தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் France: What is Jean-Luc Mélenchon’s May 5 protest? பிரான்ஸ்: ஜோன் லூக் மெலோன்ஷோனுடைய மே 5 நிகழ்வின் அர்த்தம் என்ன?By Antoine Lerougetel and Alex Lantier use this version to print | Send feedback இடது முன்னணி (Front de gauche -FdG) இன் தலைவர் ஜோன் லூக் மெலோன்ஷோன் (Jean-Luc Mélenchon) சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சிக்கனக் கொள்கைக்கு எதிராக விடுத்துள்ள மே 5ம் திகதி எதிர்ப்பு, வர்க்க முன்னோக்கின் அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறது. ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்திடையே கட்டமைந்து வரும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான வெடிப்புத்தன்மை மிக்க சீற்றத்திற்கும் எதிர்ப்பிற்கும், மெலோன்ஷோன் போன்ற நபர்களுடைய கருத்துக்களுக்கும் இடையே ஒரு வர்க்கப் பிளவு உள்ளது. கடந்த ஆண்டுத் தேர்தலில் ஹாலண்டின் சிக்கனத் திட்டத்தையும் மீறி அவருக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் சோசலிஸ்ட் கட்சி (PS) செனட்டர் மெலென்ஷோன், இப்பொழுது சோசலிஸ்ட் கட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை தடுக்கும் நோக்கத்தோடு, எதிர்ப்பை தீமைபயக்காத வழிவகைகளில் திசைதிருப்ப முற்படுகிறார். போலி இடது கட்சிகளான, இடது முன்னணி (FdG) அல்லது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்றவை விடுக்கும் எதிர்ப்புக்களுக்கு, தொழிலாள வர்க்கம் ஆதரவு கொடுப்பதின் மூலம், ஹாலண்டை அதிகாரத்தில் இருக்கவிட்டுவிட்டு அதேவேளை அவரின் கொள்கைகளை மாற்ற முடியும் என்னும் பிரமைகளை அவர் ஊக்குவிக்கிறார். சில நிறுவன கருத்தியல் செம்மைப்படுத்தல்களோடு, ஒரு புதிய ஆறாம் குடியரசைத் தோற்றுவிக்கும் கருத்து உட்பட, ஹாலண்டின் பிரதம மந்திரி ஆவதற்கு மெலோன்ஷோனின் திட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தே இது ஒரு குரூரமான வடிவமைப்பை கொண்டுள்ளது. அவர் “பிரான்சுவா ஹாலண்டை அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு முன் வெளியேற்றுவது என்னுடைய நோக்கம் இல்லை” என்று வலியுறுத்தியுள்ளார். மெலோன்ஷோன் போன்ற சக்திகளிடம் இருந்து எத்தகைய அரசியல் அழுத்தங்களையும் ஹாலண்ட் உணரவில்லை; மெலோன்ஷோன் தன்னுடைய அரசாங்கத்தையும் அதன் வணிக சார்பு கொள்கைகளையும் ஆதரிக்கிறார் என்பதை ஹாலண்ட் நன்கு அறிவார். மே 5 எதிர்ப்பை மெலென்ஷோன் அறிவித்ததின் பின்னரும், உண்மையில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஒல்நேயில் PSA கார் தொழிற்சாலையை மூடும் அறிவிப்பையும் அல்லது சோசலிஸ்ட் கட்சியின் சமூக விவகாரங்களுக்கான மந்திரி மரிசோல் துரென் ஓய்வூதிய வெட்டு திட்டங்களை அறிவிப்பதையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஒரு புரட்சிகர போராட்டத்தில் முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே உலக முதலாளித்துவம் முகங்கொடுக்கும் படுகுழியில் இருந்து வெளியேற ஒரு வழியைக் காட்ட முடியும். 