World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா Indian Stalinists invoke Hindu-communalist threat இந்திய ஸ்ராலினிஸ்டுகள் இந்து-வகுப்புவாத அச்சுறுத்தலைத் தூண்டுகின்றனர்
By Kranti Kumara and Keith
Jones இந்தியாவின் இரண்டு பிரதான ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPM) கடந்த வாரம் இந்திய தலைநகரில் ஒரு தேசிய "மதசார்பற்ற மாநாட்டை" ஏற்பாடு செய்தன. அதுவொரு அரசியல் மோசடியாகும். வகுப்புவாத மற்றும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சிக்கு (பிஜேபி) எதிராக போராடுவதென்ற பெயரில் ஸ்ராலினிஸ்டுகள் வலதுசாரி, பிராந்தியவாத மற்றும் ஜாதிய கட்சிகளின் ஒரு முகாமில் உள்ள சக்திகளோடு இணைந்தன. அவற்றில் பெரும்பாலானவை பிஜேபி கூட்டணியில் இருந்த முந்தைய பங்குதாரர்கள் ஆவர். ஸ்ராலினிஸ்டுகளின் கருத்துப்படி வகுப்புவாதத்திற்கு எதிராக இந்திய மக்களின் "ஐக்கியமென்பது", பிஹார் முதல்மந்திரி நிதிஷ் குமார் போன்றவர்களை அரவணைப்பதால் உறுதிப்படுகிறது. அவருடைய ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) மிக முக்கிய கூட்டாளியாக இருந்து, கடந்த ஜூனில் தான் முறித்துக் கொண்டது. அந்த மாநாடு இரண்டு சம்பவங்களின் விடையிறுப்பு என்றரீதியில் நடத்தப்பட்டது: ஒன்று, இந்தியாவின் 2014 வசந்தகால தேசிய பொது தேர்தலுக்கான பிஜேபி பிரதம மந்திரி வேட்பாளராக குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது; மற்றொன்று, உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகர் மாவட்டத்தில் வெடித்த சமீபத்திய வகுப்புவாத கலவரங்கள்—இதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள், அதில் உள்ளூர் பிஜேபி தலைவர்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். மோடி ஒரு பரம-வகுப்புவாதியும், தொழிலாள வர்க்கத்தின் வெறுக்கத்தக்க எதிரியும் ஆவார். அவரால் தூண்டிவிடப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான 2002 குஜராத் படுகொலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் மற்றும் நூறு ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர். தேசிய அரசியல் அரங்கில் மோடியின் வரவும், உத்தியோகபூர்வ எதிர்கட்சி பாரதீய ஜனதா கட்சியின் சுமைதாங்கியாக அவர் உதயமானதும், இந்திய பெரு வணிகத்திடமிருந்து அவருக்கு கிடைத்த மிக பகிரங்கமான ஆதரவால் உந்தப்பட்டுள்ளது. (“இந்திய நிறுவனங்கள் ஏன் மோடியின் பக்கம் திரும்புகின்றன,” என்ற தலைப்பிட்ட எக்கானமிஸ்ட் இதழின் சமீபத்திய தலையங்கத்தின்படி, ஏறத்தாழ ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரும், தனியார் துறையின் தூண்டுதலோடு நரேந்திர மோடி பிரதம மந்திரியாக வேண்டுமென விரும்புகின்றனர் என்றால் அது பெரிதாக ஒன்றும் மிகையாது ... தனியார்-ஈக்விட்டி மாதிரியானவை, புளூ-சிப் செயலதிகாரிகள் மற்றும் இந்தியாவின் பெரிய குழுமங்களின் தலைவர்கள் அனைவரும், அவரால் விஷயங்களை சரியாக நடத்திக்காட்ட முடியுமென்று கருதுகின்றனர்.”) இருந்தபோதினும் கடந்த வாரத்தின் மாநாடு தொடங்குவதற்கு முன்னரோ அல்லது இறுதியில் மாநாட்டிலோ இதுகுறித்து