World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Mullivaikkal residents face desperate plight

இலங்கை: முள்ளிவாய்க்கால் மக்கள் நம்பிக்கையற்ற தலைவிதியை எதிர்கொள்கின்றனர்

By Vimal Rasenthiran and M. Vasanthan
2 October 2013

Back to screen version

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இலங்கையின் வட மாகாணத்தின் வன்னி பிரதேசத்தில் உள்ள முள்ளிவாய்க்காலுக்கு சென்றிருந்தனர். இந்த பிரதேசத்தில் தான் அரசாங்கத்தின் இராணுவம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது இறுதித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுடன் நீண்டகாலமாகத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது.

மோதலின் போது மக்களை அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறாது புலிகள் தடைவிதித்ததுடன், அரசாங்க துருப்புக்கள் கரையோரப் பகுதிக்கு முன்னேறியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பொறிக்குள் அகப்பட்டிருந்தார்கள். ஐ.நா. நியமித்த நிபுணர்களின் அறிக்கையின்படி, கண்மூடித்தனமான இராணுவத்தாக்குதலின் மூலம் பாதுகாப்பில்லாத ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக 40,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த சுமார் 300,000 பொது மக்கள் இறுதியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவில் உள்ள மணிக்பாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் மக்கள் 2012 மே மாதத்தில்தான் கடைசிப் பிரிவாக தமது இருப்பிடங்களுக்கு செல்ல அணுமதிக்கப்பட்டார்கள்.

சோசலிச சமத்துவ கட்சியின் நிருபர்களின் குழு செப்டெம்பர் 21ம் திகதி வடமாகாண சபையின் தேர்தலுக்கு ஒருவாரத்திற்கு முன்பு அப்பிரதேசத்திற்கு சென்றிருந்தனர். இந்த தேர்தல் பிரச்சார காலத்தில் மீள்குடியேற்றப்பட்ட வன்னிப்பிரதேச மக்களின் புனர்வாழ்வு சம்பந்தமாக தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் இப்பொழுது விவசாய நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் கிளிநொச்சிக்கு அருகாமையில் உள்ள பரந்தனிலிருந்து 60 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள முள்ளிவாய்க்காலுக்கு பிரயாணம் செய்யும் ஒருவரால் அரசாங்கத்தின் வாய் சவாடல் பிரச்சாரத்திற்கும் உள்ளூர் மக்கள் முகம் கொடுக்கும் சமூக யதார்த நிலமைக்கும் உள்ள வேறுபாட்டை அவதானிக்க முடியும்

சிறிய நகரங்களுக்கு வெளியில் மிகவும் குறைந்த தரத்தில் கட்டப்பட்ட அங்கு இங்குமான சிறிய குடிசைகளில் மீள்குடியேற்றப்பட்ட மக்களையே அவதானிக்க முடிந்தது. இந்தக் குடிசைகளுக்கும் புதுக்குடியிருப்பிலிருந்து புனரமைக்கப்பட்ட வீதிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. வீதி, முல்லைத்தீவு வரை விஸ்தரிக்கப்பட உள்ளதுடன் கிழக்கிலிருந்து வரும் மற்றய வீதியுடன் இணைக்கப்படும். அரசாங்கம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கத்திலேயே இந்த பாதை புனரமைக்கப்பட்டுள்ளது.


ஒரு முழுமையடையாத குடும்ப வீடு

60 கில்லோமீற்றர் வீதியில் குறைந்தபட்சம் ஏழு பெரிய இராணுவ முகாம்கள் உண்டு. முன்பு சதாரண மக்களுக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகளிலேயே இந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களுக்கு பின்னால் விவசாயப் பண்ணைகள் இருக்கக் கூடும். ஏனெனில் இராணுவம் இப்பொழுது காடுகளை துப்பரவு செய்து விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றது. இந்தப் பிரதேசங்களில் ஆயுதம் தாங்கிய படையினர் அடிக்கடி துவிச்சக்கர வண்டியில் ரோந்து செல்கின்றனர்.

சில குடும்பங்கள் இன்னும் தமது வீடுகளுக்கு திரும்பமுடியாமல் இருக்கின்றார்கள். சுமார் 200 குடும்பங்கள் இன்னும் புதுக்குடியிருப்பு இடைத்தங்கல் குடியிருப்புக்களில் இருக்கின்றனர். அரசாங்கம் இடைத்தங்கல் குடியிருப்புக்களில் இருக்கும் மக்கள் உட்பட மீள்குடியேற்றப்பட்ட எல்லா மக்களுக்கும் உணவு மானியங்களை ஆறுமாத்திற்கு முன்பே நிறுத்தியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் வேலையற்றவர்களாக இருப்பதோடு நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு தேடுவதே அவர்களுக்கு சிரமமாக உள்ளது.

