World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் The European Commission, French President Hollande accelerate austerity ஐரோப்பிய ஆணையமும், பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட்டும் சிக்கன நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்
By Anthony
Torres சமீபத்திய நாட்களில் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், பிரெஞ்சு மற்றும் உலகப் பொருளாதாரம் ஒரு மந்த செயற்பாட்டில் இருக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் தன் சொந்த சோசலிஸ்ட் கட்சியில் (PS) இருந்தும் சிக்கன நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு அழுத்தங்களை கொண்டுள்ளார். மார்ச் 15 புதன் அன்று, பிரான்சுவா ஹாலண்ட் பிரஸ்ஸல்ஸிற்குச் சென்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பாரோசோவையும் இருபது ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்களையும் சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் (EU Commission) பிரெஞ்சு அரசாங்கம் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனக் கருதுகிறது. அது பிரான்சிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளை அதன் பற்றாக்குறைகளைக் குறைக்கவும், இன்னும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களை செயல்படுத்தவும் கொடுத்துள்ளது. ஹாலண்ட் பிரான்சிற்கு திரும்பியபின், நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, தன்னுடைய பதவியின் இரண்டாம் ஆண்டில் வரவிருக்கும் அவருடைய அரசாங்கத்தின் கொள்கைகளை சுட்டிக்காட்டினார்; தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது அது கொடுக்கும் விளைவுகள் அனைத்தையும் மறைப்பதற்கு இயன்றதைச் செய்தார். முதல் காலாண்டில் பிரான்ஸ் மந்தநிலைக்குள் நுழைந்தது; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% சரிவு இருந்தது என்று நிதியமைச்சரகம் தெரிவிக்கிறது. கணிப்புக்கள் 0.1% பொருளாதார வளர்ச்சி 2013ல் இருக்கலாம் எனக் கூறுகின்றன. அரசாங்கப் புள்ளி விவரங்கள் துறையின்படி, 2013 தொடக்கத்தில் வீட்டு உபயோக நுகர்வு 0.1% விழுந்தது; இதே காலத்தில் ஏற்றுமதிகளில் 0.5 % சரிவும் ஏற்பட்டது. பிரான்ஸ் பொருளாதார மந்தநிலையை முகங்கொடுத்த நிலையிலும், ஹாலண்ட் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும் சர்வதேச நிதியச் சந்தைகளின் கோரிக்கைகளை எதிரொலித்து, தொழிலாளர்களின் சமூக நலன்கள் மீதான தாக்குதல்களை விரைவுபடுத்திப் பொருளாதாரத்தை இன்னும் இலாபகரமாக்க முயல்கின்றன. செய்தியாளர் கூட்டத்தில் பிரான்சுவா ஹாலண்ட் அவருடைய பதவியின் இரண்டாம் ஆண்டில் இத்தாக்குதல் அதிகம் நடத்தப்படும் என்றார். போட்டித்தன்மையை பலமுறை குறிப்பிட்டு, அவர் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் ஆய்வு, வளர்ச்சிக்கு உதவும் என்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப தொழில்துறைக்கும் உதவும் என்று கூறினார். உலக முதலாளித்துவத்திற்கு மிக அதிகமாக சுரண்டப்படும் தொழிலாளர் தொகுப்பை அளிக்கும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுடன் பிரான்ஸ் போட்டியிடுகிறது; அவை 2000த்தில் இருந்து அதிகம் வளர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையர், “பிரான்சின் ஏற்றுமதிகள் பொருட்கள் மற்றும் சேவைப் பணிகளில் உலகச் சந்தையில் இது கொண்டுள்ள பங்கு 2000த்தில் இருந்து 27% குறைந்துவிட்டது, இது யூரோப்பகுதியில் இருக்கும் பிற ஏற்றுமதி செய்யும் நாடுகளை விட மிக அதிகமாகும்.” என்றார். பிரான்சின் பொருளாதார மாதிரி, அதன் உட்சந்தையின் தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. 2008 நெருக்கடிக்கும் அதையொட்டிய விளைவான நுகர்வு சரிவிற்கும் பின், பிரெஞ்சு முதலாளித்துவம் அதன் பொருளாதார மூலோபாயத்தை பரிசீலித்து வருகிறது. அதன் பார்வையில், பிரான்ஸ் ஜேர்மனிக்குப் பின்தான் மெதுவாக வருகிறது; ஜேர்மனியோ குமிழி தோற்றுவித்த 2000த்தின் முற்பகுதிக்குப் பின் அதன் தொழிலாளர் சந்தையை சிக்கன நடவடிக்கைகளின் கீழ் குறைத்து, சமூக ஜனநாயக கட்சியின், சமூக ஜனநாயக அரசாங்கம் ஜேர்மனிய ஏற்றுமதிகளுக்கு விரைவான விரிவாக்கத்திற்கு ஊக்கம் அளித்தது. ஆனால், ஹாலண்ட் அளித்த நடவடிக்கைகள் பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு ஒரு ஏற்றத் துவக்கம் அளிக்காது; ஏனெனில் இது தற்போதைய உலக முதலாளித்துவ முறையின் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் PS அரசாங்கமும் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகள் நெருக்கடி தோற்றுவித்துள்ள தொழிலாளர்களின் வறிய நிலையை ஆழப்படுத்தத்தான் செய்யும். பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் சோர்வு தரும் புள்ளிவிவரங்கள் மோசமாகிவரும் உலக நெருக்கடியின் விளைவு ஆகும். சீனா மற்றும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. ஐரோப்பாவின் முக்கிய பொருளாதார சக்தியான ஜேர்மனி 2012 நான்காம் காலாண்டில் 0.7% சரிவைக் கண்டது, 2013 முதல் காலாண்டில் அது கிட்டத்தட்ட பூஜ்ய வளர்ச்சி விகிதத்தைத்தான் பதிவு செய்தது. Mediapart கட்டுரை ஒன்று, “ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும் அதன் கட்டுமான சீர்திருத்தம் குறித்த வெறிச் சிந்தனையும்” என்ற தலைப்பில் ஐரோப்பிய ஒன்றிய நிதிய விவகாரங்கள் ஆணையர் ஒல்லி ரெஹ்னின் திணைக்களம், கடந்த ஆண்டு முன்வைத்த திட்டங்கள் குறித்து தகவல் கொடுத்துள்ளது. “ஒரு நம்பகமான வரவு-செலவுத் திட்ட மூலோபாயம், நடுத்தர கால தொழிலாளர் சந்தை கட்டுமான சீர்திருத்தங்கள், ஓய்வூதிய தொகைகள் மற்றும் வணிக வழக்கங்களில் தாராளமயம் இவற்றில் கணிசமான சீர்திருத்தங்களால் முழுமை அடைய வேண்டும்.” கிரேக்கத்தில் PASOK மற்றும் ஸ்பெயினின் சமூக ஜனநாயகவாதிகளின் சிக்கனப் போக்கை பிரான்ஸ் தொடர உந்துதல் பெற்றுள்ளது; அவையோ அந்நாடுகளின் பொருளாதாரங்களை பேரழிவிற்கு உட்படுத்திவிட்டன. இது நிதியச் சந்தைகளின் தேவைகளை நிரப்பச் செய்யப்பட்டுள்ளது. ஹாலண்ட் தன் உரையில் குறிப்பிட்டபடி, ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சிற்கு கொடுத்துள்ள இரண்டு ஆண்டுகாலம் “ஓய்வுக்காலம் அல்ல, ஆனால் இன்னும் விரைவான பொருளாதார ஏற்றம் ஐரோப்பாவில் வருவதற்கு ஒரு உந்துதல் காலம் ஆகும்.” முன்னாள் PS ஜனாதிபதி வேட்பாளரும் ஹாலண்டின் முன்னாள் பங்காளியுமான செகோலீன் ரோயலினால் பிரதிபலிக்கப்படும் சோசலிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவு, அரசாங்கம் வெட்டுக்களை செயல்படுத்துவதில் காட்டும் தாமதப் போக்கை குறைகூறியுள்ளது. அவர் Le Monde ல் “காலம் இழக்கப்பட்டுவிட்டது, தொடக்கத்தில் இருந்தே ஆணை மூலம் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு [பதவியில்] முதல் நூறு நாட்களிலாவது நாம் வெற்றி அடைவோம்.” PS இன் பிற பிரிவுகள், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு அஞ்சி, அவ்வளவு அவசரமில்லாத சிக்கன நடவடிக்கை செயல்களுக்கு அழைப்புக் கொடுத்துள்ளன; அரசாங்கமோ ஆழ்ந்த செல்வாக்கிழப்பில் உள்ளது. எமானுவல் மோரல் அறிவித்தார்: “நாம் ஒரு கவலைதரும் கட்டத்தை அடைந்துள்ளோம். ஐரோப்பிய ஆணையம் நம் சமூக மாதிரி அகற்றப்படுவதை விடக் குறைவாக எதையும் விரும்பவில்லை. அதுவும் மிக விரைவில். பிரான்ஸ் மாதிரியின் மூன்று தூண்களும் தாக்கப்படுகின்றன; அரசாங்க ஓய்வூதிய முறை, தொழிலாளர் பாதுகாப்பு நெறி மற்றும் பொதுப்பணிகள்.... இவற்றின் இடர்கள் வெடிப்புத்தன்மை உடையவை.” ஹாலண்ட் அரசாங்கம் முதலாளிகளையும் “தொழிலாள வர்க்கத்தின்” சங்கங்களையும் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த தொடர்பு கொண்டுள்ளது. அரசாங்கம் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) ஐ நம்ப முடியும்; அது தொழிலாளர் சந்தைச் சீர்திருத்த உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்றாலும், அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டவில்லை, அரசாங்கத்தின் பொது சிக்கனப் போக்கிற்கு ஆதரவைத்தான் கொடுக்கிறது. CGT, தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை எதிர்க்கிறது என்பதற்கு புறநிலையான காரணங்கள் உள்ளன. தொழிற்சங்கங்கள் வெற்றுக் கூடுகளாக உள்ளன, நிதிகளுக்கு அரசு மற்றும் முதலாளிகளை நம்பியுள்ளன, அரசுடன்தான் பொதுநலன்களை பகிர்ந்து கொள்கின்றன. தொழிற்சங்கங்களின் பங்கு தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, தளர்ச்சியுறச் செய்தல் ஆகும், பணிநீக்கங்களுக்கு எதிர்ப்பை தடை செய்தல் – அப்படித்தான் PSA Peugeot-Citroen கார்த்தயாரிப்பு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தபோது நடைபெற்றது. |
|