ஸ்ராலினிஸ்டுகள் தோற்றப்பாட்டளவில் கூட ஒன்றும் கூறவில்லை, அவர்களின் "மதசார்பற்ற" கூட்டாளிகள் குறித்து கூற வேண்டியதே இல்லை. அவர்கள் மோடியின் எழுச்சியை முற்றிலுமாக RSSஇன் சூழ்ச்சிகள் என்று ஒதுக்கிவிட்டனர். ஒரு நிழலுலக இந்து வகுப்புவாத "சுயஆர்வ அமைப்பான" RSS, பாரதீய ஜனதா கட்சிக்கு அதன் பெரும்பாலான காரியாளர்களை வழங்கி வருகிறது. வரவிருக்கும் தேர்தலுக்குப் பின்னர் பிஜேபி தலைமையிலான ஆட்சி மூலமாகவோ அல்லது எந்தவொரு கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தைப் பிடித்தாலும் அதன் மீது வலதுசாரி அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலமாகவோ, பெரிய வியாபாரங்கள் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட, கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், தனியார்மயமாக்கம், மானிய வெட்டுக்கள், மற்றும் பற்றாக்குறை குறைப்பு போன்ற "சந்தைசார்பு" நிகழ்ச்சிநிரல் திணிப்பைத் துரிதப்படுத்த விரும்புகின்றன. இதற்காக அவை—பெருநிறுவன இந்தியாவிற்கு சலுகைகளை வாரிவழங்கியவரும் மற்றும் வேலைநிறுத்தங்களை ஒடுக்கி சுய-பாணியில் பலம்வாய்ந்தவராக காட்டிக் கொண்டவருமான—மோடியை எதிர்நோக்கி வருகின்றன. முதலாளித்துவ வர்க்கம் சமூக எதிர்வினையைத் தழுவுவதென்பது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக வறிய விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்களை ஒன்று திரட்டி முதலாளித்துவ நெருக்கடிக்கு அதன் சொந்த தீர்வை—அதாவது சமூக-பொருளாதார வாழ்வை சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைக்க பொறுப்பேற்கும் ஒரு தொழிலாளர்களின் அரசை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தை—உறுதியாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிடுகிறது. இதற்கு மாறாக ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை அனைத்துவிதமான வலதுசாரி கட்சிகளின் மற்றும் நாடாளுமன்ற அரசியலின் விலங்குகளில் கட்டி, அரசியல்ரீதியாக முடக்க முயல்கின்றனர். “மதசார்பின்மையின் பாதுகாவலர்களாக" காட்டிக்கொள்ளும் ஸ்ராலினிஸ்டுகளின் கட்சிகள் அதிகாரத்தில் இருந்தபோது, சமூகரீதியில்-எரியூட்டும் முதலாளித்துவ "சந்தை சார்பு" நிகழ்ச்சிநிரலையே பின்பற்றின. ஒரு தொழிலாள-வர்க்க மாற்றீடு இல்லாமல், இந்து வலது சுரண்டப்பட்டு வந்த சமூக கவலைகள் மற்றும் விரக்திகளால் நிரம்பியிருந்த நிலைமைகளில், அவர்கள் தொடர்ந்து ஆழமடைந்து வந்த வறுமை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு தலைமை தாங்கி சென்றனர். அனைத்திற்கும் மேலாக, இந்த கட்சிகளே பிற்போக்குத்தனமான பிராந்தியவாத மற்றும் ஜாதிய முறையீடுகளைச் செய்கின்றன என்பதோடு இந்து வகுப்புவாத பிஜேபி மற்றும் அதன் கூட்டாளிகளோடும் உடந்தையாய் உள்ளன. ஸ்ராலினிஸ்டுகளின் "மதசார்பற்ற மாநாட்டில்" பெருமைமிகு இடம் நிதிஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது—இவ்விதத்தில் ஸ்ராலினிஸ்டுகள் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஒரு அரசியல்வாதியோ அல்லது கட்சியோ வெளியேறினாலே அவர்களுக்கு அவர்களின் "மதசார்பற்ற