World Socialist Web Site www.wsws.org |
A half-century since the assassination of President John Fitzgerald Kennedy ஜனாதிபதி ஜோன் பெட்ஜிரால்ட் கென்னடியின் படுகொலையில் இருந்து ஓர் அரை-நூற்றாண்டு
David North இன்றிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், நவம்பர் 22, 1963 அன்று அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியான ஜோன் பெட்ஜிரால்ட் கென்னடி, டெக்சாஸ் டல்லாஸில் உள்ள டெலே பிளாசா வழியாக அவரது மோட்டார் வாகனத்தில் பவனி வந்து கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்க வரலாற்றைக் குறித்த ஏனைய பல தேய்ந்த சொல்வழக்குகள் போலில்லாமல், உண்மையாகவே ஓரளவு அரசியல்ரீதியான நனவைப் பெற போதுமான வயதில் இருந்திருக்கக் கூடிய எவரொருவருமே, அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் "டல்லாஸில் ஜனாதிபதி பவனியில் மூன்று குண்டுகள் சுடப்பட்டன" என்ற செய்தி காட்டப்பட்ட போது அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதை ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை மதிய நேர அந்த அதிர்ச்சிகர சம்பவமும் அதை தொடர்ந்த நாட்களும், ஓர் அரை-நூற்றாண்டு கடந்த பின்னரும் கூட, எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்களின் நனவில் தெளிவாகத் தங்கி உள்ளது. இந்த நினைவாண்டில் எழும் முதல் கேள்வி என்னவென்றால் ஓர் அரை-நூற்றாண்டு கடந்த பின்னரும் கூட அமெரிக்க மக்களின் நனவில் ஜோன் எப். கென்னடியின் மரணம் ஏன் இந்தளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பது தான். அவர் படுகொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி அல்லர், நான்காவது அமெரிக்க ஜனாதிபதி ஆவார். ஏப்ரல் 1865இல் ஆப்ரகாம் லிங்கனின் படுகொலை, அண்ணளவாக அந்த சம்பவம் நடந்து 150ஆண்டுகளுக்குப் பின்னரும், அமெரிக்க வரலாற்றில் மிக துயரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்றாக, தேசிய நனவில் நிச்சயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது தான். ஆனால் அதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. அனைத்திற்கும் மேலாக, லிங்கன் அமெரிக்காவின் தலைச்சிறந்த ஜனாதிபதியாக இருந்தார்—அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஓர் உள்நாட்டு யுத்தத்திற்குள் அமெரிக்காவை இட்டுச் சென்ற அவர் உலக வரலாற்றில் சரியானரீதியில் அன்புக்குரிய தலைவராக விளங்குகிறார். அந்நாட்டின் வரலாற்றில் லிங்களின் இடம் ஈடிணையற்றது, மேலும் அவரது படுகொலை அமெரிக்க அனுபவத்தின் ஒரு அத்தியாவசியமான தருணமாகத் திகழ்கிறது. படுகொலையின் பிடியில் இறந்த அடுத்த இரண்டு ஜனாதிபதிகள்—1881இல் ஜேம்ஸ் கார்பீல்ட் மற்றும் 1901இல் வில்லியம் மெக்கின்லி—அவர்கள் காலத்தில் நினைவுகூரப்பட்டு விரைவிலேயே நினைவிலிருந்து மறைந்து போனார்கள். 