World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US military and the Philippines

அமெரிக்க இராணுவமும், பிலிப்பைன்ஸூம்

Bill Van Auken
21 November 2013

Back to screen version

பிலிப்பைன்ஸைத் தாக்கிய ஹெயன் சூறாவளியின் பாதிப்பு குறித்த கடந்த வார ஒரு சிறிய அறிக்கையில், ஜனாதிபதி பராக் ஒபாமா "வாழ்க்கை எந்தளவிற்கு அழியக் கூடியதென்பதற்கு அதுவொரு இதயத்தை உடைக்கும் நினைவூட்டல்" என்றார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து லிபியா, யேமன் மற்றும் சிரியா வரையில் வறிய மக்களின் மரணத்தையும், பேரழிவுகளையும் பார்த்திருக்கும் ஓர் அரசின் தலைவராக, அமெரிக்க ஜனாதிபதிக்கு அத்தகைய ஒரு நினைவூட்டலுக்காக பிலிப்பைன்ஸ் மக்களைத் தாக்கிய இயற்கை சீற்றத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.

இந்த படுகொலைகளை நடத்திய பிரதான கருவியான அமெரிக்க இராணுவம், பிலிப்பைன்ஸில் இப்போது கைம்மாறு கருதாத உதவியாளர் என்றரீதியல் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. கடந்த டஜன் கணக்கான ஆண்டுகளில் வாஷிங்டனால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஹெயன் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 100 மடங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 50 அமெரிக்க யுத்தகப்பல்களும், இராணுவ விமானங்களும் மற்றும் அமெரிக்க மாலுமிகள், விமான மற்றும் கப்பற்படையைச் சேர்ந்த 13,000 பேரும், மூன்றாவது விரைவு கப்பற்படையோடு சேர்த்து, அணுஆயுதமேந்த கூடிய அதிநவீன கப்பல், USS ஜோர்ஜ் வாஷிங்டனின் கப்பல்படை யுத்த குழுவின் தலைமையில், அங்கே மீட்பு நடவடிக்கைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் தளபதி, கடற்படை லெப்டினென்ட் ஜெனரல் ஜோன் வெஸ்லெர் திங்களன்று கூறுகையில், “எங்களுடைய தேவை இருக்கும் வரையில் நாங்கள் இருப்போம்தேவைக்கு மீறி இருக்க மாட்டோம்," என்றார்.

இதுபோன்ற வாக்குறுதிகளை அதீத ஐயுறவோடு பார்க்க, பிலிப்பைன்ஸின் பரிதாபகரமான வரலாறு மற்றும் அது அமைந்திருக்கும் புவி-மூலோபாய அமைவிடம் ஆகிய இரண்டின் அடிப்படையில், பிலிப்பைன்ஸ் மக்களுக்கு போதுமான அளவிற்கு காரணங்கள் உள்ளன.

அமெரிக்க இராணுவம் அது உள்ளே நுழையும் போது கூறுவதைவிட அதிககாலம் தங்கி இருந்ததற்கு ஒருவேளை பிலிப்பைன்ஸை விட அதிக மோசமான எடுத்துக்காட்டு வேறெதுவும் இருக்க முடியாது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அங்கே தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையின் துணையோடு ஒரு காலனித்துவ சக்தியாக மாறி முதன்முதலாக அதன் கோரப்பற்களை கடித்தது.

செவ்வாயன்று அமெரிக்க செனட்டின் முன்னால் பிலிப்பைன்ஸில் செய்யப்படும் மீட்பு நடவடிக்கைகளை மெய்பித்து காட்டுவதில், ஓர் அரசுத்துறை அதிகாரி அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான "நெருக்கமான வரலாற்று உறவுகளை" மேற்கோளிட்டு காட்டினார். எவ்வாறிருந்த போதினும், ஒரு வரலாற்று குற்றத்தை அம்பலப்படுத்த மட்டுமே உதவும் என்ற வெளிப்படையான காரணத்தால், அரசு அதிகாரிகளோ அல்லது ஊடகமோ இத்தகைய "உறவுகளை" விரிவாக ஆராய எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.

பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவத்தின் முதல் வரவு, கடற்படை தளபதி ஜோர்ஜ் டுவேயின் தலைமையில் ஒரு கப்பற்படை பிரிவின் வடிவில் நுழைந்தது. அவர் மே 1, 1898இல் மணிலா துறைமுகத்திற்குள் நுழைந்தார். அதற்கு முந்தைய 300 ஆண்டுகள் ஒரு காலனியாதிக்க சக்தியாக அப்பிராந்தியத்தில் ஆட்சி செய்து வந்த ஸ்பெயினின் ஒட்டுமொத்த பசிபிக் பகுதியும், ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே வீழ்ச்சி கண்டன.

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்த ஒரு தேசிய இயக்கத்தின் தலைவர் எமிலோ அகுவனால்டோவை டுவேயின் யுத்தக்கப்பல் தான் திரும்ப அழைத்து வந்தது. அந்த தேசிய இயக்கம் அமெரிக்க போர் கப்பல்கள் அங்கே வருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பெயினின் காலனியாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர சண்டையிட்டு வந்தது. இத்தகைய சுதந்திர போராட்ட போராளிகளால் அந்த நிலம் சூழப்பட்டிருந்ததால் தான் அமெரிக்க துருப்புகளால் மணிலாவைக் கைப்பற்ற முடிந்தது. பிலிப்பைன்ஸின் கூட்டாளியாகவும், அந்நாட்டை விடுவித்தவர் என்றரீதியில் காட்டிக்கொண்ட வாஷிங்டன் அதை ஒரு சந்தையாக, மலிவுக்கூலி மற்றும் மூலப்பொருட்களுக்கு ஆதாரமாக மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் குறிப்பாக சீனாவே நோக்கி அமெரிக்க சக்தியை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு இராணுவ தளமாக போதுமான அளவிற்கு நீண்டகாலத்திற்கு அதன் மீது கட்டுப்பாட்டை பாதுகாத்து வைக்க விரும்பியது.

பின்னர் பிலிப்பீனியர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக திரும்பிய அது, ஒரு நிலத்திற்காக ஸ்பெயினுக்கு $20 மில்லியன் அளித்து அந்நிலப்பகுதியின் மீது ஸ்பெயின் இனி கட்டுப்பாட்டை கொண்டிருக்கக் கூடாது என்ற ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டது. ஒரு சுதந்திர குடியரசை (ஒரு காலனித்துவ எதிர்ப்பு கிளர்ச்சியின் விளைவாக ஆசியாவில் முதன்முறையாக உருவானது) பிரகடனப்படுத்திய பிலிப்பீனியர்கள் இத்தகைய பேரங்களில் சேர்க்கப்படவும் இல்லை.

அதற்குப்பின்னர் என்ன தொடர்ந்ததென்றால் அமெரிக்க காலனித்துவ ஆட்சி திணிக்கப்பட்டது, மேலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இரத்தந் தோய்ந்த எதிர்கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன, அதில் குறைந்தபட்சம் பல நூறு ஆயிரக் கணக்கான பிலிப்பீனியர்கள் உயிரிழந்தனர். மணிலாவையும் மற்றும் அந்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டதட்ட பாதியளவு மக்களையும் கொண்டிருந்த லூஜானில், 1901இல், அமெரிக்க படைகளுக்குத் தலைமையேற்றிருந்த ஜெனரல் பிரான்கிலின் பெல் நியூ யோர்க் டைம்ஸிடம் தெரிவிக்கையில், அங்கே மட்டும் சுமார் 600,000 பேர் இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாக அல்லது நோயால் இறந்து போனதாக தெரிவித்தார்.

மற்றொரு அமெரிக்க ஜெனரல் கூறுகையில், “பாதி பிலிப்பீனியர்களைக் கொல்ல அவசியம் ஏற்படலாம், ஏனென்றால் இதனால் மீதியுள்ள பாதி மக்களை அவர்களின் தற்போதைய அரை-காட்டுமிராண்டித்தனத்திலிருந்து ஒருவேளை உயர்ந்த மட்டத்திற்கு முன்னெடுத்து செல்ல முடியும்," என்றார்.

