தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Benghazi and the deepening crisis of the Obama administration பெங்காசியும் ஒபாமா நிர்வாகத்தின் ஆழமடையும் நெருக்கடியும் Bill Van
Auken use this version to print | Send feedback கடந்த ஆண்டு அமெரிக்க தூதரக மற்றும் CIA நிலையங்கள் லிபியாவின் பெங்காசியில் அல் குவைடா நடத்திய தாக்குதல் குறித்த சர்ச்சைகள் ஒபாமா நிர்வாகத்தின் ஆழும் அரசியல் நெருக்கடிக்கு இடையே மீண்டும் எழுந்துள்ளன. ஆனால், ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கும் அதன் குடியரசு எதிர்க் கட்சியினருக்கும் இடையே விவாதம் சூடாகி வருகையில், அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் மற்றும் மூன்று அமெரிக்கர்களின் உயிர்களை பறித்த செப்டம்பர் 11, 2012 தாக்குதலின் அடித்தளத்தில் இருக்கும் உண்மையான பிரச்சினைகள், இன்னமும் மறைக்கப்பட்டே உள்ளன. நிர்வாகம் பெங்காசி விவகாரத்தைக் கையாண்டது ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி மீது அரசியல் குற்றவிசாரணை நடத்துவதற்கு ஆதாரம் கொண்டது என்று கூறும் அளவிற்கு சில குடியரசுக் கட்சித் தலைவர்கள் சென்றுள்ளனர். செய்தி ஊடகத்தின் மீது அரசாங்க உளவு, நிர்வாகத்திற்கு அரசியல்ரீதியாக எதிராக இருக்கும் குழுக்களை IRS (உள்நாட்டு வருவாய்த்துறை) துன்புறுத்துதல் என்ற விவாதங்களில் சிக்கியுள்ள ஒபாமா அமெரிக்க மக்களின் முதுகின் பின்னால் கையாளப்படும் ஜனநாயக விரோத மற்றும் இராணுவவாதக் கொள்கைகளால் தீவிர சிக்கலில் உள்ளார் என்ற உணர்வும் இருக்கிறது. எப்பொழுதும் போல் இந்த நிகழ்வுகளை அமெரிக்க செய்தி ஊடகங்கள் முன்வைப்பது நேர்மையற்றும் வேண்டுமென்றே தவறான வழி காட்டுவதாகவும் உள்ளது. 2012 தேர்தலுக்கு சற்று முன்பு வெள்ளை மாளிகை அப்பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதராக இருந்த சூசான் ரைஸ் பெங்காசியின் உயிர்பறித்த தாக்குதல் குறித்த முதல் பொது விளக்கத்தை வழங்கவிருந்த “பேசும் விடயங்களை” மாற்றியதில் தொடர்பைக் கொண்டிருந்தது என்ற குடியரசுக் கட்சித் தாக்குதல் ஒன்றில் இருந்து தப்பித்துக்கொள்ள முயன்றதா என்பதில் செய்தி ஊடகங்கள் இந்த விஷயத்தை தேர்தல் தொடர்பான அரசியலின் ஒரு சிறிய மாற்றம் போல் பெருமளவில் குறைத்துவிட்டது. இந்த ஆய்வுக் கருத்து, குடியரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ளது, வெள்ளை மாளிகையின் பெங்காசி பற்றிய உண்மையை மறைப்பதில் உறுதி கொண்டது என்றும், ஒபாமாவின் திட்டமான “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” குறிப்பாக ஒசாமா பின் லேடன் படுகொலை பற்றி அவர் தடையற்று வெற்றிகளைக் காண்பதாகக் கூறப்படுவதற்கு இது குறுக்கே வரக்கூடாது என்ற நோக்கமும் உடையது. இவ்வகையில், நிர்வாகம் பெங்காசித் தாக்குதலை அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு இணைய தளத்தில் காட்டப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு ஒளிப்பதிவுக் காட்சிக்கு எதிரான தன்னியல்பான எதிர்ப்பாக தவறாக அர்த்தப்படுத்தியதாக கூறியது. இம்முரண்பாட்டை நசுக்குவதற்காக புதன் அன்று வெள்ளை மாளிகை கிட்டத்தட்ட 100 பக்கங்கள் மின்னஞ்சல்களை வெளியிட்டது. இதில் CIA, வெளிவிகாரத்துறை, பென்டகன், FBI, தேசியப் பாதுகாப்புக் குழு மற்றும் வெள்ளைமாளிகை அனைத்தும் ரைசின் உரையில் திருத்தங்களை செய்தன என்றும் அல் குவைடா குறிப்பையும் லிபிய இஸ்லாமிய போராளிகள் பற்றிய குறிப்பையும், அதன் முதல் வரைவுகளில் இருந்தவற்றை