1931இல் கார்பீல்ட்டின் படுகொலையின் மீதோ அல்லது 1951இல் மெக்கின்லி குறித்தோ நிச்சயமாக அங்கே எந்த முக்கிய நினைவுகூட்டங்களும் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அப்படியானால், கென்னடியின் படுகொலை மட்டும் தேசிய நனவிலிருந்து ஏன் மங்காமல் இருக்கிறது? ஒரு வெளிப்படையான காரணம் என்னவென்றால் கென்னடியின் மரணம் தொலைக்காட்சி சகாப்தத்தில் நடந்தது. அந்த படுகொலையே ஒளிப்படமாக பதிவாகி இருந்தது, அந்த படுகொலையை செய்த கொலையாளி, லீ ஹார்வே ஓஸ்வால்டு தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக காட்டப்பட்டார், மற்றும் அந்த ஜனாதிபதியின் இறுதி மரியாதை நிகழ்ச்சியைத் ஏறக்குறைய ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது. ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்த படங்கள், ஏறத்தாழ வரவிருக்கும் எல்லா காலத்திற்கும் அந்த நவம்பர் 1963 சம்பவங்களை எடுத்துக்காட்ட பங்களிப்பு செய்கின்றன. எவ்வாறிருந்த போதினும், கென்னடியின் மரணம் நீடித்த அரசியல் அதிர்வுகள் கொண்டிருப்பதற்கு கூடுதலான முக்கியக் காரணங்களும் உள்ளன. மிகவும் வெளிப்படையானது என்னவென்றால் அமெரிக்க மக்களில் பெரும்பான்மையர் வாரன் அறிக்கையில் காட்டப்பட்ட படுகொலைக்கான உத்தியோகப்பூர்வ கருத்தை, அதாவது, ஜனாதிபதியின் படுகொலை ஒரு துப்பாக்கி ஏந்திய தனிமனிதனின், லீ ஹார்வே ஓஸ்வால்டின், தனிப்பட்ட நடவடிக்கை என்பதையும், லீ ஒரு பரந்த அரசியல் சதியின் பாகமாக இருக்கவில்லை என்பதையும் ஒருபோதும் ஏற்கவில்லை. "சதிக் கருத்தாக்கவாதிகள்" (conspiracy theorists) என்றரீதியில் வாரன் அறிக்கையின் மீதான விமர்சனங்களை மதிப்பிழக்க செய்ய ஊடகங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கு இடையிலும், அமெரிக்க மக்கள் அந்த விடயத்தின் மீது அவர்களின் தீர்ப்பை வழங்கி உள்ளனர். வாரன் அறிக்கை, ஏறத்தாழ 1964இல் அது பிரசுரிக்கப்பட்ட நாளில் இருந்தே, ஓர் அரசியல் மூடிமறைப்பாக பார்க்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அது அவ்வாறு தான் இருந்தது. சரியானரீதியில் சந்தேகம் கொண்டிருந்த மக்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த, ஜனாதிபதி லிண்டன் ஜோன்சனால் அந்த அறிக்கைக்கு கமிஷன் நியமிக்கப்பட்டு இருந்தது—ஆனால் அவரது அரசியல் விசுவாசிகளிடம், கென்னடி ஒரு அரசியல் சதிக்கு பலியானார் என்பதை தாம் நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார். வாரன் கமிஷனின் அந்த அறிக்கை படுகொலைக்குள் எந்தவித ஆழ்ந்த புலனாய்வையும் நடத்தவில்லை. Bay of Pigs அவமானத்திற்குப் பின்னர் கென்னடியால் நீக்கப்பட்டிருந்த முன்னாள் சிஐஏ இயக்குனர் ஆலன் துல்லஸ் மற்றும் துல்லஸின் ஒரு பழைய நண்பரும், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவு கொள்கையை வழிநடத்திய "புத்திசாலிகளில்" மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் அதிகாரம் மிக்கவருமான ஜோன் ஜெ. மெக்கிளாய் போன்ற அரசு இரகசியங்களைக் காப்பாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அந்த கமிஷனில் உள்ளடங்கி இருந்தனர். துப்பாக்கி ஏந்திய ஒரு தனிமனிதனின் செயல் என்ற தத்துவத்தைச் சந்தேகித்த