இன்னமும் புதுக்குடியிருப்பு தங்குமிடத்தில் வசிக்கும் முள்ளிவாய்க்கால் விவசாயி ஒருவர், உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது: நாம் 2011ல் இப்பிரதேசத்திற்கு வந்தோம். அரசாங்கம் முழு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தையும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பியதால், எங்களை இங்கு பலவந்தமாக குடியேற்றியுள்ளது.

ஒவ்வொரு மீள்குடியேற்றப்பட்ட குடும்பத்திற்கும் காட்டுப்பிரதேசத்தில் அரை ஏக்கர் நிலம் வழங்கியுள்ளமை, அரசாங்கம் அவர்களை சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

விவசாயி மேலும் விளக்கியதாவது: நாம் காடுகளை துப்பரவு செய்து இங்கு குடியமர்ந்தோம். இந்த நிலத்திற்காக எமது பணத்தையும் சக்தியையும் செலவு செய்தோம், ஆனால் இங்கு எமக்கு வேலையில்லை, விவசாயம் செய்வதற்கு எமக்கு தண்ணீர் வசதி அவசியம். தண்ணீரைப் பெறுவதற்கு ஆழமான கிணறு தோண்ட வேண்டும், அதற்கு 200,000 ரூபாய் செலவாகும். தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தின் பெறுமதி 50,000 ரூபாய் ஆகும். அரசாங்கம் எங்களை இங்கு கொண்டுவந்து தள்ளியுள்ளது, ஆனால் எங்களுக்கு உதவி செய்யவில்லை.

தனது நெருங்கிய உறவினர்கள் எட்டுப்பேர் உட்பட தமது கிராமத்தில் பெருந்தொகையானவர்கள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டதுடன் தமது கிராமத்தின் 5 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மயானம் சடலங்களால் நிறைந்து போனதாகவும் கூறினார். அநேகமானவர்கள் காணமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அது அரசாங்க சார்பு கொலைப்படைகளின் செயற்பாட்டை சுட்டிக் காட்டுவதாகும்.

ஜ.நா. மீது அதிருப்தி தெரிவித்த அவர் கூறியதாவது: ஜ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை எமது கிராமத்திற்கு வந்தார். அதிகமான மக்கள் காணாமல் போனவர்கள் பற்றியும் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் அவரிடம் முறைப்பாடு செய்தார்கள். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் எதுவும் செய்வார் என நான நினைக்கவில்லை.  புலிகள் எங்களை சமாதானப்படுத்துவதற்காக சர்வதேச சமூகம் எங்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் என்று கூறினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இலங்கையில் மனித உரிமைகள் நிலமை பற்றி அமெரிக்காவின் அணுசரணையுடன் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்ட பின்னர், நவநீதம்பிள்ளை ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்தார். அமெரிக்காவின் தீர்மானத்திற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக அது ஆசியப் பகுதியில் வாஷிங்டனின் மூலோபாய நலன்களை மீண்டும் தக்கவைப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

மற்றுமொரு முள்ளிவாய்க்கால் குடியிருப்பாளர் கூறியதாவது: அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலுக்காகவும் மற்றும் வீதிகளை அமைப்பதற்கும், வங்கி கிளைகளை அமைப்பதற்கும் மில்லியன் கணக்காண ரூபாய்களை செலவு செய்துள்ளது. ஆனால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கு எதுவும் செய்யவில்லை. ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஆயுதப்படைகளின் பாதுகாப்புடன் ஹெலிகாப்டரில் முல்லைத்தீவுக்கு வந்து தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு எங்களிடம் கேட்டார். ஏன் நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டும்? யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டது. எங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்?”.

 “நாங்கள் நாளாந்த உணவுக்கே போராடுகின்றோம். அழிக்கப்பட்ட வாகனங்களின் இரும்புத்துண்டுகளை எமது உணவுத் தேவைக்காக சேகரித்து விற்பதற்கு கூட அணுமதியில்லை. இது தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கே உரியது. அண்மையில் சிலர் சேகரித்த இரும்பத்துண்டுகள் மற்றும் உதிரிப்பாகங்களை அவர்களிடமிருந்து  இராணுவத்தினர் பலவந்தமாக பறித்தெடுத்தனர். அதை எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டார்கள். ஆகையால் எங்களிடம் வாக்கு கேட்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது.

