World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Israeli strikes on Syria

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்

Alex Lantier
6 May 2013

Back to screen version

வியாழன் இரவு டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கி, மற்றும் நேற்று காலை டமாஸ்கஸ் முழுவதும் சிரிய இராணுவ இலக்குகளையும் தாக்கியமையானது எந்தவித ஆத்திரமூட்டலுமின்றி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத போர் நடவடிக்கைகள் ஆகும், இதற்கு வாஷிங்டன் மற்றும் அதனுடைய ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஆதரவும் கிடைத்துள்ளது, அவை சிரியாவிற்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிடும் நடவடிக்கையின் ஒரு பாகமாக இதை மேற்கொண்டுள்ளன.

ஞாயிறு நடந்த தாக்குதல்களில் மட்டும் 300 சிரிய இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர் என்று ரஷ்ய செய்தி ஊடகம் தகவல் கொடுத்துள்ளது.

இஸ்ரேலியப் படைகள் திறமையுடன் செயல்பட்டன, அமெரிக்கா ஆதரவுடைய இஸ்லாமியவாத எதிர்த்தரப்பு குடிப்படைகளுடைய ஆதரவு டமாஸ்கஸைச் சுற்றி இருந்தன. ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின் எதிர்த்தரப்பானது டமாஸ்கஸ் இராணுவக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதனுடைய போராட்டக்காரர்களை தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு சிரியத் துருப்புக்கள் மீது தாக்குதலில் குவிப்புக் காட்டுமாறு அழைப்பு விடுத்தது.

சிரிய ஆட்சியை கைக்கூலி படைகள் அகற்ற முடியாத நிலையில் இருக்கும்போது சிரியப் போரை எப்படித் தீவிரப்படுத்துவது என்பது குறித்து ஒபாமா நிர்வாகம் வாஷிங்டனில் விவாதம் நடத்தியிருக்கையில் இத்தாக்குதல்கள் வந்துள்ளன. ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸ் இதை, “ஒபாமாவின் இரண்டாவது பதவிக் காலத்தில் மிக அவசரமான வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினை” என்று விவரித்துள்ளது.

கருதப்படும் வழிவகைகள், செயற்பாட்டின் அரசியல் ரீதியான குற்றத்தன்மையைத்தான் நிரூபிக்கின்றன. இவற்றில் அமெரிக்க ஆதரவு எதிர்த்தரப்பிற்கு அதிக ஆயுதங்கள் கொடுத்தலும் அடங்கும்—இதுவோ அல் கைய்டா தொடர்புடைய அல் நுஸ்ரா முன்னணியின் ஆதிக்கத்தில் உள்ளது; அல்லது நேரடியாக அமெரிக்க நடவடிக்கைகளை தொடக்குவது என்பதும் கருதப்படுகிறது. பிந்தைய விருப்புரிமையில் சிரிய விமானங்கள் மற்றும் விமான பாதுகாப்புத் தளங்களில் அமெரிக்க தாக்குதல்களை நடத்துவது, நாட்டிற்குள் “பறக்கக்கூடாது” பகுதிகளை நிறுவுதல் மற்றும் ஜோர்டான் அல்லது துருக்கியை தளமாகக் கொண்டு அமெரிக்கத் துருப்புக்களை வைத்து சிரியா மீது நேரடியாக படையெடுப்பது ஆகியவையும் அடங்கும்.

இஸ்ரேலிய தாக்குதல்களானது, அமெரிக்கத் தாக்குதல்கள் சிரியா மீது நடத்தப்படலாம் என்பதற்கு ஒரு சோதனையோட்டம்போல் அடையாளம் காணப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் ஒரு பறக்கக்கூடாது பகுதியை ஆரம்பிக்க தாக்குதல்கள் நடத்துவது குறித்து விவாதங்கள் நடத்தியதாக கூறப்பட்டாலும், வாஷிங்டன் இதுவரை சிரியாவின் விமானப் பாதுகாப்பு முறைகள் குறித்த கவலையை ஒட்டி, அது குறித்துச் செயல்படவில்லை.