வாரன் கமிஷன் உறுப்பினர்களை, அவர்களின் எதிர்கருத்துக்களை அவர்களோடே வைத்திருக்கவும், லீ ஹார்வே ஓஸ்வால்டு மட்டுமே ஜனாதிபதியின் படுகொலையில் செயல்பட்டார் என்ற ஒருமனதான தீர்வோடு இணைந்து செல்லவும் அவர்களை இணங்குவிப்பதில் மெக்கிளாய் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். கமிஷன் உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹேல் போக்ஸ் (Hale Boggs) - பின்னாளில் சபையின் பெரும்பான்மை தலைவராக இவர் ஆகவிருந்தார் - இழிவார்ந்த “ஒரே துப்பாக்கி குண்டு" (single bullet) தத்துவத்தை சந்தேகித்ததை பின்னர் ஒப்புக் கொண்டார். (அந்த தத்துவம் ஒரே குண்டு கென்னடி மற்றும் டெக்சாஸ் கவர்னர் ஜோன் கொன்னோல் இருவரையும் துளைத்ததாக வலியுறுத்தியது). போக்ஸ் அக்டோபர் 1972இல் அலாஸ்காவில், வெளிப்படையாக அவரது தனியார் விமானம் மோதிய விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலோ அல்லது விமானமோ இரண்டுமே இதுவரையில் மீட்கப்படவில்லை. வாரன் கமிஷனின் பாதுகாவலர்கள் பல தசாப்தங்களாக "சதிக் கருத்தாக்கம்" (conspiracy theory) என்ற பதத்தை, ஓர் அமெரிக்க ஜனாதிபதியின் படுகொலைக்கான அரசியல் சூழலைக் காட்டும் அனைத்து ஆதாரங்களையும், வாதங்களையும் மதிப்பிழக்க செய்ய ஒரு அடைமொழியாக பயன்படுத்தி உள்ளனர். அதைக்காட்டிலும், அந்த படுகொலை ஓர் மடத்தனமான, அர்த்தமற்ற, அமெரிக்க சமூக மற்றும் அரசியல் நிலைமைகளோடு தொடர்பற்ற மற்றும் சம்பந்தமற்ற ஒரு சம்பவமாக பார்க்கப்பட்டு வந்தது. எந்த சூழலிலும் அந்த ஜனாதிபதியின் படுகொலை, அரசிற்குள் இருந்த முரண்பாடு மற்றும் நெருக்கடியின் இரத்தந்தோய்ந்த விளைபொருளாக, அமெரிக்க அரசின் தீய மற்றும் அழுகிய ஒரு விடயமாக பார்க்கப்படவில்லை. அது தான் அந்த உத்தியோகப்பூர்வ மூடிமறைப்பின் நோக்கமாக இருந்தது. அமெரிக்கா பல இருண்ட இரகசியங்களைக் கொண்ட ஒரு நாடாக உள்ளது. கென்னடியை யார் கொன்றார்கள் என்பது ஒருவேளை அமெரிக்க மக்களுக்கு ஒருபோதும் தெரியாமலே கூட போகலாம். ஆனால் அவர் மரணத்தின் ஆழமான காரணங்களை விளக்க முடியும். அமெரிக்காவின் துஷ்டமான உள்முக சமூக முரண்பாடுகளுக்கும் உலகின் பிரதான ஏகாதிபத்திய சக்தியாக இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய அதன் தீயதும் பிற்போக்குத்தனமானதுமான பாத்திரத்திற்கும் இடையிலான தொடர்புகளால் ஏற்பட்ட எதிர்பார்த்திராத வெடிப்பார்ந்த விளைவுகளோடு கென்னடியின் படுகொலை திடீரென்று, ஒரு பயங்கரமான கணத்தில், அமெரிக்கர்களை எதிர்கொண்டது. ஜோன் எஃப். கென்னடி 1961 ஜனவரியில் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார். இரண்டாம் உலக யுத்தம் முடிந்து வெறும் 16 ஆண்டுகளே ஆகி இருந்தன. 1945 ஆகஸ்டில், ட்ரூமேன் நிர்வாகம், சோவியத் ஒன்றியத்துடன் வரவிருந்த போராட்டத்தை எதிர்நோக்கி, அமெரிக்காவின் எல்லையற்ற ஆற்றலை மற்றும் அசுரத்தனத்தைக் காட்ட, ஜப்பானின் இரண்டு நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகியவற்றின் மீது அணுகுண்டுகளை வீச இரத்தத்தை உறைய வைக்கும் முடிவை எடுத்தது. அந்த அணுகுண்டு