தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Protests in Jaffna during the Commonwealth summit பொதுநலவாய மாநாட்டின் போது யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள்
Subash Somachandran Use this version to print| Send feedback இலங்கையில் கடந்த வாரக் கடைசியில் பொதுநலவாய தலைவர்களின் மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதற்கு சமாந்தரமாக தீவின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்கள் மக்களின் உண்மையான அவல நிலையை வெளிப்படுத்தியதோடு மட்டுமன்றி, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒடுக்குமுறை ஆட்சியையும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகாதிபத்திய-சார்பு கொள்கையையும் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 12 முதல் 15ம் திகதி வரை, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டுத் தரவேண்டும் எனக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் மாவிட்டபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக் கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் முன்னால், காணாமல்போனோரைக் கண்டு பிடித்து தருமாறு கோரி அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களுமாக பலநூறுபேர் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், அங்கு வரவிருந்த பிரிடிஷ் பிரதமர் டேவிட் கமரோனிடம் ஒரு மகஜரையும் கையளிக்க எதிர்பார்த்திருந்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்பாடு செய்திருந்தன. இந்தப் போராட்டங்களின் இலக்கு, இலங்கையில் முன்னர் காலனித்துவ ஆட்சியை நடத்திய பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரோனுக்கு தமிழ் மக்களின் துன்பங்களை காட்டி இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே ஆகும். எவ்வாறெனினும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த கமரோன் தமிழ் கூட்டமைப்பின் தலைவர்களுடன் மட்டுமே கலந்துரையாடினார். யாழ்ப்பாண பொது நூலகத்தினுள் கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்த போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள், கமரோன் தங்களுடன் உரையாட வேண்டும் என்று கோரி, நூலக வாயலுக்கு வருவதற்கு முயன்றனர். பொலிசாரின் தடையை மீறி மக்கள் நகர முற்பட்ட நிலையில், நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாரினால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர். கூட்டமைப்பு தலைவர்கள் மீது ஆத்திரமடைந்த மக்கள், அதன் தலைவர்கள் ஆர். சம்பந்தனின் வாகனத்தை மறித்து அவருடன் வாக்குவாதப்பட்டனர். இறுதி மோதல் நடந்த முள்ளிவாய்காலில் இருந்து நாங்கள் வெளியேறும் போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட எனது பிள்ளையை இன்றுவரையும் காணவில்லை, இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை எங்கோ மறைத்து வைத்திருப்பதாகவே நாங்கள் நம்புகின்றோம், என்று காணாமல் போன ஒருவரின் உறவினர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். “இங்கு பிரித்தானியப் பிரதமரை சந்தித்து விடயத்தினை கூற முடியும் என்றுதான் எம்மை அழைத்தார்கள். ஆனால், எங்களைப் பொலிசார் அடிக்கும்போது கூட்டமைப்பினர் அதைப் பார்த்தபடி கமரோனுடன் உள்ளே நிற்கின்றனர். அவர்கள் வந்து தடுத்திருக்கலாம். முதலமைச்சருக்கு நாங்கள் வாக்குப் போட்டோம், அவர்கள் அரசாங்கத்துடன் ஒன்றாக இருக்கின்றார்கள். நாங்கள் தெருவில் நின்று கண்ணீர் விடுகின்றோம். அவர்கள் குளிரூட்டப்பட்ட வீடுகளில் தங்கள் குடும்பங்ளை வைத்திருக்கிறார்கள். எங்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை” என அவர் கூறினார். யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களும், அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்களும் மற்றும் முகாம்களில் வைத்து விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்ட இளம் ஆண்களும் பெண்களும் அடங்குவர். 