World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

A political answer to youth unemployment in Europe

ஐரோப்பாவில் இளைஞர்களின் வேலையின்மைக்கான ஒரு அரசியல் பதில்

By Christoph Vandreier 2013 ஜூன் 21 அன்று, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG) பாராளுமன்ற வேட்பாளரான கிறிஸ்டோப் வாண்ட்ரயரால் எழுதப்பட்டது.

Back to screen version

எந்த ஒரு சமுதாயத்தின் உண்மையான நிலையினையும் அது இளைஞர்களுக்கு வளங்கும் முன்னோக்கில் தெளிவான முறையில் வெளிப்படுவதில் இருந்து கண்டுகொள்ளலாம். மேலும், ஐரோப்பாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மையின் தீவிர அதிகரிப்பு முதலாளித்துவ அமைப்பின் திவால் நிலையை விளக்குகிறது.

ஐரோப்பிய யூனியன் இளைஞர்களில் நான்கில் ஒருவர் வேலையில்லாதுள்ளனர். கிரீஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற குறிப்பிட்ட நாடுகளில், இந்த எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கிறது. சமுதாயத்தின் மேல் மட்டத்தில் ஒரு குறுகிய அடுக்கின் அபரிதமான வசதிபடைத்த வளர்ச்சியுடன் இந்த எண்ணிக்கை முரண்படுகிறது. தற்போது ஜேர்மன் மக்கள் தொகையில் 90 சதவீத ஏழை மக்களைவிட, 1 சதவீத பணக்காரர்கள் ஒட்டுமொத்த நிகர நிதிச் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை கொண்டிருக்கின்றனர்.

மாபெரும் தொழில்நுட்ப மேம்பாடுகள் இருந்தபோதிலும், வேலையின்மை, வறுமை மற்றும் போரைத் தவிர இளைஞர்களுக்கு வழங்குவதற்கு இந்த இலாப நோக்கு அமைப்புக்களிடம் எதுவுமில்லை. தற்போதும் வேலையில் இருக்கும் இளைஞர்களுக்கு பெரும்பாலும் மிகக் குறைந்த வருவாயே கிடைக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள்  பயிற்சி மற்றும் தற்காலிக ஒப்பந்தங்கள், ஏழ்மையான கூலிக்காக பணியாற்றுவதை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சிக்கன நடவடிக்கைகள் மூலம் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவை தனியார் மயமாக்கப்பட, மூடப்பட அல்லது அழிக்கப்பட உள்ளன. கிரீஸில் குழந்தை தொழிலாளர்கள் மறுபடியும் ஒரு பரவலான பிரச்சனையாகிருப்பதாக  சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

சமூக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற செல்வந்தர்களின் இலாப நோக்கத்துடன் மக்களின் அடிப்படைத் தேவைகளின் பொருத்தமற்ற தன்மையை இந்த மனிதநேயமற்ற நிலைமைகள் வெளிப்படுத்துகின்றன. நிதி நெருக்கடிகளின் எழுச்சியில்-வங்கிகள் மற்றும் பெரும் நிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாப்பதற்காக  உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து வெற்றிகளும் -சம்பளங்கள், உடல்நலம் மற்றும் கல்வி வசதிகள் போன்றவை- தியாகம் செய்யப்படுகின்றன

இளைஞர்களின் வேலையின்மைக்கு ஒரு சிரத்தையான முடிவெடுக்கும் ஒருவரும்  இன்று அரசியலில் இல்லை. மாறாக, ஜேர்மனியின் நிதியமைச்சர் வொல்ஃப்காங் வொல்ப்காங் ஷொய்பிளவும் (கிறிஸ்துவ ஜனநாயகக் யூனியன் (CDU)), இத்தாலியின் பிரதம அமைச்சரான என்ரிகோ லெட்டாவும் (ஜனநாயகக் கட்சி) மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் (சோசலிஸ்ட் கட்சி) ஆகியோர்  தேசியப் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக மேலும் இளைஞர்களுக்கான கூலிகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், அவர்கள் தங்களைத் தாங்களே கூடுதல் சிக்கன நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இந்த பின்புலத்திற்கெதிராக, அதே அரசியல்வாதிகள் வரும் ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு உதவுவதற்காக 6 பில்லியன் யூரோக்கள் அறிவித்தது சுத்த கபடநாடகமாகும்.

இளைஞர்கள் மீதான கொடுமை மற்றும் அக்கறையின்மை சமரசம் செய்ய முடியாத இரு சமுதாய நலன்களின் விளைவே. தற்கால சமுக பிளவினை கணக்கில் கொண்டால், எந்த வர்க்கம், எந்த கொள்கையின்படி சமுதாயத்தை ஆள வேண்டும்? என்ற கேள்வி நேரடியாக எழுப்பப்படுகிறது

பல்வேறு அரசாங்கம் அல்லது கூடுதலான பாராளுமன்ற பங்குபெறல்களுக்கான கோரிக்கைகள் ஆகியவற்றுக்கான முறையீடுகளால் பெரும்பான்மை இளைஞர்களின் நலன்களை அடைய முடியாது. மக்களின் தேவைக்கு ஏற்ப, சோசலிச மாற்றத்திற்கான அனைத்து தொழிலாளர்களின் பொதுவான போராட்டம் அவர்களுக்கு அவசிமாகிறது. நிதி உயரடுக்கிடமிருந்து அதிகாரத்தை பறித்து, வங்கிகள் மற்றும் பெரும் ஸ்தாபனங்களின் உடமைகளைப் கைப்பற்றி, அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கின்ற ஒரு தொழிலாளர் அரசாங்கத்தின் ஸ்தாபிதமே இன்று அவசரத்வேதவையாக இருக்கிறது.