ஆசிர்வாதங்களை" வழங்குவார்கள் என்பது எத்தனையோ முறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் குறிப்புப்படி, “பாசிச" மோடிக்கு எதிராக குமார் மூர்க்கமான பக்கத்தை வெளிப்படுத்தினார். இருந்தபோதினும் அவரும் மாநாட்டை ஏற்பாடு செய்த ஸ்ராலினிஸ்டுகளும் வெளிப்படையான, ஆனால் அசௌகரியமான ஒரு கேள்வியைப் புறக்கணித்தனர்: அதாவது, குமாரும் அவரது ஐக்கிய ஜனதா தளமும் இந்தளவிற்கு வகுப்புவாதத்திற்கு உணர்ச்சிபூர்வமான எதிர்ப்பாளர்கள் என்றால், ஒரு கட்சி தனது தலைவர்களில் ஒருவராக மோடியைக் கருதியதோடு மட்டுமின்றி, பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் வெடித்த மிகப்பெரிய வகுப்புவாத வன்முறையாக, 1990களின் தொடக்கத்தில் அயோத்தியாவில் பாபரி மஸ்ஜீத்தைத் (மசூதி) இடிப்பதில் எழுந்த மோதலுக்கு இட்டுச் சென்ற ஒரு கட்சியோடு, அவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வரை ஏன் கூட்டாளிகளாக இருந்தார்கள்? குமாருக்கு அடுத்ததாக, ஸ்ராலினிஸ்டுகளின் மதசார்பற்ற மாநாட்டில் சேர்க்கப்பட்ட முக்கிய பிரமுகர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆவார். இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்கள் ஒன்றின் தலைவரான அனில் அம்பானி உடனான அவரது நெருக்கமான தொடர்புகள் நீண்டகாலமாகவே பொது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன. உத்திர பிரதேச சமாஜ்வாதி கட்சி அரசாங்கம், முஜாபர்நகர் வகுப்புவாத மோதலின் போது தேர்தல் ஆதாயங்களுக்காக ஒரு வகுப்புவாத துருவமுனையை உருவாக்க அவற்றைக் கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இருக்கும் கணிசமான ஆதாரங்களோடு, அம்மாநில அரசாங்கம் அந்த விவகாரத்தில் சிக்கி உள்ளது. ஸ்ராலினிஸ்டுகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில், தமிழ்நாடு முதல்மந்திரியும், அஇஅதிமுக உயர்தலைமையுமான ஜெயலலிதா அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. மாறாக அவர் அவரது விசுவாசிகளில் ஒருவரை அனுப்பி இருந்தார். ஓர் இழிபெயர்பெற்ற வலதுசாரி கட்சியான அஇஅதிமுக, அரசியல் எதிர்ப்பாளர்களை ஜெயிலில் அடைக்க தீவிரவாத-தடுப்பு சட்டங்களைப் பயன்படுத்தி உள்ளதோடு, 2003 அரசு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை உடைக்க கருங்காலிகளையும், துப்பாக்கி சூட்டையும் மற்றும் பாரிய கைது நடவடிக்கைகளையும் பயன்படுத்தியது. இந்து வகுப்புவாதத்தை ஊக்குவிப்பதிலும், உடந்தையாய் இருப்பதிலும் ஜெயலலிதா மற்றும் அவரது அஇஅதிமுகவிற்கு நீண்டகால வரலாறு உள்ளன. பிஜேபி தலைமையிலான NDAஐ உருவாக்குவதில் ஒரு பங்குதாரராக இருந்த அஇஅதிமுக பிஜேபி அரசாங்கத்திலும் கூட்டணி வகித்தது. அஇஅதிமுக அரசாங்கம், பிஜேபியிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற, 2002இல், கீழ்ஜாதி இந்துக்கள் ஜாதி கொடுமையிலிருந்து தப்பிக்க மற்றொரு சமயத்திற்கு மாறுவதைத் தடுக்க மதமாற்ற சட்ட மசோதா என்றழைக்கப்பட்ட ஒன்றை அமுல்படுத்தியது. மேலும் பரம-வகுப்புவாதியான மோடி பிஜேபியின் தேசிய நாடாளுமன்ற குழுவிற்கு கடந்த ஜூனில் உயர்த்தப்பட்ட போது அவருக்கு வாழ்த்து கூறியது உட்பட ஜெயலலிதா