World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The mass protests in Brazil and the crisis of revolutionary leadership

பிரேசிலில் வெகுஜன எதிர்ப்புக்களும் புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியும்

Bill Van Auken
22 June 2013

Back to screen version

1985 ஆண்டு இராணுவ சர்வாதிகாரத்தின் முடிவிற்கு பின்னர், கடந்த வாரம், பிரேசில் மிகப் பெரிய எதிர்ப்புக்களை கண்ணுற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வெகுஜனப் போராட்டங்களின் வெடிப்பு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமைக்கான நெருக்கடியைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.

எதிர்ப்புக்களை விரிவாக்கிய ஆரம்பகட்ட தூண்டுதலானது பஸ் கட்டணங்களுக்கான அதிகரிப்பாகும்; பின்னர் சமூக அமைதியின்மையை சிதறடிக்கும் முயற்சியினால் இவை திரும்பப் பெறப்பட்டன. ஆயினும்கூட, வியாழனன்று கிட்டத்தட்ட ஒன்று முதல் இரண்டு மில்லியன் மக்கள் ரியோ டி ஜனீரோ, சாவோ பாலோ மற்றும் நாடெங்கிலும் பல நகரங்களில் தெருக்களுக்கு வந்து, இன்னும் கூடுதலான முதலீடுகளானது கல்வி, சுகாதாரப் பாதுகாப்பிற்கு தேவை என்று கோரியதுடன், மக்களுடைய இழப்பில் உலக கோப்பைக்காக விளையாட்டு அரங்குகள் அமைப்பதற்கு ஏராளமான பில்லியன்கள் செலவழிப்பது குறித்தும் மக்களுடைய கோபம் வெளிப்பட்டது.

பல நிகழ்வுகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மிருகத்தன அடக்குமுறையை எதிர்கொண்டனர்; அவற்றுள் கண்ணீர்ப்புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள், மற்றும் குதிரைப் படையினர் தாக்குதலும் அடங்கியிருந்தன.

இந்த அளவு பரிமாணங்களில் வெகுஜன அணிதிரள்வுகள் ஏற்பட்டுள்ளமையானது அவற்றைத் தூண்டிய உடனடி நிகழ்வுகளால்தான் என்று விளக்கப்பட முடியாது—அதாவது இதைப்பொறுத்த வரை 20 சதவிகித பஸ் கட்டண உயர்வு; துருக்கியை பொறுத்தவரை இஸ்தான்பூலின் கெஜிப் பூங்காவை இடித்தல். இவைகள் உலக முதலாளித்துவத்தின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த நெருக்கடியினால் பெரிதும் தீவிரமடைந்துள்ளமையினால் இச்சமூகங்களிலுள்ள ஆழ்ந்த முரண்பாடுகளில் வேர்களை கொண்டுள்ளன.

துருக்கியைப்போல் பிரேசிலும் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பொருளாதார வெற்றிக் கதையை கொண்ட நாடு எனப் பாரட்டப்பட்டது. ஆயினும்கூட, “பிரேசிலிய அற்புதம்” சுவரில் முட்டிக் கொண்டுள்ளது போல் தோன்றுகிறது.

இது 50 பில்லியனர்களையும் 150,000க்கும் மேற்பட்ட மில்லியனர்களையும் தோன்றுவித்தாலும்கூட, அடிப்படை சமூக உள்கட்டுமானத்தில் ஏகாதிபத்திய அடக்குமுறை, பொருளாதாரப் பிற்போக்குத்தனம் என்னும் மரபியத்தை தீர்க்க இயலவில்லை என்பதைத்தான் நிரூபித்துள்ளது. குறைந்தப்பட்ச சமூக உதவித் திட்டங்கள், மிக அதிக வறுமை விகிதத்தையும் குறைத்து ஒரு புதிய “மத்தியதர வர்க்கத்தை” யும் தோற்றுவித்துள்ளதற்கு பாராட்டுதல் பெற்றாலும், பிரேசிலின் அந்தஸ்த்தை உலகில் மிக அதிக சமூக சமத்துவமின்மை உள்ள நாடுகளில் ஒன்றாக இருப்பதை மாற்ற எதுவும் செய்யமுடியவில்லை.

பொருளாதார நெருக்கடி பெருகியுள்ளதற்கான அடையாளங்கள் உள்ளன; வளர்ச்சி விகிதம் 2012ல் 0.9 சதவிகிதமாகவும் இந்த ஆண்டு முதல் காலாண்டில் 0.6 சதவிகிதமாகவும் சரிந்துவிட்டது. தொழில்துறை உற்பத்தி 0.3 சதவிகிதமாக சரிந்து விட்டது; அத்துடன் பணிநீக்கங்களும், வேலைக்கு எடுப்பதில் முடக்கமும் ஏற்பட்டுள்ளன. நுகர்வோர் செலவினங்கள் சரிந்துள்ளன; பெரும்பாலான மக்கள் பெருகிய கடன்களை எதிர்கொண்டுள்ளனர். பணவீக்கம் உத்தியோகபூர்வமாக 6.5 சதவிகிதத்தை எட்டியுள்ளது; அடிப்படைத் தேவைக்கான பொருட்களின் விலைகள் இன்னும் அதிகம் உயர்ந்துள்ளன.

கடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழக பட்டதாரிகளின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களை விட்டு நீங்கியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, பட்டதாரிகள் வேலைகளுக்கும் நியாயமான ஊதியங்களுக்கும் வேலை பெறுதல் அரிதாக உள்ளது.

இந்த வாரம் பிரேசில் தெருக்களில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்களில் இந்த இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமீபத்திய பட்டதாரிகள் கணிசமாக இருந்தனர்; அவர்களில் பலரும் முதல் தடவையாக தங்கள் வாழ்க்கையில் பரந்த சமூக நடவடிக்கையில் பங்கு பெற்றனர்.

இத்தகைய பரந்த தன்னெழுச்சியான இயக்கத்தின் தவிர்க்க முடியாத அரசியல் குழப்பம் குறிப்பாக வியாழனன்று தீவிர வலது சக்திகளால் பயன்படுத்தப்பட்டது. குண்டர்களின் குழுக்கள் இடது சாரி அணிவகுப்பினரின் மீதும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே சிறிய அளவிற்கு வந்தவர்கள் மீதும் ஏவப்பட்டன; கோஷ அட்டைகள் கிழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டன; அவர்களுக்கு மிளகுப்பொடி தூவப்பட்டன; கையெறி குண்டுகள் வீசப்பட்டன; உலோகக் குழாய்களால் தாக்கப்பட்டனர்; இறுதியில் அணிவகுப்பில் இருந்து அகலுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இது சாவோ பாலோவிலும் இன்னும் பல நகரங்களிலும் நடைபெற்றது; இது ஒழுங்கான முறையில் ஏற்படுத்தப்பட்ட முயற்சியைத்தான் காட்டியது; பொலிசும் ஒருவேளை இராணுவமும் கூட சந்தேகத்திற்கு இடமின்றி இதில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வலதுசாரியினர், எதிர்ப்புக்களின் அரசியல் திசையை சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்திலிருந்து திசை திருப்பி, “கட்சிகள் கூடாது” என்னும் கோஷத்தை எழுப்பி, அரசியல் ஊழல், உயர்ந்த வரிகள், குற்றங்கள் ஆகியவற்றைக் கண்டிக்க முற்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அணிவகுத்தவர்களில் பெரும்பலானவர்கள் இத்தீய நோக்கத்தைப் பற்றி அறியவில்லை; பாசிசக் குண்டர்கள் தண்டனை ஏதுமின்றி செயல்பட முடிந்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் தங்கள் அரசியல் நனவான வாழ்க்கையின் பெரும் பகுதியை முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் லூயி இனசியோ லூலாடி சில்வா மற்றும் அவர் தேர்ந்தெடுத்த ஜனாதிபதியாக வந்த டில்மா ரௌசெப் உடைய தொழிலாளர் கட்சி (Partido dos Trabalhadores-PT) அரசாங்கத்திலும்தான் கழித்தவர்கள். தொழிலாளர் கட்சி கடந்த தசாப்தம் முழுவதும் அதிகாரத்தில் இருந்துள்ளது.

1980ல் இராணுவ சர்வாதிகாரத்தை அதிரவைத்த கொந்தளிப்பு நிறைந்த பரந்த வேலைநிறுத்தங்களை தொடர்ந்து,  தொழிலாளர் கட்சியும் அத்துடன் பிணைந்திருந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பான CUT உம் ஆரம்பத்தில் இருந்தே பிரேசிலின் தொழிலாள வர்க்க போராளித்தன இயக்கத்தை முதலாளித்துவ அரசாங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் திருப்ப அரும்பாடுபட்டன.

ஆயினும்கூட, போலி இடது அமைப்புக்கள் முழுவதுமே தங்கள் பணிகளை PT ஒரு புரட்சிகர வாகனமாக மாற்றப்பட முடியும் என்றும், பிரேசிலில் சோசலிசத்தை நிறுவமுடியும் என்றும் பிரமைகளை பரப்ப தம்மை அர்ப்பணித்துக் கொண்டன.

PT அதிகாரத்தை நகரசபை, மாநில அளவில் வெற்றிகண்டபின், அதன் கொள்கைகள் இன்னமும் அதிக வலதிற்குத் திரும்பின; இறுதியில் லூலா, அவருடைய முன்னோடிகள் செயல்படுத்தியிருந்த IMF இன் ஆணைக்குட்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை தொடர்வார் என உத்தரவாதம் கொடுத்தபின் 2002ல் ஜனாதிபதியாக அனுமதிக்கப்பட்டார். பிரேசிலிய மற்றும் சர்வதேச மூலதனமும் PT ஐ தங்கள் நலன்களை கீழிருந்து வரும் புரட்சிக்கு எதிராக பாதுகாக்கும் கருவி எனக் காண்கின்றன.

