World Socialist Web Site www.wsws.org |
Capitalism and the crisis facing young people முதலாளித்துவமும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் நெருக்கடியும்Andre Damon சமூகத்தின் வேறு எந்தப் பிரிவையும்விட, இளைஞர்கள்தான் உலகெங்கிலும் முதலாளித்துவத்தின் நெருக்கடியின் பெரும் பாதிப்பை சுமக்க வைக்கப்பட்டுள்ளனர். 2008 சரிவிலிருந்த ஐந்து ஆண்டுகளில், இளைஞர்களின் வேலையின்மையானது மந்தநிலைச் சகாப்த அளவுகளை அடைந்துவிட்டது; இளம் தொழிலாளர்களுடைய ஊதியங்கள் பெரும் சரிவிற்கு உட்பட்டுள்ளன மற்றும் கல்வி வாய்ப்புக்களும் சரிந்துவிட்டன. தொழிலாள வர்க்கத்தின் மீதான முழுத் தாக்குதலையும் போல், உலகெங்கிலுமுள்ள இளைஞர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்; இதில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் இளைஞர்களும் அடங்குவர். ஐரோப்பா முழுவதும் இளைஞர்களின் வேலையின்மையானது தொற்றுநோய் போன்ற நிலையில் உள்ளது. கடந்த வியாழனன்று கிரேக்கத்தில் புள்ளிவிவரத்துறையானது பெப்ருவரி மாதத்திலிருந்து 15 முதல் 24 வயது வரையில் இருப்பவர்களுடைய வேலையின்மை விகிதம் அதிர்ச்சி தரும் வகையில் 64.2 சதவிகிதத்தை அடைந்துள்ளது எனக் கூறியது. இது கிட்டத்தட்ட இளைஞர்கள் மற்றும் இளம் தொழிலாளர்களுடைய முழு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பகுதியினரை பாதித்துள்ளது. மார்ச் 2012ல் இருந்த 54.1 சதவிகிதத்திலிருந்து இது அதிகரித்துவிட்டது. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல: கிரேக்க ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன், மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளும் பொருளாதாரச் சரிவும் ஐரோப்பிய வங்கிகளால் நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ளன. “பிணை எடுப்பு நிதியை” பெற்றுள்ள மற்றய நாடுகளும் இதே போன்ற நிலைமையைத்தான் எதிர்கொள்கின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம், இளைஞர்களின் வேலையின்மை ஸ்பெயினில் 55.9 சதவிகிதம் மற்றும் இத்தாலியில் 38.4 சதவிகிதமென உள்ளன. நிலைமை இன்னும் மோசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட அறிக்கை இதைத் தெளிவாக்குகிறது; அந்த அறிக்கையில் உலக இளைஞர்களின் வேலையின்மை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் அதிகரிக்கும் என முடிவாகக் கூறுகிறது. உலகெங்கிலும் 2018 ஐ ஒட்டி இளைஞர் வேலையின்மை விகிதம் 12.8 சதவிகிதத்தை எட்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக அது தெரிவித்துள்ளது; இது தற்போதைய 12.4 சதவிகிதத்தை விட அதிகமாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை “2008 முதல் 2012க்கு இடையிலான காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வளர்ச்சியுற்ற பொருளாதார நாடுகளில் இளைஞர்களின் வேலையின்மை 24.9 சதவிகிதம் என்னும் உயர்ந்த தன்மையைக் கொண்டது; இளைஞர்களின் வேலையின்மை பல தசாப்தங்கள் இல்லாத உயர்ந்த அளவான 18.1 சதவிகிதத்தை 2012ல் எட்டியது” என்று கூறுகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் 73.4 மில்லியன் இளைஞர்கள் வேலையற்று உள்ளனர் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது; இது “2007ல் இருந்து 3.5 மில்லியன் அதிகரிப்பு ஆகும், 2011 ஐ விட 0.8 மில்லியன் அதிகம் ஆகும்.” வேலையில்லாத இளைஞர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர்கள் குறைந்தப்பட்சம் பாதி ஆண்டேனும் வேலையில்லாமல் இருந்துள்ளனர். வளர்ச்சியுற்ற நாடுகளில் வேலையிலும் இல்லாமல், பள்ளியிலும் இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் பகுதி கணிசமாகப் பெருகிவிட்டது. 