தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Europe tilts back towards recession ஐரோப்பா மந்தநிலையை நோக்கி பின்னோக்கி திரும்புகிறது
By Stefan
Steinberg Use this version to print| Send feedback யூரோஸ்டாட் புள்ளிவிபரங்கள் முகமையால் வியாழனன்று வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிபரங்கள், யூரோமண்டலம் பின்னோக்கி மந்தநிலைக்கு திரும்புவதை வெளிப்படுத்துகிறது. யூரோ மண்டலம் முன்பில்லாத விதத்தில் 18மாத மந்தநிலையை தொடர்ந்து, இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத ஒரு காலாண்டில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வளர்ச்சி போக்கு, அந்த கண்டத்தின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களின் மூன்றாம் காலாண்டு வளர்ச்சியில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சியோடு பின்னோக்கி திரும்பி உள்ளது. ஜேர்மன் ஜூலையில் பெற்ற 0.7 சதவீத வளர்ச்சியில் இருந்து செப்டம்பரில் 0.3 சதவீதத்திற்கு சரிந்தது. அதேவேளையில் பின்னடைவில் இருந்து வெகு சமீபத்தில் எழுந்த பிரெஞ்சு பொருளாதாரம், அதன் பொருளாதார நடவடிக்கைகளில் 0.1 சதவீத சரிவோடு எதிர்திசையில் சரிந்தது. 17 நாடுகளின் யூரோ மண்டலத்தின் ஒட்டுமொத்த மூன்றாம் காலாண்டு வளர்ச்சி பரிதாபகரமாக 0.1 சதவீதமாக இருந்தது—அது இரண்டாம் காலாண்டின் 0.3 சதவீதத்தில் இருந்து குறைந்துள்ளது. பரந்த 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரமும் மூன்றாம் காலாண்டில் மந்தமானது. கிரேக்க பொருளாதாரம் இந்த ஆண்டில் நான்கு சதவீதம் சுருங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இத்தாலி தொடர்ந்தாற் போல் ஒன்பதாவது காலாண்டின் பொருளாதாரச் சரிவை பதிவு செய்தது—இது யுத்தத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அந்நாட்டின் மிக நீண்டகால மந்தநிலையாகும். பல ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் வேகமாக சரிந்து வருவதை ஓர் அறிக்கை வெளிப்படுத்தி ஒரே வாரத்திற்குப் பின்னர், இந்த சமீபத்திய புள்ளிவிபரங்கள் வெளியாகின—இது பணச்சுருக்க அச்சுறுத்தலை, அதாவது, விலைகளில் நீண்டகால பொறிவு இருக்குமென்பதைக் குறித்து நிற்கிறது—அதேவேளை அந்த கண்டத்திற்குள் வேலையின்மை முன்பில்லாத அளவிற்கு அதிகபட்ச அளவுகளில் உள்ளது. அக்கண்டத்தின் நிதியியல் மேற்தட்டுக்களை விடுவிக்க சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கியால் உத்தரவிடப்பட்ட செலவுவெட்டு கொள்கைகள் ஐரோப்பா முழுவதையும் ஒரு பொருளாதார மற்றும் சமூக பேரழிவுக்குள் தள்ளி வருகின்றது என்பதையே இத்தகைய புள்ளிவிபரங்கள் உறுதிபடுத்துகின்றன. தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவை நாசகரமான பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சிக்கு இட்டுச் சென்ற, மூன்றாண்டுகளுக்கு முன்னர் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் இப்போது அந்த கண்டத்தின் இதயதானத்தில் பேரழிவை உண்டாக்கி கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவில் நுகர்வு குறைந்து உலகம் முழுவதும் சந்தைகள் சுருங்கி வருகின்ற நிலையில், முக்கியமாக ஜேர்மனி