தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Global deflation, slowing growth fuel economic tensions உலகளாவிய பணச்சுருக்கம், மெதுவான வளர்ச்சி பொருளாதார பதட்டங்களைத் தூண்டுகிறது
Nick Beams Use this version to print| Send feedback உலகின் பிரதான மத்திய வங்கிகள் மூலமாக நிதியியல் அமைப்பிற்குள் பணத்தைப் பாய்ச்சுவது உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஒன்றும் செய்ய போவதில்லை என்பதற்கு கடந்த வாரம் மேலும் கூடுதலாக ஆதாரங்கள் வெளியாகின. மாறாக, பணத்தை அதிகளவில் அச்சடிக்கும் நடவடிக்கை மற்றொரு உலகளாவிய நிதிய நெருக்கடிக்கு நிலைமைகளை உண்டாக்கி வருகின்றன என்ற எச்சரிக்கைகள் அங்கே நிலவுகின்றன. அனைத்திற்கும் மேலாக, பொதுவான மந்தநிலைமைக்கு இடையில், பிரதான பொருளாதார சக்திகளுக்கு இடையே பதட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. வெள்ளியன்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது: ஐரோப்பா மற்றும் ஜப்பானின் "ஏமாற்றமளிக்கும் வளர்ச்சி அளவுகள்" "இந்தாண்டின் இரண்டாம் அரைபகுதியில் உலகளாவிய பொருளாதார மீட்சி வேகம் கூடும் என்ற நம்பிக்கைகளைக் கெடுத்துவிட்டன." யூரோ மண்டலத்தின் பிரதான பொருளாதாரமான ஜேர்மனியின் வளர்ச்சி செப்டம்பரில் முடிந்த மூன்று மாதங்களில் வெறும் 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. முந்தைய காலாண்டில் 0.5 சதவீதம் உயர்ந்த பின்னர் பிரெஞ்ச் பொருளாதாரம் 0.1 சதவீதம் சுருங்கியது. ஜப்பானில் அபினொமிக்ஸ் (Abenomics) என்றழைக்கப்பட்ட நடைமுறைகளால்—அந்நாட்டின் பணப்புழக்கத்தை இரட்டிப்பாக்க பேங்க் ஆஃப் ஜப்பானின் நடவடிக்கைகளால்—பொருளாதாரத்திற்கு கிடைத்த ஆரம்ப வளர்ச்சி வறண்டு போனதாகத் தெரிகிறது. அங்கே ஆண்டு வளர்ச்சி விகிதம் இரண்டாவது காலாண்டில் 3.8 சதவீதத்தை எட்டிய பின்னர், மூன்றாம் காலாண்டில் பாதியாக குறைந்து 1.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. முக்கியமாக இது 0.6 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்த நுகர்வு, 0.6 சதவீதத்திற்கு சுருங்கிய ஏற்றுமதி சரிவு ஆகியவற்றால் ஏற்பட்டதாகும். மெதுவான வளர்ச்சியை முகங்கொடுத்திருப்பதால், அமெரிக்க பெடரல் ரிசர்வின் "பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும்" (quantitative easing) கொள்கை ஒருவேளை தொடரக்கூடும். ஜனாதிபதி ஒபாமாவால் பெடரல் ரிசர்வின் சேர்மேனாக நியமிக்கப்பட்ட ஜெனெட் யேலென் அவருக்கு முந்தைய பென் பெர்னான்கியிடம் இருந்து பொறுப்பை ஜனவரியில் ஏற்கும் போது செனட் பேங்கிங் கமிட்டி முன்னால் அளித்த உறுதிமொழியில், ‘அமெரிக்க பொருளாதாரமும், அமெரிக்க தொழிற்சந்தையும் "அவற்றின் சக்திக்கு மிக குறைவாக" செயல்பட்டு வருகின்றன; பெடரல் ரிசர்வ் செலாவணி உதவிகளைக் குறைப்பதற்கு முன்பாக அவற்றை மேம்படுத்தி ஆக வேண்டும்’ என்று கூறினார். பொருளாதாரத்தை ஊக்குவிக்க மலிவு-பணம் தேவைப்படுகிறது என்பதே அதை வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளுக்கு வழங்குவதற்காக பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளால் முன்மொழியப்பட்ட உத்தியோகபூர்வ காரணமாக உள்ளது. எவ்வாறிருந்த போதினும், குறைந்த பணவீக்க விகிதங்களும், பணச்சுருக்கமும் கூட, அதிக கடனுரிமை வைத்திருப்பவைகளுக்கு குறிப்பாக நிதியியல் அமைப்புகளுக்கு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதே உண்மையான காரணமாகும். குறைந்த பணவீக்கம் மற்றும் வீழ்ச்சி அடைந்துவரும் விலைமதிப்புகளோடு சேர்ந்து, கடனின் உண்மையான மதிப்பும் மற்றும் கடனின் திருப்பிச் செலுத்தங்களும் பொருளாதாரத் தேக்கநிலைமைகளின் கீழ் அதிகரிக்கத் தொடங்குகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைவர் மரியோ திராஹி இந்த மாத தொடக்கத்தில் ECBஇன் மறுநிதியளிக்கும் விகிதத்தை திடீரென்று 0.5 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதத்திற்கு வெட்டியபோது அவரது மனதில் இந்தச் சூழல் மிகத் தெளிவாக இருந்தது. பொருளாதாரக் கண்ணோட்டம் கடந்த வாரங்களில் எதிர்பாராவிதமாக மாறிவிட்டதாக தெரிவித்த அவர், பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட சுமார் 2 சதவீதத்திற்கும் மிக குறைவாக இருக்கும் ஒரு "பரந்த மற்றும் நீண்டகால" நிலைமையை யூரோ மண்டலம் எதிர் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். தேவையானால் வட்டிவிகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக குறைக்க "தொழில்நுட்பரீதியில் ECB தயாராக" இருப்பதாக அவர் தெரிவித்தார். சரிந்துவரும் பணவீக்கம் பல யூரோ மண்டல நாடுகளின் கடன் சுமையில் மேலும் சுமையேற்றி வருகிறது. சான்றாக, ஒவ்வொரு ஒரு சதவீத பணவீக்க விகித சரிவிற்கும், இத்தாலி அதன் அரசு செலவினங்களில் கூடுதலாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதத்தை வெட்டி ஆக வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பின்னரும், இத்தாலிய அரசுக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119 சதவீதத்தில் இருந்து 133 சதவீதமாக உயர்ந்துள்ளது. வட்டிவிகித முடிவை அறிவித்து திராஹி கூறுகையில், வங்கியின் அதிகார குழு "அவசியமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் முழுமையாக உடன்பட்டுள்ளது," எந்த நேரத்தில் செயல்படுவதென்ற பிரச்சினையில் தான் வேறுபடுகிறது என்று கூறினார். ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கி பொதுகுழுவில் உள்ள ஜேர்மன், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரிய பிரதிநிதிகள் அந்த நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்தனர் என்ற உண்மையில் அந்த கூற்று பொய்யாகிப் போகிறது. இத்தாலி, மற்றும் பிரான்ஸ் உட்பட இதர நாடுகளின் நலன்களுக்காக திராஹி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களும் அங்கே உள்ளன. அந்நாடுகள் ஏற்றுமதியை ஊக்குவிக்க யூரோவின் மதிப்பைக் குறைக்கக் கோரி வருகின்றன. செலாவணி மதிப்பைக் குறைக்கும் போட்டியிலிருந்து ஜி-20 அங்கத்துவ நாடுகள் விலகி இருக்க உறுதிபூண்டிருப்பதன் படி, வட்டிவிகிதக் குறைப்புகள் செலாவணி மதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டது என்பதை அனைத்து மத்திய வங்கியாளர்களும் நிராகரிக்கின்ற போதினும், வட்டிவிகிதக் குறைப்புகள் ஒரு செலாவணி யுத்தத்தைத் தூண்ட அச்சுறுத்துகின்றது. சமீபத்திய காலத்தில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் அவற்றின் வட்டிவிகிதங்களை வெட்டி உள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில், செக் தேசிய வங்கி, பொருளாதாரத்தை ஊக்குவிக்க "தேவைப்படும் காலத்திற்கு" செலாவணியைத் தொடர்ந்து விற்க வாக்குறுதி அளித்து, யூரோவிற்கு எதிரான கொரூனாவின் மதிப்பைக் குறைத்து வைக்க நடவடிக்கை எடுத்தது. ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து மத்திய வங்கிகள் அவற்றின் செலாவணி மதிப்பு குறைவதைக் காண விரும்பக் கூடும்—ஆஸ்திரேலிய டாலர் “அசௌகரியமான விதத்தில் உயர்ந்துள்ளதாக” ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் கிளீன் ஸ்டீவன்ஸ் கூறினார்—ஆனால் வட்டிவிகித வெட்டுக்கள் வீட்டுச்சந்தை குமிழியின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சம் அங்கே நிலவுகிறது. அமெரிக்காவில், பெடரல் ரிசர்வின் மலிவு-பணக்கொள்கையானது மற்றொரு நெருக்கடிக்கு இட்டுச் செல்லக்கூடுமென்ற அச்சங்கள் நிலவுகின்றன. அடமான பத்திரங்களில் நீண்டகால முதலீடுகளைச் செய்ய