World Socialist Web Site www.wsws.org |
150 years since Lincoln’s Gettysburg Address லிங்கனின் கெட்டிஸ்பேர்க் உரையில் இருந்து 150 ஆண்டுகள்
Tom Mackaman இன்றிலிருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்ரகாம் லிங்கன் கெட்டிஸ்பேர்க் உரையை நிகழ்த்தினார். உள்நாட்டு யுத்தத்தின் இரத்தந்தோய்ந்ததொரு யுத்தகளத்தில் ஒரு தேசிய நினைவுக் கல்லறையை சமர்ப்பணம் செய்யும் நிகழ்வில் அவர் உரையாற்றினார். ஐந்துக்கும் குறைந்த மாதங்களுக்கு முன்னர் அக்களத்தில் சுமார் 46,000 சிப்பாய்கள் மரணமடைந்திருந்தனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயிருந்தனர். வெறும் 271 சொற்களில், பத்து வாக்கியங்களோடு, சுமார் இரண்டே நிமிடங்கள் நீடித்த அந்த அரிய உரையில், லிங்கன் அந்த சண்டையையும், யுத்தத்தையும் மற்றும் வரலாற்றையேயும் மனித சமத்துவத்திற்கான போராட்டத்தின் அர்த்தத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். அந்த மிகவும் விருப்பத்திற்குரியதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான உரையை நினைவுகூருகின்ற வகையில் கெட்டிஸ்பேர்க் தேசிய நினைவு கல்லறையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஜனாதிபதி பராக் ஒபாமா ஒதுக்கித் தள்ளி இருப்பது அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவரது இந்த முடிவு, அந்த யுத்தத்தின் 150வது நினைவாண்டு குறித்த ஜூலை கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்ற அவரது முடிவின் தொடர்ச்சியாக நிகழ்ந்திருந்தது. அனைத்திற்கும் மேலாக, ஒபாமா ஜனாதிபதி பதவிக்கான அவரின் முதல் பிரச்சாரத்தில் அவரது பெயரை லிங்கனோடு இணைத்துக் காட்ட முயன்றிருந்தார். 1848இல் மெக்சிகோவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ முனைப்பிற்கு எதிராய் லிங்கன் ஆற்றிய ஓர் உரையிலிருந்து, "இராணுவப் பெருமிதம் - இரத்தப் பொழிவிலிருந்து எழும் கவர்ச்சிகரமான வானவில்” என்ற ஒரு சொற்றொடரை உருவி தனது மேலங்கியாக மறைத்துக் கொள்ளும் வாய்ப்பை ஒபாமா தவற விடுவது அபூர்வமே. எவ்வாறிருந்த போதினும், சமத்துவமின்மையை முன்னெடுப்பதிலும் மற்றும் ஜனநாயக உரிமைகளை வெறுமையாக்குவதிலும் அமெரிக்க வரலாற்றில் வேறு எவரையும் விட நிறைய காரியங்கள் செய்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் காதுகளுக்கு கெட்டிஸ்பேர்க் உரையின் சொற்கள் அவ்வளவு சௌகரியமாக இருக்காது தான். கெட்டிஸ்பேர்க் மோதலை மற்றும் ஒட்டுமொத்தமாக யுத்தத்தின் ஜனநாயக மற்றும் புரட்சிகர முக்கியத்துவத்தை தொகுத்து கூறுவதன் முக்கியத்துவத்தை லிங்கன் மிக துல்லியமாக அறிந்திருந்தார். 