NBC யின் செய்தி ஊடகச் சந்திப்பு” நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க செனட்டர் பாட்ரிக் லீஹி (வெர்மான்ட் மாநில, ஜனநாயகக் கட்சி), இஸ்ரேலியத் தாக்குதல்கள் அமெரிக்கா அளித்த F16 இன் உதவியுடன் நடத்தப்பட்டன, இது ரஷ்யா அளித்துள்ள விமானப் பாதுகாப்பு முறைகள் அவை கூறப்பட்ட அளவிற்கு சிறந்தவை அல்ல என்பதை நிரூபிக்கிறது” என்றார். இதே நிகழ்ச்சியில் NBC நிருபர் ஆண்ட்ரேயா மிட்சல் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பின் சிரியாவில் ஒரு பறக்கக்கூடாத பகுதி நிறுவ வாய்ப்பு உள்ளது என்றார்.

இஸ்ரேலியத் தாக்குதல்கள் குறித்து அதன் ஒப்புதல் முத்திரையை ஒபாமா நிர்வாகம் விரைவில் கொடுத்தது. வியாழன் இரவுத் தாக்குதல்கள், ஈரானில் இருந்து லெபனான் நாட்டு ஷியைட் அமைப்பான ஹெஸ்புல்லாவிற்கு ஏவுகணைகள் தொகுப்புக்கள் மீது இலக்குக் கொள்ளப்பட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் நிரூபணம் ஏதும் இன்றிக் கூறினர்; ஷியைட் தலைமையிலான ஹெஸ்புல்லாவானது சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு நட்பு அமைப்பு ஆகும். அமெரிக்க ஆதரவு உடைய சிரிய எதிர்த்தரப்பு ஆதாரங்கள், டமாஸ்கஸை ஞாயிறு காலையில் அதிரவைத்த பாரிய வெடிப்புக்கள் சிரிய இராணுவத் தளங்களையும் ஜம்ரயா இராணுவ ஆய்வு நிலையத்தையும் இலக்கு கொண்டவை என்றன. இவற்றில்தான் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இலத்தீன் அமெரிக்கப் பயணத்தை மூன்று நாட்களுக்கு மேற்கொண்டிருந்த நிலையில் கோஸ்டா ரிக்காவில் இருந்து ஒபாமா கூறினார்: “இஸ்ரேலியர்கள் நவீன ஆயுதங்கள் ஹெஸ்போல்லா போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு மாற்றப்படுவதை எதிர்த்து பாதுகாப்பது நியாயம்தான்.... நாமும் இஸ்ரேலியர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்; ஹெஸ்புல்லாவினர் சிரியாவுடன் நெருக்கமாக இருப்பவர்கள், அவர்கள் லெபனானுடனும் நெருக்கமாக இருப்பவர்கள்.”

ஈராக்கிய படையெடுப்பை நியாப்படுத்தக் கூறப்பட்ட பொய்களைப்போலவே, சிரியாவிற்கு எதிரான போரை நியாயப்படுத்தபடுவதற்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் அப்பட்டமான பொய்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அசாத் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினார் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்று கூறப்படுபவை பொய் ஆகும்—இவை எதிர்தரப்பு குடிப்படைகளின் குற்றச்சாட்டுக்களை ஆதாரமாகக் கொண்டவை, அவர்கள் சரின் நரம்பு எரிவாயுவினால் (sarin nerve gas) நச்சிற்கு உட்பட்டுள்ளனர் அல்லது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றனர்.

ஆனால் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு அமெரிக்க விடையிறுப்பு, ஒன்றைத் தெளிவாக்குகிறது: ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிய போர்களுக்குப் பின், வாஷிங்டன் ஒரு புதிய, மிகப் பெரிய ஏகாதிபத்தியப் போரை, இம்முறை சிரியாவிற்கு எதிராகத் தொடக்கத் தயாராக உள்ளது. அத்தகைய ஆக்கிரமிப்புப் போரைத் தொடக்குவதால் ஏற்படும் விளைவுகள், ஈராக் போரைவிட இன்னும் அதிகமாகத்தான் இருக்கும்.

