World Socialist Web Site www.wsws.org |
உலகளாவிய NSA ஒற்றுக்கேட்டல் ஊழல்Joseph Kishore கடந்த வார காலப்பகுதியில், தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) முன்னாள் ஒப்பந்ததாரராக இருந்து செய்தி வெளிப்படுத்துவோராக மாறிய எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்திய புதிய ஒரு தொடர் தகவல்களால், ஒபாமா நிர்வாகம் பெருகிய சர்வதேச இராஜதந்திர ஊழலினால் அதிர்விற்கு உட்படுத்தியுள்ளது. நெருக்கடியின் மையத்தானத்தில், அமெரிக்க உளவுத்துறைக் கருவி எந்தவித உள்நாட்டு, சர்வதேச சட்டபூர்வ கட்டுப்பாடுகளும் இன்றி நடத்திய செயல்கள் அம்பலமானது குறித்த நெருக்கடி உள்ளது. இவற்றினாலும், ஸ்னோடனின் முந்தைய வெளிப்படுத்தல்களினாலும், இப்பொழுது NSA உலகெங்கிலும் இருக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடைய தொலைப்பேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள் உள்ளடங்கலாக தொலைத்தொடர்புகள் பதிவுகளை முழுமையாக வைத்திருக்கின்றது என்பதற்கு உறுதியான சான்றுகள் உலகமெங்கிலும் உள்ளன. ஐரோப்பிய அரசாங்கள் NSA தங்கள் மக்கள் மீது ஒற்று நடத்துவது குறித்து அதிக அக்கறை காட்டாத நிலையில், (உண்மையில் அமெரிக்காவுடன் இதற்கு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளன) NSA, ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் சொந்த கைபேசியையே ஒற்றுப்பார்த்துள்ளது என்னும் தகவல்கள் அமெரிக்க ஜேர்மனிய உறவுகளில் விரிசல் எச்சரிக்கைகளை கொடுத்துள்ளன. இந்தக் கண்காணிப்பு 2002ல், மேர்க்கெல் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே தொடங்கிவிட்டது. இதேபோல் குறைந்தப்பட்சம் இன்னும் 34 சர்வதேசத் தலைவர்களும் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர். ஜேர்மனிய செய்தித்தாட்கள் இப்பட்டியலில் மேர்க்கெலுக்கு முன் பதவியில் இருந்த ஹெகார்ட் ஷுரோடரும் இருந்தார் எனக் கூறுகின்றன; அவருடைய அரசாங்கம் அமெரிக்கா திட்டமிட்டிருந்த ஈராக்கின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தபின் இக் கண்காணிப்பு ஏற்பட்டது. மீண்டும் ஒருமுறை, ஜனாதிபதி உட்பட அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அப்பட்டமான பொய்களில் அகப்பட்டுள்ளனர். ஒபாமா தன்னுடைய சொந்த நிர்வாகத்தின் ஒற்று நிறுவனங்கள் மேர்க்கெல் மற்றும் பிற வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்து கண்காணிக்கின்றனர் என்பது பற்றி தனக்குத் தெரியாது என அறிவித்துள்ளார். ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் செவ்வாய் வந்துள்ள கட்டுரை ஒன்று, NSA க்குள் இருக்கும் ஆதாரங்களை மேற்கோளிட்டு, அத்தகைய ஒற்றுக்கேட்டல் நேரடியாக வெள்ளை மாளிகை மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதை வலியுறுத்தி எழுதியுள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முழுக்கொள்கைகளும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், மலைபோன்ற பொய்களை தளமாகக் கொண்டவை. அது மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான