தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Britain’s Queen’s speech: Anti-immigrant rhetoric in support of austerity சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக குடியேற்ற-எதிர்ப்பு வனப்புரை
By Julie Hyland use this version to print | Send feedback இந்த ஆண்டிற்கான ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கத்தின் சட்டவாக்க வேலைத்திட்டத்தை முன்வைக்கும் பாராளுமன்றத்திற்கான அரசியாரின் உரை என்னும் வாடிக்கையான வருடாந்த நிகழ்வு, தொழிலாள வர்க்கத்தின் சமூக, ஜனநாயக உரிமைகள் மீது இன்னும் ஒருதொகை தாக்குதல்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றது. இது ஒரு தண்டனையளிக்கும் மற்றும் இனவாத, குடியேறுவோர்-எதிர்ப்பு நடவடிக்கையை நோக்கம்கொண்ட மொழியில் இயற்றப்பட்டதுடன், அரசியார் உறுதியாகத் தெரிவித்த வகையில், “இந்த நாடு, எவர் அதற்கு தமது பங்களிப்பை கொடுப்பவர்களை ஈர்க்கும், எவர் கொடுக்கமாட்டாரோ அவர்களைத் தடுக்கும்” என்றார். தகுதியில்லாமல் “அனுபவிப்பவர்கள்” என்று குடியேறுவோரை பலிக்கடா ஆக்கும் வகையில் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் உட்பட பல மக்களுக்கும் பொதுச் சேவைகளை, சுகாதாரம், பொதுநலம், வீடுகள் ஆகியவற்றை அணுகும் உரிமையை மறுக்க இருப்பதைத் தெரிவிக்கிறது. வீட்டு உரிமையாளர்களை வரவிருக்கும் குடியிருப்பவர்களுடைய அந்தஸ்து பற்றி பரிசோதிக்க சட்டம் கொண்டுவர உள்ளது. இல்லாவிடில் அவர்கள் பெரும் அபராதங்களை செலுத்த வேண்டியிருக்கும். முதலாளிகள் “சட்டவிரோதத் தொழிலாளர்களை” பயன்படுத்துவதற்கு எதிராக கூடுதல் அபராதங்களும் விதிக்கப்பட உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. ஆனால் இவை இப்பொழுது இன்னும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. வீட்டு உரிமையாளர்களும் முதலாளிகளும் மட்டும் நடைமுறை எல்லைப்பாதுகாப்புப் படையினராக மாற்றப்படுவது மட்டும் இல்லாமல், வைத்தியர்களும் இப்பட்டியலில் இடம் பெறுவர். ஐரோப்பிய ஒன்றியம் தவிர பிற இடங்களில் இருந்து வரும் குடியேறுவோர் தங்களிடம் தனிப்பட்ட மருத்துவப் பதுகாப்புக்காப்பீடு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளுக்கு ஒரு பத்திரத்தை நாட்டில் நுழைந்தவுடன் தேசிய சுகாதார சேவையில் (NHS) அவர்கள் பெறக்கூடிய சிகிச்சைச் செலவுகளை ஈடுகட்ட அளிக்க வேண்டும். மருத்துவ ஊழியர்கள் குடியேறுவோருக்கு சிகிச்சை வழங்குமுன் இது சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களும் வேலையின்மை உதவிகள், அரசவீடுகள் பெறுதல் இவற்றை அடையும் உரிமைகள் மறுக்கப்படும் வகையில் அபராதத்திற்கு உட்படுத்தப்படுவர். சட்ட உதவியை அணுகுவதற்குத் தகுதி பெற குடியிருப்போர் சோதனை ஒன்றும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் NHS சிகிச்சை பெற்றால் அதற்கான பணத்தைச் செலுத்த அந்தந்த அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படவும் உள்ளது. இவ் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், குடியேற்ற-எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு ஐக்கிய இராஜ்ஜிய சுதந்திரக் கட்சி (UKIP) என்று கன்சர்வேடிவ் பின் வாங்கில் அமர்பவர்கள், பொதுவாக டோரிக் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்பது தெளிவு. மே 2 அன்று 35 இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தல் நடந்த சில நாட்களுக்குள் இந்த உரை வந்துள்ளது. அவை முக்கியமாக கன்சர்வேடிவ்களின் இதயத்தானத்தில் நடைபெற்றிருந்தன. வாக்களித்தவர் எண்ணிக்கை சராசரி 25%தான் என்றாலும், கன்சர்வேடிவிற்கான வாக்குகளில் ஏற்பட்டுள்ள சரிவில் UKIP முக்கிய நலனைப் பெற்றுள்ளது; அதைத்தவிர வாக்களிப்பு அதன் கூட்டாளி அரசாங்கப் பங்காளியான லிபரல் டெமக்ராட்டுக்களுக்கு