2008க்கும் 2010க்கும் இடையே இப்பிரிவு 15.8 சதவிகிதப் புள்ளியில் இருந்து 2.1 சதவிகிதப் புள்ளி வளர்ச்சியுற்றுள்ளது. ஐரோப்பாவில் வேலையில் இருக்கும் இளைஞர்களிடையே கால்வாசிப் பேர் பகுதி நேர வேலைதான் செய்கின்றனர், 40.5 சதவிகிதம் பேர் தற்காலிக ஒப்பந்தங்களில்தான் வேலையில் உள்ளனர். அமெரிக்கவில் உத்தியோகபூர்வ இளைஞர் வேலையின்மை 16.2 சதவிகிதம், இது மொத்த மக்களின் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதத்தைவிட கணிசமாக இரு மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் மொத்த வேலையின்மை விகிதம் போல், இதுவும் மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாளர் தொகுப்பை விட்டு நீங்கியதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 25 வயதிற்கு உட்பட்டவர்கள் தொழிலாளர் தொகுப்பில் பங்கு பெறும் விகிதம் என்பது நான்கு தசாப்தங்களில் மிகவும் குறைவாக உள்ளது; இது உண்மை வேலையின்மை விகிதம் 22.9 சதவிகிதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2008ல் இருந்து அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்டுள்ள வேலைகளில் பெரும்பாலானவை குறைவூதிய வேலைகள் ஆகும்; ஒரு மணி நேரத்திற்கு 7.69 டாலர்களிலிருந்து 13.83 டாலர்கள் வரைதான் கொடுக்கப்படுகின்றன என்று கடந்த ஆண்டு தேசிய வேலையளிக்கும் சட்டத் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. கௌரவமான ஊதியம் அளிக்கும் வேலைகள் மறைந்துவிட்டது, அமெரிக்காவில் முழுநேர உழைப்பு ஊதியம் பெறும் இளைஞர்களின் ஊதியங்களை 2008ல் இருந்து 6 சதவிகிதம் குறையும்படி செய்துவிட்டது. இது மக்களின் வேறு எந்தப் பிரிவையும் விட அதிகமாகும். வாழ்நாள் முழுவதும் வறுமை என்னும் பெருந்திகைப்பு—அத்துடன் பிற சமூகத் தீமைகள் பொருளாதர நெருக்கடி மற்றும் அரசாங்கச் சிக்கனக் கொள்கைகளுடன் இணைந்து நிற்பது—இளைஞர்களில் பலரை தற்கொலைக்கு தள்ளியுள்ளது. அமெரிக்க உயர்பள்ளி மாணவர்களில் ஆறில் ஒருவர் தீவிரமாக தன் உயிரைப் பறித்துக் கொள்வது பற்றி சிந்தித்துள்ளனர், 12 பேரில் ஒருவர் அதை முயன்றுள்ளனர் என்று நோய் தடுப்பு மற்றும் பரிசோதனைக்கான மையம் (Centers for Disease Control and Prevention) கூறியுள்ளது. பொருளாதார நெருக்கடி வெடிப்பைத் தொடர்ந்து அமெரிக்க மிக இளவயதுப் பிரிவினர் தற்கொலை முயற்சி செய்ய முயன்றது 2008 இல் 6.3 சதவிகிதத்திலிருந்து 2011 இல் 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஊதியங்கள் சரிந்து, வேலைகள் மறைந்துபோகும் நிலையில், கௌரவமான கல்விக்கான வாய்ப்பும் இளைஞர்களிடம் இருந்து தொடர்ந்து தொலைவாகப் போகிறது. உலகம் முழுவதும் பொதுக் கல்வி தகர்க்கப்பட்டு, தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா இந்த உந்துதலுக்குத் தலைமை தாங்குகிறது; ஏராளமான பொதுக் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவது நாடு முழுவதும் நடைபெறுகிறது. இம்மாதம் முன்னதாக, மிச்சிகன் மாவட்டத்திலுள்ள ஒரு பொதுப் பள்ளி நிதியில்லாத காரணத்தால் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பயிற்சிக் கட்டணம் மிகவும் அதிகரித்துவிட்டது; ஒரு தலைமுறை கல்லூரிப் பட்டதாரிகள் அனைவர் மீதும் மிகப் பெரிய கடன்சுமையை ஏற்றியுள்ளது. 