நிரந்தர சதியில் ஈடுபட்டுள்ளது. இப்பொய்கள் அம்பலமாவது நீண்டகால விளைவுடைய அரசியல் தாக்கங்ளைக் கொண்டது. வெளிநாட்டுக் கொள்கை அமைப்பின் முக்கிய இதழ்களில் ஒன்றான Foreign Affairs பதிப்பில் சமீபத்தில் வந்துள்ள கட்டுரை ஒன்று, தகவல்கள் வெளிவந்துள்ளமை வாஷிங்டனின் “மிருதுவான சக்தியின்” மையத் தளத்தை, அதாவது “பாசாங்குத்தனமாக நடந்து கொண்டு பின்விளைவு இல்லாமல் தப்பித்துவிடுவது” என்பதை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கிறது. சர்வதேச அரசியல் அமைப்புமுறை அமெரிக்க ஆதிக்கத்தின்கீழ் செயல்பட வேண்டும் என்பதற்காக ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பேராசிரியர்களான ஹென்ரி ஃபாரெல் மற்றும் மார்த்தா பின்னிமோர், “அமெரிக்க அதிகாரிகள் வாடிக்கையாக வளர்க்கும் அதன் அடிப்படை தாராளவாத கொள்கைகளுக்கு விசுவாசத்தை பெற வேண்டும்... ஆனால் சமீபத்திய கசிவுகள் காட்டியுள்ளதுபோல், வாஷிங்டன் தொடர்ந்து அது வெளிப்படுத்தும் மதிப்பீடுகளின்படி செயல்பட முடியாதுள்ளது” என வாதிட்டுள்ளனர். ஸ்னோவ்டென் மற்றும் செல்சி (பிராட்லி) மானிங் கொடுத்த தகவல்கள், “விரைவாக இயங்கிய பாசாங்குத்தனத்தின் சரிவின்” ஒரு பகுதியாகும் என்று அவர்கள் எழுதியுள்ளனர்—இது, நாடு அதன் கூறப்பட்ட விருப்புகளுக்கும் மற்றும் சுயநலத்திற்காக இழிந்து செயல்படுதல் இவற்றிற்கு இடையே உள்ள தந்திரோபாய ரீதியாக இயங்கக்கூடிய இடைவெளியை குறைத்துவிட்டது” என்று எழுதியுள்ளனர். ஃபாரெல்லும் பின்னிமோரும் கசிவுகள் தோற்றுவித்துள்ள அரசியல் நெருக்கடி, அமெரிக்க அரசாங்கத்தை அதன் கொள்கைகளை அதன் வனப்புரையுடன் நெருக்கமாக கொண்டுவர அழுத்தம் கொடுக்கும் என நம்புகின்றனர்; இதில் “தேசியப் பாதுகாப்பு அரசு” விரிவாக்கப்படுதல் மாற்றப்படுவது என்பதும் அடங்கும். ஆயினும்கூட அமெரிக்க அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தின் அடிப்படை ஆதாரம், அகநிலையான கொள்கை முடிவுகளில் இருந்து வரவில்லை, ஆனால் அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த புறநிலையான மோதல் —அதாவது ஒரு சிறிய வெறித்தன பெருநிறுவன நிதிய உயரடுக்குடையதிற்கும்— அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் பெரும்பாலான மக்களுடைய நலன்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் காணப்படுகிறது. இராணுவ வன்முறை மூலம் உலக ஆதிக்கம் என்னும் கொள்கையுடனும் மற்றும் முன்னோடியில்லாத அளவில் அமெரிக்காவிற்குள் சமூக சமத்துவமின்மை நிலவுவதுடனும் ஜனநாயகம் ஒத்திசைவானதாக இருக்கமுடியாது. அமெரிக்க ஆளும் வர்க்கம் அனைவர் மீதும் ஒற்றுக்கேட்லை நடத்துகிறது; ஏனெனில் அது அனைவரையும் சாத்தியமான எதிரியாகக் காண்கிறது. வெளிநாடுகளில், இது தன் கட்டுப்பாட்டை உலகின் ஒவ்வொரு பிராந்தியத்தின்மீதும் உறுதிப்படுத்தவும், போட்டித்திறனுடைய நாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் உறுதி கொண்டுள்ளது. அமெரிக்காவிற்குள் அதன் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக் கொள்கைகள், பரந்த சமூக