மற்றும் பிரான்சின் ஏற்றுமதிகள் சரிந்ததால் அவ்விரு நாடுகளில் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டது. பிரான்சின் கிலியூட்டும் பொருளாதார புள்ளிவிபரங்கள் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசியல் நெருக்கடியோடு பிணைந்துள்ளது. ஹாலண்டின் புகழ் மீதான மதிப்பீடுகள், ஏற்கனவே வெறுப்புக்குள்ளான அவருக்கு முந்தைய நிக்கோலா சார்க்கோசியை விட குறைவாக போயுள்ளது. ஏற்றுமதி வீழ்ச்சிக்கு மேலதிகமாக, பிரெஞ்சு தயாரிப்புத்துறை உற்பத்தி முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் சரிந்ததோடு, முதலீடும் தொடர்ச்சியாக ஏழாவது காலண்டில் குறைந்தது. அமெரிக்க மதிப்பீட்டு நிறுவனம் ஸ்டாண்டர்டு & புவர்'ஸ், கடந்த வாரம் பிரான்சை கடன்பெறும் தரவரிசையில் கீழிறக்கியது. பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் சீர்திருத்தத்திற்கு மேலதிக அழுத்தம், பிரெஞ்சு ஜனாதிபதியால் நிர்மாணிக்கப்பட்ட பாரீஸை மையமாக கொண்ட பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (OECD) ஓர் அறிக்கையில் இருந்து வந்தது. பிரான்ஸ் பின்தங்கி வருவதாக குறிப்பிட்ட அந்த OECD அறிக்கை, இத்தாலி மற்றும் ஸ்பெயினால் நடத்தப்பட்ட ஒருவித கட்டமைப்பு மாற்றங்களைப் போன்று செய்ய தவறியமைக்காக பிரான்சின் வணிக மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சித்தது. இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பொருளாதார மற்றும் சமூக அழிப்பு ஐரோப்பா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை நடத்த ஒரு முன்மாதிரியாக வைக்கப்பட்டுள்ளது. அங்கே அந்நாடுகளில் வேலைவாய்ப்பின்மை முறையே 40 சதவீதம் மற்றும் 60 சதவீதமாகும், மேலும் கூலிகள் மற்றும் சமூக பலன்கள் வெட்டப்பட்டுள்ளன. ஏதோவொருவித அரசியல் நம்பிக்கையை மீண்டும் பெறும் முயற்சியாக ஹாலண்ட் செவ்வாயன்று புரூஸ்ஸெல்சில் நடந்த சமீபத்திய இளைஞர் வேலையின்மை மாநாட்டில் அவரது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை, அதாவது அந்நாட்டில் 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துவரும் இளைஞர் வேலையின்மையைக் களைவதற்கான முறைமைகளை, அவரது அரசாங்கம் சரியாக பயன்படுத்தும் என்று குறிப்பாக சுட்டிக்காட்ட முயன்றார். "ஒட்டுமொத்த தலைமுறையின் எதிர்காலம்" பணயத்தில் இருப்பதாக கூறி, ஹாலண்ட் முறைமைகளின் ஒரு தொகுப்பை அறிவிக்க ஜேர்மன் சான்சிலர் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான ஒரு குறுகிய நேர கூட்டத்திலிருந்து வெளியே வந்தார். ஐரோப்பாவில் இளைஞர்களின் பாரிய வேலையின்மை பிரச்சினையைத் தீர்ப்பதோடு அந்த முறைமைகளுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. முக்கியமாக ஒப்புக்கொள்ளப்பட்ட 45 பில்லியன் யூரோ தொகை தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டங்களில் இருந்து உறிஞ்சப்பட்டுள்ளது, அதேவேளை 2014 மற்றும் 2015இல் யூரோ மண்டலம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வேலையின்மை அதிகரிக்குமென்று எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் ஹேர்மன் வான் ரோம்பே ஏற்கனவே அறிவித்துள்ளார். பிரான்சில் உள்ள நெருக்கடியின் வெடிப்பார்ந்த தன்மை, இந்த வாரம் Le Figaro