World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Low turnout in Sri Lankan strike reflects no confidence in the unions and opposition

இலங்கை வேலை நிறுத்தத்தில் குறைந்த பங்களிப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையை பிரதிபலிக்கின்றது

By W.A. Sunil
23 May 2013

Back to screen version

வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தாக்குதல்களுக்கு தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சி கண்டவருகின்ற போதிலும், செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பங்குபற்றியிருந்தனர். இந்த குறைந்த பங்களிப்பானது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ எதிர் கட்சிகள் மீது பரந்த தொழிலாளர் தட்டினர் மத்தியில் ஆழமான அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வேலை நிறுத்தம், 60 சதவீதம் வரை மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிரான ஒரு அடையாள எதிர்ப்பாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தொழிலாள வர்க்க குடும்பங்களை நேரடியாகத் தாக்கும் இந்த மிகப்பெரும் கட்டண உயர்வு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆணையின்படி அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதி மட்டுமே

அரசாங்கம் ஒரு சமூக வெடிப்பு பற்றி தெளிவாக பீதியடைந்துள்ளது. வேலை நிறுத்தத்திற்கு எதிராக ஒரு அச்சுறுத்தல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்ட அரசாங்கம், அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறையை சட்டவிரோதமாக இரத்து செய்ததோடு, முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, வேலைநிறுத்தம் செய்பவர்களின் பெயர் பட்டியலை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தின் தலைவருக்கும் உத்தரவிட்டிருந்தது. பொலிஸ் கமாண்டோக்கள் மின்சார சபை அலுவலகங்களில் நிறுத்தப்படிருந்ததோடு இரயில்வே உட்பட பல வேலைத் தளங்களில் இராணுவச் சிப்பாய்கள் நிலைகொண்டிருந்தனர்.

அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் கொடூரமான போரின்போது, அனைத்து எதிர்ப்புக்களையும் கண்டனம் செய்ததைப் போலவே, ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, வேலைநிறுத்தம் தேசப்பற்றில்லாதது என முத்திரை குத்தினார். வேலைநிறுத்தம் "நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சி என்று சிரிசேன அறிவித்தார்.

உண்மையில், அமைப்பாளர்கள் வளரும் சமூக அமைதியின்மையில் இருந்து தலை தப்புவதற்காகவும் அதை பாதிப்பில்லாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் பக்கம் திசை திருப்பிவிடுவதற்காகவுமே இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களின் நோக்கம் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்க போராட்டத்தினை ஏற்பாடு செய்வது அல்ல. மாறாக, அரசாங்கத்துடனான எந்தவொரு மோதலையும் தவிர்க்கும் பொருட்டு, அவர்கள் வேலை நிறுத்தக்காரர்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தினார். கொழும்பு துறைமுகம் மற்றும் நீர் வழங்கல் சபை போன்ற சில இடங்களில், அவர்கள் வேலை நிறுத்தத்தை இரத்து செய்துவிட்டு, மதிய உணவுநேர மறியல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த வேலை நிறுத்தம் சிங்கள இனவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) தலைமையிலான தொழிற்சங்க முன்னணிக்கான ஒருங்கிணைப்பு குழுவினால் (CCTUA) ஏற்பாடு செய்யப்பட்டது. வலதுசாரி ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் போலி இடதுகளான நவசமசமாஜ கட்சி (...) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (யூ.எஸ்.பீ.) உட்பட பிற எதிர்க்கட்சிகளும் இந்த வேலைநிறுத்த அழைப்பில் இணைந்துகொண்டன. பெரும் வணிக ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.) இந்த அழைப்பை ஆதரித்த போதிலும், அதைச் சார்ந்த தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் சேர்ந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கவில்லை.

மின்சாரம், நீர், இரயில் மற்றும் பஸ் சேவைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட அரசாங்கத் துறையில் சில ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். முக்கியமாக கிராமப்புறங்களில் பல ஆயிரம் அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். கொழும்பு புறநகர் பகுதியில் ஜயவர்தனபுற மற்றும் களனி பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாத்தறையில் ருஹுணு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரைகளும் விரிவுரைகளைப் பகிஷ்கரித்திருந்தனர்.

200
தனியார் தொழிற்சாலைகளில் இருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததாக தொழிற்சங்கங்கள் கூறின. எனினும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்யும் சுதந்திர வர்த்தக வலயத்திலும் குறிப்பிடத்தக்களவேனும் பங்குபற்றியிருக்கவில்லை. இரத்மலானை தொழில்துறை பகுதியில் சுமார் 500 தொழிலாளர்கள் கலந்துகொண்ட பேரணியை பொலிஸ் கலைத்தது.