அவரோடு தனிப்பட்ட அவரது நட்புறவையும் உயர்த்தி கொண்டுள்ளார். பெருநிறுவன ஊடகங்கள் மதசார்பற்ற மாநாட்டை பொதுவாக ஒரு மூன்றாவது அணி, அதாவது பிஜேபியின் NDA மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவற்றிற்கு எதிராக ஸ்ராலினிஸ்டுகளின் இடது முன்னணி, பல்வேறு பிராந்திய மற்றும் ஜாதிய கட்சிகளின் ஐக்கியத்தோடு உருவாக்கப்படும் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கான தயாரிப்பாக வெளிப்படுத்தி காட்டின. இது ஓரளவிற்கு உண்மை தான். ஆனால் ஸ்ராலினிஸ்டுகளே இதை மறுத்தார்கள், ஏனென்றால் மூன்றாவது அணி என்ற முன்னோக்குடன் மாநாட்டை அடையாளம் காட்டுவது அங்கே அழைக்கப்பட்ட பலரை கலக்கமடைய செய்யும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அஇஅதிமுக போன்ற கட்சிகள், ஸ்ராலினிஸ்டுகளுடன் ஒரு அரங்கத்தைப் பகிர்ந்து கொள்வது அவர்களை "மதசார்ப்பற்றவர்கள்" மற்றும் "ஏழை எளியவர்களைச் சார்ந்தவர்கள்" என்று காட்டிக்கொள்ள உதவுமென்று அவர்கள் கணக்கிடுகின்றனர் என்றபோதினும், புதிய ஆண்டின் தொடக்கத்தில் வரவிருக்கின்ற தேர்தல் கூட்டணி முன்பேரங்களில் இருந்து தங்களின் கரங்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். எவ்வாறிருந்த போதினும், ஸ்ராலினிஸ்டுகளும் இரட்டை நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் ஒரு மூன்றாவது அணி அமைப்பதற்கான சாத்தியக்கூறை ஏற்படுத்துவதற்கும், காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் நெருக்கமான அரசியல் கூட்டணிக்கு அடித்தளத்தை தயாரிப்பதற்கும்—அது ஒருவேளை தேர்தலுக்கு முந்தைய அல்லது பிந்தைய ஒரு வெளிப்படையான கூட்டணியாகவோ அல்லது பிஜேபியை விட "தீமை குறைந்தது" என்றரீதியில் மறைமுக ஆதரவாகவோ இருக்கலாம்—அந்த இரண்டுக்கும் பொதுவான ஒரு கருவியாக அந்த மாநாடு இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள், இந்து வலதை தூர விலக்கி வைப்பதற்கான ஒரே வழி என்ற அடித்தளத்தில் வழக்கமாக "மதசார்பற்ற" காங்கிரஸின் பக்கம் சாய்ந்துள்ளனர். மேலும் கடந்த வார மாநாட்டில், அவர்கள் தொழிலாள வர்க்கம் "மதசார்பற்ற" முதலாளித்துவ கட்சிகளின் பக்கம் ஒதுங்குவதன் மூலமாக வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும், அப்படிதான் எதிர்க்க முடியும் என்ற அவர்களின் வாதத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். ஸ்ராலினிஸ்டுகள் அவர்களின் மாநாட்டு அழைப்பிலும், காங்கிரஸ் மற்றும் அதன் UPA கூட்டாளிகளை அழைக்க மறுப்பதைப் போன்றதொரு நாடகத்தை நடத்தினர். மானிய வெட்டுக்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொதுத்துறை முதலீடு குறைப்பு உட்பட UPAஇன் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு அங்கே மக்கள் எதிர்ப்பு இருக்கின்ற நிலைமைகளின் கீழ், ஸ்ராலினிஸ்டுகள் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை நடத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் அந்த போராட்டங்களில் அவர்கள் "மக்கள்சார்பு" முறைமைகளைக் கடைபிடிக்க UPAக்கு அழுத்தம் அளிப்பதென்ற பிற்போக்குத்தனமான முன்னோக்கையையும் திணித்து