குறுகிய கால கடன்களை வாங்கும் ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள், வட்டிவிகிதங்கள் உயர தொடங்கினால் நிதியியல் ஸ்திரமின்மைக்கு ஒரு ஆதாரமாக மாறிவிடுமென்ற எச்சரிக்கைகளும் அங்கே உள்ளன. அக்டோபரில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அதன் உலகளாவிய நிதியியல் ஸ்திரப்பாட்டு அறிக்கை, "இரண்டாம் அடமானக்கடன் சந்தைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள்" குறித்தும், அது “பரந்த-பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென்றும்"—அதாவது அமெரிக்க நிதியியல் அமைப்பின்மீது ஒரு ஸ்திரமின்மையின் தாக்கம் ஏற்படக்கூடுமென்றும் எச்சரித்தது. பார்வைக்கு எட்டிய தூரம் வரையில் முடிவில்லாமல், உலக பொருளதாரத்தில் தொடர்ந்துவரும் மந்தநிலைமையானது சந்தைகளின் ஒரு ஆக்ரோஷமான போராட்டத்திற்கு இட்டு செல்வதோடு, பிரதான பொருளாதார சக்திகளுக்கு இடையே பதட்டங்களையும் அதிகரிக்க செய்து வருகிறது. உலகின் மிகப்பெரிய உணவுபண்ட தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestlé) இன் துணை-செயல் தலைவர் லாரண்ட் பெரெக்ஸ் "பணச்சுருக்க பதட்டங்கள்" உருவாவது குறித்து குறிப்பிட்டுக் காட்டினார். “அங்கே சந்தைக் களத்தில் வளர்ச்சி இல்லை, ஆகவே ஒவ்வொருவரும் சுருங்கி வரும் பாகத்தில் ஒரு பங்கைப் பெற சண்டையிடுகின்றனர்," என்று அவர் சமீபத்தில் குறிப்பிட்டார். இந்த பதட்டங்கள் பல விதத்தில் வெளிப்பட்டு உள்ளன. அதன் ஏற்றுமதி உபரிகளுக்கான ஜேர்மனியின் தொடர்ச்சியான உந்துதல்களால் உலக பொருளாதாரத்தில் பணச்சுருக்க தாக்கம் விளைவிப்பதற்காக அதனை இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க நிதிமந்திரி விமர்சித்தார், இது ஜேர்மன் தரப்பிலிருந்து ஒரு கூர்மையான பதிலடியைக் கொண்டு வந்தது. அங்கே யூரோ மண்டலத்திற்குள்ளே பிளவுகள் விரிவடைந்து வருகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கியின் அதிகார குழுவிற்குள் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் பரோசோ, ஜேர்மனியின் நடப்புக் கணக்கு உபரி ஐரோப்பிய பொருளாதாரத்தைப் பாதிக்கிறதா என்பதன் மீது ஒரு விசாரணையை அறிவித்தார். அந்த "ஆழ்ந்த மீளாய்வு" ஜேர்மன் தொழில்துறையின் போட்டித்தன்மையை விமர்சிப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்று அவர் வலியுறுத்திய போதும், அவருடைய முடிவு அனைத்து பிரதான ஜேர்மன் கட்சிகளிடம் இருந்தும் ஒரு கூர்மையான விடையிறுப்பை கொண்டு வந்தது. "தங்களின் செல்வச்செழிப்பிற்கு ஜேர்மன் ஏற்றுமதிகள் ஆதாரக்கல்லாக" இருப்பதாக ஆளும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) ஒரு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பசுமைக் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளும் அதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டிவிகித வெட்டுக்கு எதிராக வாக்களித்தவர்களில் ஒருவரான ஜேர்மன் மத்திய வங்கித் தலைவர் ஜென்ஸ் வெயிட்மான், “ஜேர்மனியை பலவீனப்படுத்தி ஐரோப்பாவை உங்களால் பலப்படுத்த முடியாது," என்றார். பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளின் கொள்கைகளால் தூண்டப்படக்கூடிய ஒரு புதிய நிதியியல் நெருக்கடியின் அச்சங்களோடு சேர்ந்து, அதிகரித்துவரும் பொருளாதார பதட்டங்கள், பணச்சுருக்கம், செலாவணி யுத்தங்கள், பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் மற்றும் சுருங்கிவரும் சந்தைகள் ஆகிய அனைத்தும், பார்வைக்கு எட்டிய வரையில் அங்கே "பொருளாதார மீட்சி" இல்லை, மற்றும் 2008இல் தொடங்கிய உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் உடைவு தீவிரமடைந்து வருகிறது என்ற உண்மையையே குறித்து காட்டுகின்றன. |
|
|