World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lanka: Pro-employers union attacked the protest against plantation wage sell-out இலங்கை: பெருந்தோட்ட சம்பள உடன்படிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மீது முதலாளிமார் சார்பு தொழிற்சங்கம் தாக்குதல் நடத்தியது
By S. Jayanth இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் நகரமான கொட்டகலையில், அண்மையில் பல தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அனுப்பிய குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இ.தொ.கா. மற்றும் ஏனைய இரு தொழிற்சங்கங்களும் அண்மையில் கைச்சாத்திட்ட சம்பள உடன்படிக்கைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிசாரின் முழு ஆதரவையும் பெற்றிருந்த இந்த தாக்குதல், அரசாங்கத்தின் ஆதரவுடன் முதலாளிமார்களுடன் இரகசியமாக கைச்சாத்திடப்பட்ட இந்த சம்பள உடன்படிக்கைக்கு விரோதமான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு இ.தொ.கா. சபதம் செய்துள்ளதை காட்டுகிறது. ஏப்பிரல் 4 அன்று, ஆளும் கூட்டணியின் பங்காளிகளான இ.தொ.கா.வும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பீ.) கட்டுப்பாட்டிலான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி, தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளியின் நாள் சம்பளம் வெறும் 70 ரூபாவால் (59 அமெரிக்க சதம்) 450 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆண்டு சம்பள உடன்படிக்கையின் கீழ், வருகை மற்றும் தேயிலை விலையுடன் பிணைக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சேர்த்து, ஒரு தொழிலாளி 620 ரூபாவை நாள் சம்பளமாகப் பெறுவார். இந்த சம்பள வியாபாரத்தை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு (ம.தொ.கூ.), இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களே 16 அமைப்புக்களைச் சேர்த்து இந்த மலையக தொழிற்சங்க கூட்டமைப்பை ஸ்தாபித்துள்ளன. இதில் பிரதானமாக மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மற்றும் நவசமசமாஜக் கட்சியில் இருந்து பிரிந்து அமைக்கப்பட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியும் அடங்கும். ம.ம.மு. மற்றும் NUW பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை ஆதரிக்கின்ற அதே வேளை, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஒரு அரசாங்க அமைச்சராவார். ஜ.தொ.கா. ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணிசேர்ந்துள்ளது. நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுசாரிகளும் இடதுசாரி போர்வையை வழங்குவதற்காக அதில் சேர்ந்துகொண்டனர். இந்த தொழிற்சங்கங்களின் அரசியல் உறவானது, ம.தொ.கூ. அரசாங்கத்துக்கோ எதிர்க் கட்சிக்கோ எதிரானது அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்துக்கே எதிரானது என்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த சம்பள உடன்படிக்கைக்கு எதிராக இலட்சக் கணக்கான சீற்றமடைந்துள்ள தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் ஒன்று வெடிக்கக் கூடும் என்பதையிட்டு பீதியடைந்த ம.தொ.கூ., தொழிலாளர்களின் சுயாதீனமான போராட்டத்தை முன்கூட்டியே தடுப்பதற்காக ஒரு போலி சாகத்தை காட்சிப்படுத்தியதோடு ஏப்பிரல் 21ம் திகதியை ஒரு கறுப்பு நாளாக அர்த்தமின்றி பிரகடனம் செய்தது. கொட்டகலைக்கு வந்த ம.தொ.கூ. தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது இ.தொ.கா. குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு பலரைக் காயப்படுத்திய போது, நூற்றுக்கணக்கான பொலிசார் பார்த்துக் கொண்டிருந்தனர். இ.தொ.கா. தனது ஆதரவாளர்களுக்கு மதுபானங்களை விநியோகித்ததோடு வாகனங்களில் கற்கள் பொல்லுகளையும் கொண்டு வந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் கொட்டகலை நகரைக் கடக்காமல் பொலிசார் தடுத்ததுடன், ம.ம.மு. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஷ்ணன் மற்றும் NUW தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். திகாம்பரமும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் கொட்டகலைக்குள் நுழையாமல் பொலிசார் பத்தனை சந்தியிலேயே தடுத்து நிறுத்தினர். இறுதியாக பத்தனை சந்தியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு பொலிசார் விடுத்த கட்டளையை ம.தொ.கூ. ஏற்றுக்கொண்டது. ம.தொ.கூ. தலைவர்கள் இ.தொ.கா.வை கண்டனம் செய்வதிலியே தமது உரையை மட்டுப்படுத்திக்கொண்டதுடன், சம்பள உடன்படிக்கையை தூக்கிவீசும் திட்டமெதையும் முன்வைக்காமல், கம்பனிகள் அதை அமுல்படுத்த அனுமதித்தனர். ஒரு இ.தொ.கா. செயலாளரான ஜீவானந்தராஜா ஒரு அறிக்கையை விட்டு, தமது ஆதரவாளர்கள் நியாயமான சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்தமைக்காக இ.தொ.கா.வுக்கு நன்று தெரிவித்து மகிழ்ச்சியைக் கொண்டாடவே கொட்டகலையில் கூடினர், என வஞ்சத்தனமாகத் தெரிவித்தார். தாக்குதலை பகிரங்கமாக மூடி மறைத்த அவர், ம.தொ.கூ. தலைவர்கள் இ.தொ.கா. மீது குற்றஞ்சாட்டுவதற்காக தாமே குண்டர்களை ஏற்பாடு செய்து தங்களுக்கே தாக்குதல் நடத்திக்கொண்டதாகத் தெரிவித்தார். அரசாங்கம் மற்றும் கம்பனிகள் மீது தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சி கண்டு வந்த நிலையில், எந்தவொரு தொழிலாள வர்க்க இயக்கத்தையும் தடுக்கும் இலக்குடன் ஜ.