23 வருடத்துக்கு முன்னர் குடிபெயர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மாறி மாறி குடியமர்ந்ததாக, மாவிட்டபுரத்தில் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஓரு விவசாயி தெரிவித்தார். “தற்போது மாதம் 3,000 ரூபாவுக்கு வாடகைக்கு குடியிருக்கின்றோம். தொடரச்சியாக எம்மால் வாடகை கட்ட முடியாது. ஒரு வருடத்துக்கு மட்டுமே வீட்டை வாடகைக்கு பெற முடியும். எமது நிலத்தில் இராணுவம் விவசாயம் செய்கின்றது. நாங்கள் குத்தகை காணிகளில் விவசாயம் செய்கின்றோம். எமது நிலத்தை அரசாங்கம் திருப்பி தரவேண்டும். எம்மால் தொடர்ச்சியாக சிரமப்பட முடியாது. யுத்தம் முடிந்துவிட்டது எம்மை ஏன் எமது சொந்த நிலத்துக்கு விட முடியாது?” என அவர் கேட்டார். யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளின் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படாததோடு, அப்பகுதியில் இராணுவம் நிரந்தர முகாங்களையும் குடியிருப்புக்களையும் கட்டியெழுப்புவதன் மூலம் தனது ஆக்கிரமிப்பை இறுக்கி வருகின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் சுமார் 6500 ஏக்கர் நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இதனால் 28,281 குடும்பங்கள் இழிநிலையிலான அகதி முகாம்களிலும் வாடகை வீடுகளிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்கின்றன. மன்னாரைத் தளமாகக் கொண்ட பிரஜைகள் குழுவின் படி, வவுனியாவில் 9,460 ஏக்கர், மன்னாரில் 23,632 ஏக்கர் மற்றும் மட்டக்களப்பில் 41,500 ஏக்கர் நிலங்களை இராணுவம் சுற்றிவளைத்திருக்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கம் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக மாநாடு முடியும்வரை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை வித்திருந்தது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொழும்பில் நடத்தவிருந்த பிரச்சாரத்தை தடை செய்து பொலிசார் நீதிமன்ற உத்தரவு ஒன்றையும் பெற்றதுடன், இதற்காக வடக்கில் இருந்து கொழும்பு வந்த உறவினர்கள் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் 4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு ரயிலில் பயணித்தபோது அரசாங்க ஆதரவாளர்கள் அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து அவர்களை கீழிறக்கினர். தமிழ் கூட்டமைப்பு மாவிட்டபுரத்தில் பிரச்சாரத்துக்கு திட்டமிட்ட போது, அதன் அமைப்பாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மக்கள் பயணித்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன் பஸ்கள் மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது. முகாம்களுக்குள் புலனாய்வாளர்கள் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தினர். எவ்வெறெனினும், கமரோன் யாழ்ப்பாணத்துக்கு வந்தது தமிழ் மக்களின் அடிப்படை ஜனநயாக உரிமைகள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக இராஜபக்ஷ அரசாங்கத்தை சீனாவிடம் இருந்து தூர விலகுவதற்கு நெருக்குவதற்காகவே ஆகும். 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவுக்கு வரும் வரை, இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்துக்கு முழு ஆதரவு வழங்கிய பிரிட்டன், அமெரிக்கா போன்ற பெரும் வல்லரசுகளும் மற்றும் இந்தியாவும், அரசாங்கம் சீனாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட பின்னர், இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை பற்றிக்கொண்டன. இந்த அழுத்தத்தை வலியுத்துவதற்கு மாநாட்டைப் பயன்படுத்திய கமரோன், மூன்று மாதங்களுக்குள் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டில் விசாரணை நடத்தாவிட்டால், அடுத்த மார்ச் மாதம் இந்தப் பிரச்சினையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எழுப்புவதாக அறிவித்தார். தமிழ் பேசும் மக்களை அன்றி, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநித்துவம் செய்யும் தமிழ் கூட்டமைப்பு, இந்த ஏகாதிபத்திய சக்திகளிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற மாயையை பரப்புகின்றது. தமிழ் முதலாளித்துவத்தின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழ் கூட்டமைப்பு இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, இதற்கு ஏகாதிபத்தியங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றது. வடக்கு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மோலோங்கி வருவதானது, மக்களின் எந்தவொரு அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களும் இலாயக்கற்றிருப்பதையே நிரூபிக்கின்றது. |
|
|