World Socialist Web Site www.wsws.org |
A Grand Coalition for austerity in Italy இத்தாலியில் சிக்கன நடவடிக்கைகளுக்கான ஒரு பெரும் கூட்டணிChris Marsden இத்தாலியில் பிரதம மந்திரி என்ரிகோ லெட்டாவின் (Enrico Letta) ஜனநாயகக் கட்சி மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனியின் சுதந்திரத்திற்காக மக்கள் (PdL) கட்சியை மத்தியில் கொண்டுள்ள பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளமை எந்தளவிற்கு உலக நிதியத் தன்னலக்குழு, அரசியல் வாழ்வின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த அரசாங்கத்தை, நடைமுறைக் கட்சிகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் “இடது” மற்றும் “வலது” இவற்றின் கூட்டணி என உத்தியோகபூர்வமாக விவரிப்பது அவ்வார்த்தைகள் அவற்றின் முக்கிய அர்த்தத்தை இழந்துவிட்டன என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. புதிய அரசாங்கம் ஒரு சிக்கன ஆட்சி அரசாங்கம் ஆகும். இது வாக்காளர்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள விருப்பங்களை மீறி பதவியில் இருத்தப்பட்டது, ஒரு பெரும் செல்வக்குவிப்புடைய ஒட்டுண்ணித்தன அடுக்கின் நலன்களுக்காகத்தான் முற்றிலும் செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. இந்த அரசாங்கம் இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் மீது முந்தைய ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் மரியோ மோன்டியின் தொழில்நுட்ப அரசாங்கம், நவம்பர் 2011ல் இருத்தப்பட்டதைப் போல்தான் சுமத்தப்பட்டுள்ளது. அனைத்து இத்தாலியக் கட்சிகளும் இதே சமூக நலன்களுக்கு பணிபுரிய உறுதியாக உள்ளன. இரகசியப் பேச்சுக்கள், இழிந்த தந்திர கையாளல்களின் விளைவு என மக்களுக்குப்பின் நடந்தவற்றால் ஏற்பட்ட இந்த அரசாங்கம் பதவியிலிருத்தப்பட்ட முறை, அனைத்து ஜனநாயக முறைகள் அகற்றப்பட்டதற்கும், இன்னும் தெளிவான முறையில் நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரம் வெளிப்பட்டுள்ளதற்கும் நிரூபணமாக உள்ளது. பாராளுமன்ற நடைமுறை என்ற கந்தலாகிப்போன அலங்காரத்தினால் மறைக்கப்பட்டிருந்த போதிலும்கூட இதுதான் நிலைமையாகும். பெர்லுஸ்கோனியின் தலைமை அரசியல் ஆலோசகரான கியன்னியின் தம்பி மகனான லெட்டா பெர்லுஸ்கோனியின் சட்ட நிபுணர் ஏஞ்சலினோ அல்பானோவை துணைப்பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியாக நியமித்துள்ளார். இது செய்தி ஊடக பேரரசர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்க உத்தரவாதம் அளிக்கும். பொருளாதார அமைச்சரகத்தில் முக்கிய பணி தேர்ந்தெடுக்கப்படாத இத்தாலிய வங்கியின் இயக்குனர், தளபதி ஃபாப்ரிஜியோ சாக்கோமன்னியால் நடத்தப்படும். அவர் பல மில்லியன் மக்களை அழித்த கொள்கைகளில் இருந்து பின்வாங்கல் இராது என்பதை வங்கிகளுக்கும் ஊகவணிகர்களுக்கும் உறுதி செய்யும் உயிருள்ள உறுதிமொழி ஆவார். புதிய வெளியுறவு மந்திரி இத்தாலிய விடுதலை தீவிரவாதிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய ஆணையர் எம்மா போனினோ ஆவார். இவர் “தடையற்ற சந்தை”, அரசாங்க சொத்துக்களை தனியார்மயமாக்குதல் (சுகாதாரப் பாதுகாப்பு உட்பட) மற்றும் செல்வந்தர்களுக்குக் குறைந்த வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு கடுமையாக வாதிடுபவர் ஆவார். மோன்டியின் நண்பர்களும் அதிக அளவில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளனர். மரியோ மௌரோ, மோன்டியின் பொதுமக்கள் விருப்பத்தைச் சேர்ந்தவர், பாதுகாப்பு மந்திரியாகிறார். முன்னாள் பொலிஸ் அதிகாரியும், மோன்டியின் உள்துறை மந்திரியாகச் செயல்பட்ட அன்னா மரிய கான்செல்லியரி, நிதித்துறைப் பொறுப்பை ஏற்கிறார். தொழிலாளர் துறை அமைச்சரகம் புள்ளிவிவர அமைப்பான ISTAT உடைய தலைவரும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத நபருமான என்ரிக்கோ ஜியோவான்னிக்குச் செல்கிறது. செய்தி ஊடகம், லெட்டா இரண்டு மாதங்கள் ஸ்தம்பிதநிலையை முறித்துவிட்டார் என்று கூறுகின்றன. இது பெப்ருவரி 24-25ல் பொதுத் தேர்தலுக்குப் பின் கொள்கையற்ற முறையில் பதவி வேட்டை நடப்பதைக் குறிக்கிறது. அத்தேர்தலில் 55% வாக்காளர்கள் சிக்கனத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குறைகூறிய கட்சிகளுக்குத்தான் வாக்களித்தனர். தேர்தலில் மோன்டி தலைமையிலான பட்டியலுக்கு 10% வாக்குகள்தான் கிடைத்தன. உண்மையில் லெட்டா அடைந்துள்ளது என்னவெனில், இரண்டு ஆண்டுகளாக மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முக்கிய கட்சிகள் ஒன்றாக கொண்டுவரப்பட்டதும், அது தொடர்வதற்கான திட்டமும்தான். சிக்கனக் கொள்கைகளுக்கு ஒரு மாற்றீடு கோரியவர்கள் அனைவரும் இத்தாலிய அரசியல் நடைமுறையில் அத்தகைய மாற்றீடு இல்லை என்பதைத்தான் நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர். ஜனநாயகக் கட்சி என்பது இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிளவுபட்டு வந்த ஒரு கட்சியாகும். ஒருகாலத்தில் அது மேற்கில் மிகப் பெரிய ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தது. ஸ்ராலினிஸ்ட்டுக்களும், முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்களும் இப்பொழுது இத்தாலியின் முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சாக வெளிப்பட்டு, அரசாங்கத்தின் முக்கிய கட்சியாகிவிட்டனர். இவர்கள் வலதுசாரி அமைப்பு எனத் தெளிவாக இருக்கும் அமைப்பிற்குத் தலைமை தாங்குகின்றனர். இதற்கு லெட்டா போன்ற கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் ஆதிக்கம் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் ரிபௌண்டேஷனுடைய -Communist Refoundation- ஸ்ராலினிசப் பிரிவு அதன் இழிந்த தந்திர உத்திகளால் கிட்டத்தட்ட சரிந்துவிட்டது. இது பெப்ருவரித் தேர்தலில் 25% வாக்குகளைப் பெற்ற பெப்பே கிரில்லோவின் ஐந்து நட்சத்திர இயக்கத்தை புதிய அரசாங்கத்திற்கான எதிர்ப்பை ஆதிக்கம் செலுத்த விட்டுள்ளது. ஆனால் கிரில்லோவின் அரசியல் பொருளாதார செயற்பட்டியலின் பிற்போக்குத்தனம் அவருடைய வார்த்தைஜால வெடிப்பினால் அதிகம் மறைக்கப்படுவதில்லை சமீபத்திய அரசாங்கத்திற்கு வழிவகுப்பது குறித்து அவர் பேசுகிறார். இதில் 87 வயதான ஸ்ரானிலிச ஜார்ஜியோ நாபோலிடானோ இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஒரு ஜனாதிபதியாக மீண்டும் நியமனத்தை அசாதாரணமாக பெற்றுள்ளதும் அடங்கும். இது கிட்டத்தட்ட “அரசியல் சதிக்கு” சமம் ஆகும். இவர் தன்னுடைய இயக்கத்தை, ஆட்களைக் கொல்லும் இயந்திரமான guillotine இல்லாத ஒரு பிரெஞ்சுப் புரட்சி என்று விவரிக்கிறார். ஆனால் ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு உதவும் முறையை அவர் கண்டித்தல் முற்றிலும் இத்தாலிய, உலக நிதியப் பிரபுத்துவத்தின் பிரிவுகளுடைய கோரிக்கைகளுடன் இயைந்துள்ளது. ஜேர்மனியில் Bild பத்திரிகைக்கு நகைச்சுவையாக கூற விரும்பியதைவிட அதிகமானதை கூறிவிட்டார்: “நான் நேர்மையான, திறமையான, தொழில்நேர்த்திடையவர்களை சரியான பதவிகளில் விரும்புகிறேன். இவ்வகையில் ஜேர்மனி, இத்தாலி மீது படையெடுப்பதை நான் பாராட்டுவேன்.” ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள மிருகத்தன வெட்டுக்கள் கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தைப் போலவே இத்தாலிக்கும் பேரழிவு என நிரூபிக்கப்பட்டுள்ளது. Confindustria என்னும் வணிகச் செல்வாக்கு குழு, சிக்கனம் என்பது “பேரழிவுச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது, போர் விளைவித்துள்ளதுபோல்” என்று விவரித்துள்ளது. இது இத்தாலியை “ஒரு முழுக்கடன் நெருக்கடிகாலத்தை” எதிர்கொள்ள வைத்து விட்டது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 