ஏற்கனவே சிரியாவில் தற்போதைய அமெரிக்க பினாமிப் போர் மத்திய கிழக்கை எரியூட்டியுள்ளது. சிரியாவின் முக்கிய பிராந்திய நட்பு நாடான, எண்ணெய் வளமுடைய ஈரானை தனிமைப்படுத்தி மிரட்டும் நோக்கத்தை கொண்ட இது, ஹெஸ்புல்லாவையும் போரில் இழுக்க முயல்கிறது. இது ஈராக்கில் உள்நாட்டுப்போர் வெடிப்பை ஏற்படுத்தும், அங்கு அல் நுஸ்ராவுடன் பிணைப்புடைய சுன்னி குறுங்குழுவாத படைகள், ஷியைட் தலைமையிலான அராசங்கத்துடன் போராடி வருகின்றன.

சிரியாவில் போரை விரிவாக்குவதின் மூலம், வாஷிங்டன் ஒரு பரந்த பிராந்தியப் போரைக் கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது—அசாத்தின் நட்பு நாடுகள் சீனா, அல்லது ரஷ்யா ஈடுபட்டால், இது உலகளாவிய பெரும் தீயை ஏற்படுத்தும்.

ஈராக் மீது படையெடுப்பு தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு பின்னர் சிரியாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதல் செயல்படுத்தப்படுவது, அமெரிக்க ஜனநாயகத்தின் திவால்தன்மைக்கு நிரூபணம் ஆகும். மீண்டும் வாஷிங்டன், ஏகாதிபத்திய நலன்களை தொடர ஒரு போரைத் தொடக்கவுள்ளது என்பது அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அத்தகைய போருக்கு மக்கள் காட்டும் பெரும் எதிர்ப்பிற்கு முழு இகழ்வுணர்வை வெளிப்படுத்துவதாகும். கருத்துக் கணிப்புக்கள் அமெரிக்கர்களில் 62 சதவிகிதத்தினர் இஸ்லாமியவாத எதிர்தரப்பிற்கு இன்னும் ஆயுதங்கள் கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பை காட்டுகின்றனர், அதையொத்த அல்லது அதையும்விட அதிகமான பெரும்பான்மைகள் மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்க பினாமிப் போரை எதிர்க்கின்றன.

இஸ்ரேலிய தாக்குதல்கள் சிரிய எதிர்தரப்பு ஆதரவாளர்களின் பொய்களையும் நன்கு புலப்படுத்துகின்றன; இதில் போலி இடது, ஐக்கிய செயலகத்தின் ஜில்பேர் அஷ்காரும் உள்ளார்; சமீபத்தில் அவர் சிரியப் போரில் ஏகாதிபத்திய தலையீடு என்ற விமர்சனத்தை “ஒருவித சதி தத்துவம்” என்று உதறித்தள்ளினார். அது 2011ல் லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபியை அகற்றும் போருக்கு ஆதரவு கொடுத்ததில் இருந்து, போலி இடது குழுக்கள் பிற்போக்குத்தன பிராந்திய சக்திகள் மற்றும் வலதுசாரி குறுங்குழுவாத கூறுபாடுகளுடைய ஈடுபாட்டுடன் நடத்தப்படும் ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்திய போர்களுக்கான பிரச்சாரகர்கள் என்னும் செயல்பாட்டை முடுக்கிவிட்டுள்ளன.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வாஷிங்டனின் கருத்துக்களுக்கு எதிராக, சிரியா அதனுடைய ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா சக்திகளுடன் கொண்டுள்ள பிணைப்பில் உள்ளது. தற்போதைய போருடன் அமெரிக்கா சிரியாவில் தன் பாதுகாப்பில் ஒரு ஆட்சியை நிறுவ முற்படுகிறது; அது அமெரிக்க கொள்கைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படும்.

அமெரிக்காவில் ஒரு புதிய மத்திய கிழக்குப் போருக்கு மக்கள் ஆதரவு அநேகமாக முற்றிலும் இல்லை எனலாம். வெளிநாடுகளில் போரில் ஈடுபடும் அதே ஆளும் உயரடுக்கு உள்நாட்டிலும் இரக்கமற்ற முறையில் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை நடத்துகிறது. சிரியப் போருக்கான உந்துதல் என்பது, தொழிலாளர்களின் போர் எதிர்ப்புத் தளத்திற்கும் பொறுப்பற்ற ஆளும் உயரடுக்கின் இராணுவ முறைக் கொள்ளைத் திட்டங்களுக்கும் இடையேயான வெடிப்புமிக்க மோதலை உருவாக்கும் சூழலை தோற்றுவிக்கிறது.