வருகின்றனர். எவ்வாறிருந்த போதினும், இறுதியாக ஸ்ராலினிஸ்டுகள் மகாராஷ்டிராவில் உள்ள தேசிய முற்போக்கு கூட்டணியின் கூட்டாளி தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் மாநாட்டிற்கு அழைத்து இருந்தனர். காங்கிரஸிடம், அதன் பங்கிற்கு, இடது முன்னணி குறித்து கூற நல்ல விஷயங்கள் மட்டுமே இருந்தன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ் பப்பர், “அவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு நாங்கள் முழு மரியாதை அளிக்கிறோம்," என்றார். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் கடந்த கால் நூற்றாண்டின் கணக்குவழக்குகளைச் சரிபார்க்க வேண்டும். இந்து வலதை எதிர்க்கிறோம் என்ற பெயரில், தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு நாசகரமான விளைவுகளோடு ஸ்ராலினிஸ்டுகள் ஒன்றை மாற்றி ஒன்று வலதுசாரி அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை ஆகும். 1990களின் தொடக்கத்தில் அவர்கள் சிறுபான்மை நரசிம்ம ராவ் காங்கிரஸ் அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்த உதவினர். அது அரசின் தேசிய பொருளாதார மூலோபாயம் கவிழ்ந்துவிடாமல் தப்பி பிழைக்க முதலாளித்துவத்திற்கு உதவியதோடு, இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவுக்கூலி உற்பத்தியாளராக மாற்றும் முனைவையும் தொடங்கி வைக்க உதவியது. 2004-08 வரையில், UPA அரசாங்கத்தை ஒழுங்கமைக்கவும் மற்றும் அதன் குறைந்தபட்ச மக்கள் திட்டங்களை எழுத உதவி செய்தும், அதை அலுவலகத்தில் தக்க வைக்க அதன் வாக்குகளை அளித்தும், முற்றிலுமாக அவர்கள் காங்கிரஸ் கூட்டணியின் பங்குதாரர்களாக இருந்தனர். இந்த அமைப்பு இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையோடு இணைந்து செல்ல காங்கிரஸ் அதன் உறவுகளை உடைத்துக் கொண்டபோது தான் முடிவுக்கு வந்தது. காலகாலமாக தொழிலாள வர்க்கத்தின் விரோதியாக இருந்துவரும் பிஜேபி பாரிய வலதுசாரி நடவடிக்களை நடைமுறைப்படுத்திய போதினும், 1998-2004 வரை அது இந்திய அரசிற்கு தலைமை வகித்த போது அதன் புதிய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியமை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய கூட்டணியை ஜோடித்துக் கொண்டமை உட்பட கடந்த இரண்டு தசாப்தங்களில் முதலாளித்துவத்தின் வர்க்க யுத்த தாக்குதலில் அது "தூக்கி நிறுத்திய" பெரும்பாலான விஷயங்கள், காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டன—இந்த அரசுகளின் பெரும் பகுதிகள் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியால் நாடாளுமன்றத்தில் முட்டுக் கொடுக்கப்பட்டன. தொழிலாள வர்க்கத்தை மிரட்ட முயற்சிக்க ஸ்ராலினிஸ்டுகள் இந்து வலதிடமிருந்து வரும் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி உள்ளன. ஆனால் வகுப்புவாத வலதின் வளர்ச்சியும், ஜாதிய மற்றும் பிராந்திய-இன அடையாளங்களை ஊக்குவிப்பதை அடித்தளமாக கொண்ட கட்சிகளின் பெருக்கமும், 1960களின் இறுதியிலும் மற்றும் 1970களிலும் இந்தியாவில் எழுந்த தொழிலாள வர்க்க எழுச்சிகளின் குரல்வளை அரசியல்ரீதியாக நெரிக்கப்பட்டதின் நேரடி விளைபொருள்களாகும். 