2003ல் இருந்து 2012க்குள்ளாக, அமெரிக்காவில் 25 வயதில் உள்ள அனைவருடைய மாணவர் கடனும் 25 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது. இதே காலத்தில், சராசரி மாணவர் கடன், 25 வயதில் இருப்போருடையது 10,649 டாலர்களிலிருந்து 20,326 டாலர்களாக இருமடங்கு ஆயிற்று, இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் பெருகியமுறையில் ஆக்கிரோஷம் அடைந்து, இன்னும் கொடுக்க முடியாத நிலையிலிருக்கும் மாணவர்களிடம் கொள்ளைமுறையைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலும் மற்ற ஏகாதிபத்திய மையங்களிலும், கௌரவமான வேலை, ஒரு வருங்காலம் இவற்றை இழந்துள்ள இளைஞர்கள், எப்பொழுதும் பெருகும் ஆக்கிரமிப்பு போர்களுக்கு அதிர்ச்சித் துருப்புகளாக மாறியுள்ளனர்; இந்த வழிவகையில் தங்கள் வாழ்க்கைகளை அல்லது தங்கள் உடல் உறுப்புக்களை, உள ஆரோக்கியத்தை இழக்கின்றனர். காட்டர் காலத்தில் முன்னாள் தேசியப்பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரும் அமெரிக்க அரசியல் நிறுவனத்தில் முக்கிய நபருமான Zbigniew Brzezinski, 2011 இல் எகிப்து மற்றும் துனிசிய புரட்சிகளுக்குப் பின், கல்விகற்ற இளைஞர்கள் எதிர்காலம் இன்றித்தவிக்கும் நிலையிலுள்ள ஒரு தலைமுறையினால் ஏற்படக்கூடிய புரட்சிகர விளைவுகளின் சாத்தியங்கள் குறித்து எச்சரித்தார். “சனத்தொகையில் இளம் வயதானவர்கள்.... தகவல் தொழில்நுட்பப் புரட்சியுடன் இணையும்போது குறிப்பிடத்தக்க வகையில் வெடிப்புத்தன்மைக்கு உள்ளாகின்றனர்” என்று தன்னுடைய நூலான Strategic Vision இல் அவர் எச்சரித்துள்ளார். “பலவேளைகளில் கல்விகற்ற ஆனால் வேலையில்லாதவர்கள், அதையொட்டிய விரக்தி மற்றும் தனிமைப்படலானது எளிதில் பாதிக்கப்படுகின்ற சித்தாந்தப் போராட்டம் மற்றும் புரட்சிகர அணிதிரள்வுகளில் அவர்களை கொண்டுவந்து விடுகின்றது.” Brezinski குறிப்பாக “வளர்ச்சியடையும் நாடுகளில்” இருக்கும் இளைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார்; ஆனால் இதேதான் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பற்றியும் கூறமுடியும். ஆளும் வர்க்கத்தைப் பாதுகாப்பதில் முதிர்ந்தவரான Brzezinksi கவலைப்படுவது சரியானதே. இளைஞர்கள் முகங்கொடுக்கும் பேரழிவு நிலமைகள் தவிர்க்க முடியாமல் 2011 ஆண்டை மறைத்துவிடக்கூடிய அளவிற்கு அரசியல் எழுச்சிகளை ஏற்படுத்தும். Brzezinski இன்னும் பிற விமர்சகர்களும் கவலையுடன் இளைஞர்களின் வேலையின்மை மற்றும் கடன்பட்டிருப்பது குறித்துப் பேசியுள்ளனர். ஆனால் அவர்களுள் எவரும் நெருக்கடிக்கு தீர்வு எதையும் கொடுக்கவில்லை, கொடுக்கவும் முடியாது. இதற்குக் காரணம் இளைஞர்களுக்குக் கொடுக்கப்படும் இழிந்த எதிர்கால வாய்ப்புக்கள் முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வியின் ஒரு வெளிப்பாடு ஆகும். நெருக்கடிச் சகதியிலுள்ள ஆளும் வர்க்கம் தன் சொந்த நிலைமையை பாதுகாத்துக்கொள்ள முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதும் இடைவிடாத தாக்குதலை நடத்துகிறது. இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய வரவிருக்கும் பரந்த போராட்டங்களானது, முழுச் சமூகத்தில் இருப்பவர்களும் ஒரு சிறு ஆளும் உயரடுக்கின் செல்வக்கொழிப்பிற்கு தாழ்த்தப்படுகின்ற காலாவதியாகிவிட்ட மற்றும் பகுத்தறிவிற்கு பொருத்தமற்ற முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறியும் நோக்கத்தைக் கொண்ட வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினால் உயிரூட்டப்பட வேண்டும். இளைஞர்கள் சோசலிசத்திற்காக போராட எழ வேண்டும். |
|