மாற்றுவதற்குக் வெளிவிகாரத்துறை மிக அதிக அழுத்தத்தை கொடுத்தது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. இந்தக் கவலைகள், குடியரசுக் கட்சியினருக்கு ஒபாமாவின் சான்றை கறைபடியச் செய்யும் வாய்ப்பை மறுப்பதை விடக் கூடுதலான பணயம் இருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன. அல்லது தற்போதைய விவாதம் 2016 ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹில்லாரி கிளின்டன் நிற்பதைத் தகர்க்கும் ஒரு குடியரசுக் கட்சியின் மூலோபாயத்தில் இருந்தும் விளையலாம். பெங்காசியில் உள்ள அமெரிக்க நிலையங்களை முற்றுகையிட்டவர்களின் அடையாளங்களை மறைப்பதில் முக்கிய நோக்கம், வாஷிங்டன் அதைச் செயல்படுத்திய பிரிவுகளுடன் நிறுவியுள்ள சிக்கல் வாய்ந்த உறவுகளில் அதன் மூலவேர்களை கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் வெள்ளை மாளிகையோ அல்லது காங்கிரசில் குடியரசுக் கட்சி தலைமையோ இந்த அடிப்படை பிரச்சினையை ஆராய்வதில் அக்கறை ஏதும் கொள்ளவில்லை. இப்பொழுது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ் வாஷிங்டன் அதன் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளையும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தும் தாக்குதல்களையும் முடிவிலா பயங்கரவாதத்தின் மீதான உலகப் போர் என்பதைக் காட்டியும் குறிப்பாக அல் குவைடாவை அகற்றும் போராட்டம் எனக் கூறப்படுவதனூடாகவும் நியாயப்படுத்த முற்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் அமெரிக்காவும் அதன் உளவுத்துறை நிறுவனங்களும் அமெரிக்க அரசாங்கத்தில் எவரும் ஒப்புக்கொள்ள தயங்கும் வகையில் நீண்டகாலமாகவே இன்னும் அதிக சிக்கல் வாய்ந்த உறவைத்தான் இச்சக்திகளுடன் கொண்டுள்ளது. இந்த உறவுகள் 1970களின் கடைசிப் பகுதியில் சோவியத் ஆதரவுடைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சியை தோற்றுவிக்க, அதற்கு நிதியளிக்க CIA எடுத்துக் கொண்ட முயற்சிகளில் அல் குவைடா ஒரு துணைப்பகுதியாக நிறுவப்பட்ட காலத்திற்கு செல்கின்றன. அதற்கும் முன்பு, அமெரிக்க உளவுத்துறை நீண்ட காலமாகவே மத்திய கிழக்கு, ஈரான் மற்றும் இந்தோனிசியாவில் சோசலிச, இடது தேசியவாதிகளின் ஆளுமைக்கு எதிராக இந்த பிற்போக்குவாத இஸ்லாமியவாத அமைப்புக்களை பிரயோசனமான சொத்துக்களாக கண்டுவந்தது. செப்டம்பர்11, 2001 “அனைத்தையும் மாற்றிவிட்டது” என்று எமக்கு கூறப்பட்டது. ஆனால் அது, இந்த உறவை முற்றிலும் மாற்றவில்லை. ஏனெனில் அது அந்நாள் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுடன் வெகு நெருக்கமாக பிணைந்திருந்தது. லிபியாவில் தலையிட்டபோது வாஷிங்டன் அல்குவைடாவுடன் இணைந்துள்ள கிளர்ச்சியாளர்களை ஒரு பினாமி தரைப்படைகளாக போரில் பயன்படுத்தி, மதசார்பற்ற ஆட்சியான கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சியை கவிழ்க்க, அவற்றிற்கு ஆயுதமும் ஆலோசனையும் கொடுத்து பாரிய அமெரிக்க நேட்டோ குண்டுத் தாக்குதல்களை தொடர பயன்படுத்தியது. கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் இந்த உறவில் முக்கிய நபராக இருந்தார். ஆட்சிமாற்றத்திற்கான போர் ஆரம்பிக்க முன் கடாபியின் இஸ்லாமியவாத எதிராளிகளை கவனத்துடன் அவர் ஆராய்ந்திருந்தார். அவர் ஏப்ரல் 2011ல் பெங்காசியில் இருந்ததுடன், அங்கு அவர் கிளர்ச்சியாளர்கள் எனப்பட்டோருக்கு ஆயுதம், நிதி, பயிற்சி முதலியவற்றை கொடுத்தார். இப்பிரிவுகள் முன்னர் அமெரிக்கர்களால் பயங்கரவாதிகள் எனக் கண்டிக்கப்பட்டிருந்தன. சிலர் அவற்றில் இருந்து