World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

This week in history: June 17-23

வரலாற்றில் இந்த வாரம்: ஜூன் 17-23

17 June 2013

Back to screen version

வரலாற்றில் இந்த வாரம், இந்த வாரத்தில் ஆண்டு நிறைவை அடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது

25 ஆண்டுகளுக்கு முன்னர்: ஹைட்டிய ஜனாதிபதி மனிகட் இராணுவ சதிப்புரட்சியில் தூக்கி வீசப்பட்டார்

ஹைட்டியன் ஜனாதிபதி லெஸ்லி மனிகட்டின் குறுகிய கால ஆட்சி 1988 ஜூன் 20 அன்று முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், இராணுவ பலசாலி ஜெனரல் ஹென்றி நம்பி வீட்டுக் காவலில் இருந்து தப்பி, ஒரு இராணுவச் சதியில் ஜனாதிபதியின் இடத்தை மீண்டும் கைப்பற்றிக்கொண்டார். சில நாட்களுக்கு முன்னரே, நம்பியை இராணுவத்தில் அவரது பதவியில் இருந்து மனிகட் அகற்றி, கீழ்படியாமைக்கு குற்றம் சாட்டி, அவரை வீட்டுக் காவலில் வைத்தார். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தனக்கு விசுவாசமான அலுவலர்களின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றிய நம்பி, மனிகட்டை வெளியேற்றினார்.

ஹைட்டியன் தொலைக் காட்சியில் தோன்றிய நம்பி, கையில் ஒரு இயந்திரத் துப்பாக்கியை தூக்கிக் காட்டி, இராணுவம் இந்த வழியில் நாட்டை வழி நடத்தும் என பிரகடனம் செய்தார். அவர் ஜனாதிபதி மாளிகையில் மோதல்கள் பற்றி கலந்துரையாடவில்லை, மாறாக அருகில் டெஸ்ஸலைன்ஸ் தங்குமிடத்தில் இருந்த மனிகட்டுக்கு விசுவாசமான துருப்புக்கள் நம்பியின் படைகளை எதிர்த்ததோடு மூன்று மணித்தியாலங்கள் கடுமையான துப்பாக்கிச் சமர் நடந்தது.

வாழ்நாள் ஜனாதிபதி ஜோன் குளோட் (பேபி டொக்) டுவலியேரின் வெறுப்புக்குரிய ஆட்சி 1986 பெப்பிரவரியில் வீழ்ச்சி கண்ட பின்னர், நம்பி இரண்டு ஆண்டுகள் ஹைட்டியை ஆண்டார். அமெரிக்காவின் ஆதரவுடன், நம்பியின் அரசாங்க தேசிய பேரவை தேர்தலை முதலில் 1987 நவம்பரில் நடத்தத் தீர்மானித்தது. ஆயினும் தேர்தல் வன்முறையில் இரு நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட பின்னர், அதை ஜனவரியில் நடத்த தீர்மானித்தது. நம்பி அப்போது மனிகட்டை ஆதரித்த போதிலும், தேர்தலின் துப்பாக்கி முனை பண்பின் காரணமாக, வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 10 வீதத்துக்கும் குறைவாகவே இருந்தது.

வெளிநாட்டு அமைச்சர் ஜெராட் லா டோசர் கூறியதன் படி, டோசரையும், மேஜனர். ஜெனரல் வில்லியம்ஸ் ரெகாலா மற்றும் கேர்னல். புரொஸ்பெர் அவ்ரில்லையும் சேர்த்து மூன்று பேர் அடங்கிய இராணுவ ஜுன்டாவை அமைக்க நம்பி திட்டமிட்டிருந்தார். செப்டெம்பரில் அவ்ரில் தலைமையில் நம்பியை தூக்கி வீச இன்னொரு இராணு சதி திட்டமிடப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: பாடசாலையில் பைபிள் வாசிக்கும் கட்டளைக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

