World Socialist Web Site www.wsws.org |
Wealth of world’s billionaires doubles since 2009 2009ல் இருந்து உலகின் பில்லியனர்களின் செல்வம் இரு மடங்காகிறது Andre
Damon அமெரிக்காவிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் வருமானங்கள் சரிவதைக் காண்கையில், உலகின் பில்லியனர்களின் நிகர மொத்த மதிப்பு 2009ல் இருந்து இரு மடங்காகிவிட்டது என்று செவ்வாயன்று பெரும் செல்வந்த தனிநபர்களை கண்காணிக்கும் UBS, Wealth-X என்னும் ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. உலக பில்லியனர்களின் கூட்டுச் சொத்து 6.5 டிரில்லியன் டாலர்களை (6.5,000,000,000,000 $) தொட்டது; இந்த எண்ணிக்கை, உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரமான சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப்போல் பெரியதாகும். அறிக்கையின்படி, பில்லியனர்களின் எண்ணிக்கை, 2009 ல் 1,360ல் இருந்து 2013ல் 2,170 என்று பெருகியுள்ளது. இச் சமூகத் தட்டு பெரிதும் செல்வக்கொழிப்பைக் கண்டதற்கு காரணம் பங்குச் சந்தைகளின் ஏற்றம் கொடுத்த உந்துதல் ஆகும். இதற்கு “மலிவான பணம்” மற்றும் பண அச்சிடும் செயல்கள் அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பு மற்றும் பிற மத்திய வங்கிகள் நடத்தியதுதான். இந்த வழிவகை தீவிரமாகிக் கொண்டு இருக்கிறது. ஐரோப்பாவில் பொருளாதார நிலைமைகள் மோசமடைவதை எதிர்கொள்கையில், ஐரோப்பிய மத்திய வங்கி அதன் மட்டக்குறியான வட்டிவிகிதத்தை 0.5ல் இருந்து 0.25 எனக் குறைத்து, நிதியச் சந்தைளில் புதிய பண அலையை ஏற்படுத்தியது. Wealth-X தன் அறிக்கையை வெளியிட்ட மறுநாள், சமூக இணைய தள சேவை அமைப்பான ட்விட்டர் அதன் ஆரம்ப பொதுமக்கள் அறிவிப்பை மேற்கொண்டது, நிதியப் பகுப்பாய்வு நிறுவனம் PrivCo கூற்றின்படி, அதன் பங்கு மதிப்பு சில மணி நேரத்திற்குள் இரு மடங்கு என, ஒரே நாளில் 1,600 காகித மில்லியனர்களை தோற்றுவித்தது. ட்விட்டரின் இணை நிறுவனர் ஈவான் வில்லியம்ஸ், இவ்வழிவகையில் தன் சொத்தை 1 பில்லியன் டாலர்களாக அதிகமாக்கி, 2.5 பில்லியன் டாலர்களை கொண்டுள்ளார். சக இணைநிறுவனர் ஜாக் டோர்சி 500 மில்லியன் டாலர்கள் இலாபம் அடைந்தார், அவர் சொத்து 2 பில்லியன் டாலர்கள் என ஆயிற்று. சொத்து தொடர்பான இந்த அறிக்கை உலகப் பொருளாதாரம் முழுவதும் நிதியத் துறையின் ஒட்டுண்ணித்தன வளர்ச்சியைத்தான் பிரதிபலிக்கிறது. 17 சதவிகித பில்லியனர்கள் தங்கள் சொத்தை மற்றவற்றைவிட நிதித்துறை, வங்கித்துறை, முதலீட்டுத் துறைகளில் இருந்து பெற்றனர்; எட்டு சதவிகிதத்தினர்தான் உற்பத்தித்துறையுடன் தொடர்பு கொண்டவர்கள். பெரும் செல்வந்தர்களின் வருமானங்களின் பரந்த விரிவாக்கம் அமெரிக்கா, ஐரோப்பா, உலகம் முழுவதும் சமூக சேவைகள் செலவு வெட்டப்படுவதுடன் இணைந்து வந்துள்ளது. இந்த மாதம் முன்னதாக, அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக உணவு உதவிநிதி நலன்கள் குறைக்கப்பட்டன மற்றும் விரிவாக்கப்பட்ட வேலையின்மை நலன்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முற்றிலும் அகற்றப்பட உள்ளன. SNAP உணவு நிதியுதவித் திட்டத்திற்கான வரவு-செலவுத் திட்டம் தற்பொழுது ஆண்டுக்கு 74.6 பில்லியன் டாலர்கள் என்று உள்ளது. ஜனவரியில் முடிய இருக்கும், விரிவாக்கப்பட்ட வேலையின்மை நலன்களுக்கான நிதி, ஆண்டு ஒன்றிற்கு 25.2 பில்லியன் டாலர்களாகும். அமெரிக்காவில் 515 பில்லியனர்களின் இணைந்த