PT இல் இருந்து சில போலி இடது அமைப்புக்கள் வெளியேற்றப்பட்டன; சில உள்ளேயே தங்கின; அவற்றின் உறுப்பினர்கள் முக்கிய பதவிகளுக்கு உயர்ந்தனர். பப்லோவாத  ஐக்கிய செயலகத்தை பொறுத்தவரை இரண்டுமே உண்மை என ஆயின.

அதனுடைய பிரேசில் பிரிவு வெளியேற்றப்பட்டது; அது ஒரு புதிய கட்சியான சோசலிசம் மற்றும் சுதந்திரக் கட்சி (PSOL) என்பதை அதனுடைய முன்னைய கட்சியான PT போல் நிறுவியது; மற்றவைகள் PT யுடன் இருந்தன; அவற்றில் ஓர் உறுப்பினரான மிகுவல் ரோசெட்டோ விவசாயச் சீர்திதிருத்தத்துறை மந்திரியானர்; பெரும் நிலக்கிழார்களின் நலன்களுக்கு ஒரு கைக்கூலியானார்.

முன்பு தம்மை ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள் என்று அழைத்துக் கொண்ட மற்றவர்களில் ஆன்டோனியா பலோக்கி, நிதி மந்திரியானார், லூயி குஷிகென் என்பவர் லூலா அரசாங்க சமூகத் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனரானார். இருவரும் இதற்குப்பின் PT அரசாங்கத்தை சூழ்ந்துள்ள வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் ஊழல் அலைத் தொடர்பை ஒட்டி குற்றச்சாட்டுக்களை பெற்றுள்ளனர்.

இப்போலி இடது கூறுபாடுகளின் குற்றம்வாய்ந்த அரசியல் பங்கு, அனைத்தும் முற்றிலும் தேசியவாத நோக்குநிலையை கொண்டவை, அதாவது வலதுசாரி முதலாளித்துவக் கட்சிக்கு ஒரு “சோசலிச” மறைப்பை அளித்தல் ஆகும்; அதுவோ பெரு வணிகம் மற்றும் பிரேசில் அரசின் நலன்களுக்காக ஒவ்வொரு சமூகப் போராட்டத்தையும் முறையாக கீழ்ப்படுத்தி தாழ்த்தும் வகையில் உழைக்கிறது. தொழிற்சங்கங்களை வளர்ப்பதின் மூலம் அது ஓரளவிற்கு இதைச் செய்தன; அவை நீண்டகாலமாக மக்களால் சமூக மாற்றத்திற்கான வாகனம் எனக் காணப்படுவது நின்று போய்விட்டது; தற்போதைய வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு பெறவில்லை.

இது பிரேசிலின் வலதிற்கு, சமீபத்திய எதிர்ப்புக்களில் காணப்படும் பிற்போக்குத்தன ஜனரஞ்சக நடவடிக்கைகளில் ஈடுபட அரசியல் இடத்தை அளித்துள்ளது. மக்களுடைய சீற்றத்தை ஊழல் மிகுந்த, முதலாளித்துவ சார்பு PT இன் அரசியல் எந்திரத்திற்கு எதிராக திருப்புகிறது. இத்தகைய போக்கின் வளர்ச்சி கொடுக்கும் ஆபத்துக்கள், இரு தசாப்தங்கள் இராணுவ சர்வாதிகாரத்தால் ஆளப்பட்ட நாட்டிற்குகொலைகள், சித்திரவதைகள், சட்டவிரோதக் காவலில் வைத்தல் இன்னும் பிற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது பொறுப்புக்கூற வைக்கப்படவில்லைஎன்பது உண்மையில் அதிகமாகும்.

துருக்கியிலும் பிற நாடுகளிலும் நடந்தது போல், மட்டுப்படுத்தப்பட்ட தன்னெழுச்சியான வெகுஜன நடவடிக்கைகள், எவ்வளவு பெரிதாக இருந்தாலும், விரைவில் பிரேசிலிலும் தெளிவாக அதுதான் நடக்கும். தீர்மானகரமான அரசியல் பணியாக இந்நிகழ்வுகள் காட்டுபவையும், பிரேசிலிய, உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி காட்டுபவையும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு திருப்பமாகும்; அது தனக்குள் ஒரு புதிய புரட்சிகத் தலைமையை சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்ட அடிப்படையில் உருவாக்குவதாகும்.

இதன் அர்த்தம், PT இன் சுற்று வட்டத்தில் இருக்கும் போலி இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் குறித்து இரக்கமற்றமுறையிலான அரசியல் விமர்சனமாகும். பிரேசிலிய தொழிலாளர்கள் ஒரு புரட்சிகர முன்னோக்குடன் மீள் ஆயுதபாணியாகி தங்களுடைய அரசியல் சுயாதீனத்தை முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிடம் இருந்தும் பெற்றுக் கொள்வதற்கு இது அவசியமாக இருக்கிறது.