1963 ஜூன் 17 அன்று, பொது பாடசாலைகளில் அரச-கட்டளையின்படி பைபிள் வாசிப்பது அரசியலமைப்புக்கு முரணானது என அமெரிக்க உயர் நீதிமன்றம் 8-1 தீர்மானத்தை முன்வைத்தது. உயர் நீதிமன்றம், பொது பாடசாலைகளில் உத்தியோகபூர்வமான பிரார்த்தனை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்மானித்த, 1962 ஜூன் 25 வழங்கப்பட்ட எங்கல் வி. விடேல் (Engel v. Vitale) தீர்ப்பை அடுத்தே, அபிங்டன் பாடசாலை மாவட்டம் வி.ஸ்கெம்ப் (Abington School District v. Schempp) வழக்கில் இந்த தீர்ப்பு வழக்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் பாடசாலை தொடங்கும்போது குறைந்தபட்சம் பைபிளில் இருந்து பத்து வசனங்களை சத்தமாக வாசிக்கக் கோரும், 1928 பென்சில்வேனிய சட்டத்துக்கு எதிராக, நடுநிலையான யுனிடேரியன் யுனிவர்சலிஸ்ட் (Unitarian Universalist) தேவாலயத்தின் ஒரு உறுப்பினரான எட்வர்ட் ஸ்கெம்ப், தனது மகள் எலோரியின் சார்பில் இந்த வழக்கை தாக்கல் செய்தார். எபிங்டன் நகர பாடசாலை மாவட்டம் இந்த வாசிப்பை கடவுள் பிரார்த்தனையுடன் சேர்த்து அமுல்படுத்தியிருந்தது. ஏனைய நான்கு மாநிலங்களிலும் இத்தகைய சட்டங்கள் இருந்ததோடு 25 மாநிலங்களில் பைபிளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட பகுதிகளை மனனம் செய்து ஒப்புவிக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற முறைப்படி வழக்கு தொடர்ந்து நடந்த அதேவேளை, பென்ஸில்வேனிய சட்ட மன்றமானது அதன் சட்டத்தை உருமாற்றி பைபிள் வாசிப்பில் இருந்து தங்களை விலக்கிக்கொள்ள மாணவர்களை அனுமதித்தது. ஆயினும் ஸ்கெம்ப் தனது வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தால் இதே போன்று மேரிலேன்டில் நடந்த மியூரே வி. கியூர்லெட் (Murray v. Curlett) வழக்குடன் ஒன்றிணைக்கப்பட்டது.

நீதிமன்றம், அதனது தீர்ப்புக்கு, ஒரு மத ஸ்தாபனத்தை மதிப்பதற்காக காங்கிரஸ் சட்டம் இயற்றாது என்ற முதலாவது திருத்தத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பிரிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த எபிங்டன் வழக்கு, அரசுக்கு எதிரான தனிநபர்கள் சார்பிலான உரிமைச் சட்டத்தின் அரசியலமைப்பு அங்கீகாரங்களை பலப்படுத்துவதற்கு, பதினான்காம் திருத்தத்தின் சட்டச் செயல்முறை பிரிவுகளை நீதிமன்றம் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய ஒரு போக்கை தொடர்ந்தது. பெரும்பான்மையானவர்களுக்காக, நீதிபதி தோமஸ் கிளார்க் எழுதியதாவது, முதலாவது திருத்தத்தின் கட்டளைகள், பதினான்காவது திருத்தத்தின் மூலம் சகல மாநிலங்களுக்கும் முழுமையாக பயன்படத் தக்கதாக ஆக்கப்பட்டுள்ளது என இந்த நீதிமன்றம் தீர்க்கமாக முடிவு செய்கின்றது. 

75 ஆண்டுகளுக்கு முன்னர்: வன்கூவரின் இரத்த ஞாயிறு அன்று வேலையற்றவர்களின் உள்ளமர்வை பொலிஸ் தகர்த்தது

1938 ஜூன் 19, இரத்த ஞாயிறு அன்று, வன்கூவரின் பிரதான தபால் அலுவலகத்திலும் வன்கூவர் சித்திரக் காட்சியகத்திலும் இருந்த நூற்றுக்கணக்கான வேலையற்றவர்களை உள்ளூர் பொலிசும் கனேடிய குதிரைப் படையும் வன்முறையில் வெளியேற்றின. தொழில் பற்றாக்குறை, கனேடிய அரசின் நலன்புரி உணவு விநியோகத்தின் பற்றாக்குறை, மற்றும் கனடாவின் வேலையற்றவர்கள் சிலருக்கு அரச-அனுசரணையில் தொழில் வழங்கும் நிவாரண திட்டங்களை முற்றிலும் அழித்துவிடும் பிரிட்டிஷ் கொலம்பிய பிரதமர் தோமஸ் பட்டுள்ளோவின் முடிவையும் எதிர்த்து ஒரு மாதம் முன்னதாகவே இந்த உள்ளமர்வு தொடங்கியது.