1863 ஜூலை 1,2, மற்றும் 3இல் நடந்த அந்த சண்டை வெற்றிகரமாய் இருந்தது, கூட்டரசாங்க (Confederate) படையின் ஜெனரல் ரோபர்ட் E. லீயும் மற்றும் அவரது வடக்கு வெர்ஜீனியா படையும் வடக்கு தாக்குதலைக் கைவிட இது நிர்பந்தித்தது, என்றபோதிலும் பென்சில்வேனியா ஒன்றிய (Union) படைகளின் தளபதியான ஜெனரல் ஜோர்ஜ் மெடே, பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்த லீயின் படைகள் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்த போடோமோக் நதிக்கு மேல் மேரிலாண்டில் மாட்டிக் கொண்டிருந்த நிலையிலும், அவற்றைப் பின்தொடர்ந்து பிடிக்கத் தவறினார். மெடேயின் மடமை ஏறத்தாழ இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு யுத்தம் இழுத்துக் கொண்டு போகவிருப்பதை உறுதிப்படுத்தியது. எரிச்சலாகிபோன லிங்கன், ஜெனரலுக்கு ஒரு கடிதம் எழுதினார், இறுதியில் அதனை அனுப்ப வேண்டாம் என்று அவர் முடிவெடுத்தார். லிங்கன் எழுதினார், “லீ தப்பித்ததில் எந்தளவிற்கு துரதிருஷ்டம் இருக்குமென்பதை நீங்கள் சரியாக கணிப்பீர்கள் என்று நான் நம்பவில்லை." “அவர் சுலபமாக உங்கள் பிடிக்குள் இருந்தார், மேலும் அவரைச் சுற்றி வளைத்திருந்தால், நமது ஏனைய பிந்தைய வெற்றிகளோடு, யுத்தம் முடிவுற்று இருக்கும். இப்போது, யுத்தம் காலவரம்பின்றி நீண்டு செல்லக்கூடும்." கெட்டிஸ்பேர்க் யுத்தத்திற்கு ஒரு தலைச்சிறந்த மேன்மையை எது வழங்குகிறதென்றால், ஊகத்திற்கு இடமின்றி "ஐக்கிய அரசுகளின் ஜனாதிபதியின் சமர்ப்பன நிகழ்வு குறிப்புகள்" என்ற தலைப்பின்கீழ் அந்நாளின் நினைவு நிகழ்ச்சியில் வெளியான லிங்கன் உரையே ஆகும். லிங்கனின் “குறிப்புரைகள்” இரண்டாவதாகத் தான் வழங்கப்படவிருந்தன. சிறப்புரையாளரான எட்வார்ட் எவரெட் இரண்டு மணி நேரப் பிரசங்கத்தை வழங்கி முடித்ததன் பின்னர் தான் இக்குறிப்புரைகள் வழங்கப்பட்டன. இதனைவிடவும் இரத்தந்தோய்ந்த சண்டைகள் நடந்திருக்கலாம், ஆனால் கெட்டிஸ்பர்க் யுத்தம் போன்று முற்போக்கு இலட்சியங்களோடு மிக நெருக்கமாக அடையாளம் காணப்படுமளவுக்கு வேறெந்த சண்டையும் ஆகவில்லை. அந்த பிற சண்டைகளின் பெரும் பகுதியில் அப்படுகொலையின் அர்த்தமற்றதனத்திலேயே அவற்றின் அர்த்தம் தங்கியிருந்திருக்கிறது. இங்கே முதலாம் உலக யுத்தத்தின் சோம் (Somme) மற்றும் வேர்டன் (Verdun) படுகொலைகள் நினைவிற்கு வருகின்றன. இவை அனைத்தும் அந்த உரையிலிருந்த, "நாம் இங்கே என்ன கூறுகிறோமோ அதை உலகம் அதிகம் குறித்து வைக்காது, நீண்டகாலத்திற்கு நினைவிலும் வைத்திருக்காது, ஆனால் இங்கே இவர்கள் என்ன செய்தார்களோ [சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காக 'முழுவீச்சில் இறுதிவரையில் அர்ப்பணித்து மரியாதைக்குரிய மரணத்தை அடைந்தவர்கள்’] அதை உலகம் ஒருபோதும் மறக்க முடியாது" என்ற லிங்கனின் உறுதிப்பட்ட கூற்றினை ஒருவகை நகைமுரணாக