இராணுவ தேவையாக இருந்ததைவிட ஓர் அரசியல் கருவியாக இருந்தது. அமெரிக்க வரலாற்றாளர் கேப்ரியல் ஜேக்சன் பின்னர் பின்வருமாறு எழுதினார்: “1945 ஆகஸ்டின் குறிப்பிட்ட சூழலில், மனநலரீதியில் ஆரோக்கியமான மற்றும் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமை நிர்வாகி ஓர் ஆயுதத்தை நாஜி சர்வாதிகாரி பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தக் கூடும் என்பதை அந்த அணுகுண்டு வீச்சு எடுத்துக்காட்டியது. இவ்விதத்தில், அமெரிக்கா—பல்வேறு விதமான அரசாங்கங்களின் நடத்தையில் உள்ள அறநெறி வேறுபாடுகள் குறித்து சிந்திப்பவர்களைப் பொறுத்த வரையில்—பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை மங்கச் செய்தது." [Civilization and Barbarity in 20th-Century Europe (New York: Humanity Books, 1999), pp. 176-77] அமெரிக்கா அந்த யுத்தத்திலிருந்து உலகின் முதலாளித்துவ ஆதிக்க சக்தியாக எழுச்சியுற்றது. அந்த யுத்தத்தால் பிரிட்டன் திவாலாகி போனது, மேலும் அதன் முந்தைய ஏகாதிபத்திய பெருமைகளில் இருந்தான அதன் நெடிய மற்றும் அவமானகரமான பின்னடைவு, தடுக்க முடியாததாகவும் இடைவிடாததாகவும் இருந்தது. பிரெஞ்சு முதலாளித்துவம் தனது சாம்ராஜ்யத்தை விடாது பிடித்துக் கொண்டிருக்கச் செய்த முயற்சி - முதலில் வியட்நாமிலும், சில காலத்திற்குப் பின்னர் அல்ஜீரியாவிலும் - பேரழிவை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது சரியான தருணம் வந்துவிட்டதாக நம்பியது. எல்லையற்ற தொழில்துறை சக்தி, புதிய சர்வதேச செலாவணி அமைப்புமுறையில் டாலரின் மேலாதிக்கப் பாத்திரம், மற்றும் அணுகுண்டைக் கொண்டிருக்கும் ஒரே உடைமையாளர் என்கிற நிலை ஆகியவை சேர்ந்து வரவிருக்கும் தசாப்தங்களில் உலகின் அதன் மேலாதிக்கத்திற்கு உத்தரவாதம் வழங்குமென்று அது நம்பியது. கர்வத் துடிப்போடு, அது 1900களை "அமெரிக்காவின் நூற்றாண்டு" என்றும் கூட பெயரிட்டது. ஆனால் கென்னடி பதவியேற்ற காலத்தில், யுத்தத்திற்குப் பிந்தைய வரலாற்றின் பாதை அமெரிக்க ஆளும் மேற்தட்டின் பிரமைகள், தன்னம்பிக்கை இரண்டிற்கும் குழிபறித்து விட்டிருந்தது. முந்தைய 15 ஆண்டுகளில் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியின் அலை சீராக அதிகரித்துச் சென்றிருந்தது. சீனப் புரட்சி, சியாங் கெய்-ஷேக்கின் ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி வீசியிருந்தது. சீன அரசாங்கத்தை, ஏன் சோவியத் அரசாங்கத்தையும் கூட அமெரிக்கா இராணுவரீதியாக "திரும்பக் கொண்டு வர முடியும்" என்ற ஜெனரல் மெக்ஆர்தராலும் மற்றும் பெண்டகன் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளது பித்தர்களாலும் தூபமிடப்பட்ட கனவுகள் எல்லாம் கொரிய யுத்தத்தின் பேரழிவோடு நொறுங்கிப் போனது. ஆனால் "திரும்பக் கொண்டு வருதல்" என்பதிலிருந்து "கட்டுப்படுத்தி வைத்தல்" என்பதற்கு மாறியதானது அமெரிக்க ஏகாதிபத்தியதின் அடிப்படை எதிர்ப்புரட்சி முனைப்பை மாற்றி விடவில்லை. சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுடன் ஓர் இராணுவ மோதல் நெருங்கி வந்து கொண்டிருந்த நிலையில், கம்யூனிச-விரோத "கட்டுப்படுத்தி வைக்கும்" மூலோபாயமானது, வெறுக்கப்பட்ட அமெரிக்க-ஆதரவு கைப்பாவை ஆட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கும் நோக்கில் ஜனநாயக விரோத ஒடுக்குமுறை மற்றும் எதிர்கிளர்ச்சி நடவடிக்கைகளின் ஒரு முடிவில்லா தொடர்ச்சியில் அமெரிக்காவை ஈடுபடுத்தியது. உலகில் எந்தவொரு அன்னிய அரசும், சோசலிச அனுதாபங்கள் கூட வேண்டாம், ஏகாதிபத்திய எதிர்ப்பு அனுதாபங்களை விதைப்பதாக அமெரிக்காவால் அடையாளம் காணப்பட்டால் கூட அந்நாடு ஸ்திரம் குலைக்கப்படுவதற்கு தகுதி உடையதாக ஆனது மற்றும் அதன் தலைவர்கள் படுகொலை இலக்கிற்கு ஆளானார்கள். 1947இல் ட்ரூமேன் நிர்வாகத்தால் ஸ்தாபிக்கப்பட்ட மத்திய உளவுத்துறை முகமை 1950களில் ஐசன்ஹோவரின் கீழ் அதன் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்த தசாப்தம் அமெரிக்கத் தூண்டுதலில் நடந்த ஆட்சிகவிழ்ப்புகளின்—மிக கீழ்த்தரமாக குவாடிமாலா மற்றும் ஈரானில் நடந்தன—மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட அரசுகளுக்கு எதிரான முடிவில்லா சூழ்ச்சிகளின் தசாப்தமாக இருந்தது. சக்திவாய்ந்த பெருநிறுவன நலன்கள், ஒரு பாரிய இராணுவ அமைப்புமுறை, மற்றும் உயர் இரகசிய உளவுத்துறை முகமைகளின் ஒரு கூட்டணியை அடித்தளமாகக் கொண்ட "தேசியப் பாதுகாப்பு அரசு" என்று அழைக்கப்பட்டதான ஒன்று அமெரிக்காவிற்கு உள்ளே ஜனநாயகத்தின் பாரம்பரிய வடிவங்களுக்கு இணக்கமற்ற பரிமாணங்களை ஏற்றது. ஜனாதிபதி ஐசன்ஹோவர் பதவிலிருந்து விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர்—எந்த அரக்கனின் வளர்ச்சிக்கு அவர் துணைபோனாரோ அதே அரக்கனைக் கண்டு மிரட்சி கண்டிருந்தார்—தொலைக்காட்சியில் "பிரிவு உரை" (Farewell Address) நிகழ்த்தினார், அதில் அவர் "இராணுவ-தொழில்துறை கூட்டுறவின்" வளர்ச்சி அமெரிக்க ஜனநாயகத்தின் உயிர்வாழ்விற்கு ஓர் தீவிரமான ஆபத்தை முன்னிறுத்துவதாக அமெரிக்க மக்களை எச்சரித்தார். 1961 ஜனவரி 20 அன்றான தனது பதவியேற்பு உரையில், கென்னடி ஓர் உறுதியான தீர்மானமான தொனியைக் காட்ட முயன்றார். மிக ஆரவாரமான அந்த உரையில், அவர் "ஒளிதீபம் அமெரிக்கர்களின் புதிய தலைமுறையிடம் வழங்கப்பட்டுள்ளது,” அவர்கள் அமெரிக்காவின் உலகளாவிய நலன்களைத் தூக்கிப் பிடிக்க "எந்த விலையையும் கொடுக்க, எவ்வித சுமையையும் தாங்க, எந்த கடினத்தையும் எதிர்கொள்ள, எந்தவொரு நண்பரையும் ஆதரிக்க, மற்றும் எந்தவொரு எதிரியையும் எதிர்க்க" விரும்புவார்கள் என்று அறிவித்தார். எவ்வாறிருந்த போதினும், அந்த முழு வாய்ஜால முழக்கத்தைப் பொறுத்த வரையில், கென்னடியின் உரை ஆளும் மேற்தட்டு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு வெளிப்பாட்டைக் கொடுத்தது. ஒரு வெளிப்படையான கூற்றில், அவர், அமெரிக்காவால் "பல ஏழைகளுக்கு உதவ முடியாது என்றால், சில பணக்காரர்களையும் அதனால் காப்பாற்ற முடியாது," என்று எச்சரித்தார். அமெரிக்காவின் ஜனநாயக வேடங்களை - அது ஏற்கனவே மெக்கார்தி