மிகஅதிகம் வீழ்ச்சியடைந்துவிட்டதையும் காட்டுகிறது. UKIP இற்கான டோரிக்களின் ஆதரவு இரத்தம்வடித்தல், அரசியாரின் உரையில் ஓரினத் திருமணம் பற்றி அரசாங்கத்தின் திட்டங்களைக் குறிப்பிடாததில் இருந்தும் தெரிகிறது. இது இன்னும் மேசையில்தான் உள்ளது என்றாலும், இச்சட்டம் (ஓரினப்பாலியல் தம்பதிகள்) டோரிக் கட்சியில் கடுமையான பிளவை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டவரைவை எதிர்க்கும் UKIP இப்பிளவை வெற்றிகரமாகத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. பிரதம மந்திரி டேவிட் காமெரோனுடைய முயற்சிகள், தன்னை குறைகூறுபவர்களை சமாதானப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை. அரசியாரின் உரைக்கு ஒரு நாள் முன்புதான், முன்னாள் கன்சர்வேடிவ் நிதி மந்திரி லாசன் பிரபு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கைகளுக்கு தன் ஆதரவுக் குரலையும் கொடுத்துள்ளார். அடுத்தவாரம் டோரி பின்வாங்கில் உட்கார்ந்திருப்பவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பிற்கான தேவையை வலியுறுத்தும் வாக்களிப்பைக் கட்டாயப்படுத்த உள்ளனர். இது 2015ல் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத் தன்மை குறித்த பொது வாக்கெடுப்பைக் கோருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவர்களின் எதிர்ப்பு, கண்டம் முழுவதும் நடத்தப்படும் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. “யூரோ-ஐயுறவுவாதிகள்” தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த சமூக, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு உற்சாகமான ஆதரவாளர்கள் ஆவர். அவர்களுடைய உந்துதலுக்குக் காரணம் இத்தாக்குதல் பிரஸ்ஸல்ஸின் அதிகாரத்துவ “சிவப்பு நாடா” பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதாகும். அவ்வாறு செய்கையில் உலகச் சந்தைகளில் ஒரு போட்டித் தன்மையிலான நன்மை வளர்ச்சியுறும் என நம்புகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பின்வாங்குதல் என்பது லண்டன் நகரத்தை “கட்டுப்படுத்தும் நடவடிக்கை வெறியில் இருந்து” காப்பாற்றும் என்று லாசன் வலியுறுத்தினார். குறிப்பாக நிதிய நடவடிக்கைகளில் ஒரு வரியைச் சுமத்தவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத் திட்டங்களில் இருந்து. UKIP தனது கால்களை கிள்ளுவதால் உண்மையான நெருக்கடியை டோரிக் கட்சி எதிர்கொண்டாலும், ஆளும் உயரடுக்கு முழுவதுமே அதன் தேர்தல் ஆதாயங்களுக்காக பிரித்தானியாவின் அரசியல் செயற்பட்டியலை இன்னும் வலதிற்கு கொண்டுசெல்வதற்கு ஒரு காரணத்தைக் கொடுக்கின்றன. எனவேதான் தொழிலாளர்களின் சமூக நிலைமைகளை பேரழிவிற்கு உட்படுத்தும் நோக்கம் கொண்ட சட்டவரைவு வேலைத்திட்டத்திற்குப் பரந்த ஆதரவு உள்ளது. “பிரித்தானியாவின் பொருளாதாரப் போட்டித்தன்மையை” வலுப்படுத்துதல் என்ற பெயரில், ஒரு கட்டுப்பாட்டைத் தளர்த்தும் சட்ட வரைவு கொண்டு வரப்படும்; “அது வணிகத்தின் மீது மிக அதிகமாக இருக்கும் கட்டுப்பாட்டுச் சுமையைக் குறைக்கும்”, அதில் “சுய தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு” சுகாதார, பாதுகாப்புச் சட்டங்களில் இருந்து “விலக்கு அளிக்கப்படுவதும்” அடங்கும். அரசியாரின் உரை “சமூக நலன்புரி முறையை சீர்திருத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளது, சமூகநல உதவியில் இருந்து வேலைக்கு மக்களை நகரத்தும் திட்டங்களை கொண்டுள்ளது.” இதில் மையமாக இருப்பது ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் ஆகும். அரசாங்கம், இருக்கும் முறையை அகற்றவுள்ளது. இது அற்பமான அடிப்படை ஓய்வுத்தொகையை அகற்றி ஒரு இரண்டாந்தர பங்களிப்பு பகுதியினால் மாற்றப்படும். அதில் அனைவருக்கும் ஒரே அளவு ஓய்வூதியம் வாரம் ஒன்றிற்கு அதிகபட்சம் 140 பவுண்டுகள் என்று இருக்கும். ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய வயது 67 என்று 2016க்குள் உயர்த்தப்படும். முதியோருக்கு சமூகப் பாதுகாப்பு குறித்து, அரசாங்க செலவிற்கு மக்கள் கொடுக்கும் நிதித் தொகைக்கு உச்சவரம்பை நிர்ணயிக்க விரும்புவதாகக் கூறுகிறது. இது 72.000 பவுண்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் செய்தி ஊடகத்தால் முற்றிலும் பாராட்டப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விற்பதைத் தடை செய்யாது, மேலும் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த இருக்கையில் வருகிறது; அவை ஏற்கனவே சமூகப் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் இங்கிலாந்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 20% இனால் குறைத்து விட்டன. இன்னும் அதிகமான செலவுக் குறைப்புக்கள் செயல்படுத்தப்படும்போது நிலைமை வியத்தகு அளவில் இன்னும் மோசமாகும். இச்சூழலில் அரசாங்கத்தின் அறிவிப்பான மருத்துவமனைகளுக்கும், பாதுகாப்பு இல்லங்களுக்கும் குழு தர நிர்ணயித்தல் என்பது அவற்றை மூடவும், NHS இன் சேமிப்புக்களை தனியார்மயமாக்கவும்தான் பயன்படுத்தப்படும். அதேபோன்ற விளைவுகள்தான் பள்ளிகள் துறையில் பயன்படுத்தப்பட்டது. 17 சட்டவரைவுகளுள் மற்ற நடவடிக்கைகள் “ஆசிரியர்கள் ஊதியங்களில் கூடுதலான விட்டுக்கொடுக்கும் தன்மைக்கு” சட்டம், பதவி தகுதிகாண் காலப் பணியில் 70% தனியார்மயம் ஆக்கப்படுதல் ஆகியவையும் அடங்கும். அங்கு ஊழியர்களுக்கான ஒப்பந்தங்கள் “முடிவுகளுக்கேற்ற ஊதியம்” என்று இருக்கும். அனைத்து தொடர்புச் செய்திகள், ஒலி அழைப்புக்களை குறுக்கிட உதவும் “ஒட்டுக் கேட்போர் பட்டயம்” அமைக்கப்படுவதில் இருந்து அரசாங்கம் பின்வாங்க வைக்கப்பட்டுள்ளது. இது திருட்டுத்தனமாக புதுப்பிக்கப்பட உள்ளது. பொலிஸ் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகள் எண்ணிக்கை குறிப்பிடப்படாத இணையத்தள வரைநெறி முகவரியை -Internet Protocol addresses- அடையாளம் காணும் திட்டங்கள் உள்ளன. இருப்பு ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கமும் உள்ளது. இது பிரித்தானியாவின் “மத்தியக் கிழக்கு, வட ஆபிரிக்காவில் உள்ள மாற்றமடையும் நாடுகளுக்கு” ஆதரவு என்னும் உறுதிப்பாட்டை ஒட்டி இருக்கும் என்று அரசியார் விளக்கியுள்ளார். அதாவது, லிபியா, சிரியா இன்னும் பிற இடங்களில் இதன் ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்கள் மற்றும் “பாக்லாந்து தீவினரை பாதுகாத்தல்”, தங்கள் அரசியல் வருங்காலத்தை ஜிப்ரால்டியர்கள் நிர்ணயிக்கும் உரிமை பற்றியும் இருக்கும். இப்பேச்சை எதிர்கொள்ளும் வகையில், தொழிற் கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் பிரித்தானியாவின் ஆயுதப் படைகளுக்கு ஆதரவை உறுதியளித்து, “அரசாங்கத்தின் குடியேறுதல் குறித்த திட்டங்களையும் பரிசீலிப்பதாக” தெரிவித்தார். UKIP இற்கு ஏற்ப டோரி மாற்றிக் கொண்டிருப்பது குறித்து தொழிற்கட்சி அதிகம் நிராகரித்தாலும், அதுவும் UKIP உடைய வெற்றிகளை தான் வலதிற்கு நகர்வதை நியாயப்படுத்தவும் பயன்படுத்துகிறது. இது “குடும்பம், கொடி, நம்பிக்கை”, “ஒரு நாட்டுத் தொழிற் கட்சி” என்னும் கோஷத்தைத் அடித்தளமாகக் கொண்டது. labourlist இணைய தளத்தில் எழுதிய தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மன் கட்சி UKIP எழுப்பியுள்ள “கவலைகளை” பரிசீலிக்க “விரைவில்” செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். “தொழிற் சந்தைகளில் வளைந்து கொடுத்தலை அனுமதிப்பது, உழைப்பினதும் மற்றும் மூலதனத்தினதும் தடையற்ற இயக்கத்தை அனுமதித்தல் மற்றும் சமூக நீதி போன்றவற்றை சமூக ரீதியாக தாங்கிக்கொள்ளக்கூடியதாக முடியாதுள்ளது” என்று அவர் எழுதியுள்ளதுடன் “ஐக்கிய இராஜ்ஜியத்தில் தொழிலாளிகளின் திறந்த சந்தைக்கு முற்றுப்புள்ளி வேண்டும்” என்றும் கோரியுள்ளார். |
|
|