ஆக்குகிறது. அந்த சமர்ப்பண நிகழ்ச்சிக்கு தொடக்கத்தில் லிங்கன் அழைக்கப்படவில்லை, மேலும் அந்த தேசத்தின் மிகப் பிரபல பேச்சாளர் எவெரெட் (Everett) சிறப்புரையளிக்க பிரதானமாக விளம்பரப்படுத்தப்பட்டார் என்பதும் தற்செயலானதல்ல. Bryant, Longfellow மற்றும் Whittier போன்ற கவிஞர்கள் உரையாற்றும் வாய்ப்புகளை நிராகரித்து இருந்தனர். ஆனால் லிங்கன் அவரது காரியதரிசி வகுத்திருந்த பயணத் திட்டத்தை இரத்து செய்து, சரியான நேரத்திற்கு நிச்சயமாக அங்கே இருப்பதற்கேற்ப கூடுதலாக ஒரு நாள் முன்கூட்டி இருக்கும்படி நேரம் ஒதுக்குமளவிற்கு அவர் அந்த நிகழ்ச்சிக்காக ஆர்வமாக இருந்தார். அது புத்திசாலித்தனமான முடிவு. அந்த சமர்ப்பண நிகழ்விற்கு ஆயிரக்கணக்கான மக்களின் வருகையால் இரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு விட்டிருந்த மினிசோட்டா கவர்னரால் நிகழ்ச்சிக்கு வர முடியாமலேயே போய்விட்டது. அந்த கற்பனை நவிழ்சிவாத காலக்கட்டத்தில், லிங்கன், உரைநடை பாணியில் முன்கூட்டிய முதிர்ச்சி பெற்றவராய் இருந்தார். பொதுவாக வார்த்தைகளை தெரிந்தெடுத்து ஆய்வு செய்து பயன்படுத்துவதில் ட்வெயின் மற்றும் பின்னர் வந்த ஹெமிங்வேயை அவரிடம் எதிர்பார்க்க முடிந்தது. அந்த கெட்டிஸ்பேர்க் உரையில் சந்தர்ப்பவசமாக கூட ஒரு அலங்கார சொற்பதத்தை பார்க்க முடியாது. அதுவே உரை விரிவாக இல்லாதிருப்பதை மேலும் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியதாய் ஆக்குகிறது. லிங்கன் அதில் தேதிகளையோ, குறிப்பிட்ட பெயர்களையோ அல்லது இடங்களையோ குறிப்பிடவில்லை. "கெட்டிஸ்பேர்க்" என்ற பதத்தைக் கூட அவர் கூறவில்லை. திட்டமிட்டு தான் இது செய்யப்பட்டிருந்தது. லிங்கன் கெட்டிஸ்பேர்க்கை அதன் இடம் மற்றும் காலத்தைக் கடந்து தூக்கி நிறுத்துகிறார், உள்நாட்டு யுத்தத்தை அமெரிக்க மற்றும் உலக வரலாற்றின் ஓட்டத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார். அமெரிக்கப் புரட்சி மற்றும் சுதந்திர பிரகடனம் இரண்டையும் உரையில் கொண்டு வருகின்ற போதும் இரண்டினது பெயரையும் அவர் குறிப்பிடவில்லை—"எண்பத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், நமது தந்தைமார்கள் இந்தக் கண்டத்தில் சுதந்திரத்துடன் சிந்திக்கப்பெற்று, எல்லா மனிதர்களும் சமம் என்ற முன்மொழிவுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு புதிய தேசத்தைப் படைத்தனர் "— உடனடியாக அவற்றை உள்நாட்டு யுத்தம் மற்றும் சமத்துவத்திற்கான உலகளாவிய போராட்டத்துடன் பிணைத்தார்: “தற்போது நாம் அந்தவொரு தேசம், அல்லது இவ்விதத்தில் சிந்திக்கப்பெற்ற மற்றும் மிகவும் அர்ப்பணிப்பு கொண்ட எந்தவொரு தேசமும், நீடித்துத் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதைச் சோதிக்கின்ற