சகாப்தத்தின் ஒடுக்குமுறையினாலும் மற்றும் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் அடிப்படை குடியுரிமைகள் மீது நடந்துவந்த காட்டுமிராண்டித்தன நிராகரிப்புகளாலும் உலகின் பார்வையில் மிக மோசமாக மதிப்பிழந்து போயிருந்தது – அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தவிர்க்கவியலாத அவசியங்களாக தனது வாய்ஜாலத்தின் மூலம் நல்லிணக்கப்படுத்துவதற்கான முயற்சியாகவே கென்னடியின் உரை இருந்தது. அதுபோன்ற வாய்ஜம்ப நடைமுறைகள் தான் கென்னடி நிர்வாகத்தின் பொது முகத்தை வரையறுப்பதாக அமையவிருந்தன. ஆனால் இந்த மேற்தளத்திற்கு அடியில் ஓர் அவலட்சணமான எதார்த்தம் நிலவியது. பதவியேற்று மூன்றுக்கும் குறைந்த மாதங்களில், கென்னடி CIAஆல் உருவாக்கப்பட்ட ஒரு கேஸ்ட்ரோ எதிர்ப்பு இராணுவத்தைக் கொண்டு கியூபாவில் ஓர் எதிர்புரட்சிகர ஊடுருவலைத் தொடங்குவதற்கு இறுதி ஒப்புதலை வழங்கினார். ஆக்கிரமிப்பாளர்கள் கியூபாவில் தரையிறங்கியதும் விடுதலை வீரர்களாக வரவேற்கப்படுவார்கள் என்ற உத்தரவாதங்களை புதிய ஜனாதிபதி பெற்றார். அதுபோன்றவொரு சுதந்திரப் போராட்ட எழுச்சி எதுவும் அங்கில்லை என்பது CIAக்கு தெரியும், ஆனால் தாக்குதல் தொடங்கியதும் கென்னடி, அமெரிக்க ஆதரவுடனான ஒரு நடவடிக்கையின் தோல்வியைத் தவிர்க்க அமெரிக்க துருப்புகளை உறுதியளிக்க நிர்ப்பந்திக்கப்படுவார் என்று அது ஊகித்தது. ஆனால் கென்னடி, பேர்லினில் சோவியத்தின் பதிலடி குறித்து அஞ்சி, காஸ்ட்ரோ விரோத கூலிப்படைகளை ஆதரிப்பதில் தலையீடு செய்ய மறுத்தார். அந்த ஊடுருவல் 72 மணி நேரத்திற்கும் குறைந்த காலத்தில் தோற்கடிக்கப்பட்டதோடு, 1,000த்திற்கும் மேற்பட்ட கூலிப்படையினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்த "காட்டிக்கொடுப்புக்காக" சிஐஏ கென்னடியை ஒருபோதும் மன்னிக்கவில்லை. கென்னடி ஒருவேளை Bay of Pigs பெருநாசத்தால் மாறி இருக்கலாம் என்ற போதினும்—சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவத்தால் அவருக்கு வழங்கப்பட்ட பொய் உத்தரவாதங்கள் மீது அவர் கோபம் கொண்டிருந்த விடயம் ஒரு இரகசியம் அல்ல—1961 ஏப்ரல் தோல்வியானது எதிர்க்கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு கென்னடி ஏற்றிருந்த பொறுப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிடவில்லை. படுகொலை சூழ்ச்சிகள் மீது, குறிப்பாக கேஸ்ட்ரோவிற்கு எதிராக, அவருக்கிருந்த—மற்றும் அவரது சகோதரர் ரோபர்ட்டின்—ஆர்வம் போதியளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. முடிவாக, இத்தகைய சூழ்ச்சிகளுக்கு மாஃபியா கும்பல்களை நியமிக்க அவசியம் ஏற்பட்டது, அது கென்னடி நிர்வாகத்தை கிரிமினல் நிழலுலகத்துடன் சுய-அழிவுகரமான தொடர்புகளுக்குள் இழுத்து சென்றது. 1960களின் இறுதியில் வெடிக்க இருந்த சமூக பதட்டங்கள், அமெரிக்காவிற்குள், ஏற்கனவே கென்னடியின் நிர்வாகத்தின் போது வெளிப்படையாக இருந்தன. ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் தமது குடியுரிமைகளை உபயோகிப்பதன் மீது கொண்டிருந்த தீர்மானகரமான உறுதி மாநில அரசுகளால், உச்சநீதிமன்றத்தின் 1954 Brown vs. Board கல்வித்துறை தீர்ப்பை மீறிய வகையில், வன்முறை கொண்டு எதிர்கொள்ளப்பட்டன. மேலும், அரசு மற்றும் ஊடகங்களின் இடைவிடாத கம்யூனிச-எதிர்ப்பு பிரச்சாரங்கள் இருந்தபோதினும், அவற்றிற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் நேசத்தோடு உடந்தையாய் இருந்தபோதினும், தொழிலாள வர்க்கம் வாழ்க்கை தரங்கள் மற்றும் சமூக நலன்களில் முக்கிய முன்னேற்றங்களைப் பெற அழுத்தம் அளிப்பதைத் தொடர்ந்தன. புதிய உடன்பாடு சீர்திருத்தவாத மரபின் ஒரு பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொண்ட கென்னடி முன்னெடுத்த ஒரு சட்ட நிரல், அவரது படுகொலைக்குப் பின்னர், மருத்துவ பராமரிப்பு திட்டத்தை (Medicare) ஸ்தாபித்த சட்டம் நிறைவேற இட்டுச் சென்றது. அவரது பதவிகாலத்தின் இறுதி ஆண்டில், முக்கிய சர்வதேச கொள்கை பிரச்சினைகள் மீது ஆளும் வர்க்கத்திற்குள் இருந்த அரசியல் பிளவுகள் மிகவும் ஆழமடைந்திருந்தன. 1962 அக்டோபர் ஏவுகணை நெருக்கடியில் கியூபா ஊடுருவலைத் தவிர்க்க கென்னடி எடுத்த முடிவு, இராணுவ இணை தளபதிகளால் எதிர்க்கப்பட்டது. அமெரிக்காவையும் சோவியத் ஒன்றியத்தையும் அணுசக்தி யுத்தத்தின் விளிம்பில் கொண்டு வந்த அந்த அபாயகரமான நெருக்கடி தீர்ந்ததைத் தொடர்ந்து, கென்னடி அணுசக்தி சோதனைத் தடை உடன்படிக்கை நிறைவேற்றப்பட முன்னெடுப்புகளை மேற்கொண்டு அது நிறைவேற்றப் பெற்றார். இத்தகைய நடவடிக்கைகள் கென்னடி ஒரு பனிப்போர் நிகழ்ச்சிநிரலை கைவிட்டிருந்தார் என்பதைக் குறிக்கவில்லை. உண்மையில், அவரது பதவிக்காலத்தின் கடைசி மூன்று மாதங்கள் வியட்நாமில் ஆழமடைந்துவந்த நெருக்கடியால் சிந்தனை ஆக்கிரமிக்கப்பட்டதாக இருந்தது. கென்னடி உயிரோடு இருந்திருந்தால் வியட்நாமில் என்ன போக்கை தேர்ந்தெடுத்திருப்பார் என்று தீர்மானிப்பது சாத்தியமில்லை என்றாலும், அவர் அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெற ஆதரித்திருப்பார் என்ற வாதங்களுக்கு ஆதரவாக வரலாற்று பதிவேடு இல்லை. கென்னடி தென் வியட்நாமிய ஜனாதிபதி தியம் (Diem) ஐத் தூக்கியெறிய ஒப்புதல் வழங்கினார், அது பின்னர் 1963 நவம்பர் 1 இல் தியமின் படுகொலையில் போய் முடிந்தது. தேசிய விடுதலை முன்னணிக்கு எதிராக தியமை விட திறமையோடு ஒரு யுத்தத்தைத் தொடுக்கும் ஒரு புதிய கம்யூனிச-விரோத ஆட்சியை ஸ்தாபிப்பதே அந்த ஆட்சிக்கவிழ்ப்பின் நோக்கமாக இருந்தது. ஜனாதிபதி கென்னடியின் படுகொலை அமெரிக்க நவீனகால வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறித்தது. 1913இல், கென்னடி இறப்பதற்கு ஓர் அரை-நூற்றாண்டிற்கு முன்னர், உட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28வது ஜனாதிபதியாக பதவியேற்றார். அமெரிக்கா அவரது நிர்வாகத்தின் போது தான், 1917இல், “உலகை ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாக மாற்றுவோம்" என்று உறுதியளித்து, முதல் உலக யுத்தத்தில் நுழைந்தது. உலகளாவிய ஜனநாயகத்திற்கு வில்சனின் போலி அழைப்பு பதாகையின்கீழ் தான் அமெரிக்கா, முதன்முதலில், பிரதான