அரச கனேடிய குதிரைப் பொலிஸ் படையின் உதவியுடன் உள்ளூர் படைகள் அரை மணித்தியாலத்துக்குள் தபால் அலுவலகத்தையும் சித்திரக் காட்சியகத்தையும் அரை மணித்தியாலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என, விடியற் காலை 5 மணிக்கு ஒட்டாவாவில் இருந்து வன்கூவருக்கு கட்டளை வந்தது. உள்ளமர்ந்துள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கவும் வன்முறைத் தாக்குதலை ஆயிரக்கணக்கான தொழிலாள ஆதரவாளர்கள் காண்பதை தடுப்பதற்கும் இந்த விடயற் காலை நேரம் தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தது. சித்திரக் காட்சியகத்தை ஆக்கிரமித்திருந்த தொழிலாளர்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்த கலை வேலைகள் கவனமாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதில் அக்கறை காட்டியதுடன், அதே காரணத்துக்காக, பொலிசின் தடியடிப் பிரயோகத்தையும் சிறிது எதிர்த்து நின்றனர்.

கனேடிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அரசியல் செயற்பாட்டாளர் ஸ்டீவ் புரோடியின் தலைமையில் தபால் அலுவலகத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள், கட்டிடத்தை விட்டு வெளியேற மறுத்தபோது, பொலிசார் ஒரேயடியாக கண்ணீர் புகையையும் பொல்லுகளையும் பயன்படுத்தினர். புரோடி உட்பட சில ஆர்ப்பாட்டக்காரர்கள், உயிர் போகுமளவுக்கு தாக்கப்பட்டனர். அதன் பின்னர், அலுவலகத்தைச் சூழ அலங்கரிக்கப் பயன்படுத்தியிருந்த உலோகப் பொருட்களால் ஆயுதபாணியாகி இருந்த தொழிலாளர்களுடன் வெளியில் ஒரு மோதல் வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து, ஹஸ்டிங்ஸ் ஸ்றீட், மற்றும் சூழ இருந்த கடைகள் மற்றும் வளாகங்கள் கூச்சல்களுக்கு மத்தியில் சேதமாக்கப்பட்டன. 37 ஆக்கிரமிப்பாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சமூகமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் என்ற சுலோகத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த பட்டுலோ, மறுநாள் விக்டோரியாவில் இருந்து வன்கூவருக்கு பரந்து, உள்ளூர் பிரதிநிதிகளை சந்தித்தார். அவர்கள் வேலையற்றவர்களுக்கு உதவி வழங்குமாறு அவரிடம் கெஞ்சியதோடு கனடாவின் குளிச்சியான பகுதியில் இருந்து வன்கூவரில் இடருக்குட்பட்டுள்ள மனிதர்களுக்கும் நிவாரண நடவடிக்கைகளை நிறைவேற்றுமாறும் கெஞ்சினர்.

விசேட கூட்டம் பற்றி தான் கவலைப்படப் போவதில்லை அல்லது அவசர நிவாரண திட்டங்களைப் பொறுப்பெடுக்கப் போவதும் இல்லை, என்று சட்ட மன்றத்தின் கூட்டுத்தாபன பொதுநலவாய சமாசத்தின் உறுப்பினர்களிடம் பட்டுலோ தெரிவித்தார். மத்திய தபால் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வேலையற்றவர்களுக்கு அவசர உணவு நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும் என உள்ளூர் புரட்டஸ்தாந்து மத குரு குழுவினர் வேண்டுகோள் விடுத்தபோது, மனிதர்களுக்கு அதிகம் அனுதாபம் காட்டக் கூடிய நேரம் வருவதுண்டு, அந்த நேரம் இப்போது வன்கூவரில் வந்துள்ளது, என அவர் பதிலளித்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: தென்னாபிரிக்காவில் இனவாத சுதேச நிலைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது

19 ஜூன் 1913 அன்று, கறுப்பு காணிச் சட்டம் என்றழைக்கப்பட்ட சுதேச காணிச் சட்டம் தென் ஆபிரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. லூயிஸ் பொத்தாவின் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், 1910ல் தென்னாபிரிக்க யூனியன் வந்ததின் பின்னர் கொண்டுவரப்பட்ட இனவாத சட்டத்தின் முதல் பகுதியாகும். அது 1948ல் ஆரம்பித்த இனவாத அரசாங்கத்துக்கு சட்ட அமைப்பை வழங்கியது.