பிலிப்பைன்ஸில் அமெரிக்க யுத்தத்திற்கு மிக முக்கிய மற்றும் தீவிர எதிர்ப்பாளராக இருந்த மார்க் டுவைன், “எங்கள் துருப்புகளை ஆதரியுங்கள்" என்ற அந்நாளின் கோஷத்தை எதிர்த்தார். “தனது இறந்து போன தாய்க்காக ஏங்கி அழும் ஒரு குழந்தையைக் கூட" விட்டுவைக்காமல் அமெரிக்க இராணுவம் படுகொலை செய்ததென்று குற்றஞ்சாட்டினார். அந்த பிரபல அமெரிக்க எழுத்தாளர் அமெரிக்க ஆக்கிரமிப்பு துருப்புகளை "கிறிஸ்துவ கசாப்புக்கடைகாரர்கள்" என்றும் "சீருடை அணிந்த படுகொலையாளர்கள்" என்றும் குறிப்பிட்டார்.

பிலிப்பைன்ஸ் தாக்குதல் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட முதல் எதிர்கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. மேலும் அது படுகொலைகளில் இருந்து, சித்திரவதை வரை, மீண்டும் அமைக்கப்பட்ட புதிய படுகொலை" கூடங்கள் வரை, எல்லா அட்டூழியங்களையும் தொடங்கி வைத்தது, பின்னர் அவை அனைத்தும் வியட்நாமியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் ஈராக்கியர்கள் மீது நடத்தப்பட்டதைப் பார்க்க முடிகிறது.

அமெரிக்க காலனித்துவ ஆட்சி இரண்டாம் உலக யுத்தம் முடியும் வரையில் நீடித்தது. அதன் பின்னர் அந்நாட்டை இரண்டு தசாப்தங்கள் ஆட்சி செய்த பெர்டிணான்ட் மார்கோஸின் வெறுக்கப்பட்ட இராணுவ ஆட்சி உட்பட பல அரை-காலனித்துவ அரசுகளை வாஷிங்டன் ஆதரித்தது. பெண்டகன், 1991 வரையில், கொரிய மற்றும் வியட்நாம் யுத்தங்கள் இரண்டிலும் முக்கிய பாத்திரம் வகித்த, பரந்த சூபிக் வளைகுடா (Subic Bay) கடற்படை தளம் மற்றும் கிளார்க்சன் (Clarkson) விமானப்படை தளம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டை வைத்திருந்தது.

ஹெயன் சூறாவளியோடு சம்பந்தப்பட்ட பிலிப்பைன்ஸின் அவலநிலை என்று வரும்போது, இது வெறுமனே பழங்கால வரலாறு என்றாகி விடாது. பரந்த வறுமை, சமூக சமத்துவமின்மை, போதிய வீட்டுவசதியின்மை மற்றும் அரசாங்க ஊழல்கள் என காலனித்துவ மற்றும் நவ-காலனித்துவ ஒடுக்குமுறையின் பாரம்பரியங்களான இவை அனைத்தும், குறைந்தபட்சம் இந்தளவிற்கு மரணம் மற்றும் பேரழிவை சுமத்துவதில் குருட்டுத்தனமான இயற்கை சக்தியின் பாத்திரத்தை விட மிகப் முக்கிய பாத்திரம் வகித்தன.

பிலிப்பைன்ஸ் மீது அமெரிக்காவின் உள்நோக்கங்கள், முடிந்து போன சகாப்தத்தின் ஒரு விஷயமல்ல. ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் புதனன்று குறிப்பிட்டது: “அமெரிக்க கப்பல்கள் உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளை விநியோகிக்கின்ற போதினும், அது தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய மூலோபாய நாடு ஒன்றில் அமெரிக்கா அதன் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய இராணுவ இருப்பை பலப்படுத்தவும் பாதையைத் திறந்துவிடும் என்ற எண்ணத்தையும் கொண்டு வருகிறது.”