மொத்த சொத்து மதிப்பு, உணவு உதவிநிதி மற்றும் விரிவாக்கப்பட்ட வேலையின்மை நலன் திட்டத்தற்கு ஒரு நூற்றாண்டு முழுவதும் கொடுக்க போதுமானது. உலகின் பில்லியனர்களின் சொத்துக்களை பகுப்பாய்வு செய்ததுடன், இந்த அறிக்கை உலகின் பில்லியனர்கள் ஆடம்பரப் பொருட்கள் மீது செலவழிக்கும் பரந்த தொகையையும் ஆவணப்படுத்தியுள்ளது. உலகின் பில்லியனர்கள் ஆடம்பரப்படகு, தனியார் ஜெட்டுக்கள், கலை, பழம்பொருட்கள், நவீன பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் சேகரிக்கும் கார்களில் 126 பில்லியன் டாலர்களை போட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, 150 மில்லியன் மக்களைக் கொண்ட பங்களாதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட பெரியதாகும். உலகின் 2,170 பில்லியனர்கள், 48 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சிறப்புப் படகுகளை சொந்தமாக வைத்துள்ளனர். இது சராசரி 22 மில்லியன் டாலர்கள் ஒவ்வொருவருக்கும் என ஆகும். இந்த எண்ணிக்கையை சரியான முன்னோக்கில் வைத்தால், ஐக்கிய நாடுகள் சபையின் உலக பட்டினியை ஒழிக்க ஆண்டு ஒன்றிற்கு 30 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என மதிப்பிட்டுள்ளது. உலகின் பில்லியனர்களுடைய நிலச் சொத்து மதிப்பு 169 பில்லியன் டாலர்கள் என அறிக்கை மதிப்பிட்டுள்ளது -- இது சராசரி 78 மில்லியன் டாலர்கள் தனிநபருக்கு என ஆகும். அறிக்கை குறிப்பிட்டுள்ளபடி, “பில்லியனர்கள் சராசரியாக 4 வீடுகளை வைத்துள்ளனர், ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு உடையவை.” அறிக்கை மேலும் சேர்த்துக் கொள்ளுகிறது: “உலகின் பில்லியனர்களுக்கு காலமும் இடமும் எல்லைகளே அல்ல; பலரிடமும் ஓரிரு தனியார் ஜெட்டுக்கள் உள்ளன, ஒரு சிறப்பு ஆடம்பரப் படகு உள்ளது, பிற வசதியான, விரைவான போக்குவரத்து வாகனங்கள் உள்ளன, உலகம் முழுவதும் பல வீடுகளும் உள்ளன.” அவர்களுடைய நகரும் திறனுக்கு அப்பால், உலகின் பில்லியனர்கள் முக்கிய நிதிய நகரங்களான நியூ யோர்க் நகரம் போன்றவற்றில் உள்ளனர்; அங்கு 96 பில்லியனர்கள் உள்ளனர். இதையடுத்து ஹாங்காங்கில் 75 பேர் உள்ளனர். மாஸ்கோவில் 74, லண்டனில் 67. நியூ யோர்க் நகர பில்லியனர்களின் சொத்தை நகரத்தின் 1.7 மில்லியன் வறிய நகரவாசிகளுக்கு பகிர்ந்து கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 170,000 டாலர்கள் கிடைக்கும். பரந்த இருப்புக்களின் மீது ஏகபோக உரிமையை கொண்டுள்ள, மதிப்பாக எதையும் உற்பத்தி செய்யாத இந்த சமூக அடுக்கு, உலக சமூகத்தின் மீது ஒரு பெரும் சாக்கடையாக உள்ளது. அவர்களுடைய சொந்த செல்வக் கொழிப்பிற்கு பரந்த சமூக வளங்கள் செலவிடப்படுவது மட்டுமல்ல, பொருளாதார, அரசியல் வாழ்வின் மீதான அவர்களின் மேலாதிக்கம், மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் பெரும்பிரச்சினைகளுக்கான ஒரு பகுத்தறிவார்ந்த தீர்வுக்கும் தடையாக உள்ளது. உலகம் முழுவதும் அரசியல் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பெரும் செல்வச் செழிப்புடையவர்கள் கட்டுப்படுத்துவது பேரழிவுகரமான விளைவுகளை கொடுத்துள்ளது. இந்நிலை, முதலாளித்துவ அமைப்புமுறையின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். இது உலகின் பில்லியனர்களை புனிதமானவர்களாக நடத்துகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி, வீடு, சுகாதாரப் பாதுகாப்பு போன்றவற்றை தேவையற்றது எனக் கருதுகிறது. |
|