தேசிய சட்டத்தினால் ஆபிரிக்க சொத்தாக வரையறுக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு வெளியில், இன்னொரு ஆபிரிக்கரை தவிர்ந்த கறுப்பு ஆபிரிக்கர்களால் காணிகளை குத்தகைக்கு எடுப்பது, கொள்வனவு செய்வது அல்லது வேறு ஏதாவது வழியில் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது, என இந்தச் சட்டம் தெரிவிக்கின்றது. ஆபிரிக்கர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் காணிகளை குத்தகைக்கு எடுப்பது அல்லது கொள்வனவு செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தது. மொத்தத்தில், தென்னாபிரிக்காவின் காணிப் பிரதேசத்தில் சுமார் பதின்மூன்று வீதம் மட்டுமே, கறுப்பு ஆபிரிக்கர்களின் உரிமைக்கு அனுமதிக்கப்பட்டது.

ஜனத்தொகையில் வெறும் 20 சதவீதத்தினராக மட்டுமே இருந்தாலும், காணிகளில் 80 வீதத்தை வெள்ளையர்களே கட்டுப்படுத்தினர். கறுப்பர்கள் தாம் வெள்ளையர்களின் கீழ் வேலை செய்வதாக உறுதிப்படுத்த முடிந்தால் மட்டுமே எல்லைப் பகுதியில் வாழ அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளையர்களுக்கு, குறிப்பாக மேலும் விவசாய நிலங்களை கோரிய மற்றும் கறுப்பு ஆபிரிக்கர்களை கூலிகளாக வேலை செய்ய நெருக்கிய விவசாய பண்ணை உரிமையாளர்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் இந்த சட்டத்தை கறுப்பு ஆபிரிக்கர்கள் எதிர்த்தனர்.

இந்தச் சட்டத்தை ஆதரிப்பதில் டச்சு சீர்திருத்த தேவாலயம் முன்னணியில் இருந்தது. கறுப்பு ஆபிரிக்கர்களுக்கு காணிகளை விற்பதை கடுமையாக எதிர்க்கும் ஒரு தீர்மானத்தை அது 4 மார்ச் 1913 அன்று நிறைவேற்றியதோடு, இந்த தீங்கை எதிர்த்துப் போராடுமாறு தென்னாபிரிக்க கட்சிக்கு அழைப்பு விடுத்தது. இந்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு, ஆரஞ்சு சுதந்திர அரசிடம் (Orange Free State) இருந்து அதிக அழுத்தம் வந்தது. இந்த அரசின் கீழ் விவசாயப் பன்னைகளில் 97 சதவீதம் வெள்ளையர்களுக்கு சொந்தமானதாகவும், 1.5 சதவீத காணிகளை மட்டுமே கருப்பு அமெரிக்கர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தனர். நத்தாலில் 30.4 சதவீத காணிகளுக்கும், கேப்பில் 9.3 வீதத்துக்கும் மற்றும் ரான்ஸ்வாலில் 4.4 சதவீத காணிகளுக்கும் கருப்பு ஆபிரிக்கர்கள் உரிமையாளர்களாக இருந்தனர்.

1912ல் தென்னாபிரிக்க சுதேசிய தேசிய காங்கிரஸ் (SANNC) ஸ்தாபிக்கப்பட்டதோடு, அது பின்னர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆனது. அது 1914ல் இந்த சட்டத்தை நிறுத்துமாறு தென்னாபிரிக்க பாராளுமன்றத்துக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மனு ஒன்றை கொடுத்தபோதிலும், அது தோல்வி கண்டது. பழங்குடி தலைவர்கள், கறுப்பு தேவாலய அலுவலர்கள், மற்றும் கறுப்பு மத்தியதர வர்க்க்கத் தட்டின் பிரநிதிகளை உள்ளடக்கியிருந்த எஸ்..என்.என்.சீ., போத்தா சட்டத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களை அணிதிரட்டுவதற்கான எந்தவொரு புரட்சிகரப் போராட்டத்தையும் எதிர்த்தது. 1991 வரை இந்த சுதேச காணிச் சட்டம் அகற்றப்படவே இல்லை.