31,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இத்தாலியின் பொருளாதாரம் 2007ல் இருந்து 6.9% சுருங்கிவிட்டது. கடந்த ஆண்டு முற்றிலும் 2.4% சுருங்கியது. பொதுக் கடன் உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 121% என்பதில் இருந்து 127% என ஆயிற்று. இது இரண்டாம் இத்தாலிய மற்றும் ஐரோப்பிய மந்தநிலை தொடுவானத்தில் இருக்கையில் இன்னும் அதிகரிக்கும். சமூகப் பாதிப்பு மிருகத்தனமாக உள்ளது. வேலையின்மை 11.6% என்று உள்ளது. இளைஞர்களிடையே அது 37.8% என்று உள்ளது. நேபிள்ஸிலும் இன்னும் பிற இழக்கப்பட்ட தெற்குப் பகுதிகளில் 50%க்கும் அதிகம் என்று உயர்ந்துவிட்டது. ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தங்கள் சகோதர, சகோதரிகளுடைய பொது நிலை போல்தான் இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் அனுபவமும் உள்ளது. தொழிலாளர்கள் குழப்பத்திற்கிடமின்றி, மில்லியன் கணக்கானவர்களை ஆழ்ந்த வறிய நிலை, வேலையின்மையில் தள்ளியிருக்கும் கொள்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஆனால் மீண்டும் அவர்கள் மீது, தொழில்நுட்பவாதிகள் அல்லது வலதுசாரிகளின் அரசாங்கங்கள்தான் சுமத்தப்படுகின்றன. இதையொட்டி அவர்களின் வாழ்க்கைத்தரங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வது உறுதிப்படுத்தப்படுகிறது. மோசமாகிவரும் நெருக்கடியை மாற்றுதற்குத் தேவையான பெரும் பொருளாதார, சமூக நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, முற்போக்கான சமூகச் சீர்திருத்தச் சட்டத்தைக் கூட எவரும் முன்வைக்கவில்லை. ஆளும் வர்க்கம், அதன் செயற்பட்டியல் முற்றிலும் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, பொலிஸ் அதிகாரத்தை கொண்ட கணக்கிலா அரசாங்கங்கள் என அனைத்துவகை அமைப்புக்களையும் கொண்டுள்ளது. அவற்றின் பெயரளவிலான நிறம் எப்படி இருந்தாலும்கூட, அவை அனைத்தும் பெரும் செல்வக் கொழிப்புடையோர் உத்தரவிடவதையே செயற்படுத்துகின்றன. தொழிலாளர்களிடம் என்ன உள்ளது? எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் சேதப்படுத்தும் தொழிற்சங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் நடைமுறைக் கருவிகள் போல் செயல்படுகின்றன. பழைய, இழிந்த “தொழிலாளர்”, “சமூக ஜனநாயகக் கட்சிகள்” பழைமைவாத வலதில் இருந்து பிரிக்க முடியாத தன்மையைக் கொண்டவைதான் உள்ளன. தங்கள் பங்கிற்கு போலி இடது அமைப்புக்களான இத்தாலியில் சினிஸ்ட்ரா கிரிடிக்கா, கிரேக்கத்தில் சிரிசா, போர்த்துக்கல்லில் இடது முகாம் போன்றவை தங்கள் பெயரளவு எதிர்ப்புக்களை சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகக் காட்டுகின்றன. அதே நேரத்தில் தங்கள் ஆதரவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்து, தொழிற்சங்கங்களுக்குப் பின் அதிருப்தியைத் திசை திருப்புகின்றன. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது மீண்டும் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் தொழிலாளர் அரசாங்கங்களையும் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவுவதன் மூலமே முடியும். முக்கிய பெருநிறுவனங்களும் வங்கிகளும் கைப்பற்றப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் இருத்தப்பட வேண்டும். உற்பத்தி ஒரு சிலரின் இழிந்த செல்வ, இலாபக் குவிப்பிற்காக அல்லாது சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட வேண்டும்;. இப்பொழுது நம் முன் உள்ள பணி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஒரு புதிய புரட்சிகரத் தலைமையாக கட்டிமைத்தல் என்பதாகும். அதுதான் தொழிலாள வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலுக்கு அரசியல் தயாரிப்புக்களை மேற்கோண்டு, இழிந்த, அழுகிய அரசியல் நடைமுறை மற்றும் அது பாதுகாக்கும் தோற்றுவிட்ட சமூக ஒழுங்கிற்கு எதிராக எழுச்சி பெற்றுள்ள மக்களுடைய அதிருப்திக்கு குரலெழுப்பும். |
|