ஒரு மாபெரும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம்." அடிமைகளின் உரிமையாளர்களது கலகத்தைத் தோற்கடிக்கும் போராட்டமானது ஐக்கிய அமெரிக்க குடியரசினை பாதுகாக்கவும் முந்தைய சகஜ நிலைக்குத் திரும்பவுமான ஒரு போராக 1861இல் தொடங்கி இருந்தது. ஜனவரி 1, 1863இல், லிங்கனின் விடுதலைப் பிரகடன (Emancipation Proclamation) அறிவிப்போடு, உள்நாட்டு யுத்தமானது அடிமைத்தனத்தையும் தெற்கில் பழைய சமூக ஒழுங்கையும் ஒழிப்பதற்கான ஒரு புரட்சியாக மாறியது. கெட்டிஸ்பேர்க் உரையானது இந்த யுத்தத்தை இன்னும் உயர்ந்த மட்டத்திற்கு மற்றும் இன்னும் உலகளாவிய மட்டத்திற்கு கொண்டு சென்று நிறுத்துகிறது. “மக்களின், மக்களால், மக்களுக்கான அரசாங்கம் பூமியில் இருந்து அழிந்துவிடக்கூடாது" என்பதற்காக நடத்தப்படுகிற “சுதந்திரத்தின் ஒரு புதிய பிறப்புக்கான” ஒரு போராக அது இருந்தது. தனிச்சொத்து போன்று பராமரிக்கப்பட்ட அடிமைகளின் முறையை (Chattel slavery) ஒழித்ததன் மூலமாக, உண்மையில் உள்நாட்டு யுத்தம் சுதந்திரத்திற்கு ஒரு புதிய பிறப்பை வழங்கியது. அது வர்க்கப் போராட்டத்தை ஒரு புதிய மற்றும் உயர்ந்த நிலைக்கும் கொண்டு வரவிருந்தது. காரல் மார்க்ஸ் எழுதினார், “வட அமெரிக்க ஐக்கிய அரசுகளில், அடிமைமுறை குடியரசின் ஒரு பாகத்தை விகாரமாக்கியிருந்த மட்டத்திற்கு தொழிலாளர்களின் ஒவ்வொரு சுயாதீனமான இயக்கமும் முடக்கப்பட்டிருந்தது.” “உழைப்புசக்தியானது கருப்புத் தோலில் முத்திரை குத்தப்பட்டதாக இருக்கும் வரை வெள்ளைத் தோலில் அது விடுதலையடைவது நடக்காது. ஆனால் அடிமைத்தனத்தின் மரணத்தில் ஒரு புதிய வாழ்க்கை உடனே உதயமாகியது. உள்நாட்டு யுத்தத்தின் முதல் பலாபலன் எட்டு மணிநேரத்திற்கான கிளர்ச்சியாக இருந்தது, அது அட்லாண்டிக்கில் இருந்து பசிபிக் வரை, புது இங்கிலாந்தில் இருந்து கலிபோர்னியா வரையில் ஏழுகால் பாய்ச்சலில் பரவியது.” கெட்டிஸ்பேர்க் உரைக்கு ஓராண்டிற்குப் பின்னர், லிங்கன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு அவரைப் பாராட்ட, முதலாம் அகிலத்தின் சார்பில், மார்க்ஸ் லிங்கனுக்கு கடிதம் எழுதினார்: “ஒரு நூற்றாண்டுக்கு அதிகமில்லாத காலத்திற்கு முன்பு எந்த இடத்தில் ஒரு மகத்தான ஜனநாயகக் குடியரசின் சிந்தனை முதன்முதலில் உதயமாகி, மனிதனின் உரிமைகள் குறித்த முதல் பிரகடனம் விடுக்கப்பட்டு, பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பியப் புரட்சிக்கான முதல் உத்வேகம் கிடைக்கப் பெற்றதோ சாட்சாத் அதே இடத்தில் உலகின் வரலாற்றுப் பதிவேட்டில் முதல்முறையாக, 300,000 அடிமையுரிமையாளர்களின் ஒரு சிறு கூட்டம் ஆயுதமேந்திய கிளர்ச்சி எனும் பதாகையில் 'அடிமைமுறை' என்பதை பொறிக்க தைரியமுற்ற