புலிகள் வயது குறைந்த இளைஞர்களை தமது இயக்கத்தில் பலவந்தமாக இணைத்துக் கொண்டு எவ்வாறு உள்ளூர் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார்கள் என்பதை மற்றொருவர் தெளிவுபடுத்தினார்.

24 வயதான ஒரு இளம் தாய் தனது கல்வியை நிறுத்திக்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதோடு புலிகளின் பலவந்தப் படை சேகரிப்பில் இருந்து தப்புவதற்காக திருமணம் செய்துகொண்டார். எமது பிரதேசத்தில் நடந்த இறுதி யுத்தம் எமக்கு பிரமாண்டமான நெருக்கடிகளை உருவாக்கியது. இதனை விபரிப்பதற்கு வாரத்தைகள் இல்லை. பாதுகாப்பு படைகள் கண்மூடித்தனமாக செல் தாக்குதல் நடத்தின. ஆயிரக் கணக்காணோர் எங்கள் கண்முன்னால் கொல்லப்பட்டார்கள். நாங்கள் இறந்த உடல்களுக்கு மேலாக ஓடினோம். அதிஷ்டவசமாக நாம் உயிர் பிழைத்தோம். உண்மையில் மறுபிறவி எடுத்தோம் என அவர் கூறினார்.

தனது குடும்பத்துக்கும் புலிகள் தொல்லை கொடுத்ததாக அவர் விபரித்தார். அவரது இளய சகோதரனை 15 வயதிலேயே புலிகள் தமது படையில் பலவந்தமாக சேர்த்துக்கொண்டனர். ஆனால் அவர் ஐந்து முறை தப்பி ஓடினார். கடைசியாக தனது சகோதரனை கொண்டு செல்ல வந்தபோது அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் புலிகள் அவரின் காலில் சுட்டதுடன் அவரது சகோதரனையும் கைது செய்துள்ளனர்.

 எங்களுடைய பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக வருகின்ற தேர்தலில் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க இருக்கின்றேன் என தெளிவு படுத்தினார்.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் எத்தகைய நம்பிக்கையும் இல்லை. தேர்தலுக்கு பின்னர் எங்களை அவர்கள் கவனிக்கமாட்டார்கள். அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்துகின்றனர்.

இரணுவத்தினரின் செல் தாக்குதலினால் காயமடைந்து மற்றும் கையையும் இழந்த ஒரு தச்சு தொழிலாளி கூறியதாவது: நாம் யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்தோம். எங்களுடைய வீட்டை இராணுவம் கொள்ளை அடித்துள்ளது. அதனைத் திருத்துவதற்கு எங்களிடம் பணம் இல்லை. நாம் இப்பொழுது ஒரு சிறிய குடிசையில் வாழ்கின்றோம். ஆனால் மழைகாலத்தில் தண்ணீர் குடிசைக்குள் வரும்.

எனது கை இல்லாததனால் எனக்கு இனி வேலை செய்ய முடியாது. வழமையாக ஓரு நாளைக்கு நான் 1,500 ரூபாய் உழைப்பேன். எனது மனைவி இப்பொழுது கூலி வேலைக்கு செல்கின்றார். அவர் ஒரு நாளைக்கு 200 அல்லது 300 ரூபாய உழைப்பார். எமது மகள் உட்பட நாங்கள் இந்த சிறிய வருமானத்தில்தான் வாழத் தள்ளப்பட்டுள்ளோம்.

ஒரு முன்னாள் கடற் தொழிலாளி, தான் இராணுவத்தினரிடம் சரண்டைந்தபோது திருமணம் முடித்ததினால் ஒரு வருடத்தில் விடுதலை செய்வதாக கூறினார்கள் என்றார். ஆனால் அவர்கள் மூன்று வருடங்கள் என்னைத் தடுத்துவைத்தார்கள்,” என அவர் கூறினார். நான் விடுதலையான பின்னர் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. யுத்த காலத்தில் எமது வீடு அழிக்கப்பட்டது. நான இங்கு ஒரு நாளைக்கு 700 ரூபாவுக்கு வேலை செய்கின்றேன். இந்த சம்பளத்தில் எவ்வாறு எனது வீட்டை கட்டுவேன்.