தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Greek protests against ban on strikes வேலை நிறுத்தங்கள் மீதான தடை குறித்து கிரேக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்By Christoph
use this version to print | Send feedback திங்களன்று கிரேக்கப் பொலிஸ் 88,000 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் சிவில் அணிதிரள்வு உத்தரவுகளைக் கொடுத்தனர். அரசாங்கம் ஆசிரியர்களை வேலை செய்யக் கட்டாயப்படுத்துகிறது, அத்தோடு ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள மிகச் சமீபத்திய சிக்கனப் பொதிக்கு எதிராக ஒருவேளை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்காகவுமாகும். கிரேக்கத் தலைமை நீதிமன்றமானது OLME என்னும் ஆசிரியர்கள் சங்கத்திடமிருந்து கட்டாய வேலை உத்தரவை எதிர்த்து ஆரம்பத் தடை ஒன்றின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டது. திங்களன்று ஆயிரக்கணக்கான மக்கள் OLME தொழிற்சங்க அரங்கில் ஏதென்ஸில் கூடி, அங்கிருந்து சின்டகமா சதுக்கத்தில் இருக்கும் பாராளுமன்றக் கட்டிடத்தை நோக்கி அணிவகுத்து, அரசாங்க நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் புறப்பட்டனர். எதிர்ப்புக்கள் பட்ரஸ், தெஸலோனிகி போன்ற பிற நகரங்களிலும் நடைபெற்றன. பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ADEDY, வெள்ளியன்று ஆசிரியர்களுக்காக ஒரு ஒற்றுமை காட்டும் வேலைநிறுத்தத்தை இது மாணவர்கள் தேர்வு அட்டவணையில் குறுக்கிட்டுவிடும் என்று கூறி ஒழுங்குபடுத்த மறுத்துவிட்டது. மாறாக அது செவ்வாயன்று ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, வியாழனன்று GSEE எனப்படும் தனியார்துறைத் தொழிலாளர்களின் கூட்டமைப்புடன் இணைந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சில ஆசிரியர்கள் கிரேக்கத்தை 1967ல் இருந்து 1974 வரை ஆண்ட இராணுவ ஆட்சிக் குழுவின் சீருடைகளை அணிந்திருந்தனர். “அவர்கள் மீண்டும் நம்மைச் சீருடை அணியவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர்” என்று ஒரு பெண்மணி கோஷ அட்டையில் எழுதியிருந்தார். மற்றொரு கோஷ அட்டையில், “இன்று நான், நாளை நீங்கள் அனைவரும்” என எழுதப்பட்டிருந்தது. கேணல்களின் சர்வாதிகார ஆட்சியின் போது அனைத்து தொழிலாளர்களின் விவகாரங்களும் ஆயுத வன்முறையினால் அடக்கப்பட்டது மற்றும் இளைஞர்கள் ஏராளமாக அணிதிரட்டப்பட்டிருந்தது குறித்த அதே நிலைமைகளைத்தான் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். உண்மையில் இந்த ஒரே இணைந்த தன்மை ஆழமடைந்து செல்லுகிறது. அதேபோன்ற நிலைமை ஒன்றும் தொலைதூரத்தில் இல்லை. ஜனவரி மாதம் புதிய ஜனநாயகம் (ND), சமூக ஜனநாயக PASOK மற்றும் ஜனநாயக இடது (DIMAR) இவற்றின் கூட்டணி அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்து வந்த மெட்ரோ இரயில் சாரதிகளை வேலைக்குத் திரும்ப இதேபோன்ற தடுப்பு நடவடிக்கை மூலமும், பொலிசைத் திரட்டியதின் மூலமும் செய்தது. பெப்ருவரி மாதம் பல மாதங்களாக ஊதியம் வரவில்லை என வேலைநிறுத்தம் செய்த கடற்பணியாளர்களும் அதே நிலையைத்தான் சந்தித்தனர். இப்பொழுது அரசாங்கம் ஒரு படி மேலே சென்றுள்ளது. ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்கு வாக்களிக்கு முன்னரே சிவில் அணிதிரள்விற்கு அது உத்தரவு இட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று OLME உடைய தலைமை, வரவிருக்கும் மாணவர்களின் இறுதி பரீட்சை தொடக்கத்தின்போது இணைந்து நடக்கும் வேலைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இப்பொழுது ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்ய விரும்பினால், அவர்கள் ஐந்து ஆண்டுக் காலச் சிறைத் தண்டனை மற்றும் வேலை நீக்கத்தை எதிர்கொள்ளக்கூடும். கடந்த ஞாயின்றன்று ஒரு தொழிலாளர்கள் விவகாரத்திற்கு எதிரான அரசாங்க நடவடிக்கை அது தன் சிக்கன வேலைத்திட்டத்திற்கு எத்தகைய எதிர்ப்பையும் மிருகத்தனமாக அடக்குவதற்குத் தயார் என்பதை தெளிவுபடுத்தியது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் தற்செயல் நிகழ்வு அல்ல. திங்கள் மாலை யூரோக் குழுவின் நிதி மந்திரிகள் கிரேக்கத்திற்கு இரண்டு கடன் தவணைகள் அளிப்பது குறித்து முடிவெடுக்கக் கூடினர். ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு வேலை நேரம் 2 மணி அதிகப்படுத்தப்படல், கிட்டத்தட்ட 10,000 ஆசிரியர் பதவிகள் அகற்றப்படல் என்பவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் IMF விதித்த நிபந்தனைகளுள் அடங்கியிருந்தன—இவை மொத்தம் 7.5 பில்லியன் யூரோக்கள் கடன் அளிப்பதற்காகும் (9.7 பில்லியன் டாலர்கள்). இதற்கு எதிராகத்தான் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டிருந்தது. நிதி மந்திரிகள் இறுதியில் பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டதுடன், சிக்கனத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதென்ஸ் “முக்கிய முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றும் பாராட்டியுள்ளனர். ND இன் ஆண்டோனிஸ் சமரசின் கிரேக்க அரசாங்கம் எடுத்துள்ள சர்வாதிகார நடவடிக்கைகள் நெருக்கமாக அவருடைய ஐரோப்பிய மற்ற அரசாங்கத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்டன என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. இதேபோன்ற நடவடிக்கைகள்தான் கண்டம் முழுவதும் எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம்தான் டானிஷ் “இடது கூட்டணி” அரசாங்கம் 70,000 ஆசிரியர்களுக்கும் மேலாக நான்கு வாரங்கள் பணியின்றி நிறுத்தியதுடன், ஊதியம் அதிகம் இல்லாமல் நீடித்த வேலை நேரத்தையும் சுமத்தியது. கிரேக்கத்தில், கல்வி மந்திரி கான்ஸ்டன்டினோஸ் அர்வனிடோபௌலோஸ் இழிந்த முறையில் வரவிருக்கும் பரீட்சைகளை ஒட்டி சிவில் அணிதிரள்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை நியாயப்படுத்தினார். “மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடைய மன அமைதி அசாதாரண சூழலில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்” என்றார் அவர். உண்மையில், ஆசிரியர்கள் எதிர்க்கும் வெட்டுக்களும் வேலை நீக்கங்களும் முழுப் பொதுக் கல்வி முறையையும் அகற்றும் அரசாங்கத்தின் பிரச்சாரத்தினுடைய ஒரு பகுதிதான். நூற்றுக்கணக்கான பள்ளிகளும் டஜன் கணக்கான பல்கலைக்கழகங்களும் இணைக்கப்படும் அல்லது மூடப்பட்டுவிடும். 10,000 ஆசிரியர்கள் பதவிகள் இழப்பு என்பது 150,000 பொதுத்துறை வேலைகள் மொத்தமாக அகற்றப்பட உள்ளதில் ஒரு பகுதிதான். ஏற்கனவே கிரேக்க இளைஞர்களில் மூன்றில் இரு பங்கினர் வேலையின்மையில் உள்ளனர். இந்தக் காட்டுமிராண்டித்தன சமூகத் தாக்குதல்களை அரசாங்கம் செயல்படுத்த முடிவதற்குக் காரணம் அதற்குத் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவு இருப்பதுதான். OLME இன் தலைவர் நிகோஸ் பாபா கிறிஸ்டோஸ் தொடக்கத்தில் இருந்து தொழிற்சங்கம் அணிதிரள்வு உத்தரவை எதிர்க்காது என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார். மெட்ரோ சாரதிகள் மற்றும் கடற்பணி புரிவோரைப் பொறுத்தவரை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்கள் மீது தடை கொண்டுவர முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. OLME உடன் தொடர்புடைய ஐரோப்பிய தொழிற்சங்கத்தின் கல்விக்கான குழுவானது (ETUCE) அணிதிரள்வு உத்தரவு குறித்து ஏதும் கூறவில்லை. ஜேர்மனிய ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (GEW) தற்பொழுது ஜேர்மனிய ஆசிரியர்களை விற்றுவிடுவதில் ஈடுபட்டிருப்பதும் மௌனமாக உள்ளது. கிரேக்கத்தில் முக்கிய எதிர்க் கட்சியான சிரிசா (தீவிர இடதுக் கூட்டணி) அரசாங்கத்தின் போக்கிற்கு ஆதரவு கொடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பல செய்தி ஊடக அறிக்கைகளில் அக்கட்சி அரசாங்கம் அணிதிரள்வு உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது; ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கைளையும் திரும்பப் பெறக் கோரியுள்ளது. இதையொட்டி மாணவர்களின் தேர்வுகளுக்குப் பின் ஆசிரியர்களுடன் “பொதுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம்” என்று கூறியுள்ளது. ஆசிரியர்களுடனான மோதலை பரீட்சைகள் முடியும் வரை தாமதப்படுத்தலாம் என்று சிரிசா விரும்புவது வெளிப்படை. கட்சியின் செய்தித் தொடர்பாளர் பானோஸ் ஸ்கௌலெடிஸ் ஏற்கனவே அணிதிரள்வை “அசாதாரணச் சூழல்” என்று காரணம் காட்டி நியாயப்படுத்தியுள்ளார். |
|
|