செவ்வாய்க்கிழமை மாலை, ஒரு ஜே.வி.பி. தலைவரும் CCTUA அழைப்பாளருமான லால் காந்த, வேலைநிறுத்தம் முழு வெற்றி என்று கூறினார். இது இறுதிப் போராட்டம் அல்ல என அவர் கூறிய போதிலும், ஊடகங்களுடன் உரையாற்றிய அவரும் ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களும் தங்களது அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி கூறத் தவறினர்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடனும் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடனும் பேசிய தொழிலாளர்கள், தொழிலாளர்களின் பங்களிப்பு குறைந்தமைக்கு தொழிற்சங்க அதிகாரிகளை குற்றம் சாட்டினர். கண்டி இரயில் நிலையத்தில் ஒரு தொழிலாளி, "யாரும் இங்கே வந்து இன்றைய நடவடிக்கை பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்தவில்லை" என்றார். சிலாபம் மருத்துவமனையில் ஒரு தொழிலாளி, தனத சக ஊழியர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்தாலும் "தொழிற்சங்க தலைவர்கள் மீது நம்பிக்கை கிடையாது எனக் கூறினார். "அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களின் பின்வாங்கலால் தனது வேலைத் தளத்தில் வேலை நிறுத்தம் நடக்கவில்லை என நீர் வழங்கல் சபையில் ஒரு தொழிலாளி கூறினார்.

அடுத்தடுத்து செய்த காட்டிக்கொடுப்பினால் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் முற்றிலும் செல்வாக்கிழந்து போயுள்ளன. புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் போது, அரசாங்கம் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்க யுத்தத்தை பயன்படுத்திய வேளை, அரசாங்கத்தை ஆதரித்த ஜே.வி.பீ. "தாய்நாடே முதலாவது," என பிரகடனம் செய்தது.

போர் 2009ல் முடிவுக்கு வந்த பின்னர், அடுத்த ஆண்டு வரவு செலவு திட்ட பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாக இரக்கமற்ற முறையில் குறைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில், எதிர்க்கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், உழைக்கும் மக்கள் மத்தியில் சீற்றத்தை தணிக்க மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்தன. இந்த சிக்கன நடவடிக்கைகள், உலகப் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துவதற்கு உலகம் முழுவதும் முன்னெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்
.

அதன் நடவடிக்கைகளை செயல்படுத்தும் பொருட்டு, இராஜபக்ஷ அரசாங்கம் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச அதிகாரங்களை பயன்படுத்தி வருகிறது. ஆனால் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர் கட்சிகளும், இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே அடக்குமுறைக்குப் பேர் போன யூ.என்.பீ. மற்றும் அதற்கு சமமான ஏனைய பிற்போக்கு கட்சிகளுடன் தொழிலாளர்களை கட்டிப்போட முயற்சிக்கின்றன.

கடந்த வாரம் நடந்த ஒரு தனியான மின் விலை எதிர்ப்பு போராட்டத்தில், பொது சுகாதார ஊழியர்கள் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் மற்றொரு தொழிற்சங்க கூட்டணி, பேரணியில் பங்கேற்க யூ.என்.பி.க்கும் ஜனநாயக கட்சிக்கும் அழைப்புவிடுத்தது. ஜனநாயக கட்சியானது, இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களின் போது, ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை படுகொலைசெய்வதை நடைமுறைப்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையிலானதாகும்.

போலி இடது குழுக்களான நவசமசமாஜ கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் பாதுகாவலனாக யூ.என்.பீ.யை முன்னிலைப்படுத்தி வருகின்றன. நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, மின் கட்டணத்துக்கு எதிரான போராட்டங்களில் யூ.என்.பீ. தொழிற்சங்கங்களுடனான ஐக்கியத்தைப் பாராட்டினார். ஐக்கிய சோசலிச கட்சி பத்திரிகையான செந்தாரகை, "பிளவுபட்டிருந்த தொழிற்சங்க இயக்கம் வர்க்க நடவடிக்கைகளுக்காக ஐக்கியப்படுவது ஒரு வரவேற்கத்தக்க அடையாளமாகும்," எனத் தெரிவிக்கின்றது.

தொழிலாள வர்க்கம் வேலைநிறுத்தத்தில் இருந்து முக்கிய அரசியல் படிப்பினைகளை பெற வேண்டும். யூ.என்.பீ., ஜனநாயக கட்சி மற்றும் ஜே.வி.பீ. உட்பட, ஆளும் வர்க்கத்தின் கட்சிகளில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. முழு அரசியல் ஸ்தாபனத்துக்கும் திவாலான முதலாளித்துவ இலாப முறைமைக்கும் எதிரான நனவுபூர்வமான போராட்டத்தின் மூலம் மட்டுமே அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராட முடியும்
.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகவும் அவற்றுக்கு எதிராகவும் முதலில் சாதாரண உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்குவதன் மூலம், விவகாரத்தை தமது சொந்த கைகளில் எடுக்க வேண்டும். இதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியமாகும். இது தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும். அதாவது, தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜன புரட்சிகர தலைமைத்துவமாக சோசலிச சமத்துவ கட்சியில் இணைந்து அதைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.