1975-77 அவசரகால நிலையின் போது அடிப்படை மக்கள் உரிமைகளைத் தற்காலிகமாக நீக்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இடது கொள்கையாளர்களை ஜெயிலில் அடைத்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திரா காந்தி அரசாங்கத்தில் ஒரு கூட்டணி பங்குதாரர்களாக சேவை செய்து வந்தது. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, ஜெ.பி. நாராயணனின் காங்கிரஸிற்கு எதிரான முதலாளித்துவ வகை எதிர்ப்பு இயக்கத்திற்கு அதன் ஆதரவை வழங்கியது, பின்னர் 1977 தேர்தல்களில் ஜனதா கட்சியோடு கூட்டில் நின்றது—அது பாரதீய ஜனதா கட்சிக்கு முந்தைய இந்து மேலாதிக்க ஜன சங்கை அரசியலமைப்பின் ஒரு பிரதான உட்கூறாக உள்ளடக்கிய ஒரு தற்காலிக கூட்டணியாக விளங்கியது. இந்திய முதலாளித்துவத்தின் எந்த பிரிவும் மதசார்பின்மைக்கோ அல்லது ஜனநாயகத்திற்கோ பொறுப்பேற்றவை அல்ல. காங்கிரஸ் கட்சி துணை கண்டத்தைப் பிரிக்க முஸ்லீம் லீக் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் இணைந்தது, ஏனென்றால் அது இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் பொதுவான வர்க்க நலன்களுக்கான ஒரு முறையீட்டின் அடிப்படையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு விரோதமாக இருந்ததோடு, அத்தகையவொரு போராட்டத்தை நடத்த இயல்பாகவே இலாயக்கற்றும் இருந்தது. 1984இல், பிரதம மந்திரி இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான ஒரு படுகொலை சம்பவத்தை காங்கிரஸ் தலைவர்கள் தூண்டிவிட்டனர். மேலும் இந்திரா காந்திக்குப் பின்னர் வந்த காங்கிரஸ் தலைவர்கள், அவரது மகன் ராஜீவ் காந்தி மற்றும் அதற்குப்பின்னர் நரசிம்ம ராவ் ஆகியோர், இந்து குறுநலப்பற்றை, பாப்ரி மஸ்ஜீத்தை இடிக்கும் பிஜேபி தலைமையிலான பிரச்சாரத்தைக் கண்டுங்காணாதது போல இருந்தனர். முதலாளித்துவத்தின் பிரதான பிரிவுகள் மோடிக்குப் பின்னால் அணிதிரண்டிருப்பது வர்க்க போராட்டம் தீவிரமடைவதன் ஒரு வெளிப்பாடாகும். இந்திய முதலாளித்துவம் உலக பொருளாதார நெருக்கடியால் வெந்து போயிருப்பதோடு சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவம் அதன் தாக்குதலைத் தீவிரப்படுத்த தீர்க்கமாக உள்ளது மற்றும் அவ்வாறு செய்ய வகுப்புவாத எதிர்வினையையும், சர்வாதிகார முறைகளையும் பயன்படுத்த தயாராக உள்ளது. இதற்கு விடையிறுப்பாக, தொழிலாள வர்க்கம் அதன் பின்னால் உழைப்பாளர்களை ஐக்கியப்படுத்தி, ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் அமைப்பையும் எதிர்ப்பதன் மூலமாக மற்றும் ஒரு சோசலிச வேலைதிட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக, அதன் வர்க்க பலத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். அதற்கு ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க கூட்டாளிகளுக்கு எதிராக ஒரு புதிய புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சியை, அதாவது 1917 ரஷ்ய புரட்சியின் இணை-தலைவரும், அதிகாரத்துவ சீரழிவின் சளைக்காத எதிர்ப்பாளருமான லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஓர் இந்திய பகுதியைக் கட்டியெழுப்புவது அவசியமாகிறது. |
|