போது… அட்லாண்டிக்கின் மறுமுனையில் நடந்த அந்த மிகப்பெரும் மோதலில் தமது வருங்காலத்திற்கான நம்பிக்கைகளும், இன்னும் தமது கடந்தகால வெற்றிகளும் கூட பணயத்தில் இருந்தன என்பதை ஐரோப்பிய உழைக்கும் மக்கள் உள்ளூர உணர்ந்தனர்.” லிங்கன் வர்க்கப் போராட்டத்தை உணர்ந்திருக்கவுமில்லை, உணர்ந்திருக்கவும் முடியாது என்றபோதினும், சுதந்திரப் பிரகடனத்தில் மனித சமத்துவத்திற்கு அளிக்கப்பட்டிருந்த உறுதியானது "வருங்காலப் பயன்பாட்டிற்கென அங்கு வைக்கப்பட்டிருந்தது" என்று அவர் நம்பினார். “இங்கிலாந்தில் இருந்து நம்முடைய பிரிவினையை கேட்பது தொடர்பான எந்த நடைமுறைப் பயனையும் கொண்டிருக்கவில்லை" என்றபோதினும், தோமஸ் ஜெபர்சன் அதை இடம்பெறச் செய்திருந்தார். அந்த பிரகடனத்தில் லிங்கன் என்ன எதிர்கால பயனைக் கண்டார்? “கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறை மீண்டும் தோன்றுவதன் அறிகுறி மட்டத்திலேயே அதற்கான கண்டிப்பையும், முட்டுக்கட்டைகளையும்” அது வழங்கியது என்று அவர் கூறினார். மிகத் தெளிவாய் ஜெபர்சனுடனும் பிரகடனத்துடனுமான கலந்துரையாடலில், இரண்டாம் அமெரிக்கப் புரட்சியான உள்நாட்டு யுத்தம் முதலாவதை பூர்த்தி செய்ய விழைந்தது என்பது தான் கெட்டிஸ்பேர்க் உரையில் மேலோங்கி இருந்த அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். "கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறை மறுதோற்றம் காண்பது” குறித்து எச்சரிக்கையில் லிங்கன், 2013 இல் அமெரிக்கா, பழைய அடிமையாட்சியை நிறம் மங்கச் செய்யும் வகையில் அருவெருப்பூட்டக் கூடிய செல்வத்தைக் கொண்டிருக்கும் பிரபுத்துவ பில்லியனர்களின் ஒரு சிறிய அடுக்கு பொய்களையும், சதிகளையும், திருட்டையும், வேவுபார்த்தலையும் மற்றும் இராணுவப் பயங்கரத்தையும் கொண்டு ஆட்சி செய்கின்ற ஒரு நாடாக இருக்கும் என்று ஒருபோதும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பிரதிநிதியாக லிங்கன் பேசி இருந்தாலும் கூட, அவரது சொற்களும், சிந்தனைகளும் இன்றும் பொருந்தி நிற்கின்றன. ஆனால் மக்களால், மக்களின் மற்றும் மக்களுக்கான அரசாங்கம் என்பது சீரழிந்த முதலாளித்துவத்தில் பொருத்தமற்றதாகும். ஜனநாயக இலட்சியங்கள் மறுதலிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இன்றைய அமெரிக்க நிதியியல் பிரபுத்துவம் அன்றைய அடிமையாட்சியோடு நிறைய ஒற்றுமைகளைக் கொண்டிருக்கிறது. சமூக சமத்துவம் என்ற வார்த்தையையே அது அடியோடு வெறுக்கிறது. இன்று, லிங்கனின் இலட்சிய சிந்தனைகளை நிஜமாக்குவது சோசலிசத்தின் கீழ் மட்டுமே சாத்தியமாகும். மனிதகுல நலன்களுக்காய் போராட இருக்கும் புதிய புரட்சி முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக செலுத்தப்படுவதாக இருக்கும். |
|