தொ.கா. தலைவர் மனோ கணேசன் ம.தொ.கூட்டமைப்பை ஆரம்பித்து வைத்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதே ம.தொ.கூ.வின் குறிக்கோள் என சம்பள உடன்படிக்கைக்கு முன்னதாகவே அது அறிவித்திருந்தது. ஆனால் இ.தொ.கா., JPTUC மற்றும் LJEWU பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, ம.தொ.கூ. மௌனமாக இருந்து, உடன்படிக்கையில் கைசாத்திட அனுமதித்தது. இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் தொழிலாளர்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளன. NUW தலைவர் ஆர். திகாம்பரம், அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜனங்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்காக பொதுத் தேர்தலில் யூ.என்.பீ.யில் போட்டியிட்டு, பின்னர் அரசாங்கத்தின் பக்கம் தாவினார். ம.ம.மு. எப்போதும் இ.தொ.கா.வைப் போல் அரசாங்கத்துடனேயே அணிசேர்ந்து வந்துள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு இடதுசாரி சாயம் பூசுவதற்காக அதில் ஒட்டிக்கொண்டிருப்பவராவார். இந்த சகல தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டே அரசாங்கத்தில் பங்கெடுக்கின்றன. ஆனால், அவர்கள் அமைச்சர் பதவிகளின் சிறப்புரிமைகளை அனுபவித்துவிட்டு, தமது அரசாங்கத்தின் சகல ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் முழுமையாக ஆதரவளித்து வந்துள்ளனர். இந்த அமைப்பு தொழிலாளர்களின் போராட்டங்களை தடுப்பதற்கு முழு முயற்சியும் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு முன்னணியாகும் என்பது தெளிவு. இந்த அவப்பேறு பெற்ற தொழிற்சங்கங்களின் கூட்டணியில் நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் இணைந்திருப்பது இதை மூடி மறைப்பதற்கும் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வராமல் தடுப்பதில் அவர்களின் வகிபாகத்துக்கு ஒத்துழைப்பதற்குமே ஆகும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமானது வாழ்க்கை மற்றும் தொழில் நிலைமைகளை சீரழிக்கும் மற்றும் கல்வி, சுகாதாரம் போன்ற பொதுச் சேவைகளை வெட்டிக் குறைக்கும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, பொலிஸ் அரச வழிமுறைகளை பலப்படுத்தி வருகின்றது. அரசாங்கத்துக்கு எதிரான அநேகமான போராட்டங்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தை அணிதிரட்டுவதன் மூலம் அல்லது அரசாங்க-சார்பு குண்டர்களைக் கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மூலம் மற்றும் சரீரத் தாக்குதல்கள் மூலமே நசுக்கப்பட்டு வந்துள்ளன. அமைச்சரவை அமைச்சர் என்றவகையில், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இதே வழிமுறையை கொட்டகலையிலும் பின்பற்றியுள்ளார். தொண்டமானும் இ.தொ.கா.வும் குண்டர் நடவடிக்கைகளில் பேர் போனவர்கள். ம.தொ.கூ.வில் உள்ள தலைவர்கள் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானவர்களாக பாசாங்கு செய்வது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னர் கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட போதும் அவர்கள் இந்த முறையிலேயே செயற்பட்டுள்ளனர். 2009ம் ஆண்டு 405 ரூபா அடிப்படை சம்பளத்துக்கு ஒப்பந்தம் கைச்சாத்தான போது, இதே தலைவர்கள் நிருபர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டி ஒப்பந்தத்துக்கு எதிராகப் போராடுவதாக சபதம் செய்தனர். ஆனால், அதே மூச்சில் அவர்கள் போராட்டத்தை தீபாவளிப் பண்டிகை முடியும் வரை ஒத்தி வைத்ததோடு, கடைசியில் மௌனமாக இருந்துவிட்டனர். ம.தொ.கூ., சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு தொழிலாளர்களை இரண்டு வருடங்களுக்கு வறிய மட்ட சம்பளத்தில் கட்டிப்போடுவது சம்பந்தமாக இ.தொ.கா.வுடன் முரண்படவில்லை. கொட்டகலை தாக்குதலின் பின்னர் ம.தொ.கூ. நடத்திய நிருபர்கள் மாநாட்டில், ஆர். திகாம்பரம் 450 ரூபா அடிப்படை சம்பளம் 550 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என பிரேரித்ததோடு ஏனைய தொழிற்சங்கங்கள் அமைதியாக இருந்தன. உண்மையில், ம.தொ.கூ. தனது அங்கத்தவர் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதன் ஊடாக, கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் துரோக பாத்திரத்தை ஆற்றுவதற்கு இ.தொ.கா.வுடன் போட்டியிடுகின்றது. பத்தனை சந்தியில் உரையாற்றிய ம.ம.மு. செயலாளர் ஏ. லோரன்ஸ், “ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு மிகக் குறைவான அங்கத்தவர்களே உள்ளனர், ஆனால் ம.தொ.கூ.வில் 60 வீத உறுப்பினர்கள் உள்ளனர். உடன்படிக்கையில் கைச்சாத்திடுபவர்கள் தமது அங்கத்துவ பலத்தை காட்டத் தயாரா?” எனக் கேட்டார். இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக முதலாளிமார்களதும் அரசாங்கத்தினதும் தேவைகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. முதலாளிமார் இப்போது உற்பத்தித் திறனை அதிகரிக்க தயாராகின்றனர். இதை நிறைவேற்றுவதற்கு அரசாங்கமும் முதலாளிமாரும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும் என அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். |
|