வளர்ந்துவந்த ஒரு ஏகாதிபத்திய சக்தியின் கருவியாக, ஆசியாவில் அதற்கான புதிய சந்தைகளை காப்பாற்றி வைக்க, அமெரிக்க இராணுவம் முதன்முதலில் பிலிப்பைன்ஸிற்குள் வந்திருந்தாலும் கூட, இப்போது அது பிராந்திய மற்றும் உலகளாவிய போட்டியாளனாக வளர்ந்துவரும் சீனாவைச் சுற்றி வளைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தீர்மானத்துடன் நலிவுற்ற ஒரு தாக்குமுகப்பாக திரும்பி வருகிறது.

ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பு" என்றழைக்கப்படும் நடவடிக்கைக்கு பிலிப்பைன்ஸ் மூலோபாயரீதியில் மிக முக்கியமாகும். பிலிப்பைன்ஸ் அரசு, 1992இல் பிரமாண்ட அமெரிக்க இராணுவ தளங்களை மூடிவிட்டிருந்தாலும், அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகளைப் பயிற்சிக்காகவும் மற்றும் கூட்டு இராணுவ ஒத்திகைகளை நடத்தவும் திரும்பி வர அனுமதித்தது. மேலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள்ளாக 72 அமெரிக்க யுத்தக்கப்பல்கள் மற்றும் சுபிக் வளைகுடாவில் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை வந்து சென்றுள்ளன. இதற்கிடையில் கப்பல் தளங்கள், விமான தளங்கள், ஆயுத விநியோக மற்றும் துருப்புகளுக்கான தளங்களை அமைக்க அமெரிக்காவிற்கு உரிமைகள் வழங்குதன் மீது தொடர்ந்து பேரங்கள் நடந்து வருகின்றன.

ஓய்ஸ்டெர் வளைகுடாவில் (Oyster Bay) அமைந்துள்ள பலாவன் (Palawan) தீவு மாகாணத்தில் கப்பற்படை தளம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் அந்த தளத்தை ஒரு "சிறிய சுபிக்" என்று குறிப்பிடுகின்றனர். மேலும் அங்கே அமெரிக்க யுத்த கப்பல்கள் மற்றும் கடற்படை கப்பல்களை நிறுத்த திட்டமிருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன. நாட்டின் மேற்கத்திய ஓரத்தில், ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு (Spratly Islands) மிக நெருக்கத்தில் அமைந்துள்ள அந்த தீவு, அமெரிக்காவால் கருவுற்றிருக்கும் மணிலா-சீனாவிற்கு இடையிலான ஒரு பிராந்திய மோதலுக்கு தூண்டுபொருளாக உள்ளது.

இவ்வாறு, பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவத்தின் "மனிதாபிமான" நடவடிக்கைகள் பிரிக்க முடியாதபடிக்கு யுத்த திட்டங்களோடு பிணைந்துள்ளன, அது அந்நாட்டை ஓர் உலகளாவிய மோதலுக்குள் இழுத்துச் செல்லக்கூடும்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சூறையாடும் கணக்குகளுக்கு அப்பால், அமெரிக்க உழைக்கும் மக்களிடையே அங்கே உண்மையான அனுதாப உணர்வுகளும், பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுடனான ஐக்கிய உணர்வும் உள்ளது. அந்த ஆழ்ந்த பிணைப்புகள், மதிப்பிடப்பட்ட அமெரிக்க வாழ் 4 மில்லியன் பிலிப்போ-அமெரிக்கர்களின் இருப்பில் மிக உறுதியாக வெளிப்படுத்தப்படுகின்றன.

ஹெயன் சூறாவளியால் உண்டாக்கப்பட்ட பேரழிவானது, இரண்டு நாடுகளிலும் உள்ள வறுமை மற்றும் சமத்துவமின்மை நிலைமைகளையும், அவற்றை உண்டாக்கிய முதலாளித்துவ இலாப அமைப்புமுறையோடு சேர்த்து துடைத்தெறிய ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அவசியத்தை அடிக்கோடிடுகிறது.