ஏகாதிபத்திய சக்தியாக எழுந்தது. அந்த இடம் பிரான்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் பதவிகாலத்தில் (1933-45) வலுப்படுத்தப்பட்டது, அவர் புதிய சமூக சீர்திருத்த உடன்படிக்கைகள் மூலமாக அமெரிக்காவிற்குள் முதலாளித்துவத்திற்கு ஒரு பரந்த அடித்தளத்தைப் பேண விரும்பினார். இத்தகைய சீர்திருத்தங்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் அதன் தலையீட்டை, பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்திற்கான போராட்டம் என்றரீதியில் சித்தரிக்க ரூஸ்வெல்டு நிர்வாகத்திற்கு உதவின. கென்னடி நிர்வாகம் அந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. குறிப்பிடத்தக்க விதத்தில், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலை தேய்வதற்கான முதல் முக்கிய அறிகுறிகளை பொருளியல் நிபுணர்கள் குறிப்பெடுக்க ஆரம்பித்த போது தான், கென்னடி நிர்வாகம் சரியாக காரியாலயத்திற்கு வந்திருந்தது. முதலில் ஐரோப்பிய முதலாளித்துவமும், பின்னர் ஜப்பானிய முதலாளித்துவமும் இரண்டாம் உலக யுத்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் கேள்விக்குள் இழுக்கப்பட்டது. கென்னடி படுகொலையின் வெறும் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், சர்வதேச வர்த்தக மற்றும் கொடுக்கல்-வாங்கல் சமநிலையில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் டாலர்-தங்கம் பரிவர்த்தனையின் பிரெட்டன் உட்ஸ் முறையின் பொறிவைக் கொண்டு வந்தது. அமெரிக்கா திட்டவட்டமாக நீண்டகால வீழ்ச்சிக்கான ஒரு சகாப்தத்திற்குள் நுழைந்திருந்தது. பொதுமக்களின் மனதில் ஜோன் எஃப். கென்னடி தனது நிர்வாகத்தை அமெரிக்க ஜனநாயக பாரம்பரியங்களோடு இணைத்த கடைசி ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் அவரது ஜனாதிபதிப் பதவியின் அரசியல் மற்றும் அறநெறி அடித்தளங்கள் அதற்கு முன்னரே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரிணாமத்தால் படுமோசமாக அரிக்கப்பட்டு விட்டிருந்தது. பெருந்திரளான மக்களின் ஜனநாயக சிந்தனைகளும், அபிலாசைகளும் எத்தகைய நேர்மையானவையாக இருந்தபோதினும், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்கவே இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா நுழைந்திருந்தது. யுத்தத்தைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அதன் கொள்கைகள் இன்னும் கூடுதலான குற்றவியல் குணாம்சத்தை ஏற்றது. வசீகரமான ஜனநாயக வாய்ஜாலங்களுக்கும், அமெரிக்க கொள்கைகளின் காட்டுமிராண்டித்தன எதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் பெரும்பிளவு சர்வதேச அளவிலும் சரி அல்லது அமெரிக்காவிற்குள்ளும் சரி மூடிமறைப்பது சாத்தியமில்லாமல் போனது. கென்னடி பற்றாளர்கள், குறிப்பாக அந்த ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னர், அவரது நிர்வாகத்தை "காமிலெட்" (Camelot) என்பதாய்க் குறிப்பிட்டனர். அதை "ஓர் ஒளிரும் பிரகாசமான பொய்" என்பதே மேம்பட்ட விவரிப்பாக இருக்கும். |
|