இல் பிரசுரமான, பிரெஞ்சு பிராந்தியங்களின் சமூக நிலைமை குறித்த பிராந்திய பொலிஸ் தலைவர்களின் கடைசி அறிக்கையில் இருந்த குறிப்புகளில் மிக நிதர்சனமாக வெளிப்பட்டது. "பதட்டம், கொதிப்பு மற்றும் கோபத்திற்கு இரையான ஒரு சமூகமாக" பிரான்ஸ் உள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அது தொடர்ந்து "சட்டப்பூர்வ வரிவிதிப்புகளின் மீது"—அதாவது, ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியால் உழைக்கும் மக்கள் மீது அமுல்படுத்தப்பட்ட புதிய வரி உயர்வுகள் மீது—மக்கள் புறக்கணிப்பை மேற்கோளிடுகிறது. மேலும் "உள்ளார்ந்த அதிருப்தி மற்றும் நிராகரிப்பின் ஒரு கலவை வெடிப்பார்ந்த விதத்தில் வெளிப்பட்டுள்ளதையும் அது குறிப்பிட்டு காட்டுகிறது. அந்த அறிக்கை தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே ஒரு சமூக வெடிப்பு நிகழ்ந்து வருவதன் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறது. அவ்வறிக்கையின்படி, “கோரிக்கைகள் தொழிற்சங்க கட்டமைப்பிற்கு வெளியே உண்ணாநிலை வேலைநிறுத்தங்கள், நீண்டகால ஆலை முற்றுகைகள் அல்லது புறக்கணிப்புகள் மற்றும் இதர பிற மிக தீவிர நடவடிக்கைகள் மூலமாக பாரியளவில் அபிவிருத்தி அடைந்துள்ளன.” அழிவுகரமான சமீபத்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் பூதாகரமான சமூக போராட்டங்களுக்கு இடையில், வலதுசாரி மற்றும் சமூக-ஜனநாயக கட்சிகள் தற்போது பேர்லினில் ஒரு கூட்டணி உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதானது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவற்றின் சிக்கன நடவடிக்கை திட்டங்களை முன்னெடுக்க அழுத்தம் அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நெருக்கடியின் தீவிரம் ஐரோப்பாவிற்குள் ஆழ்ந்த பிளவுகளுக்கு எரியூட்டி உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் ஐரோப்பிய மத்திய வங்கியின் செயலதிகாரி, வங்கிகளின் முக்கிய கடன் விகிதத்தில் மேலதிக வெட்டு விவகாரத்தில் ஒரு எதிர்ப்பு வாக்கை அளித்தார். வட ஐரோப்பிய கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்ட குழுவிலிருந்த இரண்டு ஜேர்மன் பிரதிநிதிகள், வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்த முனைவிற்கு அந்த முறைமை குழிபறிக்கும் என்ற அடிப்படையில் வெட்டுக்கு எதிராக வாக்களித்தனர். மேலும் இந்த வாரத்தின் தொடக்கத்தில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் பல தெற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க கருவூலத்தால் ஒரு வாரத்திற்கு முன்னதாக பேர்லினுக்கு அளிக்கப்பட்ட கடுமையான கண்டனத்தோடு சேர்த்து ஜேர்மனியின் கூடுதல் ஏற்றுமதி உபரிகள் மீது அவர்களின் சொந்த விமர்சனங்களையும் சேர்த்து கொண்டன. ஜேர்மன் ஏற்றுமதி தொழில்துறை மீது ஒரு விசாரணை வைக்க புதனன்று ஐரோப்பிய ஒன்றிய கமிஷனர்கள் உடன்பட்டனர், மற்றும் தெற்கு ஐரோப்பாவிற்கு பிணையெடுப்பு வழங்க கூடுதல் நிதிகளை ஒதுக்க ஜேர்மனிக்கு அழுத்தம் அளிக்க இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்களுக்கு இடையே ஒரு மத்தியதரைக்கடல் பகுதி உடன்படிக்கைக்கு முன்னாள் இத்தாலிய பிரதம மந்திரி ரோமானோ புரோடி அழைப்பு விடுத்தார். |
|
|