அறிவுக்கேற்புடைய மற்றும் ஜனநாயகரீதியாக திட்டமிட்ட பொருளாதார நிலைமைகளின் கீழ் மட்டுமே, நீண்ட கால அடிப்படையில் இளைஞர்களின் நிலைமைகள் முன்னேற்றப்பட முடியும். இந்த முடிவுக்கு, பொதுநலன் சார்ந்த முதலீட்டுக்கான ஒரு மகத்தான திட்டம் தேவைப்படுகிறது. சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் போன்ற முக்கிய துறைகளில் 6 மில்லியன் நல்ல-ஊதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பணி செய்யும் வாரத்தின் நேரம், முழு சம்பளத்துடன் 30 மணி நேரமாக குறைக்கப்பட வேண்டும். கூடுதலாக, எல்லா வயது மக்களுக்கும் பல்கலைக் கழக மட்டம் வரை, இலவச கல்வியளிக்கும் அளவுக்கு கல்வித்துறையில் தீவிரம் தேவைப்படுகிறது

இதுபோன்ற ஒரு சோசலிச கொள்கை சந்தை ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க கூடாது, மாறாக மொத்த சமுதாயத்தின் தேவைகள் மற்றும் ஒவ்வொரு மனிதனின் மறுக்க முடியாத சமுதாய உரிமைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது விசாலமான கல்வி உரிமை, சிறந்த மற்றும் நல்ல-ஊதிய வேலைக்கான உரிமை மற்றும் சமூக வாழ்க்கையில் முழுவதுமாக பங்குபெறும் உரிமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்த கொள்கைகள், தங்களின் சலுகைகளை தக்கவைத்துக் கொள்வதற்காக எந்த எல்லை வரையிலும் போகக்கூடிய அல்லது இழிவான எதையும் செய்யக்கூடிய நிதி உயரடுக்கின் இலாப நோக்கங்களுக்கு நிச்சயம் எதிரானவை. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சமூக அமைதியின்மையை எச்சரிக்கும்போது, அல்லது ஷொய்பிள புரட்சி பற்றி எச்சரிக்கும்போது, அவர்கள் இந்த நலன்களின் மோதலை மட்டுமே மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள். காவல்துறை மற்றும் இராணுவ வன்முறையுடன் தங்களது சமூக-விரோத கொள்கைகளுக்கான எந்த ஒரு எதிர்ப்பினையும் ஒடுக்க அவர்கள் தயாராகி வருகின்றனர். இராணுவச் சட்டங்களை வேண்டிக் கொள்வதன் மூலம் காவல்துறையைப் பயன்படுத்தி இவ்வருடம் கிரீஸில் மூன்று வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வலது-சாரி தீவிரவாதிகளுடன் ஜேர்மனிய இரகசிய சேவைகளின் நெருங்கிய கூட்டுறவு -National Socialist Underground (NSU) எனப்படும் இயக்க செயல் போன்றே இந்த திசையை குறித்துக் காட்டுகிறது.

இந்த வரலாற்று சமூக மோதலுக்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கருணைக்காக கெஞ்சாத, அதே நேரம் நிதிய உயரடுக்கை பயமின்றி எதிர்க்கும் ஒரு புரட்சிகர கட்சி அவர்களுக்கு தேவை. அந்த கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதன் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (Partei für Soziale Gleichheit, PSG) ஆகும்.

தேசிய, இன, மத அல்லது பாலின வேறுபாடின்றி உலக அளவில் உழைக்கும் மக்களை அனைத்துலகக் குழு ICFI ஒன்றிணைக்கிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை வெளிப்படுத்துவதுடன் சமுக ஜனநாயக கட்சிகள் மற்றும் ஸ்ராலினிசத்திற்கெதிராக சோசலிசத்தின் கொள்கைகளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறது.

இந்த முன்னோக்கின் அடித்தளத்திலும், மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் பரவலான அணிதிரட்டலின் ஒரு பகுதியாகவும் மட்டுமே பெரும்பான்மையான பரந்த இளைஞர்கள் தங்களது சொந்த சமுக நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, இன்று வேலையின்மை,வறுமை, பாதுகாப்பு மற்றும் உறுதியற்ற நிலைமையை எதிர்கொள்கின்ற அனைத்து இளைஞர்களிடமும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்: சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்தில் இணைந்து, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டி எழுப்ப உதவுங்கள்.