எதிர்ப்பைத் தோற்றுவிக்கின்றன என்பதை நன்கு அறியும். அமெரிக்க அரசியல் நடைமுறையில் அல்லது இராணுவ உறவுத்துறைக் கருவிக்குள் எந்த பிரிவினரும் ஜனநாயக உரிமைகளுக்கு உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயக, குடியரசுக் கட்சி அரசியல் வாதிகள் முன்வைக்கும் ஒற்றுக்கேட்டல் முறை “மீளாய்வுகள்” பற்றிய பல திட்டங்களுக்கு நடுவே (இதில் செனட்டர் டயனே பீன்ஸ்டின் NSA முறைக்கு பலத்த ஆதரவாளரும் மற்றும் ஸ்னோவ்டெனை “தேசத்துரோகி” என கண்டித்தவரும் இதில் அடங்குவார்) ஒற்றுக்கேட்கும் திட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கருத்து வெளிவரவில்லை, அல்லது அரசியலமைப்பு முறையில் தொகுத்துக்கூறப்பட்டுள்ள மக்கள் உரிமைகளை முறையாக மீறியதற்கு பொறுப்பானவர்கள்மீது குற்றச்சாட்டு வேண்டும் என்றும் கூறப்படவில்லை. இதற்கிடையில் அரசாங்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியவர்கள் துரத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்கின்றனர். ஒபாமா நிர்வாகத்தால் சித்திரவதை எனக் கூறக்கூடிய தவறுகளுக்கு உட்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டபின் மானிங் சிறையில் உள்ளார். ஸ்னோவ்டென் நாடு கடந்து ரஷ்யாவில் உள்ளார். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்ச் லண்டனில் ஈக்வடோர் தூதரகத்தில் இரகசிய பெரும் நடுவர் குற்றவிசாரணையின் இலக்காக பொறியில் உள்ளார், கார்டியன் செய்தியாளரான அவருடைய பங்காளி பிரித்தானிய விமான நிலையத்தில் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் ஒரு பொலிஸ் அரச மனப்பாங்குதான் உத்தியோகபூர்வ அரசியல் வட்டங்களில் படர்ந்துள்ளது. NSA இயக்குனர் ஜெனரல் கீத் அலெக்சாந்தரின் அறிக்கையில் குறிப்பிட்ட, “நாம் செய்தித் தகவல்களை நிறுத்த வழி கண்டுபிடிக்க வேண்டும்” என்பது திங்களன்று பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோனால் எதிரொலிக்கப்பட்டது; அவர் பாராளுமன்றத்தில் செய்தி ஊடகம் “சமூகப் பொறுப்பை” எடுத்துக்காட்ட வேண்டும், இல்லாவிட்டால், “அரசாங்கம் வெறுமனே செயல்படாமல் இருப்பது கடினம்” என்றார். ஸ்னோவ்டெனும் மற்றவர்களும் அம்பலப்படுத்தியுள்ள இத்தகைய விளைவுகள், ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசின் நம்பகத்தன்மையை பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன என்னும் காரணம், அச்சத்தில் இருந்து வெளிவந்தவையாகும். சமாதானமான முறையில் தங்கள் சமூக அமைப்பை பாதுகாப்பதில் நம்பிக்கையிழந்த நிலையில், ஆளும் வர்க்கம் பொய்கள், அச்சுறுத்தல்கள், வன்முறை மூலம் காக்க விரும்புகிறது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கான சமூக அடித்தளம் தொழிலாள வர்க்கம்தான். இந்த அம்பலப்படுத்தல்கள் மக்கள் விழிப்புணர்வை உயர்த்தவும் எதிர்ப்பை உறுதிப்படுத்துவதற்கும் அதிகம் பங்களித்துள்ளன. இந்த உணர்வு, போர், சமூக சமத்துவமின்மை, சர்வாதிகாரம் ஆகியவற்றிற்கு மூலகாரணமான முதலாளித்துவ முறைக்கு எதிரான அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். |
|