற்றும் இராணுவவாதத்தின் நிஜமான காரணமாக விளங்கும் காலங்கடந்த முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட போராட்டம் மட்டுமே ஏகாதிபத்திய மோதலின் அபாயத்தைத் தடுக்க ஒரே ஆயுதமாக உள்ளது. இது ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ ஆட்சியைப் புரட்சிகரமாக தூக்கியெறிவதையும், ஒன்றுக்கு ஒன்றை போட்டியாக நிறுத்தும் தேசிய அரசு அமைப்புமுறைக்குள் உலகை பிளவுபடுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு திட்டமிட்ட உலகளாவிய சோசலிச பொருளாதாரத்தின் ஸ்தாபகத்தையும் குறிக்கிறது.