கடத்தப்பட்டு, CIA இனால் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அக்டோபர் 2011ல் அமெரிக்க ஆதரவுடனான இந்த சக்திகளால் கடாபி அடித்து கொல்லப்பட்டதுடன் லிபியாவில் ஏகாதிபத்தியத் தலையீடு தனது வெற்றியை பெற்றது. பெங்காசி விவகாரம் தொடர்ந்து வாஷிங்டனில் அரசியல் நீரினை குழப்புவதற்கு காரணம் இப்பொழுது பாரியளவில் சிரியாவில் இதே மூலோபாயம் பயன்படுத்தப்படுவதாலாகும். அங்கு மீண்டும் அல்குவைடா தொடர்புடைய ஆயுதக்குழுக்கள் பஷர் அல் அசாத்தை வீழ்த்தும் போரில் முக்கிய போரிடும் சக்தியாக சேவைபுரிகின்றன. லிபியாவைப் போலவே இதன் நோக்கமும் பிராந்தியத்தின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்க முதலாளித்துவத்தின் போட்டி நாடுகளான ரஷ்யா, சீனா இவற்றின் இழப்பில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது என்பதுதான். இதைத்தவிர, டமாஸ்கஸில் ஆட்சி மாற்றம் என்பது ஈரானுக்கு எதிரான இன்னும் பரந்தபோருக்கு ஒரு தயாரிப்பு வழிவகையாகவும் காணப்படுகிறது. சிரியத் தலையீட்டின் தடுமாற்றத்துடன், இந்த நடவடிக்கைகளின் சாத்தியமான வெற்றிகள் எச்சரிக்கை மிக்க ஒரு உதாரணமாக பெங்காசியின் மதிப்பிழந்த விளைவு உள்ளது. இக்கொள்கை குறித்து அமெரிக்க அரசாங்க அமைப்புகளுக்குள் கடுமையான பிளவுகள் உள்ளன என்பது வெளிப்படை. கடந்த செப்டம்பர் மாதம் பெங்காசியில் நடைபெற்ற குருதி கொட்டிய நிகழ்வுகளுக்கான சாத்தியமான முக்கிய விளக்கம் கடாபி அகற்றப்பட்டபின் மஹ்ரெப்பின் அல் குவைடாவுடன் உருவாக்கப்பட்ட உறவில் ஏற்பட்ட கசப்பாக இருக்கலாம். சிலவேளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அமெரிக்காவால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேறாமல் உள்ளன மற்றும் தங்கள் சேவைக்கு போதுமான வெகுமதி இல்லை என்று நினைத்திருக்கலாம். “லிபியப் புரட்சிக்கு” அமெரிக்கத் தூதராக இருந்த ஸ்டீவன்ஸ் படுகொலைக்குப்பின் அவர்கள் வாஷிங்டனுக்கு திட்டவட்டமான தகவலை அனுப்பி வைத்துள்ளனர். இப்படி “பதிலடி வாங்குதல்” என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகத் தலையீடுகளில் நீண்ட, இழிந்த வரலாற்றை கொண்டுள்ளது. செப்டம்பர் 11, 2011 அன்று பயங்கரவாத தாக்குதல்களுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்னதாக வாஷிங்டனால் “விடுதலைப் போராளிகள்” என்று போற்றப்பட்டிருந்ததுடன், ஆப்கானிஸ்தானில் சோவியத்திற்கு எதிரான போரில் ஆதரவளிக்கப்பட்டிருந்தனர். இன்னும் முன்னதாக 1961ம் ஆண்டு பிக்ஸ் வளைகுடா (கியூபாவில் படையெடுப்பு) தோல்வியின்போது கியூபா “குஷானோக்களுக்கான” கென்னடி நிர்வாகத்தின் ஆதரவு ஒரு தீவிர வலதுசாரி பயங்கரவாதிகளை அமெரிக்காவில் தோற்றுவித்தது. அவர்கள் அரசியல் இரட்டைநாடகச் செயல்களில் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று நம்பினர். இது உறவை நச்சுப்படுத்தி, கென்னடியின் நிர்வாகத்தின் வன்முறை முடிவிலேயே ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம். இறுதி ஆய்வில் ஒபாமா நிர்வாகம், வெளிவிவகாரத்துறை மற்றும் பல உளவுத்துறை நிறுவனங்கள் பெங்காசித் தாக்குதல்களை பற்றிக் கூறும்போது அல் குவைடா பற்றி குறிப்பிடுவதை கவனத்துடன் தவிர்த்தன என்றால், அதன் நோக்கம் இந்த பயங்கரவாத வலைப்பின்னலுடன் கொண்டுள்ள நீடித்த இரகசிய உறவுகளை மூடிமறைத்தலும் மற்றும் அது மீண்டும் மத்திய கிழக்கினதும் அமெரிக்காவினதும் நிரபராதியான மக்கள் பலியாகக்கூடிய வெடிப்புத்தன்மை உடைய நெருக்கடிகளை மீண்டும் தோற்றுவிக்கலாம் என்னும் உண்மைதான். |
|
|