2008 உலக முதலாளித்துவ நெருக்கடியின் வெடிப்பில் இருந்து, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், முதலாளித்துவ “இடது” கட்சிகள் போன்றவற்றால் அழைப்புவிடப்படும் ஒரு நாள் அடையாள எதிர்ப்புக்கள், ஐரோப்பா முழுவதும் தோல்விகளையும் சமூகப் பிற்போக்குத்தனத்தையும்தான் தோற்றுவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும், வேறுபட்ட கட்சிகளால் ஆன அரசாங்கங்களும் வெகுஜன முறையீடுகளை சிறிதும் பொருட்படுத்தாமல், தொழிற்சங்கங்களுடன் பேச்சுக்களை நடத்தி பேரழிவுதரும் சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்துகின்றன. 2008ல் இருந்து, கிரேக்கத்தின் பொருளாதாரம் 20%க்கும் மேலாகச் சுருங்கிவிட்டது, அதே நேரத்தில் இத்தாலியின் தொழிற்துறை உற்பத்தி கால்பகுதி சரிந்துவிட்டது. கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் வேலையின்மை 27% எனவும் அதிலும் கிட்டத்தட்ட இளைஞர்களுடைய வேலையின்மை நிலை 60% என இருக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம், பெருமந்த நிலை மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் காணாத அளவிற்குச் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, ஹாலண்டின் கருத்துக் கணிப்புத் தரங்கள் மிக அதிக அளவிற்குச் சரிந்து விட்டன; ஏனெனில் அவருடைய கொள்கைகள் பிரான்சை, துன்புறும் கிரேக்க சமூகப்-பொருளாதாரச் சிதைவு மாதிரியின் பாதையில் கொண்டு செல்லுகின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது நட்பு அமைப்புக்களின் கொள்கைக்கு உந்துதல் கொடுக்கும் வர்க்க நலன்கள் சைப்ரஸ் நிதிய நெருக்கடிக்கு நடுவே ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் மரியா டமனநாக்கி ஆல் இந்த மார்ச் மாதம் வெளிப்படுத்தப்பட்டது. அவர் கூறினார்: “கடந்த ஒன்றரை ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்தின் மூலோபாயம் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதன் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு எதிராக முன்னேற்றுவிக்கப்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர் செலவுகளைக் குறைத்தல் என்பதாகும்.” 2011ல் எகிப்தில் நடந்ததைப் போன்ற ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கான புறநிலமைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேவேளை பிரான்சிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்தின் இறுதி நெருக்கடியை எதிர்கொள்ள சோசலிசக் கொள்கைகள் பக்கம் திரும்பும் புறநிலையான அவசியமும் ஏற்பட்டுள்ளது. அத்தகைய போராட்டங்களுக்கு, ஹாலண்டின் பிரச்சாரத்தையும் அவருடைய வணிக சார்பு கொள்கைகளையும் ஆதரித்த போலி இடது கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் போராட்டம் இன்றியமையாததாகிறது. மெலோன்ஷோனும் NPA யும் ஹாலண்ட் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவார் என்றும் ஒப்புக்கொண்டன, மெலென்ஷோன் அவரை சிக்கன சார்பு கிரேக்க பிரதமர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரேயோ உடன் இணைத்து “ஹாலண்ட்ரேயோ” என்று எள்ளி நகையாடினார், ஆனாலும் ஹாலண்டிற்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றார். தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் தொழில்துறை, அரசியல் போராட்டங்களில், இச்சக்திகள் தடுப்பின் மறுபுறம் அணிவகுத்து நிற்பர். ஐரோப்பா முழுவதும், அவர்கள் ஏற்கனவே கலகப் பிரிவுப் பொலிஸ் அல்லது ஆயுதப்படைகள் என்று தொழில்துறை நடவடிக்கைகளை நசுக்குபவர்களுக்கு ஆதரவை அல்லது “அடையாளத்தன” எதிர்ப்பை கொடுத்துள்ளன: உதாரணமாக பிரெஞ்சு எண்ணெய்த்துறை வேலைநிறுத்தம், கிரேக்கத்தில் கனரக வாகன சாரதிகள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஸ்பெயினில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் 2010 வேலைநிறுத்தம் மற்றும் சமீபத்தில் ஏதென்ஸ் நிலத்தடி இரயில் தொழிலாளர்களின் இந்த ஆண்டு வேலைநிறுத்தம் ஆகியவற்றில் அவை திரட்டப்பட்டன. மெலோன்ஷோனும் அவருடைய நட்பு அமைப்புக்களும் தங்களுடைய கட்டுப்பாட்டையும் மீறி, அவர்களுடைய வர்க்க நலன்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் கீழிருந்து வெடிக்கும் என்பது குறித்த மரண அச்சத்தில் வாழ்கிறனர். சமீபத்தில் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆதரவு கொடுக்கும் சிக்கனக் கொள்கைகள் குறித்த விவாதங்களில் கூறியதுபோல், “புரிந்துகொள்ளுக்கூடியவர்களுக்கு இடையே [மேர்க்கெலுடன்] மோதல் நடைபெறாது என நான் அஞ்சுகிறேன், ஆனால் அது கீழிருந்து வரமுடியும், அப்பொழுது அனைத்துமே இழக்கப்பட்டுவிடும்.” மெலென்ஷோனுடைய வெற்று, ஜனரஞ்சக அழைப்புக்களான பிரெஞ்சுக் குடியரசின் நிறுவனங்களுக்கு “விளக்குமாறை” எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுகூட இடது முன்னணியில் உள்ள அதன் நண்பர்களுக்கு அதிகமாகிவிட்டது. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் பியர் லோரன் “இது ஒன்றும் பிளவுறவைக்க, எதிர்க்க, மக்களை வெறுக்க வைக்கும் நேரம் அல்ல” என்று கூறுகையில், இடது முன்னணியின் பேச்சாளர் கிறிஸ்டியான் பிக்கே (முன்னாள் NPA) மெலோன்ஷோனை “அரசியல் முன்னோக்கை குழப்பும் அளவிற்குக் கடினமான தொனி வெளிப்பாடுகளை பயன்படுத்துவதற்கு” சினந்தார். பிரெஞ்சுக் குடியரசிற்கு எதிராக “தொனியை கடினமாக்க” பிக்கே விரும்பவில்லை, ஏனெனில் தொழிலாள வர்க்கம் பிரெஞ்சு முதலாளித்துவ அரசை தூக்கியெறிந்தால், அவரும் அவருடைய கட்சியும்கூட அத்துடன் அகற்றப்பட்டுவிடும் என்பதை அவர் நன்கு அறிவார். இதைத்தான் மெலோன்ஷோன் மே 5 எதிர்ப்பில் துல்லியமாகத் தவிர்க்க விரும்புகிறார். ஆயினும்கூட அதுதான் துல்லியமாக வெடித்துள்ள மற்றும் இப்பொழுது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் அரசியல் முக்கியத்துவம் ஆகும். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் —பெருமளவிலான தொழிலாளர்களை அணிதிரட்டுதல் அல்லது ஓரிரு கோரிக்கைகளை பெயரளவு திருப்தியுடன் அடைவது என்பது— முதலாளித்துவத்தின் மரண ஓலத்தை மாற்றப் போவதில்லை. தொழிலாள வர்க்கத்தின் முழுத் தொழில்துறைச் சக்தி அணிதிரட்டப்பட்டு, போலி இடது அமைப்புக்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சி ஒன்று கட்டமைக்கப்பட வேண்டும்; அது தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்திற்கான ஒரு சோசலிசப் போராட்டம் ஒன்றுதான் முன்னோக்கிய பாதையை அளிக்கிறது என்ற கருத்தை முழு நனவுடன் வழங்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பு முறையின் முடிவுக்கு போராடும் தொழிலாளர்கள், புரட்சிகர மார்க்சிச கோட்பாடுகளின் அடிப்படையில் அதாவது ஒரு ட்ரொட்ஸ்கிச அரசியல் கட்சியை கட்டமைக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பிரான்சில் உள்ள இளைஞர்களை உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறும், பிரான்சில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை கட்டமைக